Wednesday, March 24, 2010

உடைக்கப்படும் கோயில்

இன்று காலை நான் அலுவலகம் வரும்போதுகூட அங்குதான் கோயில் இருந்தது. கோபாலபுரம், லாயிட்ஸ் ரோட் அல்லது அவ்வை சண்முகம் சாலை. அங்கே பெயர் எழுதப்படாத, செங்கற்களைக் கொண்டு எழுப்பிய ஒரு அம்மன் கோயில். ஆடி மாதம் சென்னையின் எல்லா இடங்களையும் போல இங்கும் கஞ்சி காய்ச்சி ஊற்றுவார்கள், திருவிழா நடக்கும், ஜீரோ வாட் பல்புகள் சரம் சரமாகப் போட்டு அம்மன் படம் மின்னும்.

சென்னையின் பல பகுதிகளையும்போன்று இங்கும் ஒரு பக்கம் பணக்காரர்களின் பகட்டான வீடுகள், அந்த வீடுகளுக்குத் தேவையான கல்யாண மண்டபங்கள், குளிரூட்டப்பட்ட கடைகள், இப்போது அருகே ஒரு பழமுதிர் நிலையம் காய்கறிக் கடையும் வந்துவிட்டது. அதற்கு எதிர்ச்சாரியிலேயே சிறு ‘சேரி’ - சுமார் 3000-5000 சதுர அடி இடத்துக்குள்ளாக சுமார் 70-80 குடும்பங்களாவது இருக்கும் என்று கணிக்கிறேன். நான் உள்ளே சென்றுகூடப் பார்த்தது கிடையாது. பெரும்பாலான மக்கள் தெருவில்தான் படுத்துத் தூங்குவார்கள். குழந்தைகள் தெருவில்தான் வெளிக்குப் போவார்கள். தெருவில் உள்ள ஒரு குழாய் அடியில் உட்கார்ந்து குளிப்பார்கள், துணி துவைப்பார்கள்.

நகரின் ஓயாத இடப் பசிக்கு இரையாகி சீக்கிரமே ஒரு நாள் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தப்படுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இருக்கும் இடம் யாருக்குச் சொந்தம் என்று தெரியவில்லை. யாருக்குச் சொந்தமானாலும் இன்றே அது 10 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டித் தரக்கூடியது. எனவே யாராவது அதன்மீது கண் வைத்திருப்பார்கள்.

இன்று அவர்களது கோயில்மீது கை வைத்திருக்கிறார்கள்.


இன்றும் மதிய உணவுக்கு வீட்டுக்குப் போகும்போது ஒரே போலீஸ் கூட்டம். எதிரே கொதித்துப்போன மக்கள் கூட்டம். ராட்சத இயந்திரம் ஒன்று கோயிலை உடைத்து கற்களை அள்ளி டிராக்டரில் போட்டுக்கொண்டிருந்தது. ஜெயா டிவி கேமரா மக்களிடம் பேசிக்கொண்டிருந்தது. சில செய்தித்தாள்களின் புகைப்படக்காரர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.


ஒரு அம்மா ஆவேசமாகப் பேசினார். ‘இந்தக் கோயில் 90 - 100 வருஷமா இருக்குதுங்க. நாங்க பொறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து இருக்குதுங்க.’ சிலர் காவலர்கள் தங்களை அடித்ததாகப் புகார் சொன்னார்கள். ஆனால் நான் பார்த்தவரை காவலர்கள் ஒரு ஓரமாகவே அமர்ந்திருந்தனர்.

கோயில் கட்டடத்தை இடித்தபின்னர், சிலைகள் மட்டும் ஒரு பீடத்தில் வைக்கப்பட்டிருந்தன. திடீரென மக்கள் பலரும் கூட்டமாக வந்து வேகாத வெயிலில் அந்தச் சிலைகளுக்குமுன் சட்டென்று உட்கார்ந்துவிட்டனர்.


அருகில் இருந்த ‘சேட்டு’ கல்யாண மண்டபத்தினர்தான் பணம் கொடுத்து அந்தக் கோயிலைப் பெயர்த்துவிட்டார்கள் என்பது மக்களின் வாதம். ‘அவனுக கையைப் பாம்பு புடுங்கிடுங்க. நாகாத்தம்மா சும்மா இருக்கமாட்டா’ என்றார் ஒருவர். ‘சிலைல கை வெச்ச, மவனே நீ ஒழிஞ்சடா’ என்றார் இன்னொருவர் ஆவேசமாக.கார்பரேஷன் இயந்திரமும் ஊழியர்களும் தங்கள் பணியை விடாது செய்துகொண்டிருந்தனர்.

17 comments:

 1. ‘சிலைல கை வெச்ச, மவனே நீ ஒழிஞ்சடா’ என்றார் இன்னொருவர் ஆவேசமாக.
  ..


  சூப்பர் டயலாக்! சிரித்துக்கொண்டே இருக்கிறேன்

  ReplyDelete
 2. Mr.Sheshadri i enquired with one of the resident from the same place..He says it was illegally enchroached and placed the statues few yrs before and they suddenly built room & started staying in it.

