Saturday, March 31, 2007

உணவு, விவசாயம், நெருக்கடி - 3

சென்ற பதிவின் தொடர்ச்சி

(7) தண்ணீர்

இந்தியாவில் இருக்கும் நீர்வளங்களைப் பராமரிக்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இந்த நீர்வளங்களை விவசாயம், குடிநீர் மற்றும் வீட்டுத் தேவைகள், மின் உற்பத்தி ஆகியவற்றுக்குப் பயன்படுத்துவது அரசின் கடமை. தொடக்கத்தில் மின் உற்பத்திக்காகவும் பாசனத்துக்காகவும் பெரும் அணைகள் கட்டப்பட்டன. பெரும் அணைகள் நல்லதா கெட்டதா என்ற விவாதம் தொடர்கிறது. நதிகள் திசை திருப்பப்பட்டன. இதனால் நீர்வளம் இல்லாத பகுதிகளுக்கு நீர் சென்றாலும் நாளடைவில் ஒவ்வொரு பகுதி மக்களும் அதிகமாக நீரை எதிர்பார்க்க, மாநிலங்களுக்கிடையே, ஒரே மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கிடையே என்று பிரச்னை நிலவுகிறது.

தண்ணீரை யாருமே கவனமாகச் செலவழிக்காததால் இன்று விவசாயம், குடிநீர் தேவை என்று அனைத்தும் கடுமையான தொல்லைக்கு ஆளாகியுள்ளது. நீர் இலவசமாகக் கிடைக்கிறது என்பதால் வீணாக்கப்படுகிறது. ஆனால் நீருக்குக் காசு என்றால் இது உலக வங்கியின் நரித்திட்டம் என்று திட்ட நாலாயிரம் பேர் வருகிறார்கள். எது இலவசமாகக் கொடுக்கப்படுகிறதோ அது வீணாக்கப்படுகிறது. வீடுகளுக்குக் கொடுக்கப்படும் தண்ணீர், விவசாயப் பாசனத்துக்கான தண்ணீர் - எதெல்லாம் குறைவாக உள்ளதோ, எதற்கு அடிதடி நடக்கிறதோ, அதற்கு ஒரு விலை இருக்கவேண்டும். அந்த விலை எவ்வளவு குறைவாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.

அடுத்து என்ன, சுவாசிக்கும் காற்றுக்கு விலை வைக்க வேண்டுமா என்று கேட்டால், இப்பொழுதைக்குத் தேவையில்லை என்று சொல்லலாம். அவ்வளவு பற்றாக்குறை கிடையாது அங்கே.

நகரங்களில் வீடுகளுக்குக் கிடைக்கும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பது, விவசாயப் பகுதிகளுக்குத் தேவையான நீரை ஏரிகள், குளங்கள், கம்மாய்களில் சேர்த்து வைப்பது, நிலத்தடி நீர் அழிந்துவிடாமல், குறைந்துவிடாமல் காப்பது - இவை தொடர்பாக மத்திய அரசு சீரிய கொள்கை ஒன்றை வகுத்து, அதை அனைவரையும் ஏற்கச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் விவசாய நிலங்கள் இருந்தாலும், நல்ல விதை இருந்தாலும், மழை இல்லாத காலங்களில் தேவையான உணவை விளைவிக்க முடியாது.

(8) விதைகள், மரபியல் மாற்றங்கள்

மான்சாந்தோ போன்ற நிறுவனங்கள் மரபியல் மாற்றிய விதைகளை (Transgenic Seeds - Genetically Modifed Seeds - GM) உருவாக்கியுள்ளன. இயற்கையிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆனால் மாறுபட்ட இயல்புகளைக் கொண்ட தாவர வகைகளிடையே ஒட்டு ஏற்பட்டு புதுரகச் செடிகள் உருவாகி வந்துள்ளன. இதையே மனிதர்கள் கண்டறிந்து பல்வேறு ரகச் செடிகளை 'ஒட்டி' (அதாவது ஒன்றின் மகரந்தத்தை மற்றதன் பூவுடன் சேரச் செய்து) தமக்குத் தேவையான ரகங்களை உருவாக்கிவந்துள்ளனர். ஆனால் செயற்கை மரபியல் மாற்று என்பது விதைகளின் டி.என்.ஏவை மாற்றுவதன்மூலம் நடைபெறுகிறது. இத்தகைய மாற்றத்தால் விளைந்த பயிரை உட்கொள்வதால் அல்லது அணிவதால் மனிதனுக்கு எந்தவகையில் நன்மை, தீமை ஏற்படும் என்பது முற்றிலுமாகக் கண்டறியப்படாத ஒன்று.

