Tuesday, April 13, 2010

சட்ட மேலவை

திமுக தலைமையிலான தமிழக அரசு சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் கொண்டுவந்து வாக்கெடுப்பில் வென்றுள்ளது. இந்த அரசின் காலம் முடிவதற்குள் மத்திய அரசின்/குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று மேலவையைக் கொண்டுவந்தால்தான் உண்டு. (அல்லது வரும் தேர்தலிலும் தொடர்ந்து திமுகவே ஜெயிக்கவேண்டும்.)

1986-ல் கருணாநிதிமீதான வெறுப்பால் எம்.ஜி.ஆர் மேலவையை அழித்தார். வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவைக்கான நியமன உறுப்பினர் ஆக்கியதில் நடந்த குளறுபடிகளும் இதற்கு ஒரு காரணம்.

ஆனால் ஒருவிதத்தில் மேலவை இருந்தால் நல்லதுதான் என்று தோன்றுகிறது. புதிய திட்டத்தில் 63 உறுப்பினர்கள் இருப்பார்கள். அதனால் அரசுக்கு அதிகச் செலவு. இந்த உறுப்பினர்களுக்கும் பஞ்சப்படி, பயணப்படி, சம்பளம் எல்லாம் பேரவை மாதிரியே அளிக்கவேண்டும். இதிலும் கட்சி ஜிஞ்சாக்கள், விசுவாசிகள் ஆகியோர் பேரவைக்கான தேர்தலில் தோல்வியுற்றால் இங்கே திணிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. போகட்டும். அதையும் மீறி இங்கே சில மாறுதல்களைக் காணமுடியும்.

உதாரணமாக பஞ்சாயத்துகள் ஒன்றுசேர்ந்து 21 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். இதை மிக முக்கியமான போக்காக நான் பார்க்கிறேன். அடுத்து பட்டதாரிகளுக்கான இடங்கள் போன்றவை. இவற்றை பட்டதாரிகள் என்பதிலிருந்து மாற்றி, தொழில்துறைக்கான இடங்கள் என்றாக்கலாம். அதாவது சிறு வியாபாரிகள், பெரும் தொழிலகங்கள், கைத்தறித் துறை, விவசாயத்துறை போன்றவை. இதனால் தொழில்துறையைச் சேர்ந்த சிலர் உறுப்பினராக முடியும். ஆசிரியர்கள் சிலர் உறுப்பினர் ஆகமுடியும். தொழிற்சங்கங்களுக்கு என்று சில இடங்களை ஒதுக்கலாம். (கம்யூனிஸ்ட்களைத் திருப்திப்படுத்த!)

இவர்கள் கல்வி, தொழில், விவசாயம் போன்றவற்றைப் பற்ற் ஒரு விவாதத்தை சட்டமன்றம் என்ற களத்தில் கொண்டுவரமுடியும். மற்றபடி இன்றைய சட்டப் பேரவையில் நடக்கும் விவாதங்கள் அனைத்துமே தம் தலைவரைத் துதிபாடுதலும் எதிர்க்கட்சித் தலைவரைத் தூற்றுவதையுமே முக்கியமாகக் கருதுகின்றன.

சட்ட மேலவை (ஏன், பேரவைகூட) அமெரிக்க பாணியில் குறிப்பிட்ட தொழில்துறையைச் சேர்ந்தவர்களைக் கூப்பிட்டு பொது விசாரணையைச் செய்யமுடியும். இதற்கான முன்னுதாரணங்கள் தமிழக சட்டமன்றத்திலேயே நடந்துள்ளன. உதாரணத்துக்கு இப்போது காலாவதியான மருந்து தொடர்பாக பெரும் குழப்பம் மாநிலத்தில் நடந்துவருகிறது. இது தொடர்பாக அரசு வெள்ளையறிக்கை வெளியிடவேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கவும் இல்லை; அரசும் அதுமாதிரி ஒன்றை வெளியிடவேண்டும் என்று நினைக்கவும் இல்லை.

ஆனால் சட்ட மேலவை ஓரளவுக்கு கட்சிக் கட்டுப்பாடு என்றில்லாமல் இருந்தால், சில என்.ஜி.ஓக்கள், நிபுணர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரை அழைத்து குறுக்கு விசாரணை செய்து ஏன் இந்தமாதிரி நடந்தது என்று கண்டறியலாம். அப்படிச் செய்யும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். செய்தித்தாள்களால் வெளியிடப்படும்.

இப்போதைய சட்டப் பேரவையில் நடக்கும் தரமற்ற விவாதங்களுக்கு மாற்றாக சட்ட மேலவை இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படியே நடக்காவிட்டால் வருத்தம் இருக்கும். தமிழக அரசின் செலவில் சுமார் 20-30 கோடி ரூபாய் அதிகமாகலாம். அது ஒன்றும் பெரிய தொகை கிடையாது. எனவே நல்லது நட்கக ஏதோ வாய்ப்பு உள்ளது என்பதால் மேலவை வருவதை நான் வரவேற்கிறேன்.

