நீங்கள் முப்பது வருடங்களுக்கு முன்னால் இந்திய கிரிக்கெட்டைப் பார்க்க ஆரம்பித்திருந்தீர்கள் என்றால் இந்தப் பெயர்கள் உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது.
இன்றைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் இருக்கும் கந்தரகோலமான நிலை அப்போது இருக்கவில்லை. அதுவும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றால் போருக்குச் சமானமாகக் கருதப்பட்ட அந்த நாள்களில், வலுவான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு, தட்டுத் தடுமாறி டிரா செய்தோ அல்லது செருப்படி வாங்கியோ திரும்பும் இந்திய அணி உங்களுக்கு அல்சரைப் பெற்றுத் தந்திருக்கும்.
அப்போதெல்லாம் இந்திய அணி வீரர் யாராவது செஞ்சுரி அடித்தாலே நாங்கள் எல்லாம் எம்பிக் குதிப்போம். பொதுவாக அது காவஸ்கராக மட்டுமே இருக்கும். அவ்வப்போது விஸ்வநாத் அல்லது வெங்சர்க்கார். திடீரென எங்கிருந்தோ வந்தார் மொஹீந்தர் அமர்நாத். இதில் இரட்டை சதம் என்பது மருந்துக்கும் இருக்காது. ஆனால் பாகிஸ்தான் அணியிலோ கண்ணில் ரத்தம் வர வைத்துவிடுவார்கள்.
முடாஸர் நாஸரும் ஜாவீத் மியாந்ததும் சேர்ந்து நம்மைக் கதற அடித்து, ஆளுக்கு இரட்டை சதம் போட்ட ஆட்டம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம் (முடாஸர் நாஸர் 231, ஜாவீத் மியாந்தத் 280*). என்னால் கடைசிவரை இதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதெப்படி ஐயா, இவர்களில் ஒருவரைக்கூட அவுட் ஆக்க முடியவில்லை? ஒரு ஆள் இரட்டை சதம் என்றால்கூடப் பரவாயில்லை. இரண்டு பேருமா? பின்னர் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 900 ரன்களைத் தாண்டிய கொடுமையும் நிகழ்ந்துள்ளது. (அதில் ஜயசூரியா 340, மஹாநாமா 225, அரவிந்த டி சில்வா 126!)
முடாஸர் நாஸர் கொஞ்சம் அழுக்கான பேட்ஸ்மன். ஜொலிக்கும் ஆட்டம் அல்ல அவரது. மோசின் கானுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர். இதில் மோசின் விளையாட்டு கொஞ்சம் அழகாக இருக்கும். ஆனால் மோசின் எப்படியும் கபில் தேவ் பந்துவீச்சில் அவுட் ஆகிவிடுவார். அவர் அப்போது இந்திய நடிகை ரீனா ராய் என்பவரைக் கணக்கு பண்ணிக்கொண்டிருந்தார். அதனால்தான் சீக்கிரம் அவுட் ஆகி, இந்தியாவின் மானம் கப்பல் ஏறாமல் காப்பாற்றிவந்தார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் முடாஸருக்கு இதுபோல இளகிய மனம் கிடையாது.
இதில் ஜாஹீர் அப்பாஸ் ரொம்பவே மோசம். அடுத்தடுத்த ஆட்டங்களில் வரிசையாக செஞ்சுரி அடித்து ரொம்பவே கடுப்பேத்துவார். அந்த மோசமான பாகிஸ்தான் தொடர் - 1982-83 - உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இம்ரான் கான் மிகச் சிறப்பாகப் பந்து வீசிய தொடர். மொஹீந்தர் அமர்நாத், காவஸ்கர் தவிர மீதி அனைவருமே திணறிய தொடர். முதல் மூன்று டெஸ்ட்களிலும் அப்பாஸ் வரிசையாக செஞ்சுரி. 215, 186, 168. அடுத்த மூன்று டெஸ்ட்களில் நல்ல வேளையாக இந்த அசம்பாவிதம் தொடரவில்லை. எப்படி ஒரு ஆள் அடுத்தடுத்த டெஸ்டில் தொடர்ந்து சதம் அடிக்கிறார் என்பது புரியவில்லை. பாகிஸ்தான் அம்பயர்கள் அழுகுணி ஆட்டம் ஆடுகிறார்கள் என்று சொல்லி தேற்றிக்கொண்டோம்.
