Saturday, May 12, 2012

சுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து

நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவராக இருந்தால் வியாழன், வெள்ளி அன்று வீழ்ந்த சந்தைக் குறியீட்டு எண்களைப் பார்த்திருப்பீர்கள். அதன் முக்கியக் காரணம், இந்தியாவின் தொழில் உற்பத்தி சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்திருப்பதே.


(படம்: தி ஹிந்து. தொடர்புள்ள கட்டுரை இங்கே)
வளரும் நாடான இந்தியாவில் இதுபோன்ற உற்பத்திக் குறைவு இருக்கவே கூடாது. பின் எதனால் இப்படி ஏற்பட்டது?

தொழில்துறை முதலாளிகள் ஏன் உற்பத்தி செய்கிறார்கள்? தாம் உற்பத்தி செய்த பொருள்களைப் பிறரிடம் விற்று லாபம் சம்பாதிக்க. லாபம் சம்பாதிக்க முடியவில்லை என்றால் அவர்கள் உற்பத்தியைக் குறைத்துவிடுவார்கள். அல்லது தாற்காலிகமாக நிறுத்திவைப்பார்கள். அதேபோல டிமாண்ட் இல்லை என்றாலும் அவர்கள் உற்பத்தியைக் குறைப்பார்கள். வாங்குவதற்கு ஆளே இல்லை என்றால் பொருள்களை உற்பத்தி செய்து என்ன பயன்?

சென்ற ஆண்டு இந்தியாவில் உற்பத்தி குறைந்ததற்குக் காரணம் என்ன?

உலக நாடுகளில் தேக்க நிலை அதிகரித்தது ஒரு காரணம் என்பார் பிரணாப் முகர்ஜி. அது அவ்வளவு முக்கியக் காரணம் இல்லை. அதைவிட முக்கியமான காரணம், உள்நாட்டில் பொருள்களை விற்பதால் கிடைக்கும் லாபம் மிகக் குறைவு என்பதுதான். இந்திய உற்பத்தியில் பெருமளவு, இந்தியாவிலேயேதான் விற்பனை ஆகி, நுகரப்படுகிறது. ஏற்றுமதி குறைவுதான். சீனாவிலோ, உள்நாட்டு நுகர்வுடன் ஒப்பிடும்போது, ஏற்றுமதி மிக அதிகம். அதனால் global recession காரணமாக இந்தியாவைவிட சீனாதான் அதிகம் பாதிக்கப்படும்.

உள்நாட்டில் நுகவு குறையக் காரணம் என்ன?

கடந்த இரு ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வந்தது. அனைத்துத் தொழில் நிறுவனங்களுமே கடனை நம்பித்தான் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. கடனுக்கான வட்டி அதிகமாக ஆக, லாபம் குறைகிறது; அல்லது அறவே இல்லாமல் போய்விடுகிறது. மேலும், சில துறைகளில் நுகர்வோர் கடன் இருந்தால்தான் விற்பனையே நடக்கும். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனையில் கடன் பெரும் பங்கு வகிக்கிறது. கடனுக்கான வட்டி அதிகரித்தால் பொருள்களை வாங்குவோர் நான்கு முறை யோசித்துவிட்டு, குறைந்த விலை கொண்ட பொருள்களை வாங்குகிறார்கள் அல்லது வாங்காமலேயே போய்விடுகிறார்கள். கடனில் வீடு வாங்கியிருப்போரும் இந்தச் சுமையை வெகுவாக உணர்ந்திருப்பர்.

ஆனால் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை ஏன் அதிகரித்தபடியே இருந்தது? அதற்குத் தெரியாதா இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி இதனால் பாதிக்கப்படும் என்று?

நன்றாகத் தெரியும். ஆனால் ரிசர்வ் வங்கியின் அடிப்படை நோக்கம், எப்படியாவது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்பதே. வட்டி விகிதத்தை அதிகப்படுத்தினால், பணப்புழக்கம் குறையும். அதிக வட்டி கிடைக்கிறதே என்று பணத்தைச் செலவழிக்காமல் வங்கியில் போட்டுவைக்கப் பலர் முனைவார்கள். தொழில் நிறுவனங்களும்கூட தங்களிடம் இருக்கும் ரிசர்வ் பணத்தை மேலும் மேலும் தொழிலில் முதலீடு செய்யாமல் அப்படியே ரொக்கமாகவே வைத்து அதிக வட்டியைச் சம்பாதிக்கப் பார்ப்பார்கள். அப்படிச் செய்தால் தொழிலில் முதலீடு செய்வதைவிட அதிக லாபம் கிடைக்கலாம். இப்போது இந்தியாவின் பெரு நிறுவனங்கள் அனைத்தையும் பாருங்கள். அவர்களின் கையிருப்பு ரொக்கம் கடந்த இரு ஆண்டுகளில் மிக அதிகமாக ஆகியிருப்பதை இந்தச் செய்தி காட்டுகிறது.

மாறாக, கடனுக்கான வட்டி குறைந்தால், பணத்தைக் கடனாக வாங்கிச் செலவழிக்கப் பலர் நினைப்பார்கள். அப்போதுதான் டிமாண்ட் அதிகமாகும், விற்பனை அதிகமாகும், தொழில் துறை அதிக உற்பத்தியைச் செய்யும். அவர்களுக்குக் கிடைக்கும் கடனுக்கான வட்டியும் குறைவாக இருக்கும், எனவே தொழில்துறை லாபம் அதிகரிக்கும். தொழில்துறை லாபம் அதிகரித்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும், மாத வருமானம் கிடைக்கும்.

