Monday, December 28, 2009

எமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்

இந்தப் புத்தகக் கண்காட்சியின்போது அறிமுகமாகும் ஒரு புத்தகம் ஜே.பி எமர்ஜென்ஸி காலகட்டத்தில் சண்டிகரில் சிறையில் இருந்ததைப் பற்றிய ஒரு புத்தகம்.

அப்போது சண்டிகரின் மேஜிஸ்திரேட்டாகவும் மாவட்ட ஆட்சியராகவும் இருந்தவர் எம்.ஜி.தேவசகாயம் என்ற தமிழர். (இப்போது சென்னையில் வசிக்கிறார்.) இவர் ஆங்கிலத்தில் எழுதி Roli Books வாயிலாக வெளியாகியிருந்த JP in Jail என்ற புத்தகத்தின் தமிழாக்கம்தான் இது. ஆனால் ஒரு வித்தியாசம். பொதுவான தமிழாக்கங்களைப் போல் இல்லாமல், தமிழ்ப்படுத்தியபின் தேவசகாயமே முழுவதுமாகப் புத்தகத்தைப் படித்துவிட்டு, பல இடங்களில் மாறுதல்களையும் செய்து தந்தார். ஆங்கிலத்தைவிடத் தமிழில் புத்தகம் நேரடியாக அவரது உள்ளத்தைப் பேசுகிறது என்றார்.

உண்மையில், எமர்ஜென்ஸி தமிழகத்தில் அவ்வளவு உச்சத்தில் இல்லை. அதன் காரணமாகத்தான் எமர்ஜென்ஸிக்குப் பிறகு காங்கிரஸால் தமிழகத்தில் எளிதில் வெற்றிபெற முடிந்தது. ஆனால் வட மாநிலங்களில் எமர்ஜென்ஸி வெறியாட்டம் மிகக் கடுமையாக இருந்தது. தனி மனிதன் பாதிக்கப்படுவது ஒரு விஷயம். அதைவிடக் கொடுமை ஒரு ‘சிஸ்டம்’ அழிக்கப்படுவது.

ஒரு தனி மனிதனை இரவோடு இரவாகக் கைது செய்தால் யாரிடம் சென்று முறையிடுவது? யாரிடமும் முறையிட முடியாது. தனிப்பட்ட விரோதம் காரணமாக சில காங்கிரஸ் அரசியல்வாதிகள், நிர்வாகிகளின் துணையோடு பலரைப் பழிவாங்கியதும் இந்தக் காலத்தில் நடந்தது. எதிர்க் கேள்வி கேட்க யாருமே இல்லை.

இந்தப் புத்தகம் எமர்ஜென்ஸியில் என்னவெல்லாம் நடந்தது என்பதை விளக்கும் புத்தகம் அல்ல. அந்தக் காலகட்டத்தில் ஜே.பி என்ற தனி நபர் எந்தக் காரணமும் காட்டப்படாமல் ஜெயிலுக்குள் தள்ளப்படுகிறார். அந்தக் கட்டத்தில் அவர் வாழ்க்கையில் தினம் தினம் என்ன நடந்தது, இந்திரா காந்தி தரப்பிலிருந்து என்னென்ன சமரச முயற்சிகள் நடைபெற்றன, ஜே.பியின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்தன, ஜே.பியைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதா, கடைசியில் ஜே.பி ஏன் விடுதலை செய்யப்பட்டார் போன்ற விவரங்களை தேவசகாயம் தருகிறார். ஒரு மேஜிஸ்திரேட்டாக, ஜே.பியின் சிறைவாசத்துக்கு தேவசகாயம்தான் பொறுப்பாக இருந்தார். எனவே கிட்டத்தட்ட தினம் தினம் ஜே.பியோடு தொடர்பில் இருந்தார்.

ராம்கி இந்தப் புத்தகத்தை தமிழாக்கம் செய்வதன்மூலம் ஆங்கிலம்->தமிழ் மொழிமாற்றல் துறைக்கு வருகிறார். இதற்குமுன் ரஜினி, ஜெயலலிதா போன்ற சில வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர், நன்கு சரளமாகத் தமிழில் படிக்கக்கூடிய வகையில் இந்தப் புத்தகத்தில் பணியாற்றியுள்ளார். தேவசகாயம் தனிப்பட்ட முறையில் ராம்கியின் தமிழாக்கத்தை வெகுவாகப் பாராட்டினார்.

அதன் காரணமாக, ராம்கிக்கே மொழிமாற்றத்தில் பெரும் ஆர்வம் வந்துள்ளது. அடுத்து ஐரம் ஷர்மிளா என்ற மணிப்பூர் போராளி பற்றிய புத்தகம் ஒன்றை ராம்கி தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இது மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது.

சமகால வரலாற்றை விரும்புபவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் எமர்ஜென்ஸி: ஜே.பி.யின் ஜெயில் வாசம்.

3 comments:

 1. சூப்பர்.

  தமிழ்நாட்டு எமர்ஜென்ஸி பற்றி புதியதாக கிழக்கு ஒரு புத்தகம் வெளியிடவேண்டும். ஸ்டாலின் அரசியலுக்குள் தீவிரமாக நுழைந்த கதையிலிருந்து வடநாட்டு தலைவர்களுக்கு தமிழகத்தில் கலைஞர் தஞ்சம் கொடுத்த கதை வரை எழுதலாம்.

  ReplyDelete
 2. ராஜிவ் கொலை வழக்கு போல விறுவிறுப்புக்கு உத்திரவாதம் உண்டா? அல்லது மொழிபெயர்ப்புகளுக்கே உண்டான கொட்டாவிகள் கியாரண்டியா?

  ReplyDelete
 3. அதிஷா: எல்லாப் புத்தகங்களுமே விறுவிறுப்பு ரேஞ்சில் வருமா? இது வரலாறு. பதிவு செய்யப்படவேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்படும் முதன்மை ஆவணம்.

  ஆனால் புத்தக ஆசிரியர் தேவசகாயம் தன் கைவசம் ஜே.பி எழுதிய பல explosive கடிதங்களின் பிரதிகள் உள்ளன என்கிறார். அடுத்து அவற்றை எடிட் செய்து ஒரு புத்தகமாகக் கொண்டுவரும் வேலையில் இறங்குவோம். அது ‘பரபரப்பாக’ இருக்கலாம்...

  லக்கி: அந்தக் கதையை ஸ்டாலினே எழுதினால் நன்றாக இருக்கும். கிழக்கு வெளியிடத் தயார்!

  ReplyDelete