நல்லவேளையாக மோசின் கான், ஜாஹீர் அப்பாஸ் விரைவிலேயே காணாமல் போனார்கள். முடாஸர் நாஸர்கூட கொஞ்ச நாள் கழித்துக் காணோம். ஆனால் ஜாவீத் மியாந்தத் வெகு நாள்கள் தொடர்ந்து இருந்து கழுத்தறுத்தார். ஷார்ஜாவில் சேத்தன் ஷர்மாவைக் கடைசிப் பந்தில் சிக்ஸ் அடித்து பெரும்பாலான இந்தியர்களை கிரிக்கெட் ஆட்டம் பார்ப்பதிலிருந்து விடுவித்தார்.
இந்த நால்வர் இடத்தை ஆக்ரமிக்க வந்த ஆட்டக்காரர்களில் சலீம் மாலிக், இன்ஸமாம்-உல்-ஹக் தவிர வேறு யாரும் இந்திய ரசிகர்களை அதிகமாகப் புண்படுத்தியதில்லை.
இன்று யோசித்துப் பார்த்தால் யார் பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அக்ரம், உக்ரம், குல், முஷ்டாக், இம்ரான் என்று நான்கைந்து முஸ்லிம் பெயர்களை எடுத்துக்கொண்டு அதில் ஏதோ இரண்டை அடுத்தடுத்துப் போட்டால் வரும் பெயரில் யாராவது ஒருவர் இருப்பார். அவர் வலது கையா, இடது கையா, தடுத்தாடுவாரா, அடித்தாடுவாரா, ஆல் ரவுண்டரா, இல்லையா என்று புரிந்துகொள்வதற்குள் காணாமல் போய்விடுவார். ஹெராயின் அடித்து மாட்டிக்கொள்வார். செக்ஸ் பிரச்னையில் சிக்கிக்கொள்வார். மேட்ச் ஃபிக்ஸிங்கில் மாட்டி நான்கு மாதங்கள் தடை செய்யப்பட்டு, மீண்டும் அணிக்குள் நுழைந்து, அடுத்து வாழ்க்கை முழுவதும் தடை என்று உதை வாங்கி, காணாமல் போய்விடுவார்.
இவ்வளவு திறமையைக் கொண்ட ஒரு நாட்டில் இப்படி ஒரு குழப்படி நிர்வாகத்தினால் இவ்வளவு கேவலமான நிலையா என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. கொஞ்சம் ஆசுவாசமாகவும் உள்ளது.
Saturday, March 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
//இந்த நால்வர் இடத்தை ஆக்ரமிக்க வந்த ஆட்டக்காரர்களில் சலீம் மாலிக், இன்ஸமாம்-உல்-ஹக் தவிர வேறு யாரும் இந்திய ரசிகர்களை அதிகமாகப் புண்படுத்தியதில்லை.//
ReplyDeleteஒரு நாள் போட்டிகளில் சயீத் அன்வரை மறந்து விட்டீர்களே?
//அக்ரம், உக்ரம், குல், முஷ்டாக், இம்ரான் என்று நான்கைந்து முஸ்லிம் பெயர்களை எடுத்துக்கொண்டு அதில் ஏதோ இரண்டை அடுத்தடுத்துப் போட்டால் வரும் பெயரில் யாராவது ஒருவர் இருப்பார்//
ReplyDeleteபயங்கர டேமேஜிங் ஆக இருந்தாலும் உண்மை அதுதான்.
//ஹெராயின் அடித்து மாட்டிக்கொள்வார். செக்ஸ் பிரச்னையில் சிக்கிக்கொள்வார். மேட்ச் ஃபிக்ஸிங்கில் மாட்டி நான்கு மாதங்கள் தடை செய்யப்பட்டு, மீண்டும் அணிக்குள் நுழைந்து, அடுத்து வாழ்க்கை முழுவதும் தடை என்று உதை வாங்கி, காணாமல் போய்விடுவார்.//
ReplyDeleteபால் டேம்பரிங்'ஐ மறந்து விட்டீர்களோ?
//இவ்வளவு திறமையைக் கொண்ட ஒரு நாட்டில் இப்படி ஒரு குழப்படி நிர்வாகத்தினால் இவ்வளவு கேவலமான நிலையா என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. கொஞ்சம் ஆசுவாசமாகவும் உள்ளது//
ReplyDeleteஉண்மைதான். ரா டேலன்ட் என்று பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் போல யாரும் கிடையாது. ஆனால் ???????????????????????
