Wednesday, October 29, 2008

இலங்கைப் பிரச்னை - பாகம் 2

தமிழகம் ஆடி அடங்கிவிட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டம். ஒருமித்த தீர்மானம். ராஜினாமா. மனிதச் சங்கிலி. கூட்டங்கள். பேச்சுகள். கைதுகள். பேசில் ராஜபக்க்ஷ - பிரணாப் முகர்ஜி கூட்டறிக்கை. கருணாநிதி மகிழ்ச்சி. சுபம்.

உணர்ச்சிபூர்வமாகக் கொந்தளித்து இங்கே எதையும் சாதிக்கமுடியாது.

***

வைகோ, கண்ணப்பன் கைது. இருவரையும் கைது செய்தது எனக்கு ஏற்புடையதல்ல. இவர்களைக் கைது செய்திருக்கவே கூடாது.

ஆனால் இருவரும் செய்தது முட்டாள்தனம். பொதுவாழ்வுக்கு வரும் எவரும், என்ன பேசுகிறோம் என்பதைக் கவனமாகப் பேசவேண்டும். அதுவும் எதிரி ஆட்சியில் இருக்கிறார், ஜனநாயக நடைமுறைகள் குறைவு என்றால், மேலும் கவனமாக இருக்கவேண்டும்.

பிரிவினைவாதம் பேசுபவர்களையும்கூடக் கைது செய்யக்கூடாது என்பது என் வாதம். ஆனால் கருணாநிதி எவ்வளவு அவசரமாக வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது, வைகோவைப் பழிவாங்க எவ்வளவு ஆர்வமாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது.

இம்முறை, வைகோ, கண்ணப்பனுக்கு பலத்த நேரடி ஆதரவுக்குரல் ஏதும் தென்படவில்லை. நெடுமாறன், சுப.வீரபாண்டியன், வீரமணி, ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் என்ன சொல்கிறார்கள்? ஜெயலலிதா சுண்டுவிரலைக்கூட அசைக்கமாட்டார்.

***

ராஜீவ் காந்தி சிலையைச் சேதம் செய்யும் தமிழ்த் தேசிய வெறியர்கள், முழு முட்டாள்கள். அடிப்படை அறிவு சிறிதும் அற்றவர்கள். இதனால் காங்கிரஸ் கட்சியை மேலும் அந்நியப்படுத்துவார்கள். விடுதலைப் புலிகள் “அன்னை சோனியா”விடம், தங்கள் குழுவின்மீதான தடையை விலக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என்று ஒரு செய்தியைப் படித்தேன். பிரபாகரன், தமிழக முதல்வர் கருணாநிதி எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகளைப் பாராட்டினார் என்ற ஒரு செய்தி, சன் நியூஸில் கீழே ஓடியது.

விடுதலைப் புலிகளுக்கே, தமிழ்த் தேசிய முரடர்கள் செய்வது கிலியைக் கொடுத்திருக்கும். உள்ளூர் முரடர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்தால், அது விடுதலைப் புலிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

***

இயக்குனர் சிகரங்கள் சீமான், அமீர் அதிகம் உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டாம். தலைவர் கருணாநிதியே களத்தில் இறங்கிவிட்டார். இனி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துவிட்டனர் போலும்.

விடுதலைப் புலிகளையோ அல்லது வேறு எந்த பிரிவினைச் சக்திகளையோ ஆதரித்துப் பேசுவது எந்தவிதத்திலும் குற்றம் அல்ல என்று கருதுபவன் நான். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்கள், காவல்துறையினர் ஆகியோர் அந்தக் கருத்தைக் கொண்டவர்கள் அல்லர்.

இந்தக் கருத்தைப் பொதுக்கருத்தாக ஆக்காமல், அதற்கான விவாதங்களைச் செய்யாமல், ஏதோ ராமேஸ்வரத்தில் களம் கிடைத்துவிட்டது என்பதற்காக, சூழ்நிலையை முற்றிலும் புரிந்துகொள்ளாமல் பேசியுள்ளனர். இத்தனைக்கும் மேடையில் சிலர் அவர்களை எச்சரித்துள்ளனர். அதைப் புறந்தள்ளிவிட்டு இவர்கள் இப்படிப் பேசியுள்ளனர்.

சீமான் இதுபோலப் பேசுபவர்தான். பருத்திவீரர் கொஞ்சம் அதிகமே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். மேடை புதுசு அல்லவா.