அப்படியானால் வட்டி விகிதத்தைக் குறைவாக வைத்து தொழில்துறையை வளரச் செய்வதுதானே நல்லது? பணவீக்கம் கொஞ்சம் அதிகமாகப் போனால் என்ன குறை என்கிறீர்களா? வளரும் ஒரு நாட்டுக்கு ஓரளவுக்குப் பணவீக்கம் இருக்கலாம். மிக அதிகமாக ஆனாலும் பிரச்னைதான். முக்கியமாக ஏழைகளைப் பெருமளவிலும் நடுத்தர வர்க்கத்தை ஓரளவும் பணவீக்கம் பாதிக்கும். எனவே அதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். கையை மீறிப் போய்விட்டால் hyper-inflation என்ற பிரச்னை வரும். ரிசர்வ் வங்கி பெரும் எண்ணிக்கையில் புதுப் பணத்தை அச்சிடவேண்டும். குறைந்த மதிப்பு நோட்டுகளை நீக்கவேண்டும்.

பணவீக்கம் பல காரணங்களால் அதிகரிக்கிறது. பணப்புழக்கம் அதிகரிப்பதால் மட்டுமல்ல. உற்பத்தி குறைவால். பெட்ரோல் விலை அதிகரிப்பதால். அரசின் செயல்திறன் குறைவாக இருப்பதால். அரசு நிறையப் பணத்தை மானியம் என்ற பெயரில் நிறைய மக்களுக்குக் கொடுத்தால்.

பணவீக்கம் என்பதை விலையேற்றம் என்று வைத்துப் பாருங்கள். சென்ற ஆண்டு ஒரு ரூபாய் விற்ற ஒரு வாழைப்பழம், இந்த ஆண்டு ரூ. 1.25 ஆகிறது என்றால் பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டது என்பதைக் காண்பிக்கிறது. எதனால் எல்லாம் இப்படி ஆகலாம்? சென்ற ஆண்டு விளைந்த வாழைப்பழங்களைவிட இந்த ஆண்டு குறைந்த அளவே வாழைப்பழங்கள் விளைந்துள்ளன என்றால் சந்தையில் விலை ஏறும். இந்தியாவில் விவசாயப் பொருள் உற்பத்தி, அதன் தேவைக்கு ஏற்ப அதிகரிப்பதில்லை. இதைத் தனியாக விவாதிக்கவேண்டும். இங்கு இடமில்லை.

அடுத்து, எல்லாப் பொருள்களுமே ஓரிடத்தில் விளைவிக்கப்பட்டு இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. உற்பத்திச் செலவு அதிகம் ஆகாவிட்டாலும்கூட போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும்போது பொருளின் அடக்க விலையை அதிகரிக்கவேண்டியுள்ளது. பெட்ரோல் விலை அதிகரிக்கக் காரணம், சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பதுதான்; உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டமே சம்பாதிக்கின்றன என்று நம் அரசு கூசாமல் பொய் சொல்லும். உண்மையில் இந்தக் கச்சா எண்ணெய் விலையை எடுத்துக்கொண்டாலும் அரசின் அதீத வரிகள்தாம் நம் கைக்குக் கிடைக்கும் பெட்ரோல் விலையை அதிகரிக்கின்றன. ஆனால் எந்த அரசுமே (மத்திய + மாநில) அந்த வரிகளைக் குறைக்க விரும்புவதில்லை.

வரிகளைக் குறைப்பதால் வருமானம் குறையும் என்று தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் பல இடங்களில் வரிகளைக் குறைப்பதன்மூலம் வருமானத்தை வெகுவாக அதிகரிக்க முடியும். இரண்டு காரணங்களுக்காக. ஒன்று compliance அதிகரிக்கும். இரண்டு, பயன்பாடு அதிகரிக்கும். மூன்றாவதாக, அரசே செயற்கையாக உருவாக்கி வைத்திருக்கும் சில மானியங்களை வெட்டலாம். வீடு, நிலம் வாங்கி விற்கும்போது செலுத்தப்படும் ஸ்டாம்ப் டியூட்டி சதவிகிதத்தைக் குறைக்கும்போதெல்லாம் அரசுக்குக் கிடைக்கும் வரி அளவு அதிகரிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். காரணம், இந்த விகிதம் குறையும்போது கருப்புப் பணம் குறைகிறது. கச்சா எண்ணெய் மீதான வரி விகிதத்தைக் குறைப்பதால் சில மாதங்களுக்கு அரசின் வரி வருமானம் குறைந்தாலும் வெகு விரைவிலேயே பயன்பாடு அதிகமாவதாலும் பொருளாதாரம் வளர்வதாலும் மொத்த அரசு வருமானம் உயரத்தான் செய்யும்.