//வலுவான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு, தட்டுத் தடுமாறி டிரா செய்தோ அல்லது செருப்படி வாங்கியோ திரும்பும் இந்திய அணி உங்களுக்கு அல்சரைப் பெற்றுத் தந்திருக்கும்.//
ReplyDeleteஇதெற்கெல்லாம் பிராயசித்தம் செய்வது மாதிரி அப்போது தொலைக்காட்சியில் நடைபெற்ற (நிகழ்ச்சி மற்றும் தொலைக்காட்சியின் பெயர் மறந்து விட்டது) quiz ப்ரோக்ராம் ஒன்றில் இந்திய அணியே எப்போதும் வெற்றி பெற்று வந்தது :)
Ah...Those 80's teams from Pakistan and WI...
ReplyDeleteபொதுவாகவே பாக் வீரர்கள் இந்தியா என்றால் வெறியுடனே விளையாடுவார்கள். நம் அணியில் உள்ள மாமாக்கள் தயிர் சாதத்தனமாக தடவுவார்கள். டெஸ்ட் மாட்ச் என்றால் ஆரம்ப ஓவரில் இருந்து டிரா செய்யத்தான் நம் அணியினர் முயற்சி செய்வார்கள். அதுவும் அக்ரம், காதிர் விளையாடிய நாட்களில் கொடூரம்.
கபில் (அதன் பின் ஸ்ரீகாந்த்) அதை மாற்றினார்கள். அக்ரம் மற்றும் காதிர் போன்றவர்களின் பந்து வீச்சை இந்தியா எதிர் அணியில் இல்லாதபோது மிகவும் ரசிப்பேன். அவர்கள் நம் அணியில் இருந்திருந்தால் அப்போதைய மேற்க்கிந்திய அணியைக் கூட நம்மால் தைரியமாக சந்தித்திருக்கலாம்.
அந்த நாடே காணாமல் போய்கொண்டு இருக்கின்றது.இதில் அங்குள்ள கிரிக்கெட் அணியைக் காணோம்னு தேடுறீங்களே? :)
ReplyDeleteவினை விதைத்தவர்கள்...
அட்டகாசமான பதிவு! :-)
ReplyDeleteவசிம் அக்ரம் நம்மவர் ஸ்ரீகாந்தின் career-க்கு முற்றுப்புள்ளி வைத்தபோது நொந்தே போனேன்!
-விகடகவி
West Indeis Team also like that ..
ReplyDelete\\இவ்வளவு திறமையைக் கொண்ட ஒரு நாட்டில் இப்படி ஒரு குழப்படி நிர்வாகத்தினால் இவ்வளவு கேவலமான நிலையா என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. கொஞ்சம் ஆசுவாசமாகவும் உள்ளது.
ReplyDelete\\
பழைய மேட்சுகளைப் பார்க்கிறப்போ எப்படி இருந்த டீம் இப்படி ஆகிடுச்சேன்னு நினைக்கத் தோணுது.
அந்த மியாந்தாத்-முதாஸர் ஆட்டம் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது! முதாஸர் இவ்வளவு ரன் குவித்ததும், போதாத குறைக்கு slow medium bowling போட்டு விக்கெட் எடுத்ததும் சோதனையாக இருந்தது.
ReplyDeleteஎண்பதுகளின் நடுவே ஜாஹீர் இங்கே வந்தபோது, அவரும் மற்றவர்களும் மனீந்தர் சிங்கின் அபாரமான பந்து வீச்சில் திணறினார்கள். 1983 முதல் 1985 வரை நாம் பிரபல ஒரு நாள் போட்டிகளில் வெற்றி கண்டது கண் முன்னே நிற்கிறது.
மற்ற துறைகளைப் போல இதிலும் ஒரு நாட்டின் ஆட்டக்காரர்களின் தரத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதும் இன்னொரு காரணம் (எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்).
இந்தியா-பாகிஸ்தான் மோதலைப் பொருத்தவரை, எண்பதுகள் வரை நமக்கு இருந்த hang-ups அடுத்து வந்த தலைமுறைகளுக்கு இல்லை என்பது நம் வெற்றி விகிதம் அதிகரித்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் என்று தோன்றுகிறது.