***

இப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருள்கள் அனுப்பவேண்டும் என்பதாகத் தமிழகப் போராட்டம் மாற்றப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் காசோலை எழுதித் தள்ளுகிறார்கள். இன்று செய்தித்தாள்களில் தமிழக அரசின் சார்பில் கால் பக்க விளம்பரங்கள் காணப்பட்டன.

என்ன உதவிப் பொருள்கள்? யாருக்குப் போகும்? யார் எடுத்துக்கொண்டு போகப்போகிறார்கள்? யார் விநியோகிக்கப் போகிறார்கள்?

இலங்கை அரசே இந்தப் பொருள்களை ‘திருடிக்கொள்ள’ வாய்ப்பு உள்ளது. எனக்கு இதில் சொந்த அனுபவம் உண்டு. சுனாமி நேரத்தில் மருந்துப் பொருள்களைச் சேகரித்து கொழும்பு TRO-வுக்கு அனுப்பினேன். ஸ்ரீலங்கன் விமானச் சேவை மூலம் அனுப்பப்பட்டது. போய்ச் சேர்வதற்குமுன்னரே கொழும்பில் இருந்த TRO பிரதிநிதி ஒருவருக்கு அது தொடர்பான தகவலை அனுப்பினேன். அவரால் கடைசிவரை அந்தப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவை எங்கே போயின என்றே தெரியாது. அரசே எடுத்துக்கொண்டிருக்கும் என்று அவர் தகவல் அனுப்பினார். அவ்வளவுதான்!

மற்றொருபக்கம், விடுதலைப் புலிகள் அந்தப் பொருள்களைத் தங்களுக்கென எடுத்துக்கொண்டுவிடுவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பொருள்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர என்ன வழிகள் மேற்கொள்ளப்படும் என்பதை தமிழக அரசும் இந்திய அரசும் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும். இல்லாவிட்டால், நிதி சேகரிப்பதில் தயக்கம் இருக்கும்.

இந்திய அரசு வழியாக அனுப்பாமல், தமிழக அரசே நேரடியாக உதவிப் பொருள்களை ஈழப் பகுதிக்கு அனுப்பவேண்டும் என்கிறார் ராமதாஸ். இது சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை.

முதலில் இந்தச் செயலை ஒருங்கிணைக்கப்போவது யார்?

ஆனால், அதற்குமுன், போரை நிறுத்தும் முயற்சிகளை எடுக்கவேண்டுமே? அதைப்பற்றி பிரணாப் முகர்ஜி ஒன்றுமே சொல்லவில்லையே? போர் தொடர்ந்தால், மக்கள் நிச்சயம் மேற்கொண்டு பாதிப்படைவார்கள். உதவிப் பொருள்களை அனுப்புவதால் பிரயோசனம் குறைவாகவே இருக்கும். வேண்டியவர்களுக்குப் போய்ச் சேராது.

எனவே முதல் நோக்கம் போரை நிறுத்துவது.

***

தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்யவேண்டும்?

* வெளிப்படையாகப் போர் நிறுத்தம் பற்றிப் பேசுவது உபயோகமாக இருக்காது. அந்நிய நாட்டின் இறையாண்மையில் இந்தியா தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு வரும். போர் நிறுத்தத்தால் அதிகம் லாபமடைவது விடுதலைப் புலிகள்தான்; எனவே அதற்காகத்தான் போர் நிறுத்தம் முன்வைக்கப்படுகிறது என்று கூக்குரல் எழும்.

(தி ஹிந்து இதை முன்னின்று நடத்த ஆரம்பித்துவிட்டது. தினம் தினம் ராஜபக்ஷ தி ஹிந்துவுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகளாகக் கொடுத்துத் தள்ளுகிறார். ராம் காலையில் எழுந்து, பல் தேய்த்த உடனேயே, நேரே கொழும்பு போய், ஒரு பேட்டி எடுத்துவிட்டு, மதியம்தான் மவுண்ட் ரோட் ஆஃபீஸுக்கு வருவார் போலிருக்கிறது!)

* எனவே பின்னணியில் இதனைச் செய்யவேண்டும். இலங்கை அரசைப் போர் நிறுத்தத்தை நோக்கிச் செலுத்தவேண்டும். அதே நேரம், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகொண்டு, போர் நிறுத்தத்தை வலியுறுத்தவேண்டும்.

* அட்டைக்கத்தி வீரர்களான வைகோ, அமீர் போன்றவர்கள், கையில் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்றெல்லாம் பேசுவதைத் தவிர்க்கவேண்டும். தேவை போரை நிறுத்துதல். மேலும் எண்ணெயை ஊற்றிப் பற்றவைப்பது அல்ல.