9 comments:

  1. அதெல்லாம் ஒன்றும் நடக்கப்போவதில்லை. கருணாநிதியின் துதிபாடிகள் - குறிப்பாக, வா.செ.குழந்தைசாமி போன்ற படித்த 'டவாலிச் சேவகர்'களுக்குத்தான் மேலவையில் இடம் கிடைக்கும். இவர்கள் அங்கு அடிக்கப்போகும் ஜால்ரா சத்தம் ஒட்டு மொத்த இந்தியாவையே நாறடிக்கப் போகிறது. தேர்ந்தெடுக்கப்படும் சிறு தொழில் அதிபர்களும் இப்படிப்பட்டவர்களாகவே இருப்பார்கள். உதாரணம் சொல்ல வேண்டுமானால் இன்றைய பபாஸி நிர்வாகிகளை ஒத்தவர்களாகவே இருப்பார்கள்.

    ReplyDelete
  2. Badri, your optimism knows no bounds! It is quite clear why M.K is reviving the Legislative Council now. The elections are round the corner, and as you rightly predict, it is going to be filled with loyal party members, cronies, disenchanted family members and disappointed allies. What do you mean by graduates will get representation? Is there something inherent about being a graduate that will magically nudge them towards good governance? What can they do, that the graduates who are already in the Legislative Assembly cannot? I suppose I can extend the same question to other groups -- teachers, farmers, unions etc. -- that you mention.

    ReplyDelete
  3. நல்ல கற்பனை! :-)

    ஜனநாயகப்படி இப்போது என்னுடைய கற்பனை..

    வா.செ.குழந்தைசாமி தேர்ந்தெடுக்கப்படுவாரோ இல்லையோ, நடிகை சோனா போன்ற குத்துவிளக்குகள் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.அப்படி நடந்தாலும் நல்லதுதான். யாருக்கும் வெளிநடப்பு செய்ய மனசு வராது.

    ReplyDelete
  4. பத்ரிக்கு ஒரு எம்.எல்.ச்ச்ச்சீய்ய் சீட்டு பார்சல்..............

    ReplyDelete
  5. இன்னும் பலருக்கு 'அவர்' கடமை ஆற்றவேண்டும். அதுக்குத்தான் இந்த மேலவை.

    சினிமாக்காரர்கள் காத்திருக்கிறார்கள்.

    பா.ரெங்கதுரை சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டு

    ஜிங் சக் ஜிங் சக்

    ReplyDelete
  6. மேலவையில் ஆட்சி மாறினாலும் அன்று ம்.பொ.சி இருந்தார்.இன்று அது போல் பலர் இருப்பதால் மேலவையில் ஜால்ராக்களின் குரல்கள்தான் ஒலிக்கும்.வாலி,வைரமுத்து,அப்துல்ரகுமான் போன்ற ஜால்ராக்கள் உட்பட பலருக்கு இடம் தர
    மேலவை.அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயின் துதிபாடிகளுக்கு இடம் கிடைக்கும்.தப்பிதவறி பத்ரி உறுப்பினர் ஆகிவிடவும் வாய்ப்புள்ளது என்றாலும்
    ஒரு பத்ரிக்காக 50 வைரமுத்துகளையும் சகித்துக்
    கொள்ள வேண்டுமா?

    ReplyDelete
  7. நல்லது சிந்தனையில். நடப்பது சிறப்பு. யோசிப்பது வலிமை. ஆனால் நடந்து கொண்டுருப்பதெல்லாம் சிறப்பாகவா இருக்கிறது?

    ReplyDelete
  8. கந்தசாமியும் அவரது பெரியப்பாவும் தங்களுக்குப் பிடித்ததையும் பிடிக்காததையும் செய்ய சாக்குகள்:

    மேலவை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க...

    மேலவை உறுப்பினர்கள் வேண்டிக்கொண்டதால் தான் அப்படி செய்தேன்...

    மேலவை உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தமே இல்லாத பலரும் மேலவையை மீண்டும் கொண்டு வந்ததற்காக யாருக்காவது விழா எடுப்பதும் நடக்கும்.

    இப்படி விழாக்கள் நடத்துவதற்காக ”இந்து” பத்திரிகை அருகில் பலகோடி கட்டடம் கட்டப்போவதாகவும், அதைத் திறந்து வைத்துப் பேசும்போது பிரதீபா பாட்டீல் தனக்குத் தெரியாமலே தன் வேலைகளை தமிழ்நாட்டு நபர் ஒருவர் செய்து வருவதாகவும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சனிக்கிழமையும் அதுவுமாக என்னால் யோசிக்க முடிந்தது இவ்வளவு தான்.

    ReplyDelete
  9. மேலவையை வரவேற்போம்...ஞாநி - 'ஓ'பக்கங்களில்
    கருணாநிதி மேலவைக்கு தன் ஜால்ராக்களை நியமித்துவிடுவார் என்ற பயத்தில் சிலர் மேலவையை எதிர்க்கிறார்கள். நியாயமான பயம்தான். ...ஆனாலும் மேலவை தேவை. இப்போதைக்கு இறைக்கும் நீர் புல்லோடு கொஞ்சம் நெல்லுக்கும் கசியும். மேலவையை கருணாநிதி துஷ்பிரயோகம் செய்வார் என்று அஞ்சி வேண்டாமென்று சொல்லலாகாது. அவருடைய ஆட்சியில் ஊழலும், அராஜகமும், அலட்சியமும் இருக்கிறது என்பதற்காக அரசாங்கமே வேண்டாம் என்று சொல்லமுடியுமா? அடுத்த வருடம் பற்றி மட்டும் சிந்திக்காமல், அடுத்த 50 ஆண்டுகள் பற்றி சிந்திப்போமேயானால், மேலவை போன்ற அமைப்புகள் நம் ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் வலுப்படுத்த தேவை என்பதை உணர்வோம்.

    ReplyDelete