Tuesday, March 27, 2007

சில்லறை வர்த்தகம்

ரிலையன்ஸ் ஃப்ரெஷ் என்ற பெயரில் காய்கறிகள், மளிகை சாமான்கள் விற்பனை செய்யும் சங்கிலிக் கடைகளை சென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் தொடங்கியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரிடையே கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் ஆரம்பம் முதற்கொண்டே ரிலையன்ஸை எதிர்த்தார். அடுத்து அஇஅதிமுக, விஜயகாந்தின் தேமுதிக ஆகிய கட்சிகளும் எதிர்த்து அறிக்கை விடுத்துள்ளன. திமுக இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் சொல்லவில்லை. இடதுசாரிகள், புரட்சிகரக் கூட்டமைப்புகள், கோயம்பேடு வணிகர் சங்கங்கள், சில்லறை வணிகர்கள் கூட்டமைப்புகள் ஆகியவை ரிலையன்ஸும் பிற பெரு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் நுழைவதை எதிர்க்கின்றன.

சில உண்ணாவிரதங்கள், நாள் முழுவதுமான கடையடைப்புகள் இதுவரை நடந்துள்ளன.

-*-

ரிலையன்ஸ் நிறுவனம், 'ரிலையன்ஸ் ஃபிரெஷ்' என்ற பெயரில் அக்டோபர் 2006-ல், ஹைதராபாதில் 11 கடைகளுடன் முதலில் ஆரம்பித்தனர். ஆனால் இதற்குச் சில மாதங்கள் முன்னதாகவே வேறு ரூபத்தில் வெள்ளோட்டம் விட்டனர். மஹாராஷ்டிரத்தில் சஹகாரி பண்டார் என்ற பெயரில் இயங்கி வந்த கூட்டுறவு விற்பனைக் கடைகள் பொலிவிழந்து திண்டாடிக் கொண்டிருந்தன. 1968-ல் ஆரம்பித்து நடந்துகொண்டிருந்த சுமார் 23 சில்லறை விற்பனைக் கடைகளை, மே 2006 முதல் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் நடத்த ஆரம்பித்தது. முழுமையாக வாங்கிவிடவில்லை; ஆனால் இந்தக் கடைகளுக்கான பொருள் கொள்முதல், விற்பனை ஆகியவற்றை ரிலையன்ஸ் கவனித்துக் கொள்கிறது.

இதற்கு அடுத்துதான் ஹைதராபாதில் சொந்தமாகக் கடைகள் தோன்றின. பின் நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொண்டு கடைகளை ஆரம்பித்துள்ளனர். டிசம்பர் 2006-ல், ரிலையன்ஸ் ரீடெய்ல், குஜராத்தின் ஆதானி ரீடெய்ல் என்ற நிறுவனத்தை சுமார் ரூ. 100 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அத்துடன் குஜராத் முழுவதுமாக 54 சில்லறை விற்பனைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை ரிலையன்ஸ் ரீடெய்லுக்குக் கிடைத்தன.

சில்லறை விற்பனை இந்தியாவில் வெகு காலமாகச் சின்னச் சின்ன நிறுவனங்களாகவே இருந்துள்ளது. தனித்தனிக் கடைகள் (Mom & Pop stores) - அண்ணாச்சி கடை, நாடார் கடை என்று தமிழகத்தில் அறியப்படுபவை - தெருவில் பல இடங்களில் உள்ளன. இங்கு பெரும்பாலும் மளிகை சாமான்கள் (அரிசி, பருப்பு, எண்ணெய், வெல்லம், வற்றல் மிளகாய், சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்...), பிஸ்கட், பிரெட் முதலான பல FMCG உணவுகள் கிடைக்கின்றன. காய்கறிகள், பழங்கள் ஆகியவை கொத்தவால் சாவடி, கோயம்பேடு மார்க்கெட் போன்ற இடங்களில் மொத்த விற்பனைக்கும், தெருவில் பல இடங்களில் சில்லறை விற்பனைக்கும் கிடைக்கின்றன.

ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாகவே இந்தத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குளிர்சாதன வசதி கொண்ட, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் என்ற பெயர் கொண்ட கடைகள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தோன்ற ஆரம்பித்தன. பழைய தாளில் மடித்துக்கொடுக்கப்பட்ட சீனியும் ரவாவும் பாலிதீன் பாக்கெட்களில் அடைக்கப்பட்டுக் கிடைத்தன. வாசலில் நின்றுகொண்டு கேட்டுவாங்கி அக்கவுண்ட் வைத்ததுபோய் உள்ளே நுழைந்து சிறு பிளாஸ்டிக் கூடையில் வேண்டிய சாமான்களை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து, பில் போட்டு வாங்கிச் செல்வது நடந்துகொண்டுதான் இருந்தது.

