சென்ற பதிவின் தொடர்ச்சி.
(4) குறைந்தபட்சக் கொள்முதல் விலை
இந்திய விவசாயம் இப்பொழுது கடும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. விவசாயத்தில் வளர்ச்சி வெகு குறைவாக உள்ளது. ரசாயன உரங்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியதாலும் தண்ணீர் பற்றாக்குறையாலும் மண் மாசுபட்டு விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது. பல விவசாயிகள் உணவுப் பயிர்களைவிடுத்து பணப்பயிர்களுக்கு மாறியுள்ளனர்.
பணப்பயிரிலும் பருத்தியில் பிரச்னை. பருத்தியைத் தாக்கும் புழு ஒன்றைத் தடுக்க, மான்சாந்தோ நிறுவனம், மரபணு மாற்றிய பருத்தி விதையை அறிமுகம் செய்தது. அந்தப் பருத்தியை வாங்கி நட்ட பல சிறு விவசாயிகள் (ஆந்திரா, மஹாராஷ்டிரா - முக்கியமாக விதர்பா பகுதி), சரியான தண்ணீர் கிடைக்காத காரணத்தாலும் எதிர்பாராத வகையில் பருத்தி சரியாக விளையாததாலும் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பருத்தியும் பூச்சிகளைத் தடுத்து நிறுத்துவதில்லை என்று பல ஏழை விவசாயிகள் சொல்கின்றனர். ஆனால் தண்ணீர் அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் இந்தப் பருத்தி அதிக உற்பத்தியத் தருகிறது என்று பணக்கார விவசாயிகள் சொல்கிறார்கள்.
மொத்தத்தில் விதர்பா பகுதியில் பல நூறு ஏழை பருத்தி விவசாயிகள் கடன் தொல்லை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த விவசாயிகள் அனைவரும் பருத்திக்கு முன்னர் உணவு தானியங்களைப் பயிர் செய்து வந்தவர்கள் என்பது முக்கியமானது.
உணவுப் பயிர்களுக்கு அரசு கொடுக்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவானது. வளர்ச்சிபெற்ற நாடுகளில் பயிரை விளைவிக்காமல் இருக்க (அதன்மூலம் பொதுச்சந்தையில் உணவு தானியத்தின் விலை அதிக விளைச்சலால் அதளபாதாளத்துக்கு வீழ்ந்துவிடாமல் இருக்க) கிடைக்கும் மானியம் எக்கச்சக்கம். ஆனால் இந்தியாவில் அரசு கொடுக்கும் மானியம் ரசாயன உரங்கள் வாங்குவதற்கு மட்டுமே. சில மாநிலங்கள் இலவச மின்சாரம் அளிக்கிறது.
ரசாயன உர மானியம், இலவச மின்சாரம் ஆகியவற்றுக்குப் பதிலாக அதிகக் கொள்முதல் விலையை அரசு கொடுத்தாலே போதுமானது. இதன்மூலம் subsistence farming என்ற நிலை வெகுவாக மாற வாய்ப்புகள் உள்ளது. ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். இப்பொழுது அரசு நிர்ணயித்திருக்கும் விலை கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோவுக்கு) ரூ. 850. 2001-ல் இதுவே ரூ. 610 ஆக இருந்தது. (நெல்லுக்கு இதைவிடக் குறைவுதான்!). சென்ற ஆண்டு குவிண்டாலுக்கு ரூ. 750 தான் இருந்தது. ஆனால் விவசாயிகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கும்போது நிறைய வருமானம் பெற்றனர். இப்பொழுதுகூட வெளிச் சந்தையில் ரூ. 1000 முதல் ரூ. 1400 வரை குவிண்டாலுக்குக் கிடைக்கிறது!
