Saturday, January 14, 2006

சன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்

இப்பொழுது தனியார் பண்பலை வானொலி நிலையங்களுக்கான ஏலம் நடந்துகொண்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன், சில நகரங்களில் மட்டும் நகருக்கு இரண்டு அல்லது மூன்று நிலையங்களுக்கான ஏலம் நடைபெற்றது. சென்னையில் இரண்டு நிலையங்கள் - டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ரேடியோ மிர்ச்சி, சன் டிவி குழுமத்தின் சூர்யன் எஃப்.எம். பிற மாநகரங்கள், சில குட்டி நகரங்கள் என்று அப்பொழுது வழங்கப்பட்ட பண்பலை உரிமத்தில் பல பிரச்னைகள் இருந்தன. விதிக்கப்பட்ட உரிமக் கட்டணம் அதிகமாக இருந்தது. வருடா வருடம் இந்தக் கட்டணம் 15% அதிகரிக்கும் என்ற பயமுறுத்தல் வேறு.

இதனால் அனைத்து பண்பலை வானொலிகளும் நஷ்டத்தில் இயங்கின. பின்னர் பண்பலை வானொலி உரிமக் கட்டணத்தின் மாற்றம் நடைபெற்றது. செல்பேசி நிறுவனங்கள் போல முதலில் ஒரு குறிப்பிட்ட அளவு ஏலத்தொகையும், அதற்குப் பின்னர் வருடா வருடம், வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமும் என்றானது.

அதன்படி இன்னமும் பல நகரங்களுக்கு பண்பலை வானொலி உரிமங்கள் வழங்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமைக்கு வெள்ளிக்கிழமை ஏலம் நடக்கிறது. சென்ற வெள்ளியன்று நடந்த ஏலத்தில் சென்னையில் பண்பலை வானொலி நிலையங்களை நடத்த மேலும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Radio Mid-Day, Adlabs Film Pvt, Muthoot Finance, Music Broadcast, Malar Publication, Noble Broadcasting ஆகியோரே இவர்கள்.

இந்த ஏலம் நடைபெறும் முறை எப்படியென்றால் மொத்தம் ஆறு புது நிலையங்கள்தான் என்பதை அரசு முன்னதாக அறிவித்துவிடும். எத்தனை பேர் வேண்டுமானாலும் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள என்று சில தகுதிகள் இருக்கின்றன. அப்படியான தகுதியுடைய பலரும் கலந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட ஏலத்தொகையை துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்துவிடலாம். அதிகமாக ஏலத்தொகையைத் தர ஒப்புக்கொண்ட முதல் ஆறு பேர்களுக்கு வானொலி நிலையங்களை அமைக்கும் உரிமை கிடைக்கும். தாம் தர ஒப்புக்கொண்ட தொகையை முழுவதுமாகத் தரமுடியாமல் போனாலோ, அல்லது வேறு காரணங்களுக்காக அந்த நிறுவனம் தடை செய்யப்பட்டாலோ ஏலத்தில் அடுத்ததாக இருக்கும் நிறுவனம் இடத்தைப் பிடிக்கும்.

ஆளுக்கு தனியாக ஒரு பண்பலை வரிசை ஒதுக்கப்படும். இப்படி மேற்குறிப்பிட்ட ஆறு பேர் கட்டியிருக்கும் நுழைவுக் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Radio Mid-Day (இதில் பிபிசி ஒரு பங்குதாரர்) - ரூ. 12.27 கோடி
Adlabs Film Pvt (ரிலையன்ஸ் - அனில் அம்பானியுடையது) - ரூ. 9.09 கோடி
Muthoot Finance (தமிழகத்தில் இருக்கும் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனி) - ரூ. 8.02 கோடி
Music Broadcast (ரேடியோசிட்டி -> மிட்டல் + நியூஸ்கார்ப்) - ரூ. 8.00 கோடி
Malar Publication (தினமலர் குழுமம் - மதுரை) - ரூ. 6.30 கோடி
Noble Broadcasting (யார் என்று தெரியவில்லை) - ரூ. 5.00 கோடி

===

நம் சன் டிவி குழுமம் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாமா?

KAL ரேடியோ (கல் அல்லது கால் என்று உச்சரிக்க வேண்டுமா என்று தெரியவில்லை - கலாநிதி மாறனின் பெயரிலிருந்து முதல் மூன்று ஆங்கில எழுத்துகள்?) என்ற பெயரில் பெங்களூர் (ரூ. 20 கோடி), ஹைதராபாத் (ரூ. 15 கோடி) என்று இரண்டு ஊர்களிலும் உரிமை பெற்றுள்ளது.

அதேபோல சவுத் எசியா எஃப்.எம் என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு நிறுவனம் - மலேசியாவின் ஆஸ்ட்ரோவுடன் இணைந்து - மூலம் மேலும் சில நகரங்களில் உரிமை பெற்றுள்ளது - சூரத் (ரூ. 3 கோடி), பூனா (ரூ. 14 கோடி), லக்னோ (ரூ. 14 கோடி), நாக்பூர் (ரூ. 3 கோடி), கான்பூர் (ரூ. 8 கோடி), ஜெய்ப்பூர் (ரூ. 5 கோடி), அஹமதாபாத் (ரூ. 12 கோடி) என்று ஏழு நகரங்கள்.

