Friday, January 27, 2006

கொல்காதா முதல் தில்லி வரை

கொல்காதாவிலிருந்து நேற்று கிளம்பி தில்லி வந்தோம். தில்லியில் பிரகதி மைதானில் உலகப் புத்தகக் கண்காட்சி, கிட்டத்தட்ட 1,000 பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று ஆரம்பம்.

தமிழிலிருந்து ஐந்துபேர் கலந்துகொள்கிறார்கள். காலச்சுவடு, சுரா புக்ஸ், பாவை பதிப்பகம், அமுதம் (தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பகங்கள் சங்கம்??), சாந்தா பதிப்பகம் ஆகியவை. கிழக்கு பதிப்பகம் போன்ற பலரது புத்தகங்கள் சில காலச்சுவடு கடையில் உள்ளன. சுரா புக்ஸ் ஸ்டாலில் அவர்களது தமிழ், மலையாளம், ஆங்கிலப் புத்தகங்கள் உள்ளன.

மொத்தமாக எட்டு அரங்குகளில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. அரங்கு எண் 1 ஆங்கிலப் புத்தக விற்பனையாளர்கள், சமூகம், தொழில்நுட்பம் போன்ற சில குறிப்பிட்ட துறைகளில் ஆங்கிலத்தில் பதிப்பிக்கும் பதிப்பாளர்கள். அரங்கு 2, 3, 4 மூன்றிலும் ஹிந்தி பதிப்பாளர்கள் மட்டும். கிட்டத்தட்ட 300 ஹிந்தி பதிப்பாளர்கள் வந்துள்ளனர். அரங்கு 5-ல் பிற மொழி - சமஸ்கிருதம், மலையாளம், தமிழ், தெலுங்கு, உருது, குஜராத்தி ஆகியோர் உள்ளனர். அரங்கு எண் 6-ல் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டும்!

அரங்கு எண் 14-ல் அறிவியல், தொழில்நுட்பப் பதிப்பகங்கள், வெளிநாட்டுப் பதிப்பகங்கள். அரங்கு எண் 18-ல் இந்தியாவிலிருந்து ஆங்கிலத்தில் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் என்று வகை செய்யப்பட்டுள்ளன.

இன்று அரங்குகள் 1 முதல் 5 வரை பார்த்தோம். அதற்குள் கால்கள் கெஞ்சின. மீதி நாளைதான். ஆங்கிலம் (அரங்கு 18) மிகப்பெரியதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இங்கு பார்த்தவை பற்றி விரிவாக எழுத நிறைய நேரம் செலவாகும். அவை பிறகு.

3 comments:

  1. Delhi always feels like a happening city. பிரகதி மைதானில் மாதத்துக்கு ஒரு திருவிழா. உலகப் பொருட்காட்சி, சுற்றுலாம் வணிக விழாக்கள், கண்காட்சிகள் என்று எப்போதுமே கன்ஸ்யூமரைக் கவர்ந்திழுக்கும். புகைப்படங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்

    ReplyDelete
  2. புத்தக கண்காட்சிகள் - சென்னை, அப்புறம் டெல்லி...

    கொஞ்சம் பொறாமையாகத் தான் இருக்கிறது. நாம் இந்தியாவில் இல்லையே என்று.

    இங்கு (துபாயில்) வியாபார ரீதியாக எத்தனை எத்தனையோ exhibitions - வியாபாரங்கள் நடைபெற்றாலும், ஏனோ புத்தக கண்காட்சி மட்டும் நடப்பது மாதிரி தெரியவில்லை. அதற்கு மாறாக மற்ற எல்லாவற்றிலும் துபாயை ஒப்பிடும் பொழுது பின் தங்கி இருக்கும் ஷார்ஜா, புத்தக கண்காட்சியை மட்டும் ஒழுங்காக வருடாவருடம் நடத்தி வருகிறது. இந்த வருடம் நான் சென்றிருந்தேன் - டிசம்பர் 6 முதல் 16 வரை நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு.

    பெரிய பெரிய குளிரூட்டப்பட்ட அரங்குகளில் நிறுவப்பட்ட கடைகள் - பல நாடுகளிலிருந்தும். எங்கு தேடிப்பார்த்தும் ஒரு தமிழ்புத்தக கடை கூட கிடைக்கவில்லை. கடை போட்டிருந்த பலர் தமிழில் சரளமாக பேசினார்கள். ஆனால் தமிழ் புத்தகங்கள் ஒன்று கூட இல்லை. இறுதியில், ஒரு மலையாள புத்தகக் கடையில் ஒரே ஒரு மேஜையில் கொஞ்சம் அடுக்கி வைத்திருந்தார்கள். அதுவும் பெரும்பாலும் பக்தி மார்க்கம் மட்டும் தான். மீதி இருந்த கடைகளில் ஒரு 25 சதவிகிதம் வரை ஆங்கிலப் புத்தகங்கள். மற்றவை பெரும்பாலும் அரபிப் புத்தகங்கள். படிக்க முடியாவிட்டாலும், சில புத்தகங்களை எடுத்து தடவிப் பார்த்து விட்டு வைத்து விட வேண்டியதாயிற்று. அச்சு நேர்த்தியில் சிறந்து விளங்கியது மட்டும் தான் பிடிபட்டது.

    ஆங்கிலப் புத்தகங்களில் பெரும்பாலானவை சிறுவர்க்கானவை. மற்றவை பெண்களுக்கானவை. மீதமிருக்கும் புத்தகங்களில் பாதி கட்டிடக் கலை, உள் அலங்காரம், சமையல் போன்றவை. கொஞ்சம் புத்தகங்கள் வரலாற்றைப் பற்றி பேசின. அவ்வளவே தான் - இலக்கியம் என்று பார்த்தால், classic என்று சொல்லப்படும் பழங்கால இலக்கிய புத்தகங்கள் மட்டும் தானிருந்தன.

    நவீனகால இலக்கியம், அரசியல், திறனாய்வு புத்தகங்கள் என்று எதுவுமே இல்லை. ஒரு கடையில் தஸ்த்தோவெஸ்கி புத்தகங்கள் இருக்கிறதா என்று கேட்ட பொழுது, ரஷ்ய எழுத்தாளர்களின் புத்தகங்களை பெரும்பாலும் வைத்திருப்பதில்லை என்று கூறிவிட்டார். தேடிதேடி அலுத்து இறுதியில் Crime and Punishment என்ற புத்தகம் மட்டுமே கிடைத்தது.

    வழக்கமாக புத்தகங்கள் வாங்கும் கடைகளில் மாதம் ஒரு முறையாவது போய் என்ன புதிதாக வந்திருக்கிறது என்று பார்த்து -தேர்ந்தெடுத்து புத்தகங்கள் வாங்கும் கடை ஒன்றில் அரசியல் விமர்சனங்கள் பற்றிய புத்தகங்கள் எதுவும் இருக்கிறதா என்று கேட்ட பொழுது அவர் சொன்னார் - அந்த மாதிரியான புத்தகங்களை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது - எங்கு தேடினாலும் கிடைக்காது என்றார்.

    இந்தியாவில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளைப் பற்றி கேட்கும் பொழுதாகட்டும் அல்லது வரிசையில் நின்று உள் நுழைய மக்கள் காத்திருக்கும் அழகைக் காணும் போதாகட்டும் - சற்றுப் பொறாமையாக இருக்கத் தான் செய்கிறது.

    (நண்பன்)

    ReplyDelete
  3. பத்ரி, பதிவிற்கு நன்றி! குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கென்றே தனி அரங்கா! அற்புதம்.

    ReplyDelete