Friday, October 03, 2008

முகமது அலி ஜின்னா

ஸ்டேன்லி வோல்பெர்டின் (STANLEY A WOLPERT) “ஜின்னா ஆஃப் பாகிஸ்தான்” என்ற புத்தகத்தை மறுபடியும் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். முதல்முறை படித்தபோது பல விஷயங்கள் மனத்தில் நிற்கவே இல்லை. இப்போது காந்தி பற்றி மீண்டும் மீண்டும் படிப்பதால், ஜின்னாவை மற்றுமொருமுறை படிக்கலாம் என்று எடுத்திருக்கிறேன்.

வோல்பெர்ட், நவீன இந்தியா பற்றிய முக்கியமான வரலாற்றாளர். அவரது பிற புத்தகங்களையும் நான் வாங்கி (அல்லது தேடி) படிக்கவேண்டும்.

சில இடங்களில் ஜின்னாவின் காந்தி எதிர்ப்பு, புத்தக ஆசிரியர் வோல்பெர்ட்டையும் பீடித்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. விரிவான புத்தக அறிமுகத்தைப் பின்னர் எழுதுகிறேன்.

ஆனால், எனக்கு காந்தி பிறந்தநாளின் போது முக்கியமாகத் தோன்றுவது, ஏன் ஜின்னா என்ற மதச் சார்பற்ற, தீவிர இந்திய தேசியவாதிக்கு காந்தியை ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை என்ற கேள்விதான். கோகலே முதற்கொண்டு பல தேசியவாதிகள் காந்திதான் இந்தியாவைக் காப்பாற்றப் போகிறார்; தேசியப் போராட்டத்தை வழிநடத்திச் செல்லப்போகிறார் என்று முடிவுசெய்தனர். காந்தி புதிதாகப் பல சீடர்களை உருவாக்கினார். மோதிலால் நேரு, காந்திக்கு வழிவிட்டார்.

1920-களில் ஜின்னா, காங்கிரஸின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவரை காந்தி வேண்டுமென்றே ஓரம் கட்டினாரா? இதில் ஜின்னாவின் முஸ்லிம் மதம் ஒரு காரணமாக இருந்ததா?

ஜின்னாவுக்கு சட்டங்களுக்கு உட்பட்டு பிரிட்டிஷ்காரர்களுடன் போராடவேண்டும் என்ற எண்ணமே இருந்தது. எனவே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். காந்தியின் ‘ஆன்மிக’ நோக்கமும் ஜின்னாவுக்கு ஏற்புடையதாக இல்லை. கிலாஃபத் இயக்கத்தையும் ஜின்னா கடுமையாக எதிர்த்தார். கிலாஃபத்துக்கு காந்தியிடமிருந்து ஆதரவு வந்ததையும் ஜின்னாவால் ஏற்கமுடியவில்லை.

ஜின்னா ஆரம்பத்தில் முஸ்லிம் லீகில் தீவிர உறுப்பினராக இல்லை. பின்னர்தான் அதில் அதிக ஈடுபாட்டைக் காட்ட ஆரம்பித்தார். ஆனாலும் ஆரம்பம் முதற்கொண்டே, இந்து-முஸ்லிம் பிரச்னையைத் தீர்க்காமல் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து விடுதலை பெறுவது பிரச்னையானது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். சிறுபான்மையினருக்கு சிறப்புச் சலுகைகளைக் கொடுக்கவேண்டும் என்பது அவரது கருத்து. பெரும்பான்மையினர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்; எனவே பெரும்பான்மையினர் வேண்டுமென்றே சிறுபான்மையினருக்கு அதிகம் விட்டுத்தரவேண்டும் என்பது அவரது கருத்து.