அடுத்து, வரிகளைக் கூட்டி, பின் டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு மானியங்களைக் கொடுக்கிறார்கள். ஒரு லிட்டர் பெட்ரோலும் ஒரு லிட்டர் டீசலும் கிட்டத்தட்ட ஒரே காசுதான் இருக்கவேண்டும். ஆனாலு இந்தியாவில் இரண்டுக்கும் இடையேயான விலை வித்தியாசம் சுமார் 30-40% இருக்கும். ஏனெனில் விவசாயத் துறை டீசலைப் பயன்படுத்துகிறது என்றும் அவர்களுக்கு நல்லது செய்வதற்காக விலை குறைவாக வைக்கிறோம் என்றும் சொல்வார்கள். அதேபோல வரிகளை ஏற்றிவிட்டு, பிறகு வீடுகளுக்குத் தரப்படும் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க அரசு மானியம் தருவதாகச் சொல்வார்கள். வரிகளைக் குறைத்து, மானியத்தை அறவே நீக்கிவிடலாம். விவசாய டீசலுக்குக் குறைந்த விலை தேவை என்பதற்காக நாட்டில் ஜென்செட் வைத்திருப்பவர்கள், லாரி ஓட்டுபவர்கள் என்று அனைவருக்கும் மானியம் தரவேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனில் இருப்பதுபோல கலர் டீசல் முறையைக் கொண்டுவரலாம். அல்லது விவசாயிகளுக்கு நேரடி மானியமாக, பணமாகத் தந்துவிடலாம்.

அடுத்து, பயனற்ற கொள்கை முடிவுகளால் ஏழை மக்களிடம் போய்ச் சேரும் பணம், பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது. உதாரணம்: மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டம். ஊழல் தலைவிரித்தாடும் இந்தத் திட்டத்தில் இங்கு மண்ணை வெட்டி அங்கு மண்ணைக் கொட்டினால் பணம். பிறகு அதே மண் அங்கிருந்து வெட்டி இங்கே கொட்டப்படும். பல இடங்களில் இந்தச் செயலைக் கூடச் செய்யவேண்டாம். திட்ட மேற்பார்வையாளருக்கு வெட்டவேண்டியதை வெட்டினால், கைக்குப் பணம் கிடைத்துவிடும். இந்த மாபெரும் அரசு மோசடியால் மிகக் குறைவான அளவுக்கே உருப்படியான கட்டுமானங்கள் உருவாகியுள்ளன. ஏனெனில் திட்டத்தின் அடிப்படையே தவறு. இந்தத் திட்டத்தில் உடல் உழைப்பு மட்டும்தான் இருக்கலாம். இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படலாகாது.

நாம் இன்னும் 18-ம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்பதற்கு இதுவே முக்கியமான சான்று. இன்று எந்த உருப்படியான கட்டுமானத்தையும் இயந்திரங்கள் இல்லாமல் செய்ய முடியாது. விவசாயம் உட்பட. ஆனால் நாம் இன்னும், ஏழை மக்கள் உடலை வருத்தி வெயிலில் நிற்கவேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களுக்கு தினப்படி 100 ரூபாய் தருவோம் என்றும் சொல்கிறோம். இயந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று அவர்களுக்குச் சொல்லித்தர மாட்டோம். அவர்கள் நாள் முழுதும் நேரத்தை வீணடித்து ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பதற்கு நூறு ரூபாய். அதுவும் நூறு நாட்களுக்கு மட்டுமே.

கல்வியில் மானியம், சுகாதாரத்துக்கு மானியம் என்றால் அதில் பொருள் இருக்கிறது. உணவுப் பொருள்களை விலை குறைத்துத் தருவதில்கூடப் பொருள் இருக்கிறது. ஆனால் இப்படி பணத்தைச் சும்மா தூக்கித் தருவதில் இருக்கும் பிரச்னையை அரசு புரிந்துகொள்ளவில்லை. இது மக்களிடையே உழைக்கும் எண்ணத்தையே தருவதில்லை. கைக்கு எளிதில் (உழைக்காமல்) பணம் வருவது, தண்டச் செலவினங்களையே அதிகரிக்கும். இதுவும் தேவையற்ற பணவீக்கத்துக்கு ஒரு காரணம். UPA அரசின் MGNREGA திட்டம் நிச்சயமாக பணவீக்கத்துக்கு ஒரு காரணம். விவசாய உற்பத்தியைப் பாதிப்பதற்கும் இது ஒரு காரணம். விவசாயக் கூலிகள் கிடைக்காத காரணத்தால் கடந்த சில ஆண்டுகளில் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

காலாகாலமாக ஏழைகள் விவசாயக் கூலிகளாகவே இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இருக்கும் ஒரு சமநிலையை 100 நாள் வேலைத் திட்டம் குலைத்துவிட்டது. விவசாயிகளை அரசு முன்கூட்டியே தயார்ப்படுத்தவில்லை. விவசாயிகள் இடையே structural மாற்றம் தேவை. இயந்திரங்களை அதிகம் பயன்படுத்தவேண்டியிருக்கும் பெரிய நிலங்கள் தேவை. ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் சின்னச் சின்ன நிலமெல்லாம் இனிச் செல்லுபடியாகாது. விவசாயக் கூலிகளை வைத்துக்கொண்டு விவசாயம் பார்ப்பது உருப்படாது என்று நினைக்கும் பலரும் தத்தம் நிலங்களை விற்றுவிட்டு நகரங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இருக்கும் விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தில் லாபகரமாக ஈடுபடவேண்டும் என்றால் பல மாற்றங்கள் தேவை. அரசின் உதவி தேவை. தடையற்ற மின்சாரம், தேவையான அளவு நீர், உரங்கள் ஆகியன இல்லாமல் அதிக உற்பத்தி சாத்தியம் இல்லை. அதிக உற்பத்தி இல்லையென்றால், விலை ஏறத்தான் செய்யும். APMC சட்டங்களைப் பயன்படுத்தி, விவசாயப் பொருள்களின் விலையைக் கீழாகவே வைத்திருக்க வெகு காலத்துக்கு முடியாது.