இந்தக் குறைந்தபட்சக் கொள்முதல் விலையை தடாலடியாக 50% ஏற்றுகிறது (ரூ. 1150) என்று வைத்துக்கொள்ளுங்கள். மொத்த கோதுமை விளைச்சல் சுமார் 75 மில்லியன் டன்கள். அரசு இதிலிருந்து சுமார் 15 மில்லியன் டன்களைக் கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது.
அப்படியானால் அரசு அதிகமாகச் செய்யும் செலவு = ரூ. 4,500 கோடி
இதேபோல நெல் கொள்முதலுக்கும் 50% விலையை நேரடியாக உயர்த்தலாம். அரசுகள் செய்யும் வீண் செலவைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மேற்கொண்டு ரூ. 10,000 கோடி என்பது ஒன்றுமே கிடையாது.
விவசாயிகளுக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதால் மின்சாரத்துக்கான மானியத்தை நிறுத்தலாம். வெளிச் சந்தை விலையும் அதிகமாகும்.
இதனால் ரேஷன் கடையில் பொருள் வாங்குபவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு ரூ. 2 அல்லது 3 ஒரு கிலோ என்று தானியங்களை விற்கலாம். அதே சமயம் விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை கிடைக்கும். தானியங்களைப் பயிர் செய்வது உபயோகமானது, அதிக வருமானம் தரக்கூடியது என்று பல விவசாயிகளும் பணப்பயிர்களை விட்டுவிட்டு மீண்டும் தானிய உற்பத்திக்கு வருவார்கள்.
(5) ஆர்கானிக் ஃபார்மிங் - இயற்கை விவசாயம்
இந்தியாவின் 1970களின் பசுமைப் புரட்சிக்கு மெக்சிகோவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒட்டுரக விதைகள், ரசாயன உரம், எக்கச்சக்கமான தண்ணீர் ஆகியவை காரணமாகக் காட்டப்பட்டன. இவை உணவு வளர்ச்சியை அதிகப்படுத்தினாலும் இப்பொழுது கடும் நெருக்கடிக்கு விவசாயிகளையும் பொதுமக்களையும் ஆளாக்கியிருக்கின்றன. தண்ணீர் வளங்கள் குறைவு. ரசாயன உரம் மண்ணைப் பாழ்படுத்திவிட்டது. பூச்சிமருந்துகளை மீறி கெட்ட பூச்சிகள் வளர்ந்து பயிர்களை அழிக்கின்றன. அதனால் அரசு ஆதரவு ஏதுமின்றி பல விவசாயிகள் ஆர்கானிக் ஃபார்மிங் - இயற்கை வேளாண்மை என்ற பாரம்பரிய வேளான்முறைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
ரசாயன உரங்கள் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உப பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதனால் எக்கச்சக்கமாக விலையேறியுள்ளன. மேலும் இதன் நச்சுத்தன்மை உலகில் அனைவரும் அறிந்ததே. ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் ஒரேயடியாக ஒழிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நான் பேசிய சில விவசாய வல்லுனர்கள் 'முடியும்' என்கிறார்கள். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே, பாரம்பரிய முறைப்படியான விவசாயம்மூலமாக விளைபொருள்களை அதிகமாக்கமுடியும் - sustained farming is possible என்கிறார்கள்.
அப்படியானால் நாம் அதை நோக்கித்தான் போகவேண்டும்.
இதன்மூலம் விவசாயிகள் செய்யும் செலவு குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் கையில் தங்கும் பணம் அதிகமாக இருக்கும்.
(6) நிலச் சீர்திருத்தம்
நிலச் சீர்திருத்தம் என்றாலே அதிகம் இருப்பவர்களிடமிருந்து பிரித்து துண்டு துண்டாக்கி ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால் துண்டு துண்டான நிலங்களின் வரப்புகளுக்கு என்று போகும் இடம் அதிகம். ஒவ்வொருவருக்கும் பாசன வசதி செய்து தரவேண்டிய நிலைமை. ஆளாளுக்கு ஆழ்குழாய்க் கிணறுகள் (இது மிக மோசமாகத் தண்ணீர் ஆதாரத்தைப் பாதிக்கும் என்று இப்பொழுது மக்கள் அறிந்துள்ளனர் என்றபோதிலும்...) தோண்டவேண்டும்.