இதனை சரியான முறையில் இந்தியத் தலைவர்கள் அன்றே செய்திருந்தால், பல பிரச்னைகள் பின்னர் ஏற்படாமல் இருந்திருக்கலாம். பாகிஸ்தான் என்ற கருத்துருவாக்கம் ஏற்படாமல் இருந்திருக்கலாம். அல்லது பின்னர் ஏற்பட்டிருக்கவும் கூடும். வரலாற்றின் பழைய பக்கங்களைப் புரட்டி இப்படி ஆகியிருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்று சொல்வது அபத்தமானதாகத் தோன்றினாலும், இப்படி ஆகியிருந்தால் வரலாறு எப்படி மாறியிருக்கும் என்று யோசிப்பது தவிர்க்கமுடியாததாக உள்ளது.

1930களில் இறுதியில் ஜின்னாவின் கருத்துகளில் ஏற்பட்ட மாற்றத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தியர்கள் அவரை எடைபோடக் கூடாது. ஜின்னாவின் வாழ்க்கையில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆனால், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர்கள்கூட (ராஜ்மோகன் காந்தி போன்றவர்கள்) ஜின்னாவுக்கு வேண்டிய இடத்தை ஒதுக்குவதில்லை.

பின்னாள்களில் ஜின்னாவுக்கு, காங்கிரஸில் இருந்த முஸ்லிம்கள்மீதும் கடுமையான வெறுப்பு இருந்தது. உதாரணமாக அபுல் கலாம் ஆசாத்மீது. அதேபோல, ஆரம்ப நாள்களில் ஜின்னாவின் உதவியாளராக இருந்து, பின்னர் மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், மத்திய அரசில் கல்வி, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த முகமதலி கரீம் சாக்லாமீது ஜின்னா அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சாக்லா இணைந்த இந்தியாமீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று தெரிந்ததும் அந்த உறவு முறிந்துபோனது.

காந்தியைச் சுற்றி மக்கள் - மனைவி, பிள்ளைகள், ஆஸ்ரமவாசிகள், சீடர்கள், பொதுமக்கள் - என்று பலர் இருந்தனர். ஆனால் ஜின்னா தனியராகவே வாழ்ந்தார். அவரது காதல் மனைவி (பார்சி பெண்மணி) வெகு நாள்கள் ஜின்னாவுடன் சேர்ந்து வாழவில்லை. ஜின்னாவின் ஒரே மகள், வெளியிடங்களில் படித்து வளர்ந்தார். அவரும் தந்தையுடன் அதிகம் சேர்ந்து இருக்கவில்லை. ஜின்னாவின் சகோதரி ஃபாத்திமா ஜின்னாவுடன் அதிகம் இருந்தவர். ஆனால் இவர் அதிகம் பேசவே மாட்டாராம். ஜின்னாவுக்கு நெருங்கிய தோழர்கள் என்று யாருமே இல்லை. அனைவருமே அரசியல்ரீதியில் அவருடன் இயங்கியவர்கள் மட்டுமே.

காந்தி, மதத்தை, ஆன்மிகத்தை தனது போராட்டங்களின் அடிநாதமாக எடுத்துக்கொண்டவர். ஆனால் செகுலரிசத்தை - மதச்சார்பின்மையை - வற்புறுத்தியவர். ஜின்னா, முஸ்லிம் நாடு வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவர். ஆனால் தனி வாழ்வில் அவர் மதச் சடங்குகளில் சிறிதும் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. பன்றிக்கறி சாப்பிடுவது அவருக்குப் பிடித்தமாக இருந்திருக்கிறது.

ஜின்னாவும் காந்தியும் எந்த அளவுக்கு இரு துருவங்களாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

9 comments:

