நேற்று முடிந்த சென்னை புத்தகக் காட்சியின்போது பல பதிப்பகங்களின் கடைகளை அருகில் இருந்து பார்க்க முடிந்தது. எங்கள் கடையிலும் பிறரது கடைகளிலும் வாசகர்கள் எப்படி புத்தகம் வாங்குகிறார்கள் (Purchase Behaviour), விற்பனை முகவர்கள் வாசகர்களுடன் எப்படி ஊடாடுகிறார்கள் என்பதைக் கவனிக்க முடிந்தது. பொதுவாக ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் எம்மாதிரியான விற்பனை நடந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு கவனிக்க முடிந்தது.
விகடன் பிரசுரம்தான் இந்தப் புத்தகக் காட்சியில் தமிழ் பதிப்பாளர்களிலேயே அதிக விற்பனை படைத்திருக்கும் கடை என்று ஊகிக்க முடிகிறது. விகடனின் புத்தகங்கள் அனைத்துமே அவர்களது வார/மாத இதழ்களில் வந்திருக்கும் தொடர்களின் தொகுப்புதான் - ஒரேயொரு புத்தகத்தைத் தவிர ("காசு மேல காசு"). 'காசு மேல காசு', கிழக்கு பதிப்பகத்தின் 'அள்ள அள்ளப் பணம்' புத்தகத்தைப் போன்றது. விகடன் குழும இதழ்களின் வாசகர்கள் இந்தத் தொடர்களை ஏற்கெனவே படித்து ரசித்தவர்கள். எனவே புத்தக வடிவில் பெற விரும்பி வாங்கியுள்ளனர். விகடன் கடையில் எப்பொழுதும் கூட்டம்தான். வந்த அனைவரும் கையில் புத்தகம் எதையாவது வாங்காமல் திரும்பவில்லை. ஆனால் புத்தகத்தை விகடன் ஸ்டாலில் தேடிப்பெறுவதுதான் கடினமாக இருந்தது.
வரிசையாகப் புத்தகங்களைக் கொட்டி வைத்திருந்தனர். இன்னது இங்குதான் கிடைக்கும் என்று உத்தரவாதமாகச் சொல்லமுடியாது. கஸ்டமர் சர்வீஸ் என்று எதுவுமே அந்த ஸ்டாலில் கிடையாது. அதிகபட்சமாக "வேகமா போயிக்கிட்டே இருங்க சார், கூட்டம் போடாதீங்க" என்று திருப்பதி கோயில் பாணியில் மிரட்டல் மட்டும்தான். எந்தப் புத்தகம் எங்கு இருக்கிறது என்று வழிகாட்ட யாரும் இல்லை. ஒரு புத்தகம் வாங்கினால் அவருக்கு வேறு என்னென்ன புத்தகங்கள் உபயோகமாக இருக்கும் என்றெல்லாம் சொல்ல யாரும் இல்லை.
பில் போடும் இடத்தில் மிகக் கடினமான முறை செயல்படுத்தப்பட்டு இருந்தது. புத்தகத்தைக் கொடுத்து டோக்கன் வாங்கவேண்டும். பின்னர் வாசலுக்கு வந்து டோக்கனைக் கொடுத்து காசைக் கொடுத்து பையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். கடனட்டை வசதி உண்டு, ஆனால் குறைந்தது ரூ. 500க்குமேல் செலவு செய்தால்தான் கடனட்டையைப் பயன்படுத்தலாம்.
விகடனின் புத்தகங்கள் உருவாக்கப்பட்டவிதம் எனக்குப் பிடிக்கவில்லை. எல்லாமே பளபளா glossy newsprint தாளில் பலவண்ண அச்சில் உருவாக்கப்பட்ட புத்தகங்கள். அனைத்துமே வார/மாத இதழ் பாணியில் பக்கத்துக்குப் பக்கம் சின்னச் சின்னக் கட்டங்களில் துணுக்குச் செய்திகளாகவும் கார்ட்டூன் படங்களாகவும் கிளிப் ஆர்ட் படங்களாகவும் இருந்தன. வார/மாத இதழ்களுக்கும் அச்சுப் புத்தகங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டு. விகடன் பிரசுரப் புத்தகங்கள் சிலவற்றில் multi-column முறையில்கூட அச்சாக்கம் செய்திருந்தனர்! (வந்தார்கள்.. வென்றார்கள்!)
