Wednesday, April 29, 2009

ஷெர்லாக் ஹோம்ஸ் - தமிழில்

நான் சில நாள்களாக மொழிமாற்றம் செய்துவருவது அடுத்த ஒரு வாரத்தில் புத்தகமாக வெளியாகும். ஆர்தர் கோனன் டாயில் உருவாக்கிய இந்தப் பாத்திரம், துப்பறியும் கதைகளுக்கு முன்னோடி. எட்கர் ஆலன் போ டாயிலுக்கு முன்னமே எழுதியிருந்தாலும், என்னைப் பொருத்தமட்டில், ஷெர்லாக் ஹோம்ஸ் தனித்து நிற்கிறார்.

சில ஆண்டுகளுக்குமுன், இந்தக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்குமாறு ஒருவரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் பல நாள்கள் கழித்து, ஏதோ கோபம் காரணமாக மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதன்பின் இரண்டு வருடங்கள் சும்மா இருந்தேன். பின், அலைந்து திரிந்து இன்னொருவரைப் பிடித்து, மொழிமாற்றம் செய்யச் சொன்னேன். திருப்தியாக வரவில்லை.

சரி, நானே செய்துவிடுவது என்று முடிவெடுத்து, இப்போது வர உள்ள இந்த முதல் நெடுங்கதை - A Study in Scarlet என்று 1887-ல் வெளியானது. தமிழில் இதன் பெயர்: ‘ஒரு மோதிரம் இரு கொலைகள்’.


டெமி 1/8-ல் சுமார் 184 பக்கங்கள் வரும். விலை சுமாராக ரூ. 120 ஆகும். குறைவான பிரதிகளே அச்சாவதால் அதிக விலை. இதுபோன்ற புத்தகங்களுக்கு சந்தை உள்ளதா என்று தெரியவில்லை. இருந்தால், ஒருவேளை பின்னர் விலை குறைக்கப்படலாம்.

டாயில் எழுதிய ஹோம்ஸ் கதைகள் - 4 நெடுங்கதைகள், 56 சிறுகதைகள் - அனைத்தையுமே தமிழில் மொழிபெயர்க்க உள்ளேன்.

21 comments:

  1. நாம் சில ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை கல்லூரியில் மேடை நாடகமாக செய்திருக்கிறோம். அவை தமிழிலும் கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி.

    வாழ்த்துக்ள்...!

    ReplyDelete
  2. நிச்சயம் ஒரு மார்கெட் இருக்கும். ;-)

    இன்னும் தமிழக லைப்ரரியில் (நூலகம்) தமிழ்வாணன் டிடெக்டிவ் புக்ஸ் வாங்குகிறார்கள் (மணிமேகலை பிரசுரம்). உங்கள் பதிப்பு நூல்கள் வாங்கும் நாட்கள் விரைவில் வரும்.

    மக்கள் (இந்தியர்கள், தமிழர்கள்) விலையில் முழு கவனம் வைத்திருப்பார்கள்.

    அதனால் நூறு ரூபாய்க்கு கிழே, புத்தககங்கள் நல்ல விற்பனை ஆகும்.

    ReplyDelete
  3. பத்ரி,

    தமிழில் ஏற்கனவே பதினாறு வருடங்களுக்கு முன்பு திரு விஜயன் அவர்களால் கானன் டாயில் அவர்களின் கதை மொழி பெயர்க்கப்பட்டு (ஒரு சோதனை முயற்சியாக வந்த) திகில் லைப்ரரி இதழ் இரண்டில் "சிங்கத்தின் பிடரி" என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதே இதழில் எட்கர் ஆலன் போ எழுதிய கதையும் வந்தது. இவை இரண்டும் நாவல் வடிவில் வந்தவை.

    காமிக்ஸ் வடிவில் கானன் டாயில் அவர்களின் கதைகள் கடந்த பதினைந்து வருடங்களாக முத்து காமிக்ஸ் இதழில் வருவது உங்களுக்கு தெரிந்து இருக்கும்.

    அதனைப் போலவே சுமார் இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு வாண்டு மாமா அவர்களால் கானன் டாயில் எழுதிய The Last World என்ற கதையும் மொழி பெயர்க்கப் பட்டு பூந்தளிர் இதழில் அழிந்த உலகம் என்ற பெயரில் தொடர்கதையாக வந்தது. பின்னர் ஒரு பத்திப்பகத்தாரால் (பழனியப்பா பிரதர்ஸ்?) புத்தக வடிவிலும் வந்தது.