இப்போது பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் நம்மவர்களை மதிக்கிறார்கள், நம்மவரின் வருமானத்தைக் கண்டு தமக்கும் வாய்ப்புகள் வராதா என்று ஏங்குகிறார்கள்.
இந்தியர்களுடன் மைதானத்தில்/வெளிப்படையாக ஓரளவு சிநேகிதமாக இருந்த பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் வெகு சிலரே. சட்டென்று மனதிற்கு வருபவர்கள் ஜாஹீர் அப்பாஸ், வாஸிம் ராஜா, காஸிம் ஓமர், மொஹ்ஸின் கான், வாஸிம் அக்ரம், அப்துல் காதர், ரமீஸ் ராஜா. இதனாலேயே இவர்களில் பலரை பாகிஸ்தானில் சக்தி வாய்ந்தவர்களுக்கு பிடிக்கவில்லையோ என்றும் சந்தேகமாக் இருக்கிறது.
நல்ல பதிவு பத்ரி...அதற்கு முன்னர் ஒரு சீரீஸ்-ஏ தோற்றிருந்தாலும் வேர்ல்ட் கப் மாட்சில் மட்டும் பாகிஸ்தானை இந்தியா வெல்வது ஒரு சூப்பர் விஷயம்.
ReplyDeleteஅண்ட், WI - இந்தியா onfield rapport பார்க்க சூப்பரா இருக்கும். 80 / 90 - களில் இந்தியாக்கு அடுத்து மோஸ்ட்லி இந்தியர்களுக்கு பிடித்த டீம் WI தான். ஒரு WI - இந்தியா ஒன் டே மேட்ச் நினைவுக்கு இருக்கிறது. இந்தியா ஜெயிக்கும் நிலைமை. வால்ஷ் லாஸ்ட் விக்கெட். கபில் பௌலிங். வால்ஷ் போல்ட் ஆனவுடன் செம கேஷுவல் ஆக கபிலை பார்த்து லுக் விட, கபில் முகம் கொள்ளா சிரிப்பு/நட்புடன் வால்ஷை நோக்கி ஓடி அவரை அணைத்துக்கொண்டார். செம விசுவல் டிலைட்.
நான்கு பதிவுகள் எனது கூகுள் ரீடரில் உள்நுழைந்தன. முதலாமவது மனம், எண்ணங்கள் இவற்றை பற்றிய சூட்சுமங்களை பற்றி அலசுவது, இரண்டாவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பற்றி, மூன்றாமவது அறிவியல்! பரிணாம வளர்ச்சி குறித்து! நான்காமவது விளையாட்டை குறித்து. மிக குறுகிய காலத்தில் ஒரே மனிதர் இந்த நான்கையும் அடுத்தடுத்து எழுதுவது, அதோடு எல்லாவற்றையும் சுவாரஸ்யமாக எழுதுவது ஆச்சரியம் தான். வெவ்வேறு தலைப்புகளில் இருக்க்கும் புத்தகங்களை பற்றிய பதிவுகள் என்பதால் மட்டும் இந்த பணி சுலமானது அல்ல. வாழ்த்துகள்.
ReplyDeleteபாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி நீங்கள் சொன்ன விதம் ரசிக்க வைத்தது. ஆனால் நீங்கள் சொன்ன எந்த சம்பவமும் எனக்கு தெரியாது. நான் அப்போது சின்ன பையன். பத்ரி, நீங்கள் இவ்வளவு வயதானவரா? உங்கள் புகைப்படத்தை பார்த்து நான் தான் தவறாக கணக்கு போட்டு விட்டேன் போல. :))
பழைய உப்புமாவைக் கொஞ்சம் கிண்டி விட்டீர்கள்.
ReplyDeleteசேகிர் அபாசின் ஸ்டைலையும் வேகத்தையும் காட்டடியையும் மறக்கவில்லை. மனிதர் தானாக மனமிறங்கி அவுட்டானால் தான் உண்டு.
That was the golden period where cricket rivalry really meant superb action on the field - India Vs PAK match on a rainy day with pakoda was the utlimate for me. I hate these days of BIKINI ( IPL ) cricket where glamour takes the front stage - Guess change has been part of everything and Cricket is no exception - Srividhya
ReplyDelete