விகடன் வார/மாத இதழ்க் கண்ணோட்டத்திலிருந்து வெளிவரவேண்டும். லே அவுட் என்றாலே மேகஸின் மட்டும்தான் என்பதிலிருந்து மாறவேண்டும்.
ஆனாலும், முன்னமே சொன்னதுபோல விற்பனையில் விகடன்தான் இந்தப் புத்தகக் காட்சியின் சூப்பர் ஹீரோ!
-*-
விகடன் பற்றிப் பேசினால் உடனே குமுதம் பற்றிப் பேசியே ஆகவேண்டும். விகடன் நம்பர் 1 என்றால் குமுதம் நம்பர் பத்தாயிரம். குமுதத்துக்கு புத்தகங்கள் பற்றிய பிரக்ஞையே இல்லை. ஆனாலும் ஒரு டபுள் ஸ்டால் எடுத்து வாசல் வளைவில் விளம்பரம் செய்து, பெயருக்கு பத்து புத்தகங்களை உருவாக்கி கடையில் ஈ ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.
விகடனின் திட்டமிட்ட உழைப்பு குமுதத்துக்குத் துளிக்கூட இல்லை என்பது அவர்கள் கொண்டுவந்திருக்கும் புத்தகங்களில் தெரிந்தது. குமுதம் பத்து நாள்களில் அடைந்த விற்பனையை விகடன் ஒரு மணிநேரத்தில் பெற்றிருக்கும் என்று நினைக்கிறேன்.
-*-
பொதுவாக, தமிழ் பதிப்பாளர்களின் விற்பனை சாமர்த்தியம் குறைவு என்று தோன்றியது. கடனட்டை வசதியைக் கொடுத்த தமிழ் பதிப்பகங்கள் மொத்தமாக நான்கோ, ஐந்தோ. (விகடன், கிழக்கு, கவுரா ஏஜென்சீஸ், நர்மதா, அதிகபட்சமாக இன்னமும் ஒன்றோ, இரண்டோ இருக்கலாம்.) BAPASI கொடுத்த கடனட்டை வசதி போதவில்லை. ஒரு பழம்பெரும் பதிப்பகத்தில் வாடிக்கையாளர் ஒருவரிடம் சரியான சில்லறை இல்லை என்ற காரணத்தால் புத்தகத்தை விற்காமல் அனுப்பிவிட்டார்கள்! பலர் blunt-ஆக 'கடனட்டை வசதியெல்லாம் கிடையாது, இஷ்டமிருந்தால் காசு கொடுத்து வாங்கு, இல்லாவிட்டால் போ' என்றமாதிரி பேசினார்கள். கடை வாசலில் கல்லாப்பெட்டியில் மட்டும் உட்கார்ந்துகொண்டு உள்ளே நுழையும் வாடிக்கையாளர்களிடம் இன்முகம் காட்டாமல், ஒருவார்த்தைகூடப் பேசாமல் இருந்தார்கள் பலரும்.
ஒருசில கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம் பயங்கர சண்டைகள் வேறு போட்டார்கள்!
இன்னமும் பல உதாரணங்களைக் கொடுக்கலாம். ஆனால் நாகரிகமாக இருக்காது.
-*-
ஒருவிதத்தில் சென்னை புத்தகக் காட்சி வாடிக்கையாளர்களுக்கு சரியான வசதிகளைத் தருவதில்லை என்றே சொல்லலாம். தரை சமதளமாக இருப்பதில்லை. பலர் கால்கள் நொடித்துக் கீழே விழுந்தனர். (அமெரிக்காவாக இருந்தால் நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்றிருப்பார்கள்.) குடிதண்ணீர் வசதி குறைவு. உணவு வழங்கும் இடத்தில் சுத்தம், சுகாதாரம் குறைவு. உணவகத்துக்கு வெகு அருகில் வெளியில் கழிவுநீர் கொப்பளித்து வந்துகொண்டிருந்தது. அதைக் கையால் முகந்து பிளாஸ்டிக் பாத்திரங்களில் ஏந்திக் கொண்டிருந்தார் ஒருவர். (நான் அந்தப் பக்கம் போன மூன்று, நான்கு முறையும்!) கழிவறைகள் வசதி குறைவு. மாலை நேரத்துக்குப் பிறகு ஆண்கள் கழிவறை வாசலில் இருக்கும் ஒரேயொரு குழாயில் தண்ணீர் வருவது நின்றுவிடும். பெண்கள் கழிவறை வசதி பற்றி எனக்குத் தெரியவில்லை.
