நியூ யார்க்கர் பத்திரிகையில் வேலை செய்கிறார் மால்கம் கிளாட்வெல். அதற்குமுன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வேலை செய்திருக்கிறார். நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்: The Tipping Point, Blink, Outliers. இறுதியாக, What the dog saw. இந்த நான்காம் புத்தகத்தில் உள்ளவை அவர் நியூ யார்க்கர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரைகளின் ஒரு தேர்வு.
எந்தக் கட்டத்தில் ஒரு புது சிந்தனை, கருத்து... பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது? எந்தக் கட்டத்தில், எத்தனாவது வைக்கோல் வைக்கப்படும்போது வண்டியின் அச்சாணி முறிந்து வண்டி குடை சாய்கிறது? அந்தக் கணம் எது? அதுதான் tipping point புத்தகம் எடுத்துக்கொண்ட கருத்து. யோசித்துப் பாருங்கள்... சல்வார் கமீஸ் என்ற உடை இந்தியாவில் எத்தனையோ ஆண்டுகளாக இருந்துவருகிறது. ஆனால் எந்தக் கட்டத்தில் தமிழகத்தில் அது ubiquitous உடையாக, மற்ற அனைத்தையும் நசுக்குத் தள்ளி, தனியொரு உடையாக ஆனது என்று உங்களால் சொல்லமுடியுமா? புடைவை, தாவணி எல்லாம் இன்று அம்பேல். பிற நவீன உடைகள் எல்லாம் உள்ளன; ஆனால் சல்வாருக்கு நான்கடிகள் பின்னேதான்.
ஒரு நொடியில், கண் இமைக்கும் நேரத்தில், உங்கள் மூளை என்னவெல்லாம் யோசிக்கிறது? படுவேகமாக மூளை எப்படியெல்லாம் முடிவெடுக்கிறது? அந்த முடிவுகள் நல்லவையா, கெட்டவையா? மிக மோசமான ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டிருக்கும்போது அடுத்து என்ன செய்வது என்பதை நம் மூளை எப்படித் தீர்மானிக்கிறது? ஒரு போர்க்களத்தில்? ஆபரேஷன் தியேட்டரில்? விபத்தில் சிக்க உள்ள விமானத்தை இயக்கும்போது அல்லது காரின் ஸ்டியரிங் வீலைப் பிடித்திருக்கும்போது? இவற்றை blink ஆராய்கிறது.
***
Outliers கேட்கும் கேள்வி மிக முக்கியமானது. யார் வெற்றி பெறுகிறார்கள்? வெற்றி பெற என்னவெல்லாம் தேவை?
மால்கம் கிளாட்வெல் அழகாகக் கதை சொல்கிறார். அவசரமே படுவதில்லை. மெதுவாக, மிக மெதுவாக உங்களை வழிநடத்திச் செல்கிறார். அவரது சிந்தனை தெளிவாக உள்ளது.
தனித் திறமை இல்லாவிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்காது என்பதை முழுதும் ஏற்றுக்கொள்கிறார் கிளாட்வெல். ஆனால் அந்தத் திறமை மட்டும் இருந்தால் போதாது என்பதற்கு அழகான உதாரணங்கள் பலவற்றைக் காட்டுகிறார். வேறு என்னதான் வேண்டும்?
கடின உழைப்பு.
கடின உழைப்பு இல்லாமல் யாராலும் வெற்றி பெற முடியாது. மொஸார்ட் ஒரு குழந்தை மேதை என்பதை ஆதாரங்களுடன் மறுக்கும் கிளாட்வெல், அவரது சிறப்பான இசை ஆக்கங்கள் அனைத்துமே அவரது 20-ம் வயதுக்குப் பிறகுதான் உருவாயின என்கிறார். பில் கேட்ஸ், பில் ஜாய், பீட்டில்ஸ் என யாராக இருந்தாலும் குறைந்தபட்சம் 10,000 மணி நேரங்கள் கடுமையாக உழைத்தபின்னரே அவர்களால் சாதிக்க முடிந்துள்ளது என்பதைக் காட்டுகிறார்.