அரசின் மறைமுக வரிக் கொள்கையும் பொருள்களின் விலை ஏற்றத்துக்குக் காரணம். ஆயத்தீர்வை (மத்திய அரசு), விற்பனை வரி (மாநில அரசு) ஆகியவை அதிகரிக்க அதிகரிக்க பணவீக்கம் அதிகமாகத்தான் செய்யும். வருமானம் இல்லாமல் தாங்கள் என்ன செய்வது என்று அரசுகள் கேட்கலாம். பொருளாதார வளர்ச்சியின்பால் வரும் வருமானத்தையே அரசுகள் நம்பியிருக்கவேண்டும். பொருளாதார வீழ்ச்சியைக் கொண்டுவரும் வருமானங்களை ஓர் அரசு விரும்பக்கூடாது. விற்பனை வரி அதிகரிப்பு போன்றவை அப்படிப்பட்ட கேடான வரிகளே. ஆயத்தீர்வை சதவிகிதத்தை அதிகரித்தால் வரும் வருமான அதிகரிப்பைவிட, மோட்டார் வாகனங்கள் இரு மடங்கு விற்பனை அதிகரிப்பதால் வரும் வருமான அதிகரிப்பு மிக அதிகம்.

ஆக இந்தச் செயல்களையெல்லாம் ஓர் அரசு செய்யாத காரணத்தால், பணவீக்கம் அதிகரிப்பதைத் தடுக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கியின்மீது விழுந்தது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறுகிய கால பணவீக்கக் கட்டுப்பாட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கும் மேலாக வட்டி விகிதத்தை அதிகரித்ததன் பயனை இன்று நாம் ஒருவித recession மூலமாகச் சந்திக்க உள்ளோம். நல்ல வேளையாக, சேவைத் துறை ஓரளவுக்கு நன்றாகச் செயல்படுவதால் நாடே ஒட்டுமொத்த recession-இல் போகவில்லை. ஆனால் இந்தியா போன்ற பெரிய நாட்டில் பொருள் உற்பத்தித் துறை சரியாக இல்லையென்றால், ஏற்கெனவே விவசாயத் துறை தடுமாற்றத்தில் உள்ளது என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது சேவைத்துறையை மட்டும் வைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை அடைந்துவிட முடியாது.

***

இப்போது நடந்துள்ள கடுமையான வீழ்ச்சிக்கு முழுக்காரணம் இப்போது ஆட்சி நடத்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசே. இந்தப் பழி அனைத்தும் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா ஆகிய நால்வரையே முக்கியமாகச் சாரும்.

மன்மோகன் சிங் செயலற்றவர் என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவருடைய பொருளாதாரச் செயல்பாடுகள்மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அது இப்போது போய்விட்டது. முகர்ஜிக்கு நவீன பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய திறமை இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்திரா காந்தி காலத்தில் நிதி அமைச்சராக இருந்தவர். அப்போது ஒரு குரங்குகூட நிதியமைச்சராக இருந்திருக்க முடியும். சென்ற ஐ.மு.கூ அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர், சோனியாவிடம் நிதித் துறையைக் கேட்டுப் பெற்றார் என்கின்றன செய்திகள். ப.சிதம்பரமே மீண்டும் நிதியமைச்சராக ஆவார் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருந்தது. ஆனால் யார் நிதியமைச்சராக இருந்திருந்தாலுமே, சோனியா காந்தியின் National Advisory Council முடிவு செய்யும் கேலிக்கூத்தான திட்டங்களுக்கு ஏதோ வகையில் பணம் சேகரித்துத் தருபவர்களாகவே இருக்கவேண்டிய நிலை. சோனியா காந்தியின் திட்டங்கள் எந்தவிதத்தில் நாட்டுக்கு உபயோகமானவை என்று யாரும் நாடாளுமன்றத்தில் விவாதித்ததாகவே தெரியவில்லை. அது MGNREGA ஆக இருக்கட்டும், RTE ஆக இருக்கட்டும், எங்கிருந்தோ முளைத்து, எங்கோ வரைவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின்முன் வைக்கப்பட்டு, சட்டம் ஆகிவிடுகிறது.

அந்தச் சட்டத்தின் நிறைகுறைகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து விவாதம் செய்யத் தெரியாத மூடர்களாக இருக்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

அதனால் இந்த மோசமான நிலைமையை வந்து சேர்ந்திருக்கிறோம். பிற விஷயங்களைப் போல அல்ல பொருளாதாரத் திட்டங்கள். நாட்டின் வளர்ச்சியை, முன்னேற்றப் பாதையை எந்தக் காரணத்துக்காகவாவது விட்டுக்கொடுத்துவிட்டோம் என்றால் அடுத்த இரண்டு பத்தாண்டுகளுக்கு மீண்டும் இருளில் மூழ்கிவிடுவோம். இப்போதுதான் சற்றே மீண்டுவந்துள்ளோம். நடுத்தர மக்களது வாழ்வு மட்டுமல்ல, கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வும் இதில் அடங்கியுள்ளது.