கடைகளில் - டபுள் ஸ்டாலில்கூட - ஒரேயொரு மின்விசிறிதான். அது பல நேரங்களில் போதவில்லை. ஸ்டாலுக்கு உள்ளாக இருந்த தரைவிரிப்பு மோசம். தடுக்கிக்கொண்டே இருந்தது. ஸ்டாலில் தரைப்பலகையே சமதளமாக இல்லை.
இத்தனை வசதிக்குறைவுகளையும்மீறி வாசகர்கள் ஏகோபித்த அளவில் வந்தார்கள். பலர் புத்தகம் வாங்குவதைக் கண்டு நான் பிரமித்துப் போனேன். நான்தான் அதிகம் புத்தகங்கள் வாங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பலரும் ஆர்வத்தோடு ஒவ்வொரு கடைகளிலும் வாங்கும் புத்தகத்தைக் கண்டு எனக்கு பயமே வந்துவிட்டது. சென்ற வருடத்தைவிட 30% ஆவது அதிக விற்பனை இந்த வருடம் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
-*-
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் முடிந்தவரை உழைத்தனர். அவர்களைக் குற்றம் சொல்ல இயலாது. அவர்களும் வெவ்வேறு பதிப்பகங்களின் உரிமையாளர்களே. அவர்களுக்கு தத்தம் பதிப்பகங்கள் தொடர்பாகப் பல வேலைகள் இருந்திருக்கும். புதுப் புத்தகங்களை உருவாக்க வேண்டும். தினசரி தங்களது கடைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் புத்தகக் காட்சி தொடர்பான பல முடிவுகளை எடுக்கவேண்டும். அதற்கெனவும் நேரத்தைச் செலவழிக்க வேண்டும்.
இதிலிருந்து மீண்டு புத்தக விற்பனைக்கான சந்தையை வெகுவாக விரிவாக்க என்ன செய்யலாம்? தெ.பு.ப.வி.ச வுக்காக தகுதி படைத்த முழுநேர ஊழியர்களை நல்ல சம்பளத்தில் அமர்த்தலாம். இவர்கள்மூலம் சென்னையில் மட்டுமல்லாது பிற முக்கிய நகரங்களிலும் வருடத்துக்கு ஒருமுறை சென்னையைப் போன்று மாபெரும் கண்காட்சியை அமைக்கலாம். ஒரு காலாண்டுக்கு ஒன்றுவீதம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் பிரம்மாண்டமான கண்காட்சிகளை அமைத்தால் அதன்மூலம் சந்தையும் விரிவடையும்; வாசகர்கள், பதிப்பாளர்கள் இருவருமே பலனடைவார்கள்.
ஆனால் தெ.பு.ப.வி.சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக கடந்த இரண்டாண்டுகளாக யாரையுமே சேர்க்கவில்லை என்று அறிகிறேன். புதிய ரத்தம் வந்தாலொழிய பல நல்ல மாறுதல்கள் ஏற்படா.
இந்த வருடம் தெ.பு.ப.வி.சங்கத்தில் சேர்ந்து தீவிர ஈடுபாட்டுடன் உழைக்க விரும்புகிறேன். பார்க்கலாம்...
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
12 hours ago
Few comments.
ReplyDelete1. The reason why Vikatan is able to sell a lot of books is because the readers are acquainted with the topics.... As soon as I see "Lingam" or "katrathum...." or "Thunaieluthu" in the stands, I get an urge to buy that. The reason is simple. I had read many episodes with interest, but missed a few and now I want to read all....
I guess Vikatan rightly (at the correct time) launched into publishing the "thodar kathais" as they obviously sell well. (starting from Vantharkal Vendarkal)
In this regard, Kumudam is way behind. Many of the classic stories, articles in Kumudam are yet to reach a book form. In fact You have brought out one book !!! written in Kumudam reporter.
Madan wrote an interesting series in Kumudam (after he came out of Vikatan) regarding the early history of human race. i am waiting for that to appear in book form
2. About the glossly newsprint, only those in the print line will know that such paper is cheap, but will look costly, will not last long !!!!????. On the other hand, the lay public is bound to choose such papers rather than the good quality paper
3. About the 2 columns. I don't find anything wrong with a book in 2 columns. Many of the books (Bible and dictionary, for example) are in two columns. Almost all the classical textbooks of Medicine (from Gray's Anatomy to Harrison's Medicine) are in 2 columns
These are my opinion.
