Wednesday, January 04, 2006

கிழக்கு புத்தகங்கள் - 2

ஆதவன் சிறுகதைகள்

ஆர்.வெங்கடேஷ் என்னிடம் ஏதேனும் ஆதவன் சிறுகதைத் தொகுப்புகள் உள்ளதா என்று ஒருநாள் கேட்டார். "ஆதவன் யார்?" என்பதுதான் என் பதில் கேள்வியாக இருந்தது.

வெங்கடேஷ் தான் ஆதவனால் கவரப்பட்டதாகவும், தற்போது (அவர் என்னிடம் பேசியபோது) அவரது படைப்புகள் எதுவும் பிரசுரத்தில் இல்லை என்றும் அவரது கதைகள், கட்டுரைகள் அனைத்தையும் கொண்டுவர விரும்புவதாகவும் சொன்ன்னார். அதற்கு சற்றுப் பின்னர்தான் உயிர்மை வழியாக என் பெயர் ராமசேஷன் வெளியானது. அதற்குப் பிறகு மீண்டும் உயிர்மை வழியாக காகித மலர்கள் நாவலும் வெளியானது. அந்த சமயத்தில் வெங்கடேஷும் நானும் ஆதவன் மனைவியைத் தொடர்புகொண்டு ஆதவனது பிற படைப்புகளுக்கான பதிப்பிக்கும் உரிமையைப் பெற்றோம்.

முதலில் இரவுக்கு முன்பு வருவது மாலை என்ற பெயரில் அவரது குறுநாவல்களை தொகுப்பாகக் கொண்டுவந்தோம். வெங்கடேஷ் ஆதவன் சிறுகதைகளைத் தேடித் தேடித் தொகுத்து வைத்திருந்தார். அதில் பல அசோகமித்திரனிடமிருந்து வாங்கியது. அசோகமித்திரன் ஆதவன் சிறுகதைத் தொகுதி முதலில் இமயம் வெளியீடாக வந்திருந்தபோது மார்ஜினில் (வெகு)சில குறிப்புகள் எழுதிவைத்திருந்தார். அவை சுவையானவை. இப்படி மொத்தமாகக் கிடைத்த முந்தைய சில சிறுகதைத் தொகுப்புகளில் விடுபட்டிருக்கும் சிலவற்றைத் தேடி வெங்கடேஷ் அலைந்தார். கஸ்தூரி ரங்கனிடமிருந்து கணையாழி இதழ்கள் பல கிடைத்தன. அதிலிருந்து இரண்டு கதைகள் கிடைத்தன. அமுதசுரபி தீபாவளி மலரில் ஒரு கதை எழுதியிருக்கிறார் என்று தெரிந்ததும் திருப்பூர் கிருஷ்ணனிமிருந்து அதைப் பெற்றோம். தீபம் இதழ்களில் ஏதேனும் வந்தது விடுபட்டிருக்குமா என்று தேடினோம். எதும் இல்லை என்றே நினைக்கிறோம். கிட்டத்தட்ட ஆதவன் எழுதிய அனைத்து சிறுகதைகளும் (குழந்தைகள் கதைகளைத் தவிர) இந்தப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.

ஆதவன் எழுத்தில் அத்தனையையும் கொட்டிவிடுவார். ஓர் ஆணின், பெண்ணின் மனநிலையை அப்படியே படம் பிடித்து நமக்கு ரன்னிங் கமெண்டரி தருவார். சின்னச்சின்ன விஷயங்களைக்கூட பத்திபத்தியாக எழுதிவிடுவார். சில சமயங்களில் நம்மை யோசிக்கவேவிடாது அதிகமாகப் பேசிவிடுகிறாரோ என்று தோன்றும்.

அவரது சிறுகதைகள் அச்சுக்குப் போவதற்குமுன் ஒன்றுவிடாமல் படித்து தவறு ஏதும் இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டியது என் வேலை. அவரது கதைகளின் களமான தில்லி, அங்குள்ள இடங்கள், பெயர்கள், அலுவலகம், அலுவலகத்தில் நடப்பவை, அவர் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்கள் (அவற்றின் தமிழ் transliteration) ஆகியவை சரியாக உள்ளனவா என்று பார்க்கவேண்டும். அவரது பத்திகள் மிகப் பெரியன. பல வாக்கியங்கள் நீண்டிருக்கும். கதை சொல்லும் பாணியில் நிறைய உரையாடல் வரும். அதில் ஆண், பெண் - யார் எதைப் பேசுகிறார் போன்ற குழப்பங்கள் அதிகம். அதையெல்லாம் சரி செய்யவேண்டிய வேலை.

இந்த வேலையை ரசித்துச் செய்தேன். என் பிற வேலைகளுக்கிடையே இந்த வேலையைச் செய்யவேண்டிவந்ததால் நிறைய நாள்கள் ஆயின. அவரது 60 கதைகளில் சில சொற்கள் மீண்டும் மீண்டும் வரும். அவை பற்றிய புள்ளிவிவரங்களை தனியாக (பின்னர்) ஒரு பதிவாக எழுதுகிறேன். அவர் மிக அதிகமாக உபயோகித்த சொல் "ஆபீஸ்."