ஆனாலும் சிலவகைத் தாவரங்களைத் தாக்கும் நோய்களைத் தடுக்க, விளைச்சலைப் பெருக்க, மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துகிறார்கள். பல நாடுகளில் மரபியல் மாற்றப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மரபியல் மாற்றப்பட்ட பருத்தியைத் தடை செய்ததில்லை.

இந்தியாவின் விவசாயிகள் தற்கொலையில் மரபியல் மாற்றப்பட்ட பருத்தி பெரும்பங்கு வகிக்கிறது. இயற்கை பருத்தி விதைகள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால் மான்சாந்தோ போன்ற நிறுவனங்கள் பல கோடி டாலர்கள் செலவுசெய்த ஆராய்ச்சியின் விளைவாகக் கிடைக்கும் விதைகளை மிக அதிகமான விலைக்கு விற்கிறார்கள். அதன்மூலமாவது தங்கள் வாழ்க்கை வளம்பெறாதா என்று ஏங்கும் ஏழை விவசாயிகள் காசை அள்ளிக்கொடுத்து வாங்கினாலும் தண்ணீர் சரியாகக் கிடைக்காத காரணத்தாலும், GM விதைகள் எதிர்பார்த்த அளவுக்கு பூச்சிகளைத் தடுக்காத காரணத்தாலும் கடனில் மூழ்கி, வழிதெரியாது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

GM விதைகள் தேவையா, அவை இல்லாமலேயே விளைச்சலைப் பெருக்க முடியாதா என்பதி நியாயமான கேள்வி. விளைச்சல் குறைந்திருப்பது ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளை வகைதொகையின்றிப் பயன்படுத்தியிருப்பதால்தான் என்பது உண்மையானால் முதலில் அதைச் சரிசெய்யத்தான் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். GM விதைகள் மக்களை எப்படி பாதிக்கும் என்பதை முழுவதுமாக அறிவதற்கு முன்னால் அவற்றை இந்தியாவில் பயிரிடுவதைத் தடுக்கவேண்டும். ஆனால் இந்திய அரசு இந்த விஷயத்தில் கவனமாகவோ அக்கறையுடனோ நடந்துகொள்ளவில்லை.

பாரம்பரிய விவசாயத்தில், விவசாயிகள் சற்றே மாற்றுபட்ட வகைகள் பல்லாயிரக்கணக்காணவற்றைப் பயன்படுத்தி வந்தனர். நெல் என்றால் சில ஆயிரம் வகைகள் இருக்கும். வாழை என்றால் பல ஆயிரம் வகைகள் இருக்கும். Seed diversity. ஆனால் இப்பொழுது அனைவரும் 'high yield' என்று அதிக லாபம் தரும் ஒரே வகையை, அதுவும் அதிக விலைக்கு விற்கும் விதைகளை வாங்கிப் பயன்படுத்த, பிற விதைகள் அழிந்துபோகின்றன. அந்தத் தாவரங்களின் நற்குணங்களும் அழிந்துபோகின்றன. மீண்டும் அவை நமக்குத் திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ.

மான்சாந்தோ நிறுவனம் டெர்மினேட்டர் விதைகள் என்ற புதிய வகை விதைகளையும் அறிமுகப்படுத்த விழைகிறது. இயல்பான விவசாயத்தில், ஒரு விவசாயி பயிரிட்டபிறகு, விளைச்சலின்போது அடுத்த முறை பயிரிடத் தேவையான விதை நெல்லை விளைச்சலிலிருந்தே சேமித்து எடுத்து வைத்துக்கொள்வார். ஆனால் மான்சாந்தோ, கார்கில் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொருமுறையும் விவசாயி தங்களிடமிருந்தே விதைகளை வாங்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் இதனை சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவது கடினம். (Piracy-யைத் தடுப்பதுபோலவே!) அங்குதான் டெர்மினேட்டர் நுட்பம் அவர்களுக்கு உதவும். இதுவும் மரபியல் மாற்றல் முறைதான். டெர்மினேட்டர் நுட்பம் புகுத்தப்பட்ட விதைகள் செடியாக வளரும்; காயோ கனியோ தானியமோ முளைக்கும். ஆனால் அதிலிருந்து கிடைக்கும் விதைகள் மேற்கொண்டு ஒரு செடியை வளரவைக்கும் திறனற்றவை!