  ReplyDelete
 3. நான் இந்தத் தெருவில் வசிக்க ஆரம்பித்தது 2000-ல். அன்றுமுதல் இந்தக் கோயிலைப் பார்த்து வருகிறேன். நிச்சயமாக இது ஒருவித encroachment-தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் என்றிலிருந்து என்பது வேறு விஷயம்.

  எதுவாக இருந்தாலும், சென்னை முழுக்க உள்ள அத்துமீறிக் கட்டப்பட்ட கோயில்களை அப்புறப்படுத்துவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதை நான் வரவேற்கிறேன். இந்தப் பதிவு வெறும் ஒரு சிடிசன் ஜர்னலிஸ்டாக மட்டுமே. நான் அங்கே வசிப்பவன், கையில் கேமரா மொபைல் போன் வைத்திருப்பவன் என்ற காரணம் ஒன்றுமட்டுமே!

  ReplyDelete
 4. How many unauthorized temples do we need? Should we condone encroachments because poor people worship there?

  ReplyDelete
 5. I live behind music academy, and I have seen the colony for ages. But the 'temple' is a recent activity. I pity these people..their day-to-day living is such a difficult task - no toilets, no basic amenities.. they have not protested for better life but now, they are in the open for a 'god'issue. Will anyone believe - there is a place in gopalapuram where people defaecate on the main road? shame on the authorities too..]

  ReplyDelete
 6. அத்துமீறி கட்டப்பட்ட கோவில் என்றால் இடிக்கத்தான் வேண்டும். மதுரையில் இப்படி கிட்டத்தட்ட நூறு கோவில்களுக்கு மேல் இடித்தார்கள். முதல் இரண்டு கோவிலை இடிக்கும்போது முணுமுணுத்த மக்கள், ஒரு கட்டத்தில் இது சாதாரணமாக நடக்கும் வேலைதான் என்று அமைதியாகிவிட்டார்கள்.

  அத்துமீறி கட்டப்பட்ட கோவில் மட்டுமில்லாமல், அத்துமீறி கட்டப்பட்ட எதுவாக இருந்தாலும் இடிக்கவேண்டும் என்பதுதான் மிகச்சரி. ஆனால் மிகச்சரியைச் செய்யாமல் வசதியான சரியை மட்டும் செய்வதுதான் எளிமையானது!

  ReplyDelete
 7. இந்த மாதிரி கோயில்கள் தனிப்பட்ட நபர்களால் உருவாக்கப்பட்டு பின்பு பொது மக்களால் வழிபடப்படுகின்றன. இவை உருவாகும்போதே தடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

  ReplyDelete
 8. அத்துமீறி நடைபாதைகளைஆக்கிரமிக்கும் கடைகளையும் இதே நோக்கில் அகற்றினால் தி.நகரில் மூச்சு விடலாம்.

  ReplyDelete
 9. கடவுள் பெயரால் நடக்கும் இதுப் போல அத்து மீறல்களை "உடைத்து எரிய வேண்டும்"

  இதுப் போல பல கோயில்களால் போக்குவரத்திற்கு பல இடைஞ்சல்கள்!!!

  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 10. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்கள் அனைத்துமே ஆக்கிரமிப்புகள்தாம். தலித், சிறுபான்மையினர் ஆகியோருக்கு நியாயமாகச் சேரவேண்டிய நிலங்களிலே இக்கோயில்கள் கட்டப்பட்டுள்ளதை இடதுசாரி மற்றும் பெரியாரிய வரலாற்று ஆய்வாளர்கள் பலமுறை நமக்கு விளக்கியுள்ளனர். ஆகவே, இக்கோயில்களை உடனடியாக இடித்து தலித்களுக்கும் சிறுபான்மையினருக்கும் அந்நிலங்களை வழங்க கலைஞர் செம்மொழி மாநாட்டுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  ReplyDelete
 11. ஜெயமோகன் blog-ல் இருந்து பரிணாம வளர்ச்சி நிஜமே படிக்க வந்து கடைசியில் உடைக்கப்படும் கோவில் படித்தேன்..பன்னூற்றாண்டு கால பரிணாம வளர்ச்சி பற்றி அறிய பின்னது மிகவும் உதவியது... இனி வருங்காலம் பரிணாமம் பற்றி ஆராய்ச்சிகள் நிகழ்த்த best species சென்னைவாசிகள்தான்...

  ReplyDelete
 12. Any encroachment, be it temple or other religious places of worship,need to be pulled down.