எனவே உடனடி மாற்றம் தேவை. சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸைத் தூக்கி எறிவதிலிருந்து நாம் ஆரம்பிக்கவேண்டும்.

34 comments:

  1. Good Post..agree with many points

    Sa. Sankar

    ReplyDelete
  2. பாஜக மீது கூட நம்பிக்கை வரவில்லையே? அடிப்படையில், காங்கிரஸ் பிஜேபி இடையே பொருளாதார விஷயங்கிளிடையே வித்தியாசம் இல்லையே? யாரைத்தான் நம்புவது? S குருமூர்த்தி கூறும் பாதை பயனளிக்குமா?

    ReplyDelete
    Replies
    1. குருமூர்த்தியின் சுதேசிக் கொள்கைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. இதுபற்றித் தனியாக எழுதுகிறேன்.

      Delete
  3. அருமையான உபயோகமான பதிவு

    ReplyDelete
  4. Sir

    Expecting many more of such strongly written economics articles from you.

    ReplyDelete
  5. வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து
    உற்பத்தியை, பணப் புழக்கத்தை, விலையேற்றத்தை இப்போது
    ஊக்குவித்தால் , பபிள் ஏற்படும் என்ற அச்சம் உள்ளது

    சீனாவில் ஏற்கனவே அது (bubble) உணரப் படுகிறது
    அதிக அளவில உற்பத்தி ஏற்பட்டு ஏற்றுமதி விற்பனை இல்லது தேங்கி இருக்கின்றன.

    இங்கிலாந்து, கிரேக்கம், பிரான்சில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மிக முக்கிய காரணம்

    பா ஜ க (யஷ்வந்த் சின்ஹா) இருந்து இருந்தாலும் இதையேதான் செய்து இருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. சீனா வேறு, இந்தியா வேறு என்பதைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். இந்தியாவின் உள்நாட்டுத் தேவை அதிகம். அதனால் பொருள்களை உற்பத்தி செய்தால் வாங்க இந்தியர்கள் தயாராக உள்ளனர். ஏற்றுமதியும் இந்தியர்களுக்கு அவசியம். அதற்கு இந்தியத் தொழில்துறை மேலும் சில காரியங்களைச் செய்யவேண்டும்.

      வட்டி விகிதத்தைக் குறைப்பது மிக மிக அவசியம். அத்துடன் உற்பத்தியை அதிகரிப்பதையும் சேர்த்தே செய்யவேண்டும். சீனாவின் பிரச்னை பற்றி நாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது.

      பிரிட்டன், ஐரோப்பா தேக்க நிலையால்தான் இந்தியாவின் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதனால் கொஞ்சம் பாதிப்பு இந்தியாவுக்கு உண்டு. ஆனால் எந்தெந்த நிறுவனங்கள் ஸ்லோடவுன் பற்றிச் சொல்கின்றன, அவற்றின் ஏற்றுமதி எவ்வளவு என்று பாருங்கள்.

      பாஜக என்ன செய்யும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அங்கும் தாராளப் பொருளாதாரத்தை எதிர்ப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் உடனடியாகவாவது சில நல்ல மாற்றங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அரசு செய்யவேண்டிய பொருளாதார மாற்றங்கள் என்னென்ன என்பதைப் பற்றி அடுத்த ஒரு நீண்ட பதிவில் எழுதுகிறேன்.

      Delete
  6. என் அப்பாவுக்கு 40 வயது நடக்கும்போது நிதியமைச்சராக இருந்தவர் எனது 40 வயதிலும் நிதியமைச்சராக இருக்கிறார். அப்புறம் எப்படிப் பொருளாதாரம் விளங்கும்? அரசு ஊழியர்கள் போல அரசியல் பதவிகளான எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரி, முதல்வர், பிரதமர் பதவிகளுக்கும் 60 வயதில் ரிடயர்மன்ட் என்று கொண்டுவர வேண்டும். அப்போதுதான் கொஞ்சமாவது மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

    சரவணன்

    ReplyDelete
  7. மிக விரிவாகவே ஆராய்ந்திருக்கிறீர்கள்.மேலை நாடுகளில் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவு.தேவை மிகக் குறைவு என்பதே அத்ற்குக் காரணம்.இந்தியாவில் அப்படி இல்லை.1தொழிலதிபர்கள் வாங்கும் கடனுக்கான வட்டி அதிகரித்துக் கொண்டே போகும் போது முதலீட்டு ஆர்வம் குறையும்.2 மக்களைப் பொருத்த வரையில் Fancy திட்டங்களுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகத் தேவையிலலாமல் சர்வீஸ் வரி, ம்ற்றும் ஆயத் தீர்வைகள் உயர்த்தப்பட்டுள்ளன. 3 பெட்ரோல் விலை உயர்வு.போக்குவரத்துச் செலவு குறைவாக இருந்தால் தான் பொருளாதாரம் வளரும்.ஆனால் அரசாங்கமோ பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நஷ்டம் என்று சாக்குச் சொல்லி பெட்ரோலிய டீசல் விலைகளை ஏற்றி வருகிறது.இவை அரசு நிறுவனங்களே இவற்றின் நஷ்டத்துக்கு அரசின் தவறான வ்ரிக் கொள்கை தான் காரணம். ஒரு வகையில் இது போலிக் கணக்கு.4 போக்குவரத்துச் செலவும் சாப்பாட்டுச் செல்வும் குறைவாக இருக்குமானால் மக்களிடம் அதிகம் பணம் சேரும்.பொருட்களுக்கு தேவை அதிகரிக்கும். விற்பனை அதிகரிக்கும். முதலீடு அதிகரிக்கும்.வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.6. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே இப்போதுள்ள நிலைமைகளுக்குக் காரணம்.

