Saturday, March 31, 2007

உணவு, விவசாயம், நெருக்கடி - 1

SEZ, விவசாய நிலங்களைக் கையகப்படுத்தல், தண்ணீர், விவசாயிகள் தற்கொலை... போன்ற பல பிரச்னைகளை நம் நாடு தினம்தினம் சந்தித்துவருகிறது.

(1) ஒரு தனி மனிதன் உட்கொள்ளவேண்டிய உணவில் பெரும்பகுதி, அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற உணவு தானியமாக உள்ளது. அத்துடன் சமச்சீரான சத்துக்காக பருப்பு, பால், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், முட்டை போன்ற பிறவும் சேர்க்கப்படவேண்டும். ஓர் ஆண்டுக்கு சராசரியாக உணவு தானியமாகவே ஒரு மனிதன் உண்ணவேண்டியது 200 கிலோ என்கிறார்கள். சில நிபுணர்கள் இதற்கும் மேல் இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். இப்பொழுதைக்கு 200 கிலோ என்றே வைத்துக்கொள்வோம்.

ஓர் ஆண்டுக்கு, ஒரு மனிதனுக்குத் தேவை குறைந்தது 200 கிலோ உணவு தானியங்கள்.

(2) இந்தியாவின் மக்கள்தொகை 108 கோடியைத் தாண்டிவிட்டது. மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இப்படியே 2050-ல், இந்திய மக்கள்தொகை 160 கோடியைத் தாண்டும் என்றும் அதற்குப்பிறகு மீண்டும் கீழே இறங்குமமென்றும் சொல்கிறார்கள்!

இப்பொழுதுள்ள நிலையிலேயே இந்தியாவுக்குத் தேவையான உணவு தானியங்கள், ஆண்டுக்கு 108 * 200 கோடி கிலோ = 216 மில்லியன் மெட்ரிக் டன்.

இந்த உணவு தானியம் என்பது கடைசியில் மனிதர்கள் உட்கொள்ள வேண்டியது. விளைச்சலிலிருந்து 10 முதல் 15 சதவிகிதம் தானியம் வீணாகிப்போகும் என்று விவசாய நிபுணர்கள் கணிக்கிறார்கள். சேமித்து வைக்கும்போது எலி தின்பதிலிருந்து, புழுத்துப்போவதிலிருந்து, வழியில் கொட்டி நாசமாகிப்போவதிலிருந்து, தண்ணீர், தீ ஆகியவற்றால் அழிந்துபோவது என்று பல பிரச்னைகள். இந்த சதவிகிதத்தைக் குறைக்க முடியும். ஆனாலும் குறைந்தது 10% உணவு தானியம் வீணாகும் என்று வைப்போம்.

இப்பொழுது, ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு மிருகங்கள் தின்பதற்குத் தேவையான தானியங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம்! அப்படிப் பார்த்தால் நமக்குத் தேவையான விளைச்சல் இப்பொழுதைக்கு, குறைந்தபட்சம் 250-270 மெட்ரிக் டன்கள்.

இப்படியான விளைச்சல் இருந்தாலும்கூட கடைசி 25% மக்களுக்கு உணவு முழுமையாகச் செல்ல அரசு இலவசங்களையும் மானியங்களையும் அளிக்க வேண்டும்.

(3) சரி, இந்தியாவில் கடந்த சில வருடங்களில் விளைச்சல் எப்படி உள்ளது? இந்தத் தகவல் இந்திய அரசின் விவசாய அமைச்சகத்தின் இணையத்தளத்திலிருந்து எடுத்து படமாக வரையப்பட்டுள்ளது. இங்கு தானியம் என்பது அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, சோளம், பார்லி, தினை, பருப்புகள் (துவரை, கடலை) ஆகிய அனைத்தையும் சேர்த்தது!


கடந்த 6-7 ஆண்டுகளில் விளைச்சல் 200 மில்லியன் டன்களைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 1990-ல் 170 மில்லியன் டன் என்று இருந்துள்ளது. ஆனால் 'பசுமைப் புரட்சி' என்று சொல்லப்பட்ட 1970-களிலும் இந்தியாவின் தானிய உற்பத்தி 170 மில்லியன் டன்களாகவே இருந்தது.

இன்றைய நிலையில் இந்தியாவின் உணவு உற்பத்தி இந்தியர்களின் தேவையைவிடக் குறைவாகவே உள்ளது.

(தொடரும்)

1 comment:

  1. உற்பத்தி குறைவு என்பது பிரச்சனை இல்லை பத்ரி.உணவுப்பொருளை தாராளமாக் இறக்குமதி செய்து கொள்ளலாம்.உணவு சுயசார்பு என்ற இந்திராகால ஜல்லியை யாரும் அடிக்காமலிருந்தால் சரி.

    ஆனால் உணவுப்பொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது நோக்கமாக கொண்டால் விவசாய துறையில் சீர்திருத்தங்களும் மாற்றங்களும் கொண்டு வராதவரை அது இயலாத ஒன்று என்றே கருதுகிறேன்.சிறு, குறு விவசாயிகளை மெதுவாக தொழில் துறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.70% மக்கள் விவசாயத்தை நம்பியிருப்பதை காலப்போக்கில் 30 அல்லது 40% ஆக குறைந்தால் தான் உற்பத்தி அதிகரிக்கும்.சிறு/குறு விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விஅறிவும், தொழில்கல்வியும் கற்றுக்கொடுத்து அவர்களை லாபமற்ற குறுவிவசாயத்தை விட்டு தொழிலை நாடும்படி செய்வதில் தான் அவர்களின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.

    ReplyDelete