அமெரிக்க, கனேடிய, ஐரோப்பிய விளையாட்டு வீரர்களை எடுத்துக்கொண்டு, எப்படி அவர்கள் பிறந்த தேதி அவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகளைத் தருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார். அவர்களது பிறந்த தேதி அவர்களுக்குத் தருவது நிறைய பயிற்சியை. அந்தப் பயிற்சி அவர்களை சிறப்பான வீரர்கள் ஆக்குகிறது.
திறமை, கடின உழைப்பு. வேறு என்ன வேண்டும்?
அதிர்ஷ்டம் என்பதைவிட வாய்ப்புகள் என்பது அடுத்து. வாய்ப்பை இறுகப் பற்றிக்கொள்ள திறமையும் உழைப்பும் வேண்டும். ஆனால் வாய்ப்புகளே கிடைக்காவிட்டால், இல்லாவிட்டால், எது இருந்தும் பயனில்லை. எப்படி திறமையும் உழைப்பும் உள்ள பலரும் அமெரிக்காவில் Great Depression காலத்தில் அழிந்துபோனார்கள் என்பதை விளக்கும் கிளாட்வெல், அதே நேரம் கிடைத்த வாய்ப்புகளைப் பற்றிக்கொண்ட திறமையும் உழைப்பும் கொண்டவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை அடுக்குகிறார்.
அதில் உள்ள பல சுவாரசியமான கதைகளில் ஒன்று மால்கம் கிளாட்வெல்லின் தாய் எப்படி ஜமாய்க்காவில் இருந்து பிரிட்டன் வந்தார் என்பது பற்றிய கதை.
வாய்ப்புகள் பற்றிப் பேசும்போது, எப்படி குடும்ப, கலாசார, இன, தேசியச் சூழல் வாய்ப்புகளை புதிய தலைமுறைக்குத் தருகிறது என்பதைப் பற்றிய அலசலும் உள்ளது.
பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் இரண்டே இரண்டு விதங்கள்தான் உள்ளன என்கிறார் கிளாட்வெல். வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தினர் தம் பிள்ளைகளை கவனமாக வளர்க்கிறார்கள். Concerted Cultivation என்கிறார் கிளாட்வெல். தம் பிள்ளைகளின் ஆர்வங்கள், விருப்பங்கள், திறன்கள் ஆகியவற்றை அலசும் இந்தவகைப் பெற்றோர்கள், அந்தத் துறைகளில் தம் பிள்ளைகள் மிளிர என்னவெல்லாம் செய்யலாமோ அனைத்தையும் செய்து தருகிறார்கள்.
மாறாக, அதிகம் படிக்காத, கையில் பணம் இல்லாத பெற்றோர்கள், தம் பிள்ளைகளை அவர்கள் வழியே செல்ல விட்டுவிடுகிறார்கள். இதனால் இப்படிப்பட்ட பிள்ளைகள் சாதிப்பது குறைவாகவே உள்ளது.
இந்தவகைப் பிள்ளைகளையும் அந்தவகைப் பிள்ளைகளையும் ஒப்பிட்டு நாம் எதையும் சொல்லிவிட முடியாது. பெற்றோர்களின் கவனிப்பு இருந்தும் உருப்படாதவர்களாக எத்தனையோ பிள்ளைகள் உண்டு. பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமலேயே சாதித்த எத்தனையோ பிள்ளைகள் உண்டு. கிளாட்வெல்லின் விவாதம் அதுவல்ல. பெற்றோர்களின் கவனிப்பு இருக்கும் பட்சத்தில் ஒரு பிள்ளையால் அதிகமாகச் சாதிக்க முடியும் என்பதே.
***
கிளாட்வெல் சொல்வது அனைத்துமே ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ள நீதி போதனைகள்தானே? திறமையை வளர்! கடினமாக உழை! வாய்ப்பு கிடைத்தால் பற்றிக்கொள்! பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும்! ஒரு சமுதாயமே தன் புதிய தலைமுறைக்கு வளமான வாய்ப்புகளைச் செய்து தரவேண்டும்! இப்படி, இதில் வேறு என்ன புதிதாக உள்ளது?
