சென்ற வாரம் வியாழன் அன்று Madras Institute of Development Studies அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உட்கார அவசர அவசரமாக சில நாற்காலிகளைப் பிற அறைகளிலிருந்து எடுத்து வந்தனர். அம்ஷன் குமார், தியோடர் பாஸ்கரன், எஸ்.முத்தையா, ஐராவதம் மகாதேவன் போன்ற பலரும் வந்திருந்தனர். சைவ சிந்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் முத்துக்குமாரசுவாமி வந்திருந்தார். இவர் ஏ.கே.செட்டியாருடன் பழகியவர். தமிழில் ஏ.கே.செட்டியார் எடுத்திருந்த காந்தி ஆவணப்படத்தைப் பார்த்தவர். தெய்வராயன் என்பவர் வந்திருந்தார். இவரது வீட்டில்தான் கடைசி நாள்களில் ஏ.கே.செட்டியார் வசித்தாராம்.
தமிழில் எடுக்கப்பட்ட படம் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் ஓடுவது. 1942-ல்(?) தமிழ் பின்னணிக்குரலுடன் காண்பிக்கப்பட்ட படம் பின்னர் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. அப்பொழுது பல தியேட்டர்கள் இந்தப் படத்தைக் காண்பிக்க விரும்பவில்லை. கடைசியாக சென்னை ராக்சி தியேட்டரில் காண்பிக்கப்பட்டதாம். அப்பொழுது பத்து வயதான ஐராவதம் மகாதேவன் ராக்சி தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். இந்திய விடுதலைக்குப் பின்னர் ஹிந்தி பின்னணிக் குரலுடன் இந்தப் படத்தை Films Division காண்பித்துள்ளனர்.
ஏ.கே.செட்டியார் தக்கர் பாபா வித்யாலயாவில் 1950களில் தமிழில் எடுத்த படத்தைக் காண்பித்ததாக முத்துக்குமாரசாமி சொன்னார்.
ஆனால் தமிழ்/தெலுங்கு/ஹிந்தி 2.30 மணிநேரப் படம் மொத்தமாகக் காணாமல் போய்விட்டது. இப்பொழுது கிடைத்திருப்பது அமெரிக்க ஆங்கிலப் பின்னணிக் குரலுடன் ஹாலிவுட்டில் ரீ-எடிட் செய்யப்பட்ட படம்.
ஏ.கே.செட்டியார் தன் கையில் இருந்த footageகளுடன் அமெரிக்கா சென்று அங்கேயே படத்தை சுமார் ஒரு மணிநேரத்துக்குச் சுருக்கியுள்ளார். இதில் பல பகுதிகள் விடுபட்டுப்போயுள்ளன.
படம் காந்தி சுட்டுக்கொல்லப்படுவதிலிருந்து தொடங்குகிறது. அடுத்து போர்பந்தர். காந்தியின் திருமணம். காந்தி பாரிஸ்டர் பட்டம் பெறுவது, தென்னாப்பிரிக்கா செல்வது, இந்தியா வருவது. இந்தியாவில் நடக்கும் பல்வேறு காங்கிரஸ் மாநாடுகள். தண்டி உப்பு சத்தியாக்கிரகம் - இது அற்புதமான படமாக்கல். காந்தியும் அவரது தொண்டர்களும் ஓடி ஓடி தண்டி கடற்கரைக்குச் சென்று கடல் நீரைப் பிடித்து பாத்திரங்களில் காய்ச்சுவது; சில தொண்டர்கள் ஆங்கிலேய உப்பளங்களுக்குள் நுழைய முற்படுவது; காவலர்கள் அவர்களை அடித்துத் தள்ளுவது; காந்தியைச் சிறை செய்வது - என்று நீண்டு செல்லும் காட்சி. ஒத்துழையாமை இயக்கம், காந்தி இங்கிலாந்து செல்வது, அங்கு பலரையும் சந்திப்பது, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம், காந்தி பிர்லா ஹவுஸில் சிறை வைக்கப்படுவது; மஹாதேவ் தேசாய், கஸ்தூர்பா காந்தி மரணம்; இந்திய விடுதலை, பிரிவினையை அடுத்த வன்முறைகள், நோவாகாலி பயணம், காந்தி கொலை, காந்தியின் இறுதி யாத்திரை, காந்தியைப் பற்றிப் பிறர் சொன்னவை.