* அதன்பின், அமைதிப் பேச்சுவார்த்தையை நோக்கி விடுதலைப் புலிகளைச் செலுத்துதல். இதுதான் கஷ்டமான பகுதி. விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முன்னேற்றத்தில் இருந்தபோதே, அதிகம் சலுகைகள் கிடைக்கவில்லை. இப்போது, நிச்சயம் கிடைக்காது. இருந்தாலும் முயற்சி செய்யவேண்டும்.

* விடுதலைப் புலிகள், முகம் சுளிக்காமல், பிற தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஒருமித்த கருத்தை எட்ட முனையவேண்டும். பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் அமையவேண்டும் என்பதைவிட, தமிழர் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

“இல்லை, அப்படியெல்லாம் நடக்காது. சிங்களர்கள் எந்தக் காலத்திலும் தமிழர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையைத் தரமாட்டார்கள். தனி தமிழ் ஈழம் அமைந்தால் மட்டுமே, தமிழர் நலன் காக்கப்படும். அதுவும் ஆயுதம் ஏந்திப் போராடி, சிங்களர்களை வென்று, இலங்கையைப் பிளந்து, தமிழ் ஈழத்தை உருவாக்கியே தீர்வோம்.” என்பதுதான் விடுதலைப் புலிகளின் கருத்து என்றால், பிரச்னை இப்போது இருப்பது போலவே அல்லது இதைவிட மோசமாகத் தொடரும்.

9 comments:

 1. //இலங்கை அரசே இந்தப் பொருள்களை ‘திருடிக்கொள்ள’ வாய்ப்பு உள்ளது.//

  //மற்றொருபக்கம், விடுதலைப் புலிகள் அந்தப் பொருள்களைத் தங்களுக்கென எடுத்துக்கொண்டுவிடுவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.//

  விடுதலைப் புலிகள் 'எடுத்துக் கொண்டுவிடுவர்'. இலங்கை அரசு 'திருடிக் கொண்டு' விடும். எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது?

  //வெளிப்படையாகப் போர் நிறுத்தம் பற்றிப் பேசுவது உபயோகமாக இருக்காது. அந்நிய நாட்டின் இறையாண்மையில் இந்தியா தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டு வரும். //

  என்ன பயன் தராது? போர் நிறுத்தத்தைதான் ராஜிவ் காந்தி இந்திய அமைதிப் படைகொண்டு செய்தார். அதற்கு எதிர்ப்பு வந்தது விடுதலைப் புலிகளிடமிருந்துதான். அதைத்தான் இந்து ராம், மாலினி சுட்டிக் காட்டியிருந்தார்கள்.

  வழக்கம் போல இறுதிப் பாராவில் கொஞ்சம் சென்சிபிளாக எழுதுகிறீர்கள்.

  //இல்லை, அப்படியெல்லாம் நடக்காது. சிங்களர்கள் எந்தக் காலத்திலும் தமிழர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கையைத் தரமாட்டார்கள். தனி தமிழ் ஈழம் அமைந்தால் மட்டுமே, தமிழர் நலன் காக்கப்படும். அதுவும் ஆயுதம் ஏந்திப் போராடி, சிங்களர்களை வென்று, இலங்கையைப் பிளந்து, தமிழ் ஈழத்தை உருவாக்கியே தீர்வோம்.” என்பதுதான் விடுதலைப் புலிகளின் கருத்து என்றால், பிரச்னை இப்போது இருப்பது போலவே அல்லது இதைவிட மோசமாகத் தொடரும். //

  இந்த ஒரு பாராவுக்காக மேலே உள்ள குப்பை கருத்தை எல்லாம் படிக்க வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 2. முதலில் இந்தச் செயலை ஒருங்கிணைக்கப்போவது யார்?

  ஆனால், அதற்குமுன், போரை நிறுத்தும் முயற்சிகளை எடுக்கவேண்டுமே? அதைப்பற்றி பிரணாப் முகர்ஜி ஒன்றுமே சொல்லவில்லையே? போர் தொடர்ந்தால், மக்கள் நிச்சயம் மேற்கொண்டு பாதிப்படைவார்கள். உதவிப் பொருள்களை அனுப்புவதால் பிரயோசனம் குறைவாகவே இருக்கும். வேண்டியவர்களுக்குப் போய்ச் சேராது.

