Monday, March 19, 2007

உலகக்கோப்பை - 2

முதலில் ஒரு பகிரங்க மன்னிப்பு. உலகக்கோப்பை தொடர்பான என் முதல் பதிவில் 'ஒன்றுக்கும் லாயக்கில்லாத' அணிகளை ஐசிசி சேர்த்துள்ளது என்றும் அதனால் உலகக்கோப்பை முதல் சுற்று ஆட்டங்கள் போரடிக்கின்றன என்றும் எழுதியிருந்தேன். பங்களாதேசத்தை 'மோசமான' அணி என்று நான் கருதவில்லை. ஆனால் அயர்லாந்தை அப்படித்தான் நினைத்திருந்தேன். ஸ்காட்லாந்து, நெதர்லாண்ட்ஸ், பெர்முடா போன்ற அணிகளின் ஆட்டத்தைப் பார்த்து அவ்வாறே இதுவும் என்று நான் நினைத்தது தவறுதான்.

அயர்லாந்து பாகிஸ்தானை வீழ்த்தியது இப்பொழுது அனைவருக்குமே தெரியும். அற்புதமான ஆட்டம். அயர்லாந்தின் பந்துவீச்சாளர்கள் லாங்போர்ட்-ஸ்மித், ராங்கின், போத்தா ஆகியோர் அற்புதமாக பந்தை ஸ்விங் செய்தனர். லாங்ஃபோர்ட்-ஸ்மித் வேகமாகவும் வீசினார். மற்ற இருவரும் மிதவேகம்தான். ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தைவிட பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்தின் பந்துத் தடுப்பு மிக அருமையாக இருந்தது. அவர்கள் பிடித்த கேட்ச்களில் பலவற்றை இந்திய அணி வீரர்கள் பிடித்திருக்க மாட்டார்கள். ஸ்லிப்பில் பிடிக்கப்பட்ட கேட்ச்கள் உலகத்தரம் வாய்ந்தவை. அதையெல்லாம் மிஞ்சியது கேப்டன் ஜான்ஸ்டன் மிட்விக்கெட்டில் பிடித்த கேட்ச்.

அயர்லாந்து பேட்டிங்கில் சிரமப்பட்டாலும் விக்கெட்கீப்பர் ஓ'பிரையன் தயவில் தேவையான ரன்களைப் பெற்று வென்றனர்.

இந்த உலகக்கோப்பையில் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறும் முதல் நாடு அயர்லாந்து! அதேபோல உலகக்கோப்பையின் முதல் சுற்றிலே வெளியேறும் முதல் நாடு பாகிஸ்தான்! Minnows sink whales என்ற தலைப்பு எவ்வளவு பொருத்தமானது!

-*-

அடுத்து சோகமான நிகழ்வு. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் வுல்மர் நேற்று மாலை மரணமடைந்துள்ளார். தோல்வி தந்த அதிர்ச்சியா? அல்லது வேறு ஏதாவதா என்று புரியவில்லை. இன்று காலை செய்தித்தாளைப் பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

முக்கியமான கிரிக்கெட் பயிற்சியாளர்களில் ஒருவர். இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷயர் என்னும் சுமாரான ஆட்டக்காரர்கள் கொண்ட அணியை தொடர்ச்சியாக பல கோப்பைகளை ஜெயிக்க வைத்தவர். தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்து ஹன்ஸி குரோன்யேவுடன் சேர்ந்து ஒரு ஜெயிக்கும் மெஷினாக மாற்றியவர். பயிற்சியில் பல புதுமைகளைப் புகுத்தியவர். பாகிஸ்தான் அணிக்குத் தேவையான சில கிரிக்கெட் புள்ளிவிவரங்களைக் கொடுப்பதற்காக அவருடன் ஓரிருமுறை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டுள்ளேன்.

பாகிஸ்தான் கோச் வேலை என்பது மிகவும் கஷ்டமானது. (அதற்கு அடுத்தது இந்தியாவின் கோச்சாக இருப்பது!) பயிற்சியாளருக்குக் கொஞ்சமும் ஆதரவு தராத தலைக்கனம் கொண்ட ஆட்டக்காரர்கள். அவர்களை ஒன்றிணைத்து வேலை வாங்குவதைப் போல கஷ்டமான வேலை வேறு எதுவும் இல்லை. வுல்மர் பாகிஸ்தான் வேலையை ஒரு சேலஞ்சாக எடுத்துக்கொண்டு போராடினார். ஆனால் அவரால் திண்ணமாக எதையும் சாதிக்க முடியவில்லை.

இன்று பாகிஸ்தானில் உச்சநீதிமன்ற நீதிபதி தொடர்பாக நடந்துவரும் போராட்டம் ஒன்றுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைக் காப்பாற்றியுள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கும்.