    ReplyDelete
  8. மிக மிக மிகச்சிறந்த கட்டுரை..

    விவசாயிகளை பற்றி யாருமே யோசிப்பதில்லை, விவசாயம் ஒன்றை மட்டுமே தொழிலாக கொண்டு நாம் நாட்டை முன்னேறிய நாடாக ஆக்க வழிகள் உண்டு. உலகிற்கு உணவு வழங்கிய நாம் இன்னும் சில ஆண்டுகளில் உணவுக்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நாள் வெகு அருகிலே இருக்கிறது. அரசு ஒரு பக்கம் விவசாயத்தை அழித்துகொண்டிருப்பது போதாது என்று இந்த ரியல் எஸ்டேட்கார்கள் சம்மட்டி கொண்டு விவசாயி வயிற்றில் அடிக்கிறான்..எல்லோரிடமும் பணம் இருந்துவிட்டால் நாளை எல்லோரும் பணத்தையா சாப்பிடுவார்கள்..ச்சே...இவ்வளவு கேவலமாக நம் நாடு போய்க்கொண்டிருக்கிறது....

    // எனவே உடனடி மாற்றம் தேவை. சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸைத் தூக்கி எறிவதிலிருந்து நாம் ஆரம்பிக்கவேண்டும். //

    நிச்சயமாக..

    ReplyDelete
  9. அருமையான ஆய்வு.
    நான் முற்றிலும் உடன்படுகிறேன்.
    காங்கிரசை உடனே துரத்தாவிட்டால் நாடு பேரழிவை நோக்கி வேகமாக செல்லும்.
    சோனியா,மன்மோகன்.பிரணாப் ஒரு three idiots கூட்டணி.திறமையோ,தெளிவோ உற்சாகமோ இல்லாதவர்கள்.அடுத்த பிரதமராக ஆசைப்படும் ராகுல் இந்தியாவின் தலைசிறந்த மக்குகளில் ஒருவர்.
    Kick them out at the earliest and save India

    ReplyDelete
  10. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டி, அவர்களிடம் இந்தக் கருத்துகளைச் சொல்லி, பாராளுமன்றத்தில் எப்படிக் கேள்வி எழுப்பி விவாதிக்கலாம் எனப் பயிற்றுவிக்கலாம். இதற்கு அவர்கள் உடன்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்போது நீங்கள் அவர்களின் தன்னிச்சையான ஆலோசகராக விளங்குவீர்கள். அவர்களுக்கும் அப்படி நம்பகமான, திறமையான ஆலோசகர்கள் பலர் தேவை.

    ReplyDelete
  11. /சட்டத்தின் நிறைகுறைகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து விவாதம் செய்யத் தெரியாத மூடர்களாக இருக்கின்றனர் எதிர்க்கட்சியினர்./

    எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எந்தத் தலைப்புகளில் எப்படிக் கேள்வி எழுப்பி விவாதிக்க வேண்டும் என முன்கூட்டியே விரிவான பயிற்சி அளிக்க வேண்டும். அதனைத் தன்னிச்சையான ஆலோசகர் என்ற முறையில் நீங்களே கூடச் செய்யலாம். அவர்களுக்கு நம்பகமான, திறமையான ஆலோசகர்கள் பலர் தேவை. மாற்றத்தை அங்கிருந்தும் தொடங்கலாம்.

    ReplyDelete
  12. அரசு என்பது என்ன என்பதையும் குடிமக்களின் நலன்களையும் குடிமக்களிடம் நல்ல குணங்களையும் மகிழ்ச்சியையும் கொணரச்செய்வது எப்படி என்பதையும் திரும்ப விவாதத்திற்கு கொண்டுவருவது முன்னேற்றத்தின் தேவையைப்பற்றி ஒரு முழுமையான புரிதலுக்கு உதவும்.

    ReplyDelete
  13. Good post Badri sir. you are always neutral..you are not biased to anyone thats really like about you..thank you for such a wonderful post...pls post more on economic issue if possible.

    ReplyDelete
  14. I don't think it is a good idea to cut taxes on petrol. It helps to reduce the negative externality such as pollution by encouraging more people to use public transportation. As diesel is widely used to transport goods petrol prices would not have any impact on inflation.

    However, the government can reduce the income taxes which are distortionary (Marginal tax rates are distortionary while flat tax rates are not).

    Reducing interest rate is nothing but increasing the supply of money. If you think that wages from MGNREGA create inflation how could you argue that increasing the money supply by RBI would increase the real output.

    Bharath

    ReplyDelete
  15. //
    இந்தப் பழி அனைத்தும் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, மாண்டேக் சிங் அலுவாலியா ஆகிய நால்வரையே முக்கியமாகச் சாரும்.//

    இன்னொருவர் Jean Drèze.