  1. ஜின்னாவுக்கு காந்தியினை பிடிக்காமல் போயிருக்கலாம். ஆனால், காந்திக்கு ஜின்னாவினை பிடிக்கும். முழு மூச்சான இந்திய சுதந்திர போராட்டமென்பது 1920களுக்கு பின்பு நடந்த லாகூர் காங்கிரஸ் கூட்ட பிரகடனத்தில்தான் "சுதந்திர இந்தியா" என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.ஒரு சாரார் ஜின்னாவினை இந்தியாவின் பிரதம மந்திரியாக்க காந்தி நினைத்ததாகவும், ஆனால் அதற்கு நேரு முட்டுக் கட்டை போட்டதாகவும் அதனாலேயே, தனிப்பட்ட ரீதியில் மதத்தின்மீதோ, அதன் சடங்குகளின் மீதோ பெருமதிப்பு கொள்ளாத ஜின்னா இந்த Power Struggleஇன் காரணமாக, முழுமூச்சாக நேருவினை எதிர்த்து, தனியாக பாகிஸ்தானை வாங்குவதில் தீவிரம் காட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. இதன் வரலாற்று ரீதியிலான உண்மைகள் சரிவர தெரியவில்லை. ஆனால், தான் சாகும்போது மிக நெருக்கமானவர்களிடம், பாகிஸ்தானை பிரித்தது ஒரு மோசமான Strategy move என்பதை ஒத்துக் கொண்டார் என்று எங்கோ படித்திருக்கிறேன்.

    டிஸ்கி: இந்த இரண்டு கருத்துக்களுக்குமான ஆதாரங்கள் இப்போது என்னிடத்தில் இல்லை.

    ReplyDelete
  2. ஜின்னா, தான் ஒரு Law கல்லூரியில் சேர்ந்ததற்கு அந்தக் கல்லூரியில் 'முகமது'வை ஒரு தேர்ந்த Law Man என்று சொல்லி அவர்(முகமதுவின்) படத்தை வைத்திருந்தது காரணம் என்று சொன்னாராம்.

    முகமதுவின் உருவப்படத்தை எந்த வகையிலும் வைப்பது தவறானது. அதை ஜின்னா அறிந்திருக்கவில்லை என்றும் 'The man who divided India - Jinnah' புத்தகத்தில் படித்தேன்.

    இந்தப் புத்தகம் ஒரு pro-India புத்தகம் படித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
  3. //ஜின்னா, முஸ்லிம் நாடு வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவர். ஆனால் தனி வாழ்வில் அவர் மதச் சடங்குகளில் சிறிதும் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. //
    Peculiar..

    ReplyDelete
  4. //ஏன் ஜின்னா என்ற மதச் சார்பற்ற, தீவிர இந்திய தேசியவாதிக்கு காந்தியை ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை என்ற கேள்விதான்.//

    'மதச் சார்பற்றவர்' ஜின்னா என்று இரண்டாவது முறையாக படிக்கிறேன். :-)

    //சிறுபான்மையினருக்கு சிறப்புச் சலுகைகளைக் கொடுக்கவேண்டும் என்பது அவரது கருத்து. பெரும்பான்மையினர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்; எனவே பெரும்பான்மையினர் வேண்டுமென்றே சிறுபான்மையினருக்கு அதிகம் விட்டுத்தரவேண்டும் என்பது அவரது கருத்து.//

    அவர் உருவாக்கிய பாகிஸ்தானில் 'இந்து'க்கள்தான் சிறுபாண்மை. அங்கே இந்த கருத்தை நடைமுறைபடுத்தியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை???

    ReplyDelete
  5. மோகன்தாஸ்: நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் பற்றி வோல்பெர்ட்டின் புத்தகத்தில் வருகிறது.

    ஜின்னா, கராச்சி வக்கீல்களிடம் பேசும்போது, “நான் லிங்கன் இன்னில் சேர்ந்ததற்குக் காரணம், அங்கே, நுழைவாயிலில், நபியின் பெயர், சட்டங்களை உலகுக்கு அளித்த தலைசிறந்தவர்கள் என்ற பட்டியலில் இடம்பெற்றதுதான்” என்று சொல்லியிருக்கிறார்.

    ஆனால் உண்மையில், லிங்கன் இன் நுழைவாயிலில் அப்படி ஏதும் கிடையாது. கவனிக்க: பெயர். படமல்ல.