-*-

ஆனால் இந்திய அணி வீரர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன; தோனியின் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீட்டின் சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் - அதுவும் உலகக்கோப்பை தொடர்பாக - இருக்கும் ஹைப் தாங்கமுடிவதில்லை. தொழில் நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து பணத்தைக் கொட்டுகின்றன. பங்களாதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா மோசமாகத்தான் விளையாடியது. கங்குலி, யுவராஜைத் தவிர அனைவரும் படு கேவலமாக விளையாடினர். பந்துவீச்சில் அகர்கர் தடுமாறினார்.

மாறாக பங்களாதேச ஆட்டக்காரர்களின் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. மூன்று இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களும் ரன்களை நெருக்குவதன்மூலம் இந்தியாமீது கடுமையான அழுத்தத்தைக் கொண்டுவந்தனர். மஷ்ரஃபே மொர்தாஸா நல்ல வேகமாகவும் துல்லியமாகவும் பந்து வீசினார். அந்த அளவுக்குத் துல்லியம் ஜாகீர் கானிடமோ முனாஃப் படேலிடமோ கூட இல்லை.

ஆனால் மிக முக்கியமான இன்னிங்ஸ் தமீம்தைக்பால் விளையாடியது. இப்பொழுதுதான் முதல்முறை இவர் விளையாடிப் பார்க்கிறேன். சின்னப் பையன். இறங்கி இறங்கி வந்து அடித்தார். தைரியமாக அடித்து ஆடினார். விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹீமும் நின்று நிதானமாக விளையாடினார்.

பங்களாதேசமும் இரண்டாவது கட்டத்துக்குப் போக நிறைய வாய்ப்புகள் உள்ளன.

-*-

இவ்விரண்டு அணிகளைத் தவிர பிற 'சிறு மீன்கள்' அவ்வளவு சிறப்பாகப் போராடும் என்று தோன்றவில்லை. கனடா நேற்று இங்கிலாந்துக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்தாலும் கடைசியில் தோற்கத்தான் செய்தது. பெர்முடா, நெதர்லாந்து ஆகியவை சிறப்பாக எதையும் செய்யும் என்று தோன்றவில்லை.

உலகக்கோப்பை - 1

5 comments:

 1. இதுவே ஆடுகளம் உதவியிராவிட்டால் பங்களாதேஷின் பந்துவீச்சு இவ்வளவு சிறப்பானதாக இருந்திருக்குமா என்பதும் , ட்ராவிட் டாஸ் ஜெயித்த பின் பீல்டிங் தேர்வு செய்தது சரியா ( பயிற்சி ஆட்டத்தில் முதலில் பாட் செய்த வெ.இ அணி சொற்ப ரன்னில் சுருண்டதற்கு ஆடுகளமும் ஒரு காரணம் இல்லையா?) இன்னும் விடை தெரியாத புதிர்தான்.

  அயர்லாந்து ஆட்டம் உண்மையில் டாப் (The day belonged to them ...well done Ireland)

  ReplyDelete
 2. //இன்று பாகிஸ்தானில் உச்சநீதிமன்ற நீதிபதி தொடர்பாக நடந்துவரும் போராட்டம் ஒன்றுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைக் காப்பாற்றியுள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கும்//

  சரியாக சொன்னீர்கள்.
  பிளாக்கர் சொதப்பலால் அனானியாக
  வினையூக்கி

  ReplyDelete
 3. good post badri!

  what details u gave to bob? how di u contact him? i am really surprised when i read those lines abt ur contact with bob!!

  it ll be intersting if u pls give those details!!

  thanks

  ReplyDelete
 4. கார்த்திக் பிரபு: நான் கிரிக்கின்ஃபோவை நடத்திக்கொண்டிருந்தபோது ஐசிசி மற்றும் பல நாடுகளின் கிரிக்கெட் போர்ட் நிர்வாகிகளோடும் பயிற்சியாளர்களோடும் உரையாடியிருக்கிறேன்.

  ReplyDelete
 5. //இந்த உலகக்கோப்பையில் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறும் முதல் நாடு அயர்லாந்து! //

  இப்படி சொல்ல முடியுமான்னு தெரியலை, ஜிம்பாபே பாகிஸ்தானை ஜெயித்து ரன்ரேட் அதிகமாயிருக்கும் பட்சத்தில் ஜிம்பாபே உள்ளே வரும் வாய்ப்பு உள்ளது.

  இது நடக்குமா ஆதா அப்படிங்கிறதில்லை பிரச்சனை. இரண்டாவது சுற்றுக்கு அயர்லாந்து அதுக்காட்டியும் தகுதி பெற்றிருச்சாங்கிறதுதான்.

  ஹிஹி.

  ReplyDelete