    மற்றுமொரு தகவல்: பெர்ரி மேசன் எழுதிய கதைகளை தமிழில் லிட்டில் பிளவர் கம்பெனி அறுபதுகளில் வெளியிட்டது. அந்தப் புத்தகமும் என்னிடம் உள்ளது. ஆனால் கதாபாத்திரங்களை தமிழாக்கப் படுத்தி இருப்பார்கள்.

    உங்கள் புத்தகம் கடைகளில் கிடைக்குமா? வெளிவந்தது விட்டதா?

    எனினும், இந்த நல்ல முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  4. விஸ்வா: முத்து காமிக்ஸில் சில ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் படக்கதைகளாக வந்துள்ளன. சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியின்போதுகூட ஒன்று கிடைத்தது.

    தமிழில் வேறு பலரும் இந்தக் கதைகளை மொழிபெயர்த்திருப்பார்கள். நான் மற்றுமொரு மொழிபெயர்ப்பைக் கொண்டுவருகிறேன். அவ்வளவே. காபிரைட் போன இந்தப் புத்தகங்களை எவ்வளவு பேர் வேண்டுமானாலும் மொழிபெயர்க்கலாம்.

    ஆனால் என் மொழிபெயர்ப்பு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்ற குண்டு தைரியம் எனக்கு உண்டு:-) பெயர்கள் ஆங்கிலப் பெயர்களாகவே இருக்கும். எந்த வரியும், கருத்தும் விடுபடாது. சில அடிக்குறிப்புகள் உபயோகமாக இருக்கும்.

    இனிதான் அச்சுக்குப் போகிறது. அடுத்த வாரக் கடைசியில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. விரைவான பதிலுக்கு நன்றி பத்ரி.

    //என் மொழிபெயர்ப்பு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்ற குண்டு தைரியம் எனக்கு உண்டு// எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு.

    //அடுத்த வாரக் கடைசியில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்// ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

    அந்த தகவல்கள் உங்களின் மேம்பட்ட பார்வைக்காக மட்டுமே.முடிந்தால் அவற்றை ஒரு பார்வை பார்க்கவும்.

    கிங் விஸ்வா.
    Carpe Diem.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  6. Hound of the Baskervilles என்ற நாவலை நான் சமீபத்தில் 1961-ல் தமிழில் ‘மருங்காபுரி மர்மக்கொலை’ என்னும் பெயரில் படித்திருக்கிறேன். அக்கதையில் ஷெர்லாக் ஹோம்ஸின் பெயர் அமரசிம்மர். எழுதியது வடுவூர் துரைசாமி ஐய்யங்கார் என நினைக்கிறேன்.

    இதில் வேடிக்கை என்னவென்றால் அதை படிக்கும்போது அது மொழிபெயர்ப்பு கதை என்றெல்லாம் தெரியாது. அடுத்த சில நாட்களுக்குள் ஆங்கில மூலத்தின் திரையாக்கத்தை ஓடியன் சினிமாவில் பார்த்தேன். முதல் சீன் வந்ததுமே துள்ளி குதித்தேன். அடடா, இது மருங்காபுரி மர்மக்கொலை அல்லவா என.

    ஆரணி குப்புசாமி முதலியார் கூட இதெ கதையை ‘பாஸ்கர விலாஸ் படுகொலை’ என்னும் பெயரில் எழுதியுள்ளதாக எனது தந்தை கூறியுள்ளார். அதில் வில்லனின் பெயர் சடகோபன்!

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  7. //குண்டு தைரியம் எனக்கு உண்டு:-) //..

    இது என்ன? குண்டானவர்களுக்கு உள்ள தைரியமா? புரியவில்லை. :-))

    btw, wrapper நன்றாக வந்துள்ளது.

    ReplyDelete
  8. செல்வராஜ்: உளவியல் புத்தகங்களை எவற்றையாவது நீங்கள் மொழிபெயர்க்க விரும்பினால் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். பேசுவோம்.

    ReplyDelete
  9. சுரேஷ் கண்ணன்: “குண்டு தைரியம்” என்றால் மிக அதிக தைரியம் என்ற பார்ப்பன வழக்காடல்!

    ReplyDelete
  10. வித்தியாசமான முயற்ச்சி பத்ரி. கண்டிப்பாக வரவேற்பு இருக்கும். வாழ்த்துகள்.

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் கிங் விஸ்வா.. ஊரில இருக்கீங்களா.. ????

    ReplyDelete
  11. வாழ்த்துகள் பத்ரி. நாவல்களில் எனக்கு அதீத ஈடுபாடு இல்லை என்றாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் என்னுடைய அபிமான நாயகர் என்பதால் உங்கள் முயற்சி வெற்றியடையும் என்று நம்பலாம்.