தெரியவில்லை. எதுவுமே புதிதல்ல என்றும் தோன்றுகிறது. எல்லாமே புதிதாகவும் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது கதை சொல்லும் திறனும், எளிமையான, ஆழமான எழுத்தும் வசீகரிக்கிறது.
நான் சமீபத்தில் விரும்பிப் படித்து, ரசித்த புத்தகங்களில் Outliers-ம் ஒன்று.
***
நியூ யார்க்கரில் மால்கம் கிளாட்வெல் எழுதும் கட்டுரைகளின் தொகுப்பு
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
5 hours ago
கடைசியில், "Outliers தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கிழக்கு வெளியீடாக நாளையிலிருந்து கிடைக்கும்" என்று ஒரு பிட்டு போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றி விட்டீர்கள் :-)
ReplyDelete(கொழும்பு பயணக் குறிப்பு?)
ஸ்ரீகாந்து -
ReplyDeleteபொட்டில அடிச்சாப்புல சொன்னீங்க! கிழக்கு பண்ற மார்கெட்டிங்ல அவங்க க்ரூபில இருந்து யார் எதை எழுதினாலும் with a pound of salt டுடன் எடுத்துக்க பழகிட்டேன்! இந்த கட்டுரை கண்டிப்பா அந்த வகையில் ஏமாற்றமாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது!
நம்ம ப்ரோக்கள் பாஷையில் சொன்னா முக்கிய கவனிப்புக்கும் ஆழ்பார்வைக்கும் உட்படுத்தப்படவேண்டியது!
;)
டைனோ ப்ரோ... எங்கூர்ல ‘புத்தகம் பேசுது’ன்னு ஒரு கம்யூனிஸ்ட் குழும பத்திரிகை வருது. அதுல நான் படிக்கற சில புத்தகங்கள் பத்தி எழுதிகிட்டு வரேன். அதுவும் உங்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தரும்னு நம்பறேன். ஒரு நாலு கட்டுரை இருக்கும். போடறேன். படிச்சுக்கங்க.
ReplyDeleteஆனாலும் சீக்கிரமே உங்களை ஏமாத்தாம, கிழக்கு புகழ் பாடும் சில மார்க்கெட்டிங் பதிவுகளையும் சேர்த்துடறேன்.
எம்மேல மட்டும் பாயாதீங்க சாரே (அதாவது கொஞ்சம் கோவத்தை நண்பர் ஸ்ரீகாந்து மேலயும் பாயவுடுங்கன்றேன்)!
ReplyDeleteஸ்ரீகாந்து/என்னைப் போல சிலர் வெளிப்படைய சொல்லிப்புடறோம், மித்தவிங்க வெளிய சொல்றதில்லை! அஷ்டே!!
பத்தாயிர மணி நேர உழைப்பு என்பது புதிதாக உள்ளது...
ReplyDeleteஒரு குப்பனோ, சுப்பனோ , அவ்வளவு நேரம் இசை பயிற்சி செய்ய முடியுமா...புரிகிராம் செய்ய முடியுமா...
நம் வெற்றிக்கு காரணம் நாம் மட்டும் அல்ல,,, பலரது தியாகம் அதில் அடங்கி இருக்கிறது என்பதை நச் என சொல்கிறது புத்தகம்...
நான் ஒரு மால்கம் க்ளாட்வெல் பைத்தியம் ; கிழக்கு பதிப்பகத்தில் 'டிப்பிங் பாய்ன்ட்' அல்லது 'ப்ளிங்' அல்லது 'அவுட்லயர்ஸ்' மொழி பெயர்ப்புகள் வந்திருக்கும் என்று நோட்டம் விட்டேன் , ஆனால் எதுவும் இல்லையே !
ReplyDeleteசரண்: டிப்பிங் பாயிண்ட், விகடன் பிரசுரம் வாயிலாக வெளிவந்துள்ளது. எனவே அடுத்த இரண்டு புத்தகங்களுக்குமான first rights அவர்களிடம்தான் உள்ளது. விரைவில் விகடன் வழியாக அவை வெளிவரலாம்.
ReplyDelete