நேற்று நடந்த ஏலத்திலும் சவுத் ஏசியா எஃப்.எம் நிறைய உரிமங்கள் பெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் எந்தெந்த ஊர்களுக்கு என்ற செய்தி ஒலி/ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் கிடைக்கும்.

மலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனம் NDTVயுடன் கூட்டுசேர்ந்து இந்தியா டுடே குழுமத்தின் எஃப்.எம் நிலையங்களையும் வாங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

===

இப்பொழுதைக்கு நான்கு பெரிய குழுக்கள் பண்பலை வானொலித் துறையில் போட்டிபோட இருக்கின்றன.

1. சன் டிவியின் நேரடி மற்றும் கூட்டு நிறுவன முயற்சிகள்
2. Entertainment Network of India Limited - டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் முயற்சிகள்
3. Adlabs - அனில் அம்பானியின் நிறுவன முயற்சிகள்
4. ரேடியோ மிட்-டே (+ பிபிசி)

இவர்களைத் தவிர வேறு பல மீடியா குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளனர், ஆனால் மேலே சொன்ன நால்வருடன் அவ்வளவாகப் போட்டிபோடும் அளவில் அல்ல.

உரிமம் பெற்றதும், வானொலி நிலையங்களை ஆரம்பித்து, சோதனை முயற்சிகளுக்குப் பிறகு முழுதாக நிகழ்ச்சிகளை உருவாக்கி அளித்து, தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, விளம்பரப் பணத்தைக் கொண்டுவந்து நிகர லாபம் ஈட்டவேண்டும். இதற்கு, குறைந்தது நான்கு வருடங்களாவது ஆகும்!

பார்க்கலாம், இந்த நால்வரில் யார் நீண்டு நிலைத்திருக்கும் பிராண்டை உருவாக்குகிறார்கள் என்று...

4 comments:

 1. யார் நிலைத்து நிற்க வேண்டுமென்றாலும், மக்களைக் கவாரும் விதத்தில் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட வேண்டும். திரும்ப, திரும்ப சினிமா நிகழ்ச்சிகளை தந்து மக்களை ஓட வைக்காமல் கொஞ்சம் அறிவுப்பூர்வமாக தயாரித்தால் நிலையங்கள் தாக்குப் பிடிக்க இயலும்.

  அமெரிக்காவில் பண்பலைகளில் பெரும்பாண்மை பாடல்களுக்கு ஒதுக்கினாலும், சில நிலையங்கள் வித்தியாசமாகத் தருகின்றன. நம் பண்பலைகளில் பல வகையான விவாதங்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டு வரவேண்டும்(அரட்டை அரங்கம் போல மிகைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள், மக்கள் இரசனைய வளர்க்கா). ஆனால் கருத்து சொன்னால் விளக்கமாறு பாயும் என்பதால் இவை தரம் தாழ்ந்த நிலையிலேயே வைத்திருப்பார்கள். என்றாலும் இவைகளை மேம்படுத்த சன் குழுமங்கள் போன்ற சமூக, அரசியல், பண பலமிக்க நிறுவனங்களால் முடியும் என்பது என் நம்பிக்கை.

  ReplyDelete
 2. பத்ரி,
  இவ்வளவு தொகையா? நான் ஏதோ சில இலட்சங்கள் இருக்கும் என்று நினைத்தேன். ம்...ம்... எப்படியோ மேலும் பல சினிமாப்பாடல்கள். சினிமாவைத் தவிர்த்து அங்கு இந்த பண்பலையில் ஏதும் நடக்கிறதா?

  தமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
  அன்புடன்,
  கல்வெட்டு (எ) பலூன் மாமா.

  ReplyDelete
 3. //Noble Broadcasting (யார் என்று தெரியவில்லை) - ரூ. 5.00 கோடி//

  "...லேட்டஸ்ட்டாக நம்பர் ஒன் ஸ்தானத்தை, விதூஷகப் பத்திரிக்கையிடம் இழந்த தாமரை, அத்திரி பாச்சா பல்ட்டி அடித்தும் விட்ட இடத்தைப் பிடிக்க முடியவில்லையாம்.. விதூஷகன், 'மெகா' எடுத்து தாய்குலங்கள் மனசில் இடம் பிடிக்க, தாமரை, மிர்ச்சி பாணியில் இளசுகளைக் கவர களத்தில் குதித்திருக்கிறதாம்...." என்று தெரிந்த மாதிரி கிசுகிசு எழுதலாம். ஆனால், தெரியாது. ஒண்ணு மட்டும் உண்மை. நோபிள் ப்ராட்காஸ்ட்டிங் கார்ப்பொரேஷனின் RO, 306, புரசவாக்கம் நெடுஞ்சாலை :-)

  ReplyDelete