Thursday, January 26, 2006

கொல்காதா புத்தகக் கண்காட்சி 2006

[கல்கத்தாவா, கொல்கத்தாவா - இரண்டும் இல்லையாம். 'கொல்காதா'தான் சரி என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.]

கொல்காதா புத்தகக் கண்காட்சியைப் பார்க்க நேற்றும் இன்றும் இங்கு வந்திருக்கிறேன். 9 லட்சம் சதுர அடியில் 'மைதான்' என்னும் பரந்த வெளியில் கிட்டத்தட்ட 600 புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், 180 வங்க மொழி சிறு பத்திரிகையாளர்கள் கலந்துகொள்ளும் இந்த 31வது வருடப் புத்தகக் கண்காட்சி உலகிலேயே ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்கு அடுத்த இரண்டாவது பெரியது என்று சொல்லப்படுகிறதாம்.

சென்னையில் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு இங்கு வரும் எனக்கு பிரமிப்பு மட்டும்தான் உள்ளது. சில ஃபோட்டோக்கள் எடுத்துள்ளோம், ஆனால் இணையத்தில் சேர்க்க ஓரிரு நாள்கள் ஆகும்.

முக்கியமாக:

1. சென்னையில் ஒரு புத்தக ஸ்டால் 100 சதுர அடி, 150 சதுர அடி, அல்லது 200 சதுர அடி. அவ்வளவே. கொல்காதாவிலோ, 120 சதுர அடியில் ஆரம்பித்து 1500 சதுர அடி வரையில் ஸ்டால்கள் வழங்குகிறார்கள்.

2. சென்னையில் அத்தனை ஸ்டால்களுமே ஒரே மாதிரியான வடிவமைப்புடன் கூடிய நீள்சதுர அமைப்பு. கொல்காதாவிலோ இடத்தை உங்களிடம் கொடுத்து உங்களையே வேண்டிய மாதிரி உள் அலங்காரம், வெளி அலங்காரம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள். அப்பப்பா! ஆளை மயக்கும் வடிவமைப்பு, உள்ளே முழுக்க முழுக்க ஏர் கண்டிஷனிங் செய்யப்பட்ட ஸ்டால்கள். அலங்காரத்தைப் பார்த்தால் இது ஒரு தாற்காலிக அமைப்பு என்றே சொல்லமுடியாது. நிரந்தரமான கடைகளைவிட அழகாக உள்ளன. இன்றோ, நாளையோ நான் சேர்க்கும் படங்களைப் பாருங்கள்.

3. எத்தனை பேர்கள் வருவார்கள் என்று சரியாக யாரும் சொல்லவில்லை. ஆனால் சென்னையைப் போன்று பலமடங்கு கூட்டம் இங்கு வருமென்று தோன்றுகிறது. சென்னையில் சுமார் ரூ. 6-8 கோடி விற்பனை ஆகியிருக்கும். கொல்காதாவில் ரூ. 22 கோடி விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கிறார்களாம். 60% ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள். 40% வங்க மொழி.

4. மிகப்பெரிய வங்க மொழிப் பதிப்பகம் - ஆனந்தா பதிப்பகம் - இது ஆனந்த பாஜார் பத்ரிகா குழுமத்தின் (ஆங்கிலத்தில் Telegraph செய்தித்தாள், வங்க மொழியில் ஆனந்த பாஜார் பத்ரிகா என்ற தின்சரி, தேஷ் என்ற பெயரில் மாதம் இருமுறை இலக்கிய இதழ், வேறு சில வார/மாத இதழ்கள், பெங்குவின் பதிப்பகத்தின் இந்தியக் கூட்டாளி, ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சியின் இந்தியக் கூட்டாளி), முதல் நாளே எக்கச்சக்கமான கூட்டத்துடன் இருந்தது. பலருடைய ஸ்டால்களிலும் நேற்றுதான் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. இன்றுதான் முழுமூச்சுடன் கண்காட்சி தொடங்கும்.

5. நுழைவுக் கட்டணம் ரூ. 5. சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் (Senior Citizens) கட்டணம் கிடையாது.

கொல்காதா புத்தகக் கண்காட்சியை நடத்துபவர்கள் Publishers' & Booksellers' Guild.

4 comments:

 1. கொல்காதா பொயி மேளா மிகப் பெரியதுதான். வங்காளமொழிப் புத்தகங்களுக்கும் ஆங்கில புத்தங்களுக்கு இணையாக காட்சிக் கூடங்கள் அமைத்திருக்கும், நான் பார்த்த 80 களிலேயே.உங்களுக்கு நேர்மாறாக நான் கொல்கொதாவ்லிருந்து சென்னை புத்தக கண்காட்சியை 90ல் பார்த்தபொழுது ஏமாற்றமாக இருந்தது. வங்காளத்தில் பூஜாவிலிருந்து ஹோலி வரை கொண்டட்டம்தான்.

  ReplyDelete
 2. Badri,
  As you know that IndiaToday publishes an one page article called "off the track", explaining how ordinary people make extraordinary differences in day-to-day lives. In one of such articles, I found a reference of a book published by a calcutta based publisher; precisely its a diary containing motivating information about ordinary people(each day has an intersting info). For e.g., how a panwallah has managed to pull large millioners to his shop etc.

  If interested, watch out for that book, if found interesting... source it..


  cheers,
  Kannan

  ReplyDelete
 3. பத்ரி,
  பதிவிற்கு நன்றி! கண்காட்சியில் எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.

  ReplyDelete
 4. நம்ம பேட்டை ஸ்டால் இல்லையா?

  ReplyDelete