  எனவே முதல் நோக்கம் போரை நிறுத்துவது//

  அதிகம் ??? உண்டு ஆனாலும் கூட ஈழமக்களிடம் ஒரு !!! ஏற்படுத்துவதிலோ அல்லது கவனத்தை கொண்டுவருவதிலேதான் தமிழக அரசியல்வாதிகள் போட்டி போட்டு நிற்கின்றனர்!

  இவர்களின் போட்டி முடிவுக்கு வந்து உதவிகள் போய் சேரும் காலத்தில் இருக்கும் ஈழ உறவுகள் மனங்களில் வெறுப்புக்கள்தான் வீற்றிருக்ககூடும்!

  ReplyDelete
 3. What we need is Neethi, not nithi. (justice not money). Because of the recent pro-eelam uprisal in Tamil Nadu, Karunannithi has reaped very well. See the old man's stratey! He has diverted the whole issue. Now all those who spoke for srilankan tamils are busy collecting donations. Nobody understands the venomity of Karunanithi behind this idea. Again a set back for the srilankan tamils tanks to karunanithi.

  ReplyDelete
 4. @anonymous
  //விடுதலைப் புலிகள் 'எடுத்துக் கொண்டுவிடுவர்'. இலங்கை அரசு 'திருடிக் கொண்டு' விடும். எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது? //

  உதவி பொருட்கள் இலங்கை அரசு உதவியுடனே தான் கொடுக்க முடியும். அவ்வாறு கொடுக்கும் போது புலிகள் ஈழ தமிழ்ர்களின் போர்வையில் பயன் பெற முடியுமே தவிர திருட வாய்ப்பில்லை. ஆனால் இலங்கை அரசு செய்தால் அது திருட்டு தவிர வேறு இல்லை

  //என்ன பயன் தராது? போர் நிறுத்தத்தைதான் ராஜிவ் காந்தி இந்திய அமைதிப் படைகொண்டு செய்தார். அதற்கு எதிர்ப்பு வந்தது விடுதலைப் புலிகளிடமிருந்துதான். அதைத்தான் இந்து ராம், மாலினி சுட்டிக் காட்டியிருந்தார்கள்.//

  ராஜீவ்காந்தி போர்நிறுத்தத்தை விடுதலை புலிகள் இல்லாமல் ஒபந்தம் போட்டார்கள் :) நல்ல போர்நிறுத்த ஒபந்தம் அதுக்கு ராம் ஒரு வக்காலத்து!!

  ReplyDelete
 5. //இலங்கை அரசே இந்தப் பொருள்களை ‘திருடிக்கொள்ள’ வாய்ப்பு உள்ளது. எனக்கு இதில் சொந்த அனுபவம் உண்டு. சுனாமி நேரத்தில் மருந்துப் பொருள்களைச் சேகரித்து கொழும்பு TRO-வுக்கு அனுப்பினேன். ஸ்ரீலங்கன் விமானச் சேவை மூலம் அனுப்பப்பட்டது. போய்ச் சேர்வதற்குமுன்னரே கொழும்பில் இருந்த TRO பிரதிநிதி ஒருவருக்கு அது தொடர்பான தகவலை அனுப்பினேன். அவரால் கடைசிவரை அந்தப் பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவை எங்கே போயின என்றே தெரியாது. அரசே எடுத்துக்கொண்டிருக்கும் என்று அவர் தகவல் அனுப்பினார். அவ்வளவுதான்!//

  பத்ரி, சுனாமி நேரத்தில் அமெரிக்காவிலிருந்து அனுப்பப் பட்ட உதவிப் பொருட்களும் இது மாதிரி திருடப்பட்டன. குறிப்பாக தமிழ் அமைப்புகள் அல்லாமல் அமெரிக்கர்கள் தாங்களாகவே தேவாலயங்கள் மூலம் அனுப்பிய பொருட்கள் வடக்கு-கிழக்குக்கு மட்டும் செல்ல வில்லை. குறிப்பாக சில அமெரிக்கப் பெண்கள் தங்களுடைய தேவாலயம் மூலமாக அதிக விலையுள்ள பத்து தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை இலங்கையில் சுனாமியால் பாதிக்கப் பட்ட எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தனர். சிங்களப் பகுதிகளுக்கு அனுப்பப் பட்ட ஆறு இயந்திரங்கள் ஒழுங்காகச் சேர்ந்தன. மீதி நான்கு இயந்திரங்களை கொழும்பு சுங்கத்துறை பலவித நிபந்தனைகளை விதித்து நிறுத்தி வைத்தனர். இப்பெண்களும் பலவழிகளில் போராடி, மேலும் அதிகப் பணத்தை அபராதமாகச் செலுத்தி கடைசியில் இரண்டுதான் போய்ச் சேர்ந்தன. மீதி இரணடை ஊழல் அதிகாரிகள் திருடிக் கொண்டனர். இதுவரை இலங்கை இனப் பிரச்னையைப் பற்றி அதிகம் அறியாத அந்தப் பெண்மனிகளில் ஒருவர் இப்பொழுது ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒருவராக மாறிவிட்டார். 27 அமெரிக்க மருத்துவர்கள் ஒரு பன்னாட்டு அமைப்பு மூலம் சுனாமியின் போது தமிழர் பகுதிகளுக்குப் பணியாற்றச் சென்றனர். அவர்களில் பலர் போய் வந்த பின் இலங்கை அரசின் வண்டவாளங்களை வெளிப்படுத்தினர்.