அடுத்து ஓரளவுக்குப் பெரிய நிறுவனங்கள் 1990களில் இந்தத் துறையில் நுழைந்தன. நீல்கிரீஸ், சுபிக்ஷா, புட்வேர்ல்ட் (ஸ்பென்சர்ஸ் டெய்லி), திரிநேத்ரா போன்ற பல தொடர் சங்கிலிக் கடைகள் மளிகை சாமான், காய்கறி, மருந்து ஆகியவற்றை சில்லறை விற்பனை செய்துவருகின்றன.

-*-

ரிலையன்ஸுக்கு என்று ஸ்பெஷலாக யாரும் தனி அனுமதி கொடுத்துவிடவில்லை. ஏற்கெனவே பல நிறுவனங்கள் செய்துவரும் ஆர்கனைஸ்ட் ரீடெய்லைத்தான் அவர்கள் செய்ய வருகிறார்கள். ஆனால் பிரம்மாண்டமாகச் செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். அதையும் கடந்த இரண்டு வருடங்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று மறைமுகமாக எதையும் செய்துவிடவில்லை. ரிலையன்ஸ் மொபைல் துறையில் நுழைந்ததிலாவது சில 'தில்லுமுல்லுகள்' இருந்தன. ஆனால் ரீடெய்ல் துறையில் நியாயமாக, நேரடியாகத்தான் நுழைந்துள்ளனர்.

ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதைத் தடை செய்வது சாத்தியமில்லாதது. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் நடக்கிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் துறைக்கு வந்தால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்? நிச்சயமாக வாடிக்கையாளர்களுக்கு லாபம்தான். அதே நேரம் பல சில்லறை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மைதான்.

ரிலையன்ஸ் ரீடெய்லை எதிர்ப்பவர்கள் வால்மார்ட், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு ஆகியவற்றையும் சேர்த்துக் குழப்புகிறார்கள். இவற்றைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.

-*-

ரிலையன்ஸின் சில்லறை வியாபாரத்தை எதிர்ப்பவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: "இன்று வாடிக்கையாளருக்கு விலை குறைவாகக் கிடைப்பதாகத் தோன்றினாலும், நாளைக்கு விலை ஏறும். சிறு வியாபாரிகள் நசிந்தபிறகு, வியாபாரம் அனைத்துமே நான்கைந்து பெருமுதலைகளிடம் மட்டுமே இருக்கும். அப்பொழுது அவர்கள் வைத்ததுதான் சட்டம். விவசாயிகளுக்கும் சரியாகப் பணம் போகாது; நுகர்வோருக்கும் விலை அதிகமாக இருக்கும்."

இது ஏற்றுக்கொள்ளமுடியாத வாதம். இந்த ஒலிகோபொலி (Oligopoly) என்பது சரியாக இயங்கும் சந்தையில் சாத்தியமில்லாதது. இந்தியச் சந்தை விரிவாக விரிவாக, இதுபோன்ற பிரச்னைகள் குறைந்துகொண்டே வரும். இப்பொழுதேகூட எடுத்துக்கொள்ளுங்கள்... எந்தத் துறையில் இன்று இந்தியாவில் இதுபோன்ற ஒலிகோபொலி நிலவி வருகிறது?

கஷ்டப்பட்டுத் தேடினாலும் சிமெண்டைத் தவிர வேறு எந்த உதாரணமும் கிடைக்காது. பட்ஜெட்டுக்குப் பிறகு சிமெண்ட் நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து விலையை உயர்த்தின. அதற்கு அவர்கள் காட்டும் காரணமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. சிமெண்ட், சர்க்கரை போன்றவை சுழற்சிப் பொருள்கள். தொடர்ந்து சில வருடங்கள் நல்ல லாபம் சம்பாதிக்கும். அப்பொழுது உற்பத்தியைக் கூட்டுவார்கள். அதனால் சரக்கு ஏராளமாக இருக்கும். அதனால் விலை குறையத் தொடங்கும். அதைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் நஷ்டத்துக்குப் போகும். பிறகு இதுவே மீண்டும் தொடரும்.

இப்பொழுது சர்க்கரைக்கு இறங்குமுகம். சிமெண்டுக்கு ஏறுமுகம். கட்டுமானத்துறை எக்கச்சக்கமாக வளர்ச்சி காணும் நேரம் இது. சிமெண்ட் நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடமாகத்தான் லாபம் காணும் நிலையில் உள்ளனர்.