பத்ரி,
ReplyDeleteஎன்னைப்போல அங்கே கண்காட்சிக்கு வரமுடியாமப் போனவங்களுக்கு நல்ல விவரங்கள் அடங்கிய பதிவு.
நன்றி.
Dear Sir ,
ReplyDeleteYour Comments on Vikatan and Kumudam is true .
This is due to the changing habits of the consumers.
In olden days , people bought books then tear pages of their favourite stories ,bind the book and preserve it . this makes rounds amongst neighbours .some smart people run Lending libraries with these copies .
But time and behaviour has changed ..so even if one subscribes to Vikatan ,they rarely tear pages and bind it ,instead they are now given the option of buying the book as a whole unit.
Iam one amongst them , I read 'manasey relax pls ' and immediately bought this ,with the thought that this one worth purchase .
Same is the case with Ponniyin Selvan etc ..there is always a set of people who wish to collect 'already read ' literature.
This trend will grow and Vikatan will continue to reap only PROFITS.
stopping here
with regards
N.Thirumalai Nambi
பத்ரி,
ReplyDeleteஉண்மையிலேயே நல்ல பதிவு. எனக்கும் கூட இவ்வளவு ஆர்வமாய் புத்தகம் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளோ சௌகர்யங்களோ இல்லை என்றே தோன்றுகிறது. அவரவர் பதிப்பகத்தின் வெளியீடுகள்/ஸ்டாலில் இருக்கும் புத்தகங்கள் குறித்த கையேடு கூட இல்லாதது (கிழக்கு பதிப்பகத்தின் கையேடு நன்றாயிருந்தது.ஆனால் கடைசி அட்டையில் திரைப்பட நடிகரின் படம் ???) ,இன்றைய காலகட்டத்தில் Credit/Debit Card கூட இல்லாதது, சில்லறை பிரச்சனையால் (!!!) புத்தகம் வாங்க இயலாதது, சில புத்தக ஸ்டால்கள் ஏனோ கடனுக்கே என்றிருந்தது போன்ற தோற்றம் (உதா: நீங்கள் சொன்ன குமுதம்..) என எனக்கு தோன்றிய குறைகள் ஏராளம்.
ஆனால் சில ஸ்டால்கள் இது போன்ற குறைகளிலிருந்து விடுபட்டு, வழக்கமான முறையிலிருந்து மாறுபட்டிருந்தது உண்மையிலேயே ஆறுதல்.
குமுதம் கண்காட்சியில் மட்டுமன்றி வார இதழிலிலும் கூட தரம் தாழ்ந்து போய்விட்டதாகவே தோன்றுகிறது. விகடன் ஸ்டாலில் கூட்டம் கடந்த வருடத்தை விட இந்த வருடம் குறைவாகவே எனக்கு தோன்றியது ...
(பி.கு): ஆனாலும் விகடனின் விற்பனை குறித்த உங்கள் பதிவில் ஒரு சக போட்டியாளரின் ஆதங்க பெருமூச்சே தோன்றியது ...Jus' Kidding
-- Vignesh
பத்ரி,
ReplyDeleteபிரபலமாகாத நல்ல புத்தகங்களை தேடி வாங்கலாம் என்ற எண்ணத்தோடு யாராவது புத்தகக் கண்காட்சிக்கு வந்தால் அந்த எண்ணம் நிறைவேற வாய்ப்பே இல்லை.
தள்ளுபடி விற்பனை ஏற்படுத்திய சில்லறை பிரச்சனைகள் மிகவும் எரிச்சல் ஏற்படுத்துபவை.திருப்பதி க்யூ வைப்போல விகடன் தவிர மற்றும் சில கடைகளிலும் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை புறக்கணித்து வெளியே வந்து விட்டேன்.
புத்தகக் கண்காட்சியை காயிதே மில்லத் கல்லூரியிலிருந்து மாற்றும் தருணம் வந்து விட்டது என நினைக்கிறேன்.குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தர தற்போதுள்ள இடத்தில் முடியாது.
கடனட்டை மகத்துவத்தை புறக்கணிப்பவர்கள் வியாபாரத் தத்துவங்களையும் சேர்த்தே புறக்கணிக்கிறார்கள்.புத்தக குவியலின் பிரம்மாண்டத்தை தவிர இந்த புத்தகக் கண்காட்சி தந்த ரசனை அனுபவம் சற்று குறைவாகவேயிருந்தது.
