சென்ற வாரம் திருவனந்தபுரத்தில் நல்ல படம் ஒன்றைப் பார்க்கத் தேடி அலைந்தபோது மேற்கண்ட படத்துக்கு அகஸ்மாத்தாகப் போனோம். இந்த பத்மநாபா தியேட்டர்தான் ‘தசாவதாரம்’ படத்தை மலையாளிகளுக்குக் காண்பித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது. சுற்றி அங்கும் இங்கும் சக்கரக்கட்டி cho chweet முதல் இன்னபிற தமிழக அபத்த இறக்குமதிகள்.
மலையாளிகள் தமிழை வளர்த்தால் நாம் பதிலுக்கு மலையாளத்தை வளர்க்கவேண்டும் அல்லவா? என்ன படம் என்று தெரியாமலேயே தலப்பாவு பார்க்க வந்து உட்கார்ந்தோம். பிரமிக்க வைத்தது.
முதலில் கதை. கதை என்பதைவிட நிஜம், ஒரு சில ஒட்டுவேலைகளுடன் படமாக வந்துள்ளது என்று சொல்லவேண்டும்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கன்னட ஜமீந்தார்களிடம் மாட்டிக்கொண்டு ஏழை மக்களும் பழங்குடியினரும் திண்டாடுகிறார்கள். ஆட்சியாளர்கள், காவல் அதிகாரிகளின் உதவியோடு, பழங்குடியினர் நிலத்தை அபகரிப்பது, ஏழைப் பெண்களை அனுபவித்துவிட்டு அவர்களது கணவர்களை ‘பொய்யாக’ தூக்கில் தொங்கவிடுவது என்று ஜமீந்தார்களின் கொட்டம். அதிகாரிகளுக்கு விருந்து, பெண்கள் என்று உபசாரம் வேறு.
இதனால் நக்சலைட்டுகள் உருவாகிறார்கள். அதில் ஒருவர் ஜமீந்தார் ஒருவரைக் கொலை செய்கிறார். அந்த நக்சலைட் கைது செய்யப்பட்டு போலி என்கவுண்டரில் மரத்தில் கட்டிப் போடப்பட்டு, ஒரு காவலரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் காவலர், அந்த நக்சலைட்டைத் தான்தான் கொன்றேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறார்.
இது நிஜமாக நடந்த சம்பவம். ராமச்சந்திரன் நாயர் என்ற போலிஸ் கான்ஸ்டபிள் “ஞான் ஜீவிச்சு அந்திண்டே தெளிவு” என்ற புத்தகத்தில் முட்டத்து வர்கீஸ் என்ற நக்சலைட்டை 1970களில் சுட்டுக் கொன்றதை எழுதியுள்ளார். அந்தப் பின்னணியில் இந்தப் படம் வருகிறது. (இந்தப் புத்தகம் “நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம்” என்ற பெயரில் தமிழல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)
***
ஆலப்புழை, வயநாடு என்று இரண்டே லொகேஷன். கான்ஸ்டபிளின் வாழ்க்கை எளிமையானது. மனைவி, மகன், மகள். கான்ஸ்டபிள் சிறு வயதில் காதல் செய்கிறார். பள்ளிப் பருவத்துக் காதல், காதலி சாரா வேறு ஊர் செல்வதால் தடைபடுகிறது.
வயநாட்டுக்கு மாற்றலாகும் கான்ஸ்டபிள், ஜமீந்தார் வீட்டில் சாராவைச் சந்திக்கிறார். நெற்றியில் ஒற்றைத் திருமண் இட்டிருக்கும் கன்னட பிராமண ஜமீந்தார், சாராமீது ஆசைகொண்டு, அவளை வன்புணர்ந்து, அவளது கணவனை ஒற்றைப் பனைமரத்தின் உச்சியில் தூக்கில் மாட்டிக் கொன்றுவிடுகிறார். வேறு வழியில்லாத சாரா, அதே ஜமீந்தார் வீட்டில் வேலைக்காரியாக, ஜமீந்தாருக்கு வேண்டும்போதெல்லாம் இன்பம் தருபவளாக ஆகிறாள்.
