Thursday, December 27, 2007

பேநசீர் புட்டோ கொலையும் பாகிஸ்தான் உள்நாட்டுப் போரும்

இனி சந்தேகமே இல்லை. பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் வெடிக்கப்போகிறது - அல்லது வெடித்தே விட்டது. பேநசீர் புட்டோ இன்று ஏகே 47 துப்பாக்கிகளால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கழுத்தில் பாய்ந்த ஒரு குண்டால் அவர் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே பேநசீர் பேசவேண்டிய ஒரு கூட்டத்தின்மீது தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது. பேநசீரைக் கொலை செய்யப்போவதாக தாலிபன்கள் ஏற்கெனவே மிரட்டியுள்ளனர்.

இது தாலிபன்கள் செய்த காரியமா அல்லது முஷரஃப் அல்லது ஐ.எஸ்.ஐ தாலிபன்கள் போர்வையில் தாங்களே செய்ததா என்று தெரியவில்லை.

அடுத்து என்ன நடக்கும்?

1. தேர்தல் நிறுத்தப்பட்டு முஷரஃப் மீண்டும் நெருக்கடி நிலையை விதிப்பார்.

2. இம்முறை அரசியல்வாதிகளுக்கு பதில் தாலிபன்களை நிஜமாகவே அடித்துப் பிடிக்கலாம். பதிலுக்கு தாலிபன்கள், அடிப்படைவாதிகள் திருப்பித் தாக்கினால் பெரும் குழப்பம் விளையும்.

3. சிந்தில் - பேநசீரின் கோட்டை - கடுமையான அடிதடி நடக்கும். மிலிட்டரியும் பேநசீரின் ஆதரவாளர்களும் தினமும் மோதுவார்கள். முஷரஃப்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று பேநசீர் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள்.

4. பலூசிஸ்தான் இந்த நேரத்தை ஆதாயமாக எடுத்துக்கொண்டு, தனியாகப் பிரிவதற்கான சாத்தியங்களை ஆராயலாம்.

5. வாசிரிஸ்தான் போன்ற இடங்களில் தாலிபன்களுடன் சண்டைபோடுவதற்கு பதிலாக பாகிஸ்தான் மிலிட்டரி முக்கியமான நகரங்களிலேயே இந்தச் சண்டைகளில் ஈடுபடவேண்டும். இதனால் தாலிபன்களுக்குத்தான் ஆதாயம்.

6. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு என்ன ஆகுமோ என்று அமெரிக்கா, இந்தியா வயிற்றில் புளியைக் கரைக்கும்.

7. காஷ்மீர் போராளிகளுக்கு ஸ்பெஷலாக உதவி செய்ய பாகிஸ்தானிடம் இப்போது நேரம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு இந்தியா உடனடியாக காஷ்மீர் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதைச் செய்யலாம்.

8. இந்தியா எல்லையில் கவனமாக இருக்கவேண்டிய நேரம் இது. பாகிஸ்தான் ராணுவத்தின் சில பகுதிகள் சொந்தமாக இந்தியப் படைகளுடன் சண்டைபோட முயற்சி செய்யலாம்.

9. பிரச்னை மிகவும் பெரிதானால் பாகிஸ்தான் அகதிகள் இந்தியாவுக்கு வர நேரிடும். அதை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்பதையும் கவனிக்கவேண்டும்.

முந்தைய பதிவுகள்:
பாகிஸ்தானில் நெருக்கடி நிலை
மசூதியின் நிறம் சிவப்பு
பாகிஸ்தான், தாலிபான், அல் காயிதா
பாவம் முஷரஃப்!

4 comments:

  1. நல்ல கண்ணோட்டம்
    பாக் ஒரு புதிரின் சரிதம்.
    சரித்திரம் தொடர்கிறது
    நன்றி

    ReplyDelete
  2. //காஷ்மீர் போராளிகள்//
    இந்துக்களை காஷ்மீரில் இருந்து இன சுத்திகரிப்பு செய்த ஜிகாதிகள் போராளிகள் அல்ல பயங்கரவாதிகள். பத்ரியின் பதிப்பகத்தை இஸ்லாமியர்கள் லாபகரமாக வைக்கிறார்கள் என்பதற்கு நன்றி தெரிவிக்க உண்மைகளை சிதைக்க வேண்டாம். ஏனெனில் நன்றி என்பது நல்லபண்புதான். ஆனால் மனிதனுக்கு நன்றியைவிட உண்மை முக்கியமானதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பாரதி பிழைப்பைக் குறித்து சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

    ReplyDelete
  3. Since Pakistan has nuclear weapons the international community should
    ensure that they are beyond the reach of extermists and talibans.
    If necessary they should 'invade'
    pakistan to ensure that a nuclear calamity is avoided.If Pakistan
    disintegrates it has positive and
    negative consequences for India.
    India should annexe the Kashmir under Pakistan's occupation and
    ensure that Jihadi elements are
    fleshed out or killed en masse.
    India should put its self interest
    first than adhering to principles
    that will harm India. If Pakistan
    breaks up, our No. 1 enemy is gone
    forever and that is a good news. It is bad news for pseudo-secularists and their supporters
    and for muslims who love islamist
    nations. But the menace of Jihadi islam will continue and India should ensure that the menace is contained first, and eliminated first. Of courese many lives would be lost in all this and many innocents will suffe.
    But a country of billion people and
    more should put its self interest and right to exist above all and
    should act accordingly. We should
    act tough and that should be a strong message to all these islamist jihadis, their supporters and sympathisers.

    ReplyDelete
  4. திருப்பூர் பனியன்களின் ஏற்றுமதி தடை படும்போதோ, தரம் காரணமாக பொருட்கள் நிராகரிக்கப்படும்போதோ, தமிழ்நாட்டிலேயே அவற்றை கூவி கூவி விற்பர். 50 ரூபாய்க்கு இரண்டு டி சர்ட் என்று கூட கிடைக்கும். அதுபோல ஜிகாதிய ஏற்றுமதி சற்று குறைந்துள்ளதால் உள்ளூரிலேயே வேலையை காட்டுகின்றனர். அதுதான் வஜிரிஸ்தான் துவங்கி, லால் மஸ்ஜித், பேனசிர் கொலை என்று நீள்கிறது.

    பாகிஸ்தானில் இப்போதுள்ள நிலைமையை கண்டால் எந்த மூளையுள்ள காஷ்மீரியும் அந்த நாட்டோடு சேர மாட்டான்(ஜிலானி போன்ற சில லூசுகளைத் தவிர) காஷ்மீர் பிரச்சனையை சில காலம் ஆறப்போட்டால் தானாகவே தீர்ந்து விடும். பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை.

    ReplyDelete