  சுனாமியின் போது பன்னாட்டு நிறுவனங்கள் தமிழர்களுக்காக இலங்கை அரசு வழியாக அனுப்பிய உதவிகளையெல்லாம் அரசு அபகரித்துக் கொண்டது. ஆனால் என். இராம் ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் (குறிப்பாக ஜப்பான்) சந்தித்து, புலிகளைக் காரணம் காட்டி, சுனாமி உதவிகளைத் தமிழர் பகுதிகளுக்கு நேரடியாக அனுப்பக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

  இந்தியக் குடிமகனான என்.ராம் இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் இதுபோல் வேற்று நாட்டின் அதிகாரப்பூர்வமான ஏஜண்டாகச் செயல்படுவதைத் தடுக்க இந்தியச்சட்டத்தில் இடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

  நன்றி - சொ.சங்கரபாண்டி

  ReplyDelete
 6. //இந்தியக் குடிமகனான என்.ராம் இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் இதுபோல் வேற்று நாட்டின் அதிகாரப்பூர்வமான ஏஜண்டாகச் செயல்படுவதைத் தடுக்க இந்தியச்சட்டத்தில் இடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. -சொ.சங்கரபாண்டி//

  யார் சொன்னது என். ராம் இந்தியக் குடிமகன் என்று? நீங்கள் அமெரிக்கக் குடியுரிமை பெறுவதற்கு முன்னரேயே அவர் சீனக் குடியுரிமை பெற்றுவிட்டாரே!

  ReplyDelete
 7. முன்னர் எழுதிய கட்டுரைகளுக்கு வந்த வசைகளைக்கண்டு பயந்து இப்படி ஒரு வழக்கமான பேடித்தனமான பதிவு. உம்மை ஈழத்தமிழர்கள் பற்றி இப்படி எழுதச்சொல்லி யாராவது கையை முறுக்குகிறார்களா? வீண் பாவ்லா! இல்லை எங்கே உங்கள் புத்தகங்களுக்கான சந்தை குறைந்துவிடும் என்ற பயத்தில் இப்படி பிதற்றி இருக்கிறீர்களா?

  ஏதோ தமிழர்கள் மீது நிறையவே அக்கரை கொண்டு மருந்து அனுப்பியதை பறைசாற்ற இப்படி ஒரு பதிவு...ரொம்ப நம்பிட்டோம் உம்மை!

  ReplyDelete
 8. did you see what peyarili says

  http://blog.sajeek.com/?p=438

  If Dondu’s daugher got raped and killed by someone, I would send a mail to him that I am happy with what happened to him (NOT to her - I certainly will be sorry for her). Simlar mail will go from me to Assam Ratnesh, if his small son got into a bombblast in Assam and did.

  why indians support them?

  ReplyDelete
 9. அன்பான தமிழக நண்பர்களே !
  இலங்கை தமிழ் பேசும் மக்கள் மீதான உங்கள் உணர்வின் வெளிப்பாடுகளும் மனித நேய செயல்பாடுகளும் துயர்உறும் ஈழதேசத்து மக்களின் வாழ்க்கையில் அமைதியையும் உரிமைகளையும் பெற்றிட வழிசமைக்க வேண்டும்.
  எம் மக்களின் துயர்களில் பங்குறும் தமிழக மக்களுக்கு எனது நன்றிகளும்.