ஆக, விவசாயிகள் நினைத்தாலும் விளைச்சலில் இருந்து அடுத்த போகம் விதைக்கத் தேவையான விதைகளைச் சேமிக்க முடியாது. மீண்டும் கார்கில், மான்சாந்தோவுக்குப் பணம் அழ வேண்டியதுதான்!

விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு என்று தேவை உள்ளது. இந்தியாவில் அரசு ஆராய்ச்சி மையங்கள், விவசாயப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை இதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் கார்கில், மான்சாந்தோ போன்ற மாபெரும் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது இந்திய விவசாயிகளுக்கு ஏற்புடையதல்ல. உணவில் தன்னிறைவு அடையாத நமக்கு இது பெரும் நாசத்தை விளைவிக்கும்.

எனவே இந்தியாவைப் பொறுத்தமட்டில், மரபியல் மாற்றிய விதைகள், டெர்மினேட்டர் விதைகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

(9) பிற பயிர்கள்

ஒர் ஏக்கரில் விளையும் உணவு விளைச்சலை அதிகப்படுத்தினால் தானாகவே பல்வேறு பிற பொருள்களை விளைவிக்க அதிகப்படியான இடங்கள் கிடைக்கும். பணப்பயிர்கள், பயோ டீசலுக்குத் தேவையான புங்கை, காட்டாமணக்கு ஆகியவற்றைப் பயிரிடலாம்.

அமெரிக்கா, தான் விளைவிக்கும் மக்காச் சோளத்தை எரிபொருளாக மாற்ற இருப்பதை கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ எதிர்த்திருக்கிறார். இதனால் உலகில் பலர் பட்டினி கிடப்பார்கள் என்கிறார். உலகில் உள்ளவர்கள் வயிறார உணவு சாப்பிட அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கோதுமையும் சோளமும் விளைவிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. நேற்றைய எகனாமிக் டைம்ஸ், உலகின் கோதுமை உற்பத்தி இந்த ஆண்டு குறைந்துள்ளது என்றும் இந்தியா ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளின் விளைச்சலை எதிர்பார்த்துக் கையேந்தவேண்டியுள்ளது என்றும் எழுதியுள்ளது திகிலைத் தருகிறது.

இந்த நிலைக்கு நம்மை நாமே கொண்டுவந்துள்ளோம்.

(தொடரும்)

7 comments:

 1. நல்ல கட்டுரைத் தொடர்.

  மேற்கு நாடுகளில் local farming, gardening, organic farming நகரங்களைச் சுற்றி green belt போன்ற கருத்துருக்கள் வேரூன்ற ஆரம்பித்து விட்டன. LEED சீர்தரத்துக்கமைய மொட்டை மாடிகளிலும் அடுக்கு மாடிகளிலும் பயிர்செய்யும் முறைகளும், மண் இல்லாமல் பயிர்செய்யும் முறைகள் பற்றியும் நிறைய சோதனை முயற்சிகள் உண்டு.

  உணவு நோக்கி ஒரு புதிய புரிதல் இங்கு வேண்டப்படுகின்றது. குறிப்பாக அனைவரும் குண்டாகி வருவதால் (இந்தியாவில் அந்தப் பிரச்சினை ஏழைகளிடம் இல்லை.) slowfood, அவரவரே சிறு தோட்டம் வைத்திருப்பது போன்றவை மேற்கே இளையவர்களை கவருகின்றது.

  வேளாண்மையை தொழில்துறையாக மட்டும் பார்க்காமல் வாழ்வியலாகப் பார்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக இந்தியாவில்.

  ReplyDelete
 2. மிகத் தேவையான தொடர் பத்ரி. தொடர்வீர்கள் என நம்புகிறேன்.

  மான்சாண்டோ, கார்கில் போன்ற முதலைகள் அசல் அமெரிக்க சந்தா முறையைத்(subscription model) திணிக்கவே ஒரு முறை மட்டுமே விளையும் விதைகளைக் கண்டுபிடித்தனர்.

  ஒவ்வொரு முறையும் விதைகளைக் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்பது நம்மூரில் நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்த வகை விதைகளைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

  சோளத்திலிருந்து எத்தனால் எடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அரசியல் நாடகம். ஏற்றுமதி செய்து (சொற்பமாகச்) சம்பாதிப்பதைக் காட்டிலும் உள்நாட்டிலேயே பணம் குட்டி போடும் வகையில் பயன்படுத்தினால் எல்லோருக்கும் இலாபம் பாருங்கள்.