அன்புடன்
ராஜ்குமார்
இனிய பத்ரி,
ReplyDeleteகண்காட்சியில் இருந்த கடைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம் எனத் தோன்றுகிறது.
1. பதிப்பகத்தார்
2. பதிப்பகத்திலிருந்து வாங்கி விற்பனை செய்வோர்
3. குறுந்தகடு, அகராதி, மழலையர் புத்தகங்கள், வகையறாக்களை விற்போர்.
இவற்றில், பதிப்பகத்தார்களில் கஸ்டமர் சர்வீஸ் என்றால் அதில் கிழக்குதான் முன்னணி.
அறிந்தோர்கள் மட்டுமன்றி யார் வந்தாலுமே கிழக்கார்கள் சிநேகமாகவே பேசினீர்கள்.
சில பதிப்பகத்தார் மிகவும் மெத்தனமாகவே இருந்தார்கள்.
1அ.
தியோடர் பாஸ்கரனின் புத்தகத்தை வாங்கும்போது, அவர் எதேச்சையாக கடைக்கு வர அவரிடம் கையெழுத்தெல்லாம் வாங்கியாகிவிட்டது. பணத்திற்காகக் கடனட்டையை நீட்டினால், 'சாரி
சார்'
1ஆ.
நெஞ்சுக்கு நீதி நான்கு பாகத்தையும் எடுத்து வந்து கடனட்டையை நீட்டினால், 'கேஷ்தாங்க - கிரெடிட் கார்டு கெடையாது'
ஆட்டோ செலவு போக மீதி எல்லாவற்றையும் எடுத்துப்போட்டால், மூன்று பாகங்களுக்கான பணமே தேறியது. முதலாம் பாகத்துக்கு (நீ)நிதி கிடைக்கவில்லை.
'பாத்தீங்களா கிரெடிட் கார்டு ஃபெசிலிட்டி வச்சிருந்தீங்கன்னா, ஒரு புக்கு கூடுதலா வித்திருக்குமில்ல' எனது கமெண்டை கல்லாவிலிருந்தவர் ரசிக்கவில்லை.
2.
ஆனால், வாங்கி விற்போர் சுறுசுறுப்பு.
எனி இண்டியனில், வாலியின் 'நானும் இந்த நூற்றாண்டும்' வாங்கிவிட்டு, 'எம்.எஸ்.வி. பயோக்ராஃபி கெடைக்குமா பிரசன்னா' என்றேன்.
'ஒரு சுத்து போயிட்டு வாங்க பாய், கெடைக்கும்'
ஒரு காபி அருந்தும் நேரத்தில் எங்கிருந்தோ புத்தகத்தை வாங்கி வந்து மனிதர் புத்தகத்திற்கு பில்போட்டு கைகளில் தந்துவிட்டார்.
3.
குறுந்தகடு, மழலையர் புத்தகக் கடைகளில் நல்ல கூட்டம்.
டொக்கு இடத்தில் இருந்த ஒரு ஸ்டாலில், தமிழே பேசாமல் ஆங்கிலத்திலேயே அந்த அம்மையார் சுறுசுறுப்பாக வியாபாரம் செய்தார். சில குறுந்தகடுகள் வாங்கினேன்.
(நிறுவனம் பெங்களூரைச் சேர்ந்ததென நினைக்கிறேன்)
அவர்களிடம் கடனட்டை வசதி இருந்தது.
அன்புடன்
ஆசாத்
பத்ரி,
ReplyDeleteதங்களுடைய விரிவான பதிவிற்கு நன்றி!
விகடன் ஸ்டாலில் நிச்சயம் முதல் ஓரிரு நாள்கள் நடக்கும் வியாபாரத்தைப் பொறுத்து, அவர்கள் ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்திருக்கவேண்டும் அல்லது கடையில் நெரிசல் இல்லாமலிருக்க ஏற்பாடு செய்திருக்கவேண்டும். நான் விகடன் ஸ்டாலில் , நண்பர் ஒருவருக்காக புத்தகம் வாங்கச் சென்று புத்தகத்தை வாங்கி வெளியில் வருவதற்குள் பெரும்பாடாகி விட்டது.
தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளபடி சில விற்பனையாளர்கள், சில்லரை இல்லாத காரணத்தால் புத்தகங்களை விற்காது வாடிக்கையாளரை அனுப்பியது மிகவும் அநியாயமான செயல். (நான் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது, போதிய அளவு சில்லரை நாணயங்களையும் சில்லரை நோட்டுக்களையும் சேகரித்துக் கொண்டு சென்றேன். புத்தகங்கள் வாங்கச் சென்ற வாடிக்கையாளரே தகுந்த ஏற்பாட்டுடன் செல்லும் போது புத்தக விற்பனையாளர்கள் ஓரளவாவது சில்லரை வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறில்லை என நினைக்கிறேன்)
கண்காட்சி அரங்கில் குடிதண்ணீர் வசதி போதுமான இடங்களில் வைக்கப்படவில்லை. தண்ணீர் கிடைக்கும் இடத்தைத் தேடி, குடிக்க மிகப் பிரயத்தனப் படவேண்டியிருந்தது.
நான் ஒருநாள் முழுவதும் கண்காட்சிக்குள்ளேயே இருந்தேன். வாங்கிய புத்தகங்களை மட்டும் கண்காட்சி அரங்கிற்குள் (அதற்கென்றே தனியாக ஒரு அறை) வைத்து தேவைப்படும் போது எடுத்துக் கொள்ள BAPASI ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். புத்தகங்களை வாங்கியது மகிழ்ச்சியாக இருந்தாலும் எல்லாப் புத்தகங்களையும் எல்லா ஸ்டால்களுக்கும் தூக்கி சுமந்தது என்னைச் மிகவும் சோர்வடையச் செய்தது.
இனி புத்தகக் கண்காட்சி வேறு இடத்தில் நடக்கும் போது நிறையக் குறைகள் களையப்படும் என எதிர்பார்க்கலாம்.
அன்பின் முனைவர் பத்ரி,
ReplyDeleteஎனக்கு சென்னை புத்தகக்கண்காட்சி புதிது. (சென்னைக்கு வந்து ஒருவருடமே ஆவதால்).
புதுக்கோட்டை மற்றும் காரைக்குடியில் நடந்த புத்தகக் கண்காட்சிகளுக்கு மட்டுமே போனதுண்டு.
சென்னைப் புத்தகக் கண்காட்சியின் நிறைகள் என்று பார்த்தால், அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்தன. (எக்கச்சக்க ஸ்டால்கள்). முழுவதையும் பார்க்க ஒருநாள் தேவைப்படும். சீரியசான வாசகருக்கு அதற்கும் மேற்படலாம்.
ஆனால் ஸ்டால்களில் ஆலோசனை சொன்னவர்கள் மிகச் சிலரே. அதில் தங்களது பதிப்பகம் உள்ளிட்ட சிலர் மிகவும் உதவினர். ஒரு புத்தகம் எடுக்கையில் அது சம்பந்தப்பட்ட வேறு புத்தகங்களைக் காட்டி உதவினர்.
சாப்ட்வியூவில் கடனட்டை எந்திரம் மக்கர் செய்ய, அங்கே பணத்தைக் கொடுத்துவிட்டு கடனட்டை இல்லாத எந்த ஒரு இடத்தையும் என்னால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.
ஆனால் ஒரு சில பதிப்பகத்தார் வேறெங்கோ சென்று கடனட்டையை உபயோகித்து ரசீதைக் கொடுத்தனர் (இவ்வாறு கடனட்டையைக் கொடுப்பது பாதுகாப்பானதா).. வேறு வழியில்லாமல் நானும் அதையே செய்ய நேர்ந்தது.
காமராஜர் நூற்றாண்டு புத்தகத்தை வைத்திருந்த யாரிடமும் கடனட்டை வசதியில்லை. அல்லது 1000ரூபாய்க்கு மேல்தான் என்றார்கள். கடைசி வரை வாங்க இயலவில்லை.
முன்னொருவர் சொன்னதுபோல அனைத்து புத்தகங்களையும் கடைசிவரை சுமந்தது செல்வது, கையில் பை இல்லாமல் வந்தததற்கு தண்டனையோ என்று தோண்றியது.
கிழக்கு நண்பர்கள் புத்தகத்தை அடுக்கி வைப்பதிலும் அவற்றை ஆலோசிப்பதிலும் அக்கரை காட்டினர். புத்தகத்தேர்வு கட்டணம் செலுத்துதல் என அணைத்தும் super fast. பணிகளுக்கிடையேயும் நண்பர்களை நீங்கள் கண்டு கொண்டீர்கள். வியப்புதான்.
அடுத்த ஆண்டு மேலும் பல புத்தகங்களுடன் கிழக்கை அலங்கரிப்பீர்கள் என நம்புகிறோம்.
நன்றி.