    வோல்பெர்ட்டின் கருத்து, ஜின்னா, லிங்கன்ஸ் நியூ ஹாலில், ஜி.எஃப்.வாட் என்பவர் வரைந்த படத்தைப் பார்த்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர் “சட்டம் வழங்கியவர்கள்”. அதில் மோசஸ், யேசு ஆகியோருடன் முகமது நபியின் படமும், மேலும் பலரது படங்களும் இருந்துள்ளன. ஆனால் கராச்சியில் பேசும்போது, படம் என்று சொன்னால் சுன்னி முஸ்லிம்கள் கோபம் கொள்வார்கள் என்பதால், பெயர் என்று மாற்றிச் சொல்லியிருக்கிறார் என்பதே வோல்பெர்ட்டின் கருத்து.

    ReplyDelete
  6. நாராயண்: 1920-ல் காந்தி காங்கிரஸுக்கும் இந்தியாவுக்கு புதிது. ஜின்னா அந்தக் கட்டத்தில் பழம் பெருச்சாளி.

    பின்னர் 1940களில், இந்தியாவைப் பிரிக்கவேண்டாம், ஜின்னாவையே பிரதமராக்கிவிடலாம் என்ற கருத்தை முன்வைத்தார் காந்தி. இதனை ஜவாஹர்லாலும் ஏற்றுக்கொள்ளவில்லை; சர்தார் படேலும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதை காந்தி முன்வைப்பதற்கு முன்னமேயே காந்தி-ஜின்னா உறவு பெரிதும் உடைந்திருந்தது. காந்தி ஜின்னாவை ‘காயிதே ஆஸம்’ என்றே மரியாதையாக அழைத்தார். ஆனால் ஜின்னா கடைசிவரை காந்தியை ‘மிஸ்டர் காந்தி’ என்றார். ஒருமுறைகூட மஹாத்மா என்று அழைத்ததில்லை.

    ஜின்னாவும் மோதிலால் நேருவும் மிகவும் நெருங்கியவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் மோதிலால், தன் மகனை முன்னுக்குக் கொண்டுவருகிறார் என்று தெரிந்ததும் ஜின்னாவுக்கு இரண்டு நேருக்களுமே எதிரிகளாகத் தெரிந்தனர்.

    ஜின்னா எந்தக் கட்டத்திலும் பாகிஸ்தான் உருவானது தவறானது என்று சொன்னதாக நான் பார்த்ததில்லை.

    ReplyDelete
  7. indha "power" ragalaigal eduvum theriyaamal, kodi pidiththu sudhandhiram sudhandhiram enru theruvil adivaangiya saathaarana 'allakkaigal'ai ninaiththaal parithaabamaagaththaan ulladhu. Enna...ippadi sonnaal 10-20 per adheppadi allakkai endru sollalaam....pechu sudhandhiram, ezhuthu sudhandhiram enru ikkaala allakkaigal mallukku varakkoodum !!!! naanum peyar podaadha oru allakkai thaan

    ReplyDelete
  8. சாக்ளாவின் 'roses in december' படிக்கவும். ஜின்னாவைப் பற்றிய விபரங்கள் சுவராசியமானவை...ஏன் மொரார்ஜி பற்றிய விபரங்களும்தான்...

    இருவரின் குணத்தைப் பற்றியும் புரிந்து கொள்ள இயலும்.

    ReplyDelete
  9. //
    காந்தி, மதத்தை, ஆன்மிகத்தை தனது போராட்டங்களின் அடிநாதமாக எடுத்துக்கொண்டவர். ஆனால் செகுலரிசத்தை - மதச்சார்பின்மையை - வற்புறுத்தியவர். ஜின்னா, முஸ்லிம் நாடு வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவர். ஆனால் தனி வாழ்வில் அவர் மதச் சடங்குகளில் சிறிதும் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. பன்றிக்கறி சாப்பிடுவது அவருக்குப் பிடித்தமாக இருந்திருக்கிறது.
    //

    So you mean Gandhi is a Hypocrite?

    ReplyDelete