பிற எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் போட்டி என்பது விலையைக் குறைத்துக்கொண்டேதான் வந்துள்ளது. தொலைத்தொடர்பு, கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் என்று எல்லாமே இந்த வகையைச் சேர்ந்தவை. இந்தத் துறைகளில் நான்கு, ஐந்து பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் உள்ளன.

மேலும் இதுபோன்ற தொழில்துறைகள் அல்லாத விளைபொருள் விற்பனையில் ஒலிகோபொலி செயல்படவே முடியாது. ஏனெனில் இங்கு தொழிலில் நுழைவதற்கான தடுப்பு (entry barrier) பெரிய அளவில் கிடையாது.

மேலும் எதிர்ப்பாளர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: "சிறு சில்லறை வியாபாரிகளது தொழில் நசித்துவிடும். அவர்கள் தெருவுக்கு வந்துவிடுவார்கள். இதை நம்பி வேலை செய்யும் பல லட்சம் (அல்லது கோடி) மக்கள் வாழ்வு நாசமாகிவிடும்."

இதை ஓரளவுக்குத்தான் ஏற்றுக்கொள்ள முடியும். பவர்லூம் வந்தவுடன் கையால் நூல் நூற்பவர்கள் செய்துவந்த தொழில் நசிவுற்றது. பல குடிசைத்தொழில்கள் இயந்திரமயமாக்கலின்போது அடிவாங்கின. ஆனால் இயந்திரமயமாக்கல் அவசியம் என்பதை மார்க்சிஸ்டுகளும்கூட ஏற்றுக்கொள்கின்றனர். (அதன்வழியேதான் புத்தொளிபெற்ற தொழிலாளர் வர்க்கம் உருவாகி, நாளை ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்கள்.)

முதல் கேள்வி - விவசாயிகள் பாதிக்கப்படுவார்களா? இல்லை என்றே தோன்றுகிறது. விவசாயத்தில் நிறைய முதலீடு வேண்டும். விளைபொருள்களைச் சேர்த்துவைக்க குளிர்பதனச் சாலைகள் வேண்டும். விவசாயிக்கு, விற்ற பொருள்களுக்கு உடனடியாகப் பணம் வேண்டும். இதெல்லாம் ரிலையன்ஸ் போன்றவர்கள் சில்லறை வியாபாரத்தில் வருவதால் ஏற்படும் என்று தோன்றுகிறது. ஏற்கெனவே ஐ.டி.சி போன்ற நிறுவனங்கள் பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் ஈ-சவுபால் போன்ற வழியாக விவசாயிகளுக்கு நல்ல வருமானம் வருகிறது.

பொருள்களை அரசிடம் விற்கும்போதுதான் எப்பொழுது பணம் கைக்கு வரும் என்று திண்டாடவேண்டியுள்ளது. தமிழகத்தில் அரசுக்கு நெல் விற்கும் விவசாயிகளிடம் கேட்டு இதனை உறுதி செய்துகொள்ளலாம். அதேபோல தமிழக அரசு பட்ஜெட்டில் குளிர்பதனக் கிடங்குகளுக்கு என்று பெயரளவில் ஏதோ பணத்தைக் காட்டுகிறதேதவிர, நிஜத்தில் நடப்பது ஒன்றும் கிடையாது.

ஏற்கெனவே சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பலர் தொழிலில் நசிக்கக்கூடும். ஒரு ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடைக்கு அருகில் இருக்கும் பத்து பெட்டிக்கடைகள் அடிவாங்கலாம். இதை எதிர்கொள்வது எளிதல்ல. பெட்டிக்கடைகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பெரிய நிறுவனத்தின் ஃபிராஞ்சைஸி ஆகலாம்.

சில துறைகளில் மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அந்த மாற்றங்களை எதிர்ப்பதைவிட மாற்றங்களுக்குத் தக்கவாறு மாறிக்கொள்வதுதான் தேவை.

வாடிக்கையாளரைப் பொருத்தவரை பிரச்னைகள் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். பெரு நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் விலைகளில் ஏற்றம் இருக்காது. சேவையில் சிறப்பான, விரும்பத்தக்க மாற்றம் இருக்கும்.