    முத்து காமிக்ஸ் வெளியிட்ட சித்திரகதை பாணியிலேயே ஷெர்லாக் ஹோம்ஸை நான் அதிகம் ரசித்து இருக்கிறேன். சித்திர கதைகள் மோகம் இன்னும் தீர வில்லை என்பதே காரணம்.

    இன்னொன்று, அட்டை பட டிசைன் மி அருமை.

    ÇómícólógÝ

    ReplyDelete
  12. Excellent start.

    கிழக்கு பதிப்பக புத்தகங்கள் தரமான தாளில் தெளிவாக அச்சு அடித்திருப்பதாலேயே நன்றாக இருக்கிறது.

    இதுவரை பொன்னியின் செல்வன் கதை பலர் பலவாறு வெளியிட்டுள்ளனர். ஒரு Collectors edition ஏன் நீங்கள் போடக்கூடாது.

    ReplyDelete
  13. பொன்னியின் செல்வன் - கலெக்டர்ஸ் எடிஷன் பற்றி யோசித்து வருகிறேன். சீப்பாக இல்லாமல், தோல் பைண்டிங் செய்த அற்புதமான ஒன்றாக, ஒரிஜினல் வண்ணப் படங்களுடன் கூடியதாக. இன்ஷா விஷ்ணு, இந்த ஆண்டு, பார்ப்போம்!

    ReplyDelete
  14. //விலை சுமாராக ரூ. 120 ஆகும்.//

    அடுத்தமாத பதிவர் விமர்சனப் புத்தகப் பட்டியலில் இந்தப் புத்தகத்தையும் கட்டாயம் சேர்க்கவும் :-)

    ReplyDelete
  15. பதிவர் விமரிசனங்களெல்லாம் எங்கே இருக்கின்றன ? சுட்டி இருந்தால் கொடுக்கவும்.

    ReplyDelete
  16. கேரளாவில் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி எழுத்தாளர்களின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின்றன.

    ஆங்கில நாவலைவிட இந்திய மொழி நாவல்கள், கதைகளுக்கு ஒரு இயல்புத்தன்மை இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  17. எனக்கு எதாவது மொழி பெயர்க்க ஒரு வாய்ப்புத் தந்து பாருங்கள். முதலில் ஒரு சிறுகதையை முயற்சிக்கிறேன்.
    எனது வலைபூ முகவரி
    www.lathananthpakkam.blogspot.com

    ReplyDelete
  18. Baskervilles = பாஸ்கர விலாஸ்

    டோண்டு சார். villes என்ற ஃபிரஞ்சு வார்த்தைக்கு விலாஸ் என்ற வார்த்தை தான் சரியான மொழியாக்கமா ? பாஸ்கர விலாஸ் என்று Baskervilles ஐச் சொல்வது பயங்கர காமடியாகப் படுகிறது.

    பாஸ்கர விலாஸ்
    பாரத விலாஸ்
    டவுடன் விலாஸ்

    என்று பஜ்ஜி, போண்டா, தின்னும் இடங்களெல்லாம் baker st, லண்டனில் உள்ளதா என்று கொனான் டாயலை அவரது ஆழ்ந்த நித்திரயிலிருந்து எழுப்பித்தான் கேட்கவேண்டும்.

    பாஸ்கர விலாஸில் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கொலைகளைக் கண்டுபிடித்துக்கொண்டிருக்கும் போது தான் பாரதவிலாஸில் சிவாஜி "இந்திய நாடு என் வீடு..." என்று பாடிக்கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். :D

    ReplyDelete
  19. //ஆங்கில நாவலைவிட இந்திய மொழி நாவல்கள், கதைகளுக்கு ஒரு இயல்புத்தன்மை இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.//

    வழிமொழிகிறேன். சுஜாதா, பாலகுமாரன், சுந்தர.ராமசாமி, ஜெயமோகன், கல்கி மாதிரி பாப்புலரான அதேசமயம் நன்றாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள், இந்தி, மராத்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி மொழிகளிலும் இருந்தாக வேண்டுமே, அவர்கள் எழுதியதை மொழிபெயர்க்கலாமே.

    ReplyDelete
  20. டியர் பத்ரி சார், இந்த புத்தகம் இப்போது கிடைக்குமா? (குறைந்த பிரதிகள் என்பதால் இப்போதிருக்குமா?)மேலும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வேறேதேனும் இருப்பினும் சொல்லுங்களேன்!!

    ReplyDelete