    ReplyDelete
  16. //அதைவிட முக்கியமான காரணம், உள்நாட்டில் பொருள்களை விற்பதால் கிடைக்கும் லாபம் மிகக் குறைவு என்பதுதான்.//

    பத்ரி,

    மேற்கண்ட ஒரு கருத்தில் இருந்தே பொருளாதாரத்தினை எந்த அளவுக்கு புரிந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

    உலக அளவில் விலை நிர்ணயம் -லாப விகிதம் எப்படி, இந்தியாவில் எப்படி என கொஞ்சம் கூகிள் செய்தாலே தெரியும். இந்தியாவில் தான் அதிக லாப விகிதத்தில் விலை நிர்ணயம் செய்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.

    ஒன்றும் வேண்டாம் சிமெண்ட் விலை நிலவரம் என்ன என தேடிப்பார்க்கவும். உண்மை தெரியும்.

    ஒரு முன் முடிவுடன் புனையப்பட்ட கட்டுரையாகவே இருக்கு, பொருளாதார மந்த நிலைக்கு இன்னும் பல காரணங்கள் இருக்கு , மிக முக்கியமாக ஏற்றுமதி-இறக்குமதிக்கிடையேயான வித்தியாசம் அதிகரித்து வருவது, ஏற்றுமதி குறைகிறது ஆனால் இறக்குமதி அதிகரிக்கிறது,இதனால் ஏற்படும் நிதி தட்டுப்பாடும் ஒரு காரணம்.

    கட்டிட வேலைக்கு சித்தாளாக போனால் தினம் 300 ரூ என்பது தெரியுமா? கிராமப்புறத்தில் கட்டுமான வேலைகள் குறைவு எனவே நகருக்கு பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்த்தால் அதன் விளைவு இன்னும் மோசம் ஆகும் எனவே கிராமப்புறத்திலேயே மக்களை இருக்க வைக்க விவசாய வேலைகள் மட்டுமே போதவில்லை ,எனவே 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏதேனும் வேலை இருந்தால் ,சொற்ப வருமானம் என்றாலும் பார்த்துக்கொண்டு கிராமத்தில் இருப்பார்கள் என்பதாலே அத்திட்டம்.

    இதனால் விவசாயத்துக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று ஒரு குறை சொல்கிறார்கள், உண்மையாகவும் இருக்கலாம்,ஆனால் வருடத்திற்கு இரண்டு சீசன்களில் மொத்தம் சுமாராக ஆறு மாதங்கள் மட்டுமே விவசாயம் , அதில் ஒரு நபருக்கு தோராயமாக 50 நாட்களுக்கு வேலை கிடைத்தால் ஆச்சர்யம் அப்படி இருக்கும் போது வருமானம் இல்லாமல் வருடம் முழுவதும் கிராமத்தான் எப்படி வாழ்வது? நீங்களே நல்ல வழி சொல்லுங்க!

    எனக்கு விவசாயத்துக்கு கூப்பிடும் போது ஆள் கிடைக்கணும் என்பதால் அவர்கள் வேலையே இல்லாமல் எப்போ அழைப்பு வரவேண்டும் என காத்திருக்கணுமா/

    விவசாயிக்கு தேவை விளைச்சளுக்கு நல்ல விலை ,அது கிடைத்தால் போதும் பிழைத்துக்கொள்வான். மற்றதைப்பற்றி எல்லாம் நீங்க கவலைக்கொள்ள வேண்டாம்.

    100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்துக்கு மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கப்படுகிறது, அவர்கள் செய்ய என ஒரு திட்டமும் இல்லை நிதியும் இல்லை எனவே தான் கால்வாய்,குளம்னு மண்னை மட்டும் வெட்ட சொல்லி அதிகாரிகள் பொழுது போக்குறார்கள்.

    ஏன் ஒரு திட்டம் கொண்டு வந்து அதில் வேலை செய்ய வைக்க கூடாது , உ.ம்.கிராம சாலை, பள்ளி,சிறு பாலம்ம் கட்டுதல் என உருப்படியான திட்டங்கள் கொண்டு வந்து அதில் வேலை வாங்கலாமே?

    இதற்கு மாநில அரசு தான் நிதிக்கொடுக்க வேண்டும், ஆனால் செய்வதில்லை. வேலை செய்பவர்களுகு சம்பளம் மத்தியில் இருந்து வருவது போல திட்ட நிதியும் கொடுத்தால் செய்வார்களாயிருக்கும்.

    மாநில அரசு ஒன்றும் நிதிக்கொடுக்காமல் 100 நாள் வேலைத்திட்டத்தினை ஊதாரியாக்குவதை சொல்லாமல் மறைத்து திட்டமே தண்டம் என்பதில் என்ன அரசியலோ :-))

    ReplyDelete
    Replies
    1. A Government can do deficit spending if an economy is in recession, and the interest rate is zero bound. If the interest rate is not zero bound then deficit spending will crowd out private investments. MGNREGA is doing just that.

      If the Government wants to create public assets it should do so only after conducting a thorough cost benefit analysis. I don't think it is being done in the case of MGNREGA.

      If the primary objective of MGNREGA is to help the poor people even if it does not result in any useful asset creation, then the Government should spend that money to offer them vocational training. It will help them to become more productive and explore self employment opportunities.

      As Central Government is responsible for 75% of the material costs, there is no point in blaming the State Government on this one. State Governments are more restricted than Central Government when it comes to borrowing money. They cannot issue debt and have the RBI monetize it.