ஆ.இரா.வெங்கடாசலபதி கொண்டுவந்த புதுமைப்பித்தன் கதைகள் தொகுதிக்குக் கடைசியில் பின்குறிப்புகளாகப் பலவற்றைச் சேர்த்திருப்பார். அதேபோல பின்குறிப்புகள் அல்லது அடிக்குறிப்புகள் சிலவற்றைச் சேர்க்கலாமா என்று யோசித்தோம். பின், வேண்டாம் என்று முடிவுசெய்து விட்டுவிட்டோம்.

ஆதவன் சிறுகதைகள் தொடும் பல விஷயங்கள் இன்றுகூட யாரும் தொட முயற்சி செய்யாதவை. பகிரங்கமாகப் புத்தகங்களின் கதைகளாக எழுத விரும்பாதவை. (அல்லது எழுதியிருந்தால் என் கண்ணில் படாதவை.) இவற்றையெல்லாம் தனியாகக் குறிப்பிட்டு எழுத ஆசை. இந்த மாதக் கடைசியில் பார்க்கலாம்.

5 comments:

 1. Badri,

  Thanks for bringing out the aadvan's short stories collection which i was eagerly expecting to buy.

  - Suresh Kannan

  ReplyDelete
 2. Last year itself, you were mentioning about this collection. Glad that you published this year. Added in my "to be bought" list.


  Regards,
  Raj

  ReplyDelete
 3. ஆதவனின் கதைகள் பெரும்பாலும் மத்யமர் இரகக் கதைகள்தான். வார்த்தை வளம், மெல்லிய நகைச்சுவை, எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றில் சுஜாதா, பாலகுமாரன் இவர்களுக்கு முன்பாகவே
  ஆதவன் நிற்பதாக எனக்குத் தோன்றும். அவரது பாத்திரங்களினிடையே ஏற்படும் ஒப்பீட்டில் இழையோடும் ஒரு சிறு நகைச்சுவையில், வாசகர் புன்முறுவலிக்காமலிருக்க முடியாது. நர்மதாவின் 'முதலில் இரவு வரும்' தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த மூன்று சிறுகதைகளிலிருந்து சில வரிகள்.

  "அத்திம்பேரின் லோக்கல் பயணங்களின் போது, நான்தான் அவருக்கு வழிகாட்டியாக இருந்தேன். நல்ல காப்பி கிடைக்கும் ஹோட்டல்கள், நம்பகமான சலூன்காரர்கள், சகாய விலையில் ரம் சப்ளை செய்யும் ஆர்மிகாரர்களின் மச்சினர்கள் போன்ற விவரங்களை எடுத்துக் கூறி அவருக்கு ஒரு நல்ல மந்திரியாக விளங்கினேன்."

  - பக்க வாத்தியம் (1984) - இதில் அப்பாவுக்கும், அத்திம்பேருக்கும் இடையே நடைபெறும் ஒப்பீடு ஒரு சரியான கலக்கல்.

  "சமூகத்தின் உரிமைப்போராட்டங்கள் தீவிரமடைந்து, அது ஒரு வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்ட காலத்தில் பரசு பிறந்தது அவனுடைய தான்தோன்றித்தனத்துக்குக் காரணமாயிருக்கலாம் என்று
  அவனுடைய அப்பா குயுக்தியாக நினைத்துக் கொள்வார். இப்படி சமூக நிகழ்ச்சிகளுக்கும், தன் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கும், தளுக்காக முடிச்சுப் போட்டு பிறகு, மணிக்கணாக்காக அந்த முடிச்சின் அழகைப் பார்த்து வியந்து கொண்டிருப்பது அவருக்கு ஒரு பொழுது போக்கு.

  - மூன்றாமவன் (1981) - பரசுவின் குணாதிசயத்தை வரிக்கு வரி கண்டு வியந்ததுண்டு. பரசுவின் அண்ணா மாதவனின் நிலை மிகுந்த சோகம்.

  "அவர்கள் சென்ற டூரிஸ்ட் பஸ்ஸில் வாசுவின் வயதில் ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு 'வடுமா
  ங்காய்' என்ற பட்டப் பெயர் சூட்டி, அவளையும் வாசுவையும் இணைத்து ஏதோ கமெண்ட் அடித்த வண்ணமிருந்தான்."

  - பெரியவன் (1982) - சுந்தர் எப்படி ஒரே நிகழ்ச்சியில் பெரியவானான் என்று உணர்த்தும் கதை.

  - சிமுலேஷன்

  ReplyDelete
 4. பத்ரி, முன்னமே சொல்லனும்னு நினைச்சேன். காமதேனு பக்கங்கள்ல இந்த எழுத்தாளர்/பதிப்பாளர் பட்டியல் அகர வரிசைல இருந்தா இலகுவாக இருக்குமே.

  ReplyDelete