இதற்குபதில் கூட்டுறவு முறையைக் கொண்டுவருதல் அவசியம். பெரு நிலக்கிழார்களிடமிருந்து நிலங்களை அரசு திரும்பிப் பெறுதல் அவசியம். ஆனால் அவ்வாறு பெற்ற நிலத்தை ஆளுக்கு 2 ஏக்கர் என்று துண்டாக்கித் தராமல் 20-30 ஏக்கர்களாகவே வைத்திருந்து 10 குடும்பங்களுக்கு என்று சேர்த்துத் தரவேண்டும். அந்தப் பத்து குடும்பங்களும் சேர்ந்தே விளைவிப்பத்தை மேற்கொள்ளவேண்டும் என்று செய்யவேண்டும். நிலத்தை அரசே வைத்துக்கொண்டு, உழுவதற்கான முழு உரிமையையும் அதிலிருந்து கிடைக்கும் விளைச்சலை முழுமையாக அனுபவிக்கும் உரிமையையும் மக்களுக்குக் கொடுக்கவேண்டும். அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கும் உரிமை அதில் உழுபவர்களுக்கு இருக்கக்கூடாது. அவர்கள் அந்த நிலத்தில் உழும், அனுபவிக்கும் உரிமையை பிறருக்கு மாற்றி எழுதித்தருமாறு (ஒரு விலையைப் பெற்றுக்கொண்டு) வேண்டுமானால் கொடுக்கலாம். இதன்மூலம் நிலம் துண்டு துண்டாகாமல் தடுக்கலாம்.
(இது புதிதாக நிலம் துண்டாக்கப்படுவதைத் தடுக்கவே. பழைய, துண்டாகிய சிறு நிலங்களை ஏதாவது வழியில் சேர்த்து - economies of scale - கொண்டுவரவேண்டும்.)
இதன்மூலம் விளைச்சலைப் பெருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மக்களுக்கு இடையேயான உறவுகள், சண்டைகள், சச்சரவுகள், அவற்றைத் தீர்க்கும் முறைகள், விளைச்சல் குறைவாக இருக்கும்போது எவ்வாறு அதைப் பகிர்ந்துகொள்வது போன்ற பல விஷயங்கள் பிரச்னைக்குரியதாக இருக்கும். இதை எவ்வாறு எதிர்கொள்வது என்று நான் யோசிக்கவில்லை.
(தொடரும்)
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
4 hours ago
பத்ரி,
ReplyDeleteநிலங்களை துண்டு துண்டாக்க வேண்டும் என்று சொல்லவில்லை, மாறாக நிலங்களை உழுபவருக்கு பிரித்து கொடுத்து கூட்டுபண்ணைகளின் கீழ் இணைத்து விவசாய உற்பத்தியை நவீன முதலாளித்துவ முறைகளை உபயோகப்படுத்தி செய்வதுடன், விவசாயிகளையும் ஜனநாயகப்படுத்தலாம். இதனை சீனாவிலும் ரஸ்யாவிலும் செய்து அபரிமிதமான சாதனைகளை சாதித்துள்ளனர். இது உற்பத்தி துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களை சாதித்துக் காட்டும் என்பதற்க்கும் சீனா, ரஸ்யாவே உதாரணமாக உள்ளன.
உணவு பற்றாக்குறையை பொறுத்தவரை இந்திய விவசாய உற்பத்தியை ஏகாதிபத்திய தரகு நிறுவனங்கள தமது சந்தை தேவைக்கான உற்பத்தி பின் நிலங்களாக மாற்றும் உத்தியின் ஒரு பகுதியாகவெ பார்க்க வேண்டியுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் இந்த பின்னணீயிலேயே பார்க்க வேண்டிய பிரச்சனை.