பல முக்கியமான தலைவர்கள் காண்பிக்கப்படுகின்றனர். மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் எனப் பலரும் காண்பிக்கப்பட்டாலும் அம்பேத்கார் பற்றி ஒரு வார்த்தை இல்லை. (படம் முடிந்ததும் ஒருவர் இதைப்பற்றிப் பேசினார்.)
வேங்கடாசலபதி, தியோடர் பாஸ்கரன் ஆகியோர் படத்தைப் பற்றிப் பேசினர்.
இந்தப் படம் விலைக்குக் கிடைக்குமா என்று சிலர் என் பதிவில் கேட்டனர்; அங்கு நிகழ்ச்சியின்போதும் கேட்டனர். இந்தப் படத்தின் காப்புரிமை ஏதோ அமெரிக்க நிறுவனத்திடம் உள்ளது. வேங்கடாசலபதி அமெரிக்கப் பலகலைக்கழகம் ஒன்றில் நூலகத்திலிருந்து ஒரு நகல் வாங்கியுள்ளார். அவ்வளவே. அகடமிக் விஷயங்களுக்காக என்று பலரைக் கூப்பிட்டு போட்டுக் காண்பிப்பது ஒன்று. ஆனால் இதை டிவிடியாக அச்சடித்து விற்பனைக்குக் கொண்டுசெல்வது வேறு. அதற்கு இந்தப் படத்தின் உரிமையாளர்கள் யார் என்று தேடி, அவர்களிடமிருந்து விற்பனை உரிமையைப் பெற்று அதன்பின்னரே கமர்ஷியலாக வெளியிட முடியும்.
அதுவரையில் இந்தப் படம் பரவலாக மக்களுக்குக் கிடைக்காது.
மனிதன் கடவுளைப் படைத்தானா?
2 hours ago
பத்ரி,
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி.
பத்ரி, எந்த அமெரிக்க பல்கலைகழகமென்று தெரியுமா? மேலும் தகவல்கள் பெற முயற்சிக்கலாம்.
ReplyDeleteThanks Badri.
ReplyDeleteயக்ஞா: எனது முந்தைய பதிவிலிருந்து-
ReplyDelete"தமிழ், ஆங்கில வடிவங்கள் இரண்டுமே பாதுகாக்கப்படாமல் காணாமல் போய்விட்டது என்றே ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நினைத்திருக்கிறார்கள். ஆங்கில வடிவம் இப்பொழுது சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் இருந்து கிடைத்துள்ளது. பின் மற்றுமொரு காப்பி யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் கிடைத்துள்ளது."
சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் நகலெடுத்துக் கொடுக்க மாட்டேன் என்றார்களாம். பின் யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் பிரதி எடுக்கப்பட்டு இங்கு வந்துள்ளது.
/பின்னர் ஹிந்தி பின்னணிக் குரலுடன் இந்தப் படத்தை Films Division காண்பித்துள்ளனர்./
ReplyDeleteIt is surprising that the Films Division of GoI did not archive this.
பத்ரி, ஏ.கே. செட்டியார் எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கின்றன? நானும் பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டேன். சாரு
ReplyDeleteSandhya Publications
DeleteNo. 77, 53rd St, Indira Colony, Ashok Nagar, Chennai, Tamil Nadu 600083
098411 91397
சாரு: ஏ.கே.செட்டியார் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றின் ஒரு பிரதியும் புதுக்கோட்டை ஞானாலயா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ளது. அத்துடன் செட்டியார் எடிட் செய்து கொண்டுவந்த குமரி மலர் இதழ்கள் அனைத்தும் அங்கே உள்ளன. புத்தகங்களில் இன்று அச்சில் இருப்பது காலச்சுவடு வெளியிட்டுள்ள ஒரே ஒரு புத்தகம்தான் - அண்ணல் அடிச்சுவட்டில்.
ReplyDelete