  -பரி

  ReplyDelete
 3. "ஆனால் இப்பொழுது அனைவரும் 'high yield' என்று அதிக லாபம் தரும் ஒரே வகையை, அதுவும் அதிக விலைக்கு விற்கும் விதைகளை வாங்கிப் பயன்படுத்த, பிற விதைகள் அழிந்துபோகின்றன. அந்தத் தாவரங்களின் நற்குணங்களும் அழிந்துபோகின்றன. மீண்டும் அவை நமக்குத் திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ."

  நீஙக சொன்னது காமெடி மாதிறி இருக்கு ஆனா இதை நீங்க சீரியசாத்தான் சொல்லுரிங்க நினைக்கறென்.

  high yield or GM seeds பயன்ப்டுத்தினால் பிற விதைகள் எப்படி அழிந்து போகும்?. எனக்கு புரியல, பிலிஸ் கொஞ்சம் விளக்கவும்.

  பத்ரியின் ரசிகன்

  -மறைமுக கேனயன்

  ReplyDelete
 4. //சோளத்திலிருந்து எத்தனால் எடுப்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அரசியல் நாடகம்// why is that??

  ReplyDelete
 5. மறைமுக கேனயன்: GM விதைகள் இரண்டு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

  1. ஜி.எம் விதைகள் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்பது பரப்பப்பட்டால் பிற விதைகளைப் பயிரிடுபவர்கள் அவற்றை விடுத்து ஜி.எம் விதைகளை மட்டுமே பயன்படுத்துவார்கள். பழைய விதைகளை யாரும் சேகரித்துப் பாதுகாக்காவிட்டால் அவை அழிந்துவிடும். நாளை ஜி.எம் விதைகளை உருவாக்கும் கம்பெனி விதைகளை விற்க மறுத்தால், அல்லது விலையைக் கடுமையாக உயர்த்தினால், அல்லது ஜி.எம் விதைகள் மூலம் உருவாகும் உணவு/உடை உடலுக்குக் கெடுதல் என்று நிரூபிக்கப்பட்டாலோ அப்பொழுது திடீரென்று பழைய விதைகள் கைக்குக் கிடைக்காது.

  இரண்டாவது - எல்லா விதைகளிலும் சில குறிப்பிட்ட இயல்பு டாமினண்ட் ஜீன், ரிஸெஸ்ஸிவ் ஜீன் என்று உண்டு. பருத்தியில் நீண்ட இழை, குட்டையான இழை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மரபணு (ஜீன்) வெவ்வேறு பருத்தி வகைகளில் இருக்கும். இந்த செடிகள் மாறி மாறி இனப்பெருக்கம் செய்யும்போது டாமினண்ட் மரபணு பல தலைமுறைகள் கடந்ததும் ரிஸெஸ்ஸிவ் மரபணுவை அழித்துவிடும். மனிதர்கள், விலங்குகள் இனப்பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆனால் வெட்டவெளியில் பயிரிடும் பருத்தியோ வேறெதுவோ காற்றில் விதைகளைப் பரப்பிவிடும். பக்கத்துத் தோட்டத்து மரபணு மாற்றிய செடிகள் என் தோட்டத்து விதைகளை 'கண்டாமினேட்' செய்து நாளடைவில் அழித்துவிடும். இது ஜி.எம் விதைகளுக்குத்தான் என்றில்லை. சில டாமினண்ட் விதைகள் பல பிரத்யேக உள்ளூர் ரகச் செடிகளை ஒழித்துக்கட்டியுள்ளன. இரண்டு உதாரணங்கள் - தமிழகத்தில் கிடைக்கும் நெல், வாழை. முப்பது, நாற்பது வருடங்களுக்குமுன் விளைந்த பல நெல் வகைகள் இன்று கிடையவே கிடையாது. எல்லாமே ஐ.ஆர் வெரைட்டிதான் பெரும்பாலும்.

  Seed diversity மிக அவசியம்.

  ReplyDelete
 6. For successful breeding of living things genetic diversity is must. That's why every country in the world is maintaing a genetic bank for every crop or animal.it's pure science not a joke.If you are going on using the same group of plants for breeding , finally results in Inbreeding and loss of genetic characters. In human being, if you are marring a close relative that may leads to birth defects in child or any other genetic problems. every things happens because of inbreeding.

  Dr.Senthilkumar
  namakkal
  drpsenthil@rediffmail.com

  ReplyDelete
 7. பெரும் அணைகள் கட்டுவது நல்லதா கெட்டதா என்று அடுத்து பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்

  ReplyDelete