      Bharath

      Delete
    2. வாழைப்பழம் மத்திய அரசினுடையது, அதை உரித்துத் தரவேண்டியது மாநில அரசின் கடமை என்கிறார் வவ்வால். அடுத்து அதை வாயில் திணித்து மெல்லுடா, முழுங்குடா என்று சொல்வது பஞ்சாயத்தின் வேலை என்பார்கள் போல!

      மக்களுக்கு ஒன்றுமே தெரியாது! மக்கள் மடையர்கள் பாருங்கள்!

      இந்தத் திட்டம் சோம்பேறிகளால் சோம்பேறிகளை வளர்க்க உதவும் திட்டம். இதுக்கு எவ்வளவு பெரிய்ய வியாக்கியானம்.

      Delete
  17. You think that slowdown in industrial growth is not a good sign.agreed. there is a need to rationalize taxes and incentives and reduce subsidies where they are not necessary.fine.But we need schemes like MGNREGA as they guarantee minimum income and work.Such schemes should be improved and not thrown out. We need social welfare schemes and programs that address the needs of marginalized and poor. They should be made less prone for corruption. You support trickle down theory and minimum state intervention.
    You dont say that openly but it is clear that you are more in support of world bank thinking on economic issues or in favor of Washington consensus.It is obvious that your understanding of indian economy and political economy does not go beyond what you read in newspapers. Unfortunately you think that you know all the problems and can come up with all the solutions with little knowledge you have.

    ReplyDelete
    Replies
    1. Badri has always openly supported minimum government maximum governance. A lean government as he would say it.

      At least badri's understanding of indian economy is based on what he reads. It seems yours is rooted in the failed system of socialism! And you think that you are all knowledgeable "proletariat" who directs the "masses" to the gates of socialist heaven!

      Delete
  18. You dont seem to get one basic fact - wages from MGNREGA stimulate demand for goods and services in rural areas. They dont contribute to inflation as assumed by you.Today rural market is a growing market not only for items like soap,tooth paste but also for fans,two wheeler,electronics and items like household appliances.

    ReplyDelete
    Replies
    1. Why not provide better infrastructure instead! Electricity, Water supply, Roads will stimulate demand for goods and services in never seem before level than this free handout scheme!

      Delete
  19. Prepare the people first. without preparing them any amount of wealth given to a village will not solve their problem-VIVEKANANDAR. Any number of NREGS cannot solve their problem. Give them education, quality education make the accountable system.

    ReplyDelete
  20. அய்யய்யோ, இதையும் கண்டுபிடிச்சுட்டீங்களா? பேஷ், பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு.

    ReplyDelete
  21. Please visit Thanjavur/Tiruvarur/Nagapattinam Districts. The NREGS has totally deprived/depleted the work force necessary for agriculture farming. Naatrangals are rarely seen because expertise in seed bedding and transplantation is not available. One of my relatives, who own large tract of land,said that if this situation conitnues, farming will be halved in those areas.
    S. Krishnamoorthy

    ReplyDelete
  22. சுற்றி வளைக்காமல் நேரடியாக சோசியலிஸம் என்ற ஒற்றை வார்த்தையின் அபத்தத்தைப் போட்டுத் தாக்கியிருக்கலாம். இந்தியாவின் வறுமைக்கு 90% காரணம் பாழாய்ப்போன அந்த சோசியலிசப் பொருளாதாரக்கொள்கையே... சோசியலிசத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர்கள் தயவு செய்து நாட்டின் நலன் கருதி அடுத்த முறை 49-ஓ வோட்டு போடுங்கள். நாடு விளங்கும்.

    ReplyDelete
  23. I think co-operatives can increase the size of the farms, to help mechanisation and therefore efficiency and higher productivity. The Government should be the enabler here, by offering lots of incentives, guidance etc. By making the farmers shareholders of such societies, they will learn the needs of better planning, marketing etc.

    ReplyDelete
  24. Badri, Please read the book "Breakout nations" by Ruchir Sharma. He basically says the main reason for the rapid growth of the emerging markets from 2003-2010 is due to the easy money policy in the west. As the west slowly abandon the easy money policy and the interest rate goes back to 5% the BRIC nations growth will fall to 6%.

    Its a interesting book, you should read it.

    ReplyDelete
  25. Very good points Badri.

    IMO, when the share of cultivable land is going away getting a 2.5-3%% growth is significant. IT companies are talking about non-linear initiatives. Agri also should work on those lines and the sector needs significant investment in R&D.

    Agree on the MGREGA fiasco. ஒன்னையும் உருப்புடியா செய்ய மாட்டேங்கறாங்க. ஆதார் என்ன ஆகப் போகுதோன்னு தெரியல, NPS ம் சரியா இல்ல, GST/DTC எப்போன்னு தெரியாது.

    இவனுங்கள வீட்டுக்கு அனுப்பினாத் தான் நிலமை மாறும்.

    ReplyDelete
  26. Awesome article.....

    ச.சு.அருள்

    ReplyDelete
  27. பத்ரி வரும் ஜீலை மாதத்தில் 0.25% வட்டி குறைப்பு இருக்குமாமே. மிகச்சிறய அளவு குறைந்தால் அந்த அளவிற்கு லாபம் இருக்காதே.

    மேலும் அதிகமாக பரிவர்த்தனை செய்யும் நாடுகளுடன் நேரடிப்பணபரிவர்த்தகம் செய்தால் டாலர் விலை ஏற்றத்தில் இருந்து தப்பிக்கலாம் இல்லையா?

    ReplyDelete