கான்ஸ்டபிள், நக்சலைட் ஜோசஃபையும் எதிர்கொள்கிறார். கான்ஸ்டபிள் எந்த அளவுக்கு பூச்சியோ, ஜோசஃப் அந்த அளவுக்கு கொதித்து எழுபவர். மீன்காரக் கிழவியை ஏற்றிக்கொள்ளாத பஸ் கண்டக்டராகட்டும், தங்களது நிலங்கள் அபகரிக்கப்படும் பழங்குடியினர் சார்பாகப் போராடும்போதாகட்டும், பிரித்வி ராஜின் நடிப்பு அபாரமாக இருக்கிறது.
ஜோசஃபும் தோழர்களும் ஒருமுறை காவல் நிலையத்தைச் சூறையாடி, அங்குள்ள காவலர்களை அடித்துத் தாக்கி, துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். அங்கே நம் கான்ஸ்டபிள் பயந்து நடுங்கி ஒரு மூலையில் பதுங்கியிருக்கிறார். ஜோசஃப் அவரை மட்டும் பார்த்து நட்போடு சிரித்தபடி செல்கிறார்.
ஒரு நாள், ஜமீந்தார் வீட்டில் உள்ள நிலப் பதிவு ஆவணங்களைத் திருட வந்த நக்சலைட்டுகள், ஜமீந்தாரோடு சண்டைபோட, இறுதியில் ஜோசஃப் ஜமீந்தாரை வெட்டிக் கொல்கிறார். இதனால் காவல்துறை மேலதிகாரிகள் முதலில் சாராவைத் துன்புறுத்தி, பின்னர் அவள்மூலம் ஜோசஃப் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அவனைப் பிடித்து இழுத்துவந்து, துன்புறுத்தி, கடைசியில் நம் கான்ஸ்டபிளைக் கொண்டே அவனைச் சுடவைக்கின்றனர். கான்ஸ்டபிளுக்கும் ஜோசஃபுக்கும் இருக்கும் நட்பான உறவின் காரணமாகவே இந்தத் திட்டம்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, கான்ஸ்டபிள் ஆலப்புழை வந்து, குடியில் விழுகிறார். ஒரு மாதிரியான மனப்பிறழ்வுக்கு ஆளாகிறார். ஆனால் உண்மையை வெளியே சொல்வதில்லை. என்னவென்று தெரியாத நிலையில், மனைவி (ரோஹிணி) விவாகரத்து பெற்றுக்கொண்டு தன் குழந்தைகளுடன் தன் தந்தை வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். வயதான காலகட்டத்தில், கிழ கான்ஸ்டபிளுக்கு நிம்மதி மட்டும் இல்லை. சோக ரசம் ததும்புமாறு, அவரது மனைவி பாம்பு கடித்துச் சாகிறார். கணவரை அருகில் நெருங்கவிடாமல், மாமனார் அடித்துத் துரத்துகிறார். கான்ஸ்டபிளின் மகன் பணத்துக்காக தந்தையை மிரட்டிப் பொறுக்கித்தனம் செய்கிறான். மகள் சில நாள் அன்போடு தந்தையிடம் வசிக்கிறாள். ஆனால் அவள் பாலியல் தொழில் புரிபவள் என்பது தெரிந்து அக்கம்பக்கத்தார் அவளை விரட்டுகின்றனர்.
கான்ஸ்டபிள் தன் ஓய்வு பெற்ற வாழ்க்கைக்குப் பிறகு, தான்தான் ஜோசஃபைக் கொன்றவன் என்பதற்கான வாக்குமூலத்தை ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் வெளிப்படுத்துகிறார்.
கடைசியில் கான்ஸ்டபிள் செத்துப்போகிறார்.