  துரதிஸ்ட வசமாக தமிழ் பேசும் மக்கள் மீதான உங்கள் உணர்வின் வெளிப்பாடுகள் விடுதலைபுலிகளின் ஆதரவு செயல்பாடாக மாற்றப்பட்டதன் மூலம் வீணடிக்கப்பட்டுள்ளது.
  இந்த வரலாற்று துரோகத்தை செய்துமுடித்த தமிழ் தேசிய வெறியாளர்களின் முகங்களில் காறி உமிழ்கிறேன்.
  தமிழ் தேசிய வெறியாளர்களின் புலிகளை காப்பாற்றும் முயற்கிக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் எவ்வாறு பலியாக்கப் ப்பட்டது என்பது பற்றியும் எனிவரும் காலங்களில் இலங்கை தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் தமிழக மனித நேய செயல்பாட்டார்களிடம் ஏற்படுத்தப்படவேண்டும்.

  இவ்வாறான ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டுமாயின் தமிழ் பேசும் மக்களின் உண்மையான போராட்ட நிகள்வுகளும் அவர்களின் அபிலாசைகளும் புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புக்களின் பிரநிதித்துவம் செயல்பாடுகள் தொடர்பாகவும் இலங்கை அரசின் இனவாத செயல்பாடுகள் மனித உரிமை மீறல்கள் அரசியல் தீர்வு தொடர்பான இலங்கை அரசினதும் மற்றைய கட்சிகளினது நிலைப்பாடுகள் தொடர்பாக உண்மையான தகவல்களை அறிந்து கொள்வதனுடாகவே சாத்தியமாகும்.இதற்கு மாற்று இணைய வலைகளான தேனீ தமிழ்நீயுஸ்வெப் (thenee.com ,tamilnewsweb.com ,thayagam.com ) தாயகம் போன்ற இணையங்களும் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தப்பட வேண்டும்.


  வன்னிப்பிரதேசம் மீதான இலங்கை இராணுவத்தின் தாக்குதல் ஆரம்பமகி விடுதலைபுலிகளின் இருதயபகுதிகளாக கருதப்பட்ட முக்கிய பிரதேகங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பமாகியதும் தமிழகத்தில் இலங்கை தமிழ்பேசும் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான கரிசனைகள் என்றுமில்லாதவாறு அக்கரை கொள்ளப்பட்டது .

  1986 காலப்பகுதியில் ரேலோ போராட்ட இயக்கத்தை செர்ந்த பல நுறு போராளிகளை இந்திய கைகூலிகள் என கூறி வீதியோரங்களில் புலிகள் எரித்தபோதும் சரி எம்மோடு சகோதரர்களாக வாழ்ந்த பலஆயிரம் யாழ் தமிழ் முஸ்லீம்களை உடுத்த துணியுடன் மட்டும் புலிகள் விரட்டியடித்தபோதும் சரி அல்லது 1987 காலபகுதியில் இலங்கை அரசபடையால் கிழக்கு மாகாணம் மீதான தாக்குதல் நடவெடிக்கையின்பேது விமான குண்டுவீச்கு செல் தாக்குதல்களால் நுற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்கான தமிழ்பேசும் மக்கள் அகதிகளாகவும் ஆனபோது அப்பொது எல்லாம் கொந்தளிக்காத தமிழ் உணர்வு ஏன் இப்போது மட்டும் பொங்கி பெருகிகிறது. அன்று இறந்தவர்களும் மனிதர்களே !
  கொலைக் கலாச்சாரமும் மனித உரிமை மீறல்களும் யாரால் நிகள்த்தப்பட்டாலும் கண்டிக்கப்பட வேண்டும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கையில் இனவாதஅரசையும் பாசிச புலிகளையும் ரிஎம்விபி மற்றும் ஆயுத அமைப்புக்களின் செயல்பாடுகளையும் புறம் தள்ளி தமிழ்பேசும் மக்களின் வாழ்வில் அமைதியும் அரசில் தீர்வும் ஏற்பட ஐனநாயக சக்திகள் கைகோர்க்க வேண்டும்.தமிழகத்திலும் இலங்கை தமிழ்பேசும் மக்கள் தொடர்பாக கொலைகளும் மனித உரிமை மீறல்களும் யாரால் நிகள்த்தப்பட்டாலும் கண்டிக்கப்படுவதுடன் இலங்கை தமிழ்பேசும் மக்களை பிரதிநிதித்துவ படுத்தும் தமிழ் அமைப்புக்களின் கருத்துக்களும் கவனம் கொள்ளப்பட வேண்டும்.
  "புலம்பெயர் அகதி".

  ReplyDelete