-*-

அந்நிய முதலீடு தேவையா, கூடாதா? சில்லறை விற்பனையிலோ, வேறு எந்தத் துறையிலோ அந்நிய முதலீட்டை எதிர்க்கக்கூடாது என்பதே என் கருத்து. ஆனால் தேவையான safeguards இருக்குமாறு செய்யவேண்டும். வால்மார்ட் அனைவரும் வெறுக்கும் ஒரு நிறுவனமாக இன்று உள்ளது! அமெரிக்காவிலேயே பல செனட்டர்கள் வால்மார்ட்டின் கொள்கைகளை, செயல்பாட்டை எதிர்க்கிறார்கள். அமெரிக்காவில் வால்மார்ட் அடிமட்ட ஊதியம் கொடுக்கிறார்கள்; அதிக நேரம் வேலை வாங்குகிறார்கள்; பொருள்களைக் கொள்முதல் செய்யும் நாடுகளில் வேலை செய்யும் ஊழியர்கள் மிகக் கொடுமையான நிலையில் நடத்தப்படுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

வால்மார்ட் இந்தியாவுக்கு வந்தால் அதே முறையைக் கையாள்வார்களா இல்லையா என்பதை அரசுதான் எதிர்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்ச ஊதியம், சரியான வேலை நேரம், வேலைக்கேற்ற வசதிகள் ஆகியவற்றைச் செய்துதருமாறு வற்புறுத்தவும், தவறிழைக்கும் நிறுவனங்களைத் தண்டிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு.

ஆனால் அதற்காக வளரும் துறை ஒன்றில் அந்நிய முதலீடு தேவையில்லை என்று சொல்லக்கூடாது.

10 comments:

  1. Very nice article. Have any one analysed what has happened afer Pepsi food enetered in Punajb? Farmers benifited or not? I live in dubai, here every thing is imported. I some time wonder how some items like sugar, oil some veg & fruits are cheaper compared to Chennai/Mumbai. I think there is lot of scope for supply chain management in the agricultural field.

    ReplyDelete
  2. //அமெரிக்காவிலேயே பல செனட்டர்கள் வால்மார்ட்டின் கொள்கைகளை, செயல்பாட்டை எதிர்க்கிறார்கள். அமெரிக்காவில் வால்மார்ட் அடிமட்ட ஊதியம் கொடுக்கிறார்கள்; அதிக நேரம் வேலை வாங்குகிறார்கள்; பொருள்களைக் கொள்முதல் செய்யும் நாடுகளில் வேலை செய்யும் ஊழியர்கள் மிகக் கொடுமையான நிலையில் நடத்தப்படுகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.//

    வால்மார்ட்டில் திறமையுள்ள கடைநிலை பணியாளர்கள் கிடையாது. காரணம் குறைந்த ஊதியம். Target, Smith மற்றும் Albertson கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கிடைக்கும் அனுபவம் வால்மார்டில் கிடைப்பது இல்லை. இதற்கு காரணம் தகுதி குறைந்த பணியாளர்களும் தரம் குறைந்த பொருட்களும் தான்.

    வால்மாட்டின் "WE SELL FOR LESS" என்ற கோட்பாடு வாடிக்கையாளருக்கு தெரிந்தது. ஆனால் வால்மாட்டின் தாரக மந்திரம் "WE BUY FOR VERY VERY LESS and SELL FOR LESS" வால்மார்டில் விற்க்கப்படும் 90% அதிகமான பெருட்கள் தரம் குறைந்தவையே.

    வட இந்திய சேட்டுக்களிடம் ஒரு சொலவாடை உண்டு "கமாய் பேச்னேமே நகீ, கரிதினேமே ஹே" (லாபம் பொருட்களை விற்பதில் கிடையாது. குறைந்தவிலையில் வாங்குவதிலே இருக்கின்றது).

    வால்மார்ட் இந்தியாவந்தால் சில்லரை வணிகர் மட்டும்மின்றி மூலப் பொருட்கள் தயாரிப்பவனும், விவசாயிகளும் காலப்போக்கில் நசிவடைவது உறுதி.

    வால்மார்ட் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செலவை குறைப்பதற்கு சில நேரங்கள் உதவுவது உண்டு. இதை காரணம் காட்டி வால்மார்ட்டை இந்தியாவில் நுழையவிட்டால் அது மாற்றான் பெற்ற குழைந்தையை வாங்கிக் கொண்டு நமது விரைகளை விற்ப்பதர்க்கு சமம்.

    ரிலைன்ஸ் நிறுவனம் ஒரு பெரிய சேட்டான் கடையே. ரிலைன்ஸின் உள்ளர்ந்த கோட்பாடும் "கமாய் பேச்னேமே நகீ, கரிதினேமே ஹே" என்பதாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு! நல்ல ஆய்வும் கூட!