***
படத்தில் ஃபிளாஷ்பேக் என்ற பாணியில் அல்லாமல், பழைய சரடடையும் புதுச்சரடையும் அடுத்தடுத்துக் கொடுத்து கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குனர். காலம் மாறுவதை பார்வையாளரால் முதலில் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், விரைவிலேயே புரிபடுகிறது. பல இடங்களில் மாய யதார்த்தப் பின்னணியில் இறந்துபோன ஜோசஃப், கான்ஸ்டபிளுக்கு முன் மட்டும் தோன்றி அவரை வழிநடத்துகிறார். இறுதியில், ‘போதும், வா, போகலாம்’ என்று சொல்லும்போதுதான் கான்ஸ்டபிள் இறந்துபோகிறார். அப்போது ஜோசஃப் கையோடு கொண்டுவந்த ஒரு விளக்கு, சாவுக்குப் பிறகு அந்த இடத்தில் கீழே கிடக்கிறது.
நான் TV5Monde-ல் பார்த்த கறுப்பு இரவு படத்துக்குச் சற்றும் குறையாத தரத்தில் உள்ளது இந்தப் படம்.
கவளம்
8 hours ago
நடிகர் ராஜேஷ், லட்சுலி நடித்த சிறை என்ற பழைய படத்தின் சாயல் படத்தில் இருப்பதாகப்படுகிறது!
ReplyDeleteபத்ரி ஸார்..
ReplyDeleteஒரு நல்லத் திரைப்படத்தை முன்மொழிந்தமைக்கு நன்றிகள்.. அந்தப் புத்தகத்தை நான் படித்துவிட்டேன். குற்றவுணர்ச்சியுள்ள ஒருவரின் வாக்குமூலமாக எனக்குத் தெரிந்தது.
மலையாளத்தில் தயாரிப்புச் செலவு குறைவு என்பதாலும் இது போன்ற நடந்துவிட்ட நிகழ்வுகளை காவியமாக்கலாம். கஷ்டமில்லை..
யு.எஸ். தமிழன் ஸார்..
சாரா கேரக்டர் ஒன்றை மட்டுமே வைத்து சாயலாக நினைக்க வேண்டாம்.. படத்தின் மையக் கருத்து வேறு..
//படத்தின் மையக் கருத்து வேறு..//
ReplyDeleteஉண்மைதான். ஆனால் படத்தில் கூறப்பட்டிருக்கும் சம்பவங்கள் பல படங்களில், புதினங்களில் வந்திருந்தாலும், இங்கு மையக்கருத்து வேறு
--
இன்னும் இவர்கள் சிவக்குமார், ராஜேஷ், விஜயகுமார் தமிழகத்தில் ஈரோ வாக வந்த காலத்தில் தான் இருக்கிறார்களா ? மலையாளப்படங்கள் எல்லாம் உலகத்தரம் என்றெல்லாம் நினைத்திருன்தேன், கம்யூனிஸ்டு பாடுகள் எல்லாத்திலும் ஊடுருவி இப்படி ஏழைகள் எல்லாம் நக்ஸலைட்டுகள் ஆவதைத் தவிர வேறு நாதி இல்லை மாதிரிப்படங்களை எடுக்கிறார்களா ?
ReplyDeleteஅதற்கு ஏன் இவ்வளவு பாராட்டு?
பத்ரி அவர்களே,
ReplyDeleteதனியார் பலகலைக்கழகங்கள் பற்றி கூகிளில் தேடிய போது கிடைத்த ஒரு பக்கம் இது.
இதில் உங்கள் வலைப்பதிவு சுட்டப்பட்டு அதில் அந்தக் கட்டுரை தமிழில் நீங்கள் மொழிபெயர்த்துள்ளதாக செய்தி உள்ளது. அது உங்கள் வலைப்பதிவில் உள்ளதா ? அந்த சுட்டி கொடுக்கவும்.
தனியார் பல்கலைக்கழகங்கள் பற்றிய உங்கள் கருத்து மற்றும் அதைப்பற்றிய பொதுவாக அறியவேண்டிய விஷயங்கள் என்று ஒரு பதிவு எழுதுங்களேன் ?
இப்பின்னூட்டம் இந்தப் பதிவுக்குச் சம்பந்தம் இல்லாததால் இதனை இங்கே வெளியிட வேண்டாம்.
sir
ReplyDeleteur film review is good
sankar