  ReplyDelete
 13. // ஜெயா டிவி கேமரா மக்களிடம் பேசிக்கொண்டிருந்தது. சில செய்தித்தாள்களின் புகைப்படக்காரர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள். //

  // சிலர் காவலர்கள் தங்களை அடித்ததாகப் புகார் சொன்னார்கள். ஆனால் நான் பார்த்தவரை காவலர்கள் ஒரு ஓரமாகவே அமர்ந்திருந்தனர். //

  இரண்டு வருடம் முன்பு 'ஜெயா நீயூஸ்' பற்றி நான் எழுதிய பதிவு.

  http://guhankatturai.blogspot.com/2008/04/vs.html

  ReplyDelete
 14. ஆமா, ஒரு சாயபு நிலத்தை ஆக்கிரமித்து தான் ராஜராஜ சோழன் பெரிய கோயில் கட்டினான். ஒரு சர்ச் இருந்த இடத்தை பிடுங்கி தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கட்டப்பட்டது. கரெக்ட் Mr. பா. ரெங்கதுரை

  ReplyDelete
 15. //இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில்கள் அனைத்துமே ஆக்கிரமிப்புகள்தாம்.//
  மிகச்சரி... பூரி ஜகனாதர் கோயிலும், திருக்கழுக்குன்றம் கோயிலும் சிறு உதாரணம்...

  ஆக்கிரப்புக்கள் என்று பார்த்தால் சென்னையில் ஒரு காலத்திலிருந்த ஏரிகள் எல்லாம் இன்று எங்கே என்று தேடிப்பார்த்து அவற்றை மீட்டால் வருங்கால தலைமுறை நம்மை வாழ்த்தும்...

  ReplyDelete
 16. Gods and Godesses of the poor are treated like the poor. Demolishing temples and other such structures is done in the name of remving enroachment but when the rich enroach it gets
  regularized.

  ReplyDelete
 17. சென்னைப் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் படியோரம் குறுகலான ரோடு. ஆட்டோ ஸ்டாண்ட் வைக்க வேண்டும் என்பதற்காக 10 வருடத்துக்கு முன் ஒரு வேப்ப மரக்கன்றை முதலில் நட்டனர். பின் மஞ்சள் தடவிய இரண்டு செங்கல் வந்தது. பின் சூலாயுதம். பின் ஒரு அம்மன் தலை. பின் நாகவள்ளி அம்மன் என்ற பேர். ஒரு அஸ்பெஸ்டாஸ் கொட்டகை. இன்று அய்யர் பூசையோடு அது ஒரு முழுக் கோயில். டாக்கிண்ஸ் இந்த கோயில் பரிணாம வளர்ச்சி பற்றி ஒரு புத்தகம் எழுதலாம். சமூக கீழ்த்தட்டில் இப்படி ஒரு கோயில் என்றால். மேல்த்தட்டில் நங்கநல்லூர் கணேஷ் மண்டலி என்ற அமைப்பு செய்துள்ள பக்தி தீவிரவாதம். அது 1960களில் வந்த அமைப்பு. ஒரு வரசித்தி விநாயகர் கோயில் அமைத்து நடத்தி வந்தது. 2006ல் கோயில் பல சன்னதிகளுடன் மக்கள்தொகை வளர்ச்சியில் சிறியதான தோற்றமானது. பக்கத்தில் இருந்த 17வது தெருவில் லேசாக ரோட்டின் ஒரு பகுதியை சைடாக ஆக்கிரமித்து உள்ளூர் நகராட்சி ஆசீர்வாதத்துடன் 'எக்ஸ்டென்ட்' செய்யப்பட்டது. குடமுழுக்கு முடியும் வரை ஒரு தற்காலிக செயல் என்று சால்ஜாப்பு சொல்லப்பட்டது. ஆனால் இன்று வரை ஆக்கிரமிப்பு தொடர்கிறது. அருகில் உள்ள ஹயக்ரீவர் கோயிலிலும் இதே நிலை. பக்தித் தீவிரவாதத்தில் சைவ- வைணவ சமநிலை. சந்தேகம் இருந்தால் இங்கு வந்து பாருங்கள். நான் இறைபக்தி நிறைந்த அந்தணன். ஆனால், கண் முன் கடவுள் பெயரில் நடக்கும் அநியாயம் பொறுக்க முடியவில்லை. வடமொழியில் ஒரு வாக்கு உண்டு, அன்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே வினஸ்யதி... புண்யக்ஷேத்ரே க்ருதம் பாபம் வஜ்ரலேபோ பவிஷ்யதி --- மற்ற இடங்களில் பாபம் செய்திருந்தால் புண்ணியத்தலங்களில் பரிகாரமாகும் ... ஆனால் புண்ணியத்தலத்திலேயே பாபம் செய்தால் அதற்கு பரிகாரமே இல்லை...."anyakshetre kritam papam, punyakshetre vinashyati; punyakshetre kritam papam, vajralepo bhavishyati (Sin committed at other places is destroyed in a holy place, but the sin committed in a holy place becomes firmly attached)."... ...."இறைவன் தான் சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும். மாணிக்கவாசகரான திருவாதவூராரின் கதையில் அரசு பணத்தை கோயில் கட்டியதும் சரி, பத்ராசல ராமதாசர் கோயில் கட்டிய கதையும் சரி, இருவருக்கும் சுண்ணாம்புக் காளவாய் போன்ற கடுமையான தண்டனை முடியும் வரை ஆண்டவன் வரவில்லை. பின்னர்தான் நரிகள் பரிகளான கதை நடந்தது. மாடர்ன் பக்தித் தீவிரவாதிகள் இதனை உணரவேண்டும். Means are as important as ends.

  ReplyDelete