    //சில துறைகளில் மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். அந்த மாற்றங்களை எதிர்ப்பதைவிட மாற்றங்களுக்குத் தக்கவாறு மாறிக்கொள்வதுதான் தேவை.//

    நீங்க சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக தான் இருக்கிறது!

    //பெரு நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் விலைகளில் ஏற்றம் இருக்காது. சேவையில் சிறப்பான, விரும்பத்தக்க மாற்றம் இருக்கும்.//

    மிக சரியான வாதம்! எனக்கும் அப்படித்தான் தோண்றுகிறது!

    ReplyDelete
  4. ஆமாம் பத்ரி,
    இந்த வளர்சியை தடுக்கமுடியாது/கூடாது.
    ஆனால் வெளிக்கடையில் விற்கும் பழங்கள்/காய்கறிகள்,ரிலையன்ஸ் கடையில் சுமார் 40% குறைவாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.இதனால் பல சிறு தொழிலாளிகள் பாதிக்கப்படுவது உண்மையே,அதற்கு மாற்றாக நீங்கள் சொன்னமாதிரி பிரென்சாய்ஸ் செய்து அவர்கள் தொழிலை மாற்றிக்கொள்ளலாம்.
    வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரி தான் வியாபாரம் செய்வேன் என்றால் நஷ்டம் தான் மிஞ்சும்.வேதனை அவர்களுக்கு தான்.காலத்துக்கு தகுந்த மாதிரி மாற வேண்டியது காலத்தின் கட்டளை.
    இதில் மிகப்பெரிய பலன் வாடிக்கையாளர்களுக்கே போய்சேருகிறது.
    பிளாகர் சொதப்புகிறது-- வடுவூர் குமார்.

    ReplyDelete
  5. நுகர் வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவதால் போட்டியாளர்களுக்கு இழப்பு ஏற்படும், அதனால் அதை தடுக்க வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ள முடியாததுதான். ஆனாலும் 'மால்' கலாசாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் உண்மையானவையே. விவசாயம், சேமிப்புக்கிடங்குகள் ஆகியவற்றில் முதலீடு செய்யாமல் நுகர் வணிகம் மட்டும் செய்கிறேன் என்று (மேலே உள்ளவற்றை outsource செய்துவிட்டு) வரும் நிறுவனங்களை தடுத்துநிறுத்துவதே நல்லது.

    -பாலாஜி.

    ReplyDelete
  6. badri,
    what is the condition of labourers in our tea estates run by tata,birla,lever group etc..?

    (oru paanai sotruku oru soru padham.)

    ReplyDelete
  7. //வால்மார்ட்டில் திறமையுள்ள கடைநிலை பணியாளர்கள் கிடையாது. காரணம் குறைந்த ஊதியம். Target, Smith மற்றும் Albertson கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கிடைக்கும் அனுபவம் வால்மார்டில் கிடைப்பது இல்லை. //

    I agree with this statement. The treatment to their employees are getting noticed by various class action suits. Walmart stores no longer attract compared to taregt. Walmart's original strategy was to make "money" on volume. Currently it's growth is flat and they are changing for better. Now intend to sell "better merchandise" like "target stores " targetting class customers.

    Actually their move to India china etc., are to satisfy the share holders.
    However that is NOT an excuse for Indian market. Their entry will give an edge to our agriculture. There is not enough capital investment in ths area. Big companies will invest more in agri related food processing industries. Walamrt/ Reliance can think and act better in terms of selling these goods internationally also.
    thyagarajan

    ReplyDelete
  8. நல்ல அலசல் எனக்குள் எழந்த கேள்விகளுக்கு பதிலாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  9. இது பற்றி சில மாதங்களுக்கு முன்னர் நான் எழுதியது

    http://bruno.penandscale.com/2006/11/wal-mart-enters-india.html

    ReplyDelete
  10. நல்ல அலசல் பத்ரி. சில்லறை வியாபாரிகள் சிலரது பிழைப்பு போகுமேயென்று கவலை கொள்பவர்கள் யாரும் புதிய கடைகளில் நிறைய பேருக்கு வேலை கிடைக்குமேயென்று யோசிப்பதேயில்லை. இந்த முறையில் உற்பத்தியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நிச்சயம் நல்ல லாபமுண்டு. நட்டமடையப்போகும் இடைத்தரகர்களும் சில்லறை வியாபாரிகளும் நீங்கள் சொல்வது போல் மாற்றத்துக்கு தக்கபடி மாறுவதுதான் சரியான தீர்வாக இருக்கும்.

    ReplyDelete