இது குறித்து இந்தியாவுக்கான் அரசியல்-பொரூளாதார ஆய்வு குழு(RUPE) சமீபத்திய வெளியிட்டை படித்தால் சில புரிதல்கள் கிட்ட வாய்ப்புள்ளது. http://www.rupe-india.org/
உண்மையில் இந்தியாவின் ஆகப் பெரும்பான்மை மக்கள் விவசாயத்துடன் இணைந்துள்ளனர் எனில் விவசாயத் துறையை சீரமைப்பதுதான் நாட்டுக்கு நல்லதாக இருக்கும். உற்பத்தி துறை என்பது விவசாயத்தின் தேவைக்கான ஒரு துறையாக இருக்க வைத்த் வளர்த்தெடுப்பதுதான் மக்களுக்கு சிரமம் இல்லாத விசயமாக இருக்கும் அதை விடுத்து தற்போது தொழிற்நுட்பம், வேலை வாய்ப்பு என்ற பெயரில் செய்யப்படும் அனைத்து விசயங்களும் உலகாளாவிய மூலதனத்தின் சிக்கலை தீர்க்கும் உத்தியாகவே தெரிகீறது. உலகளாவிய மூலதனம் தனது மூலதன சுழற்சிக்காக இந்தியா போன்ற மூன்றாம உலக நாடுகளின் மூலாதாரங்களை சுரண்டுகின்றன. தமக்கு ஏற்ப்பட்ட சமூக பொருளாதார அழுத்தங்களை மூன்றாம உலக நாடுகளின் மனித வளம், சந்தை, இயற்கை வளத்தின் மீது திசை திருப்பிவிட்டு, சுற்றுச் சூழலில், சமூக பொருளாதார சூழலில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றனர். வல்லரசாக காட்டப்படும் சீனாவின் நிலைமையும் அதுதான். 1978க்குப் பிறகான சீனா சந்தை சோசலிச சீர்திருத்தங்கள் அங்கு பணக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரித்த அதே வேளையில்தான் சாதாரண மக்களின் அடிப்படை தேவைகளை சுருக்கி, சுத்தமான தண்ணீர், சுகாதாரம், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்துடன், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தமது உள்நாட்டு முதலாளிகளின் வளர்ச்சியை இன்று வரை வெளிநாட்டு மூலதனத்திலிருந்து காப்பதன் மூலமே வளர்த்துள்ளனர். மாறாக நம்மைப் போன்ற மூன்றாம் உலக் நாடுகளுக்கு மட்டும் கதவை திற காற்று வரும் என்று காதில் பூ சுற்றுகிறார்கள். இதற்க்கு உதாரணம் மேற்கத்திய நாடுகளின் உற்பத்தி துறை என்பது சுற்றுச்சூழலுடன் முரன்படுவதில் அதன் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டதும், அதே நேரத்தில் உலகளாவிய அளவில் உற்பத்தி துறையில் ஏற்பப்ட்ட நெருகக்டியையும் சேர்த்துதான் உற்பத்தி துறையில் மட்டும் உலகமயத்தை செயல்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் தந்திரத்தை பார்கக் வேண்டும்,.
http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_14.html
சுற்றுசுழலுடன் பெரிய அளவில் முரன்பாடு கொள்ளாதா விவசாய துறையை மேற்கத்திய நாடுகள் உலகமயப்படுத்தாமை அல்லது ஒரு பக்கசார்பு உலகமயப்படுத்தும் தந்திரத்தையும் இங்கு கணக்கில் கொண்டால் இந்த சதி திட்டத்தின் முழு உருவம் பிடிபடும்.
இந்த அம்சங்கள் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே தண்ணீர் தனியார்மயம், விவசாயத்தில் பன்னாட்டு கம்பேனிகள், மரபணு விதைகள், பிற உலகமய திட்டங்களை நாம் பார்க்க வேண்டும்.
அசுரன்