ஆண்டுக்கு ஆண்டு மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு ஆபத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பிற மதங்களின் புனிதப் பயணங்களைப் போல் அல்லாது ஹஜ்ஜில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. (1) அனைத்து முஸ்லிம்களும் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். (2) இந்தப் பயணம் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் நிகழவேண்டும்.
இதன் விளைவாக ஆண்டுதோறும் மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. மிகச் சிறிய ஒரு நகரத்தால் தாங்கமுடியாத அளவுக்கு நகருக்கு வருபவர்கள் தொகை உள்ளதாம். இந்த வருடம் சட்டபூர்வமாக அனுமதி பெற்று வந்தவர்கள் 25 லட்சம் பேர் என்று சவுதி அரசு அறிவிக்கிறது. இதில் இந்தியர்கள் சுமார் 1.5 லட்சம் பேர் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவிலிருந்து மெக்கா ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது 10% அதிகரிக்கிறது. இனி வரும் வருடங்களின் இந்தச் சதவிகிதம் இன்னமும் அதிகரிக்கலாம்.
இதைத் தவிர அரசாங்க பெர்மிட் இல்லாமல் மெக்கா நகருக்குள் நுழைபவர்களும் உண்டாம். அந்த எண்ணிக்கை 15 லட்சம் வரையிலும்கூட இருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி பெர்மிட் இல்லாமல் நுழைபவர்கள் தங்குவதற்கு இடமின்றி தெருக்களில் வசிக்கவேண்டி உள்ளது.
இத்தனை கூட்டமும் காபாவைச் சுற்றிவரவேண்டும். மசூதியில் தொழவேண்டும். கடைசியாக 'சாத்தான் மீது கல்லை எறியவேண்டும்.' இந்தக் கல்லெறிதல்போதுதான் இரண்டு நாள்களுக்குமுன் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 360 பேர்களுக்குமேல் இறந்துள்ளனர். அதில் அதிகபட்சம் இந்தியர்கள் - 44 பேர். அதற்கு மேலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற வாரம் நான் கோழிக்கோடு பயணம் செய்வதற்கு சென்னை சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தேன். (கோழிக்கோடு வழியாக மஸ்கட் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அது.) விமானநிலையம் முழுவதும் ஹஜ் பயணிகள்தான். ஆண்கள் வெள்ளை வேட்டியும் தோளைச் சுற்றி சுருட்டி அணிந்திருந்த வெள்ளைத்துண்டுமாகக் காட்சியளித்தனர். பெண்கள் உடைகளில் பல வித்தியாசங்கள் இருந்தன. கருப்பால் ஆன முழு அங்கியும், அதற்குமேல் பச்சை அல்லது நீல வண்ணத்தில் தலையைச் சுற்றி அணிந்த துணி இருந்தது. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர் போன்றவர் இருந்தார். அவர் கையில் மெகாஃபோன் ஒன்றை வைத்திருந்தார். அவ்வப்போது அந்த மெகாஃபோன் வழியாக தமது குழுவுக்கு உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.
மாலை தொழுகை நேரம். ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் தரையில் துணி அல்லது பாயை விரித்து தொழுதுகொண்டிருந்தனர். ஏர் இந்தியா விமானத்தில் ஜெத்தா பயணம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். ஏர் இந்தியா பணியாளர்கள் பொறுமையாக ஒவ்வொரு குழுவாக விமானத்துக்குள் ஏறுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்குள் என் விமானம் கிளம்ப வேண்டியிருந்தது.
அன்று விமான நிலையத்தில் நான் பார்த்த பலருள் எத்தனை பேர்களின் உயிருக்கு ஆபத்து நேர்ந்ததோ தெரியவில்லை.
-*-
அவ்வப்போது நடக்கும் அலஹாபாத் கும்பமேளா, கும்பகோணம் மகாமகம், வருடந்தோறும் நடக்கும் ஐயப்ப மகரவிளக்கு, பூரி ஜகந்நாதர் தேர் இழுத்தல் என இந்தியாவில் பல இடங்களிலும் கூட்ட நெரிசல், மிதிபாட்டில் சிக்கி உயிர்போதல், பக்தர்கள் பயணங்கள் போது நடக்கும் சாலை விபத்துகள் என்று பலவகைகளில் சாவு நிகழ்கிறது. இதற்கு அடிப்படையில் மோசமான திட்டமிடுதலே காரணம். சுனாமி, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளைத்தான் எளிதில் தடுக்கமுடியாது. ஆனால் மத சம்பந்தமான விஷயத்தில் முன்னறிவிப்பு இருப்பதால் இன்னமும் சிறப்பாகத் திட்டமிட முடியும்.
சவுதி அரேபியாவோ, இந்தியாவோ, மக்களின் உயிர் வீணாகப் போவதைத் தடுக்க தனி அமைச்சர்கள், அலுவலகங்களை ஏற்படுத்தி, நிபுணர்களைக் கொண்டு கூட்டங்களை நிர்வகிக்கவேண்டியது அவசியமாகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அதற்கென தனியாக ஒரு காவல்படை அமைத்து அவர்களுக்கு விசேஷப் பயிற்சி தருவதும் அவசியமாகிறது.
மதுரை புத்தகக் காட்சியில் இன்று இருப்பேன்
11 hours ago
இனிய பத்ரி,
ReplyDeleteஇதுவரையில் கிடைத்த தகவலின்படி கேரளாவிலிருந்து வந்திருந்த ஹாஜிகளில் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
1.அபூபக்கர் s/o மொயி - வயது 55 - ஊர்: கோழிக்கோடு.
2.மொய்தீன்குட்டி s/o குன்னா - வயது 63 - ஊர்: பாலக்காடு.
3.இம்மெரும்மா w/o மொய்தீன்குட்டி - வயது 63 - ஊர்: பாலக்காடு.
மற்ற விவரங்களைப் பிறகு தெரிவிக்கிறேன்.
ஆசாத்
//மத சம்பந்தமான விஷயத்தில் முன்னறிவிப்பு இருப்பதால் இன்னமும் சிறப்பாகத் திட்டமிட முடியும்//
ReplyDeleteபத்ரி, சரியாககச் சொன்னீர்கள்.
சவூதி அரசும் ஹஜ் அமைச்சகமும் போதுமான முன்னேற்பாடுகளை செய்திருந்த போதிலும்
சாத்தானுக்கு கல்லெறியும் நிகழ்வில் ஏற்படும் நெருக்கடிகளில்தான் இத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன. முன்பு கூடாரங்கள் தீப்பிடித்தன என்பதற்காக கூடாரங்களில் உணவு சமைப்பதையும் தடுத்தும், தீப்பிடிக்காத கூடாரங்கள் அமைத்தும் அத்தகைய இழப்பை தவிர்த்தனர்.
ஹஜ் கிரியைகளை முடித்துச் செல்லும் ஹாஜிகள் தங்கள் உடமைகளையும் உடன் எடுத்து வந்ததே இது போன்ற அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணமாகி விட்டது என சொல்லப் படுகிறது. சரியான திட்டமிடல் இருந்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.
எதிர்காலங்களில் தற்போது இருக்கும் மூன்று அடுக்குப் பாதையை நான்கு அடுக்குகளாக அமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அத்தோடு நெருக்கடியான நிலையில் ஹாஜிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியையும் கொடுக்கலாம்.