Thursday, December 31, 2009

வாத்யார்: எம்.ஜி.ஆர் வாழ்க்கை

எம்.ஜி.ஆர் ஒரு விசித்திர மனிதர். மேலோட்டமாகப் பார்க்கும்போது எனக்கு அவர் ஒரு கோமாளியாக மட்டுமே தெரிந்தார். நாகப்பட்டினத்தில் என் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டிவிட்டுப் போயிருந்த எம்.ஜி.ஆர் போஸ்டர்களை நான் கிழித்து எறிய, அதனால் கடும் ஆவேசம் கொண்ட சில ரசிகர்களின் கெட்ட பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில் கருணாநிதி, கலியமூர்த்தி என்று இரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என் வகுப்பில் இருந்தனர். தினம் தினம் கலைஞர் கருணாநிதியையும் நடிகர் சிவாஜி கணேசனையும் திட்டித் தீர்ப்பதுதான் அவர்கள் வேலை. அவர்கள் இன்றும் எம்.ஜி.ஆரை வழிபடும் பக்தர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ்ச் சினிமாக்களில் எம்.ஜி.ஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.

தனிப்பட்ட முறையில் எந்த எம்.ஜி.ஆர் படத்தையும் முழுதாக உட்கார்ந்து என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் படங்கள் வேறு யாருக்காகவோ எடுக்கப்பட்டுள்ளன என்று விட்டுவிடுவேன்.

அரசியல் தளத்தில் எம்.ஜி.ஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்.ஜி.ஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது பெரும் ஆச்சரியம்தான்.

எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.

என்றாவது, யாராவது ஒருவர் எம்.ஜி.ஆரின் நிர்வாகத் திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்.ஜி.ஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு மக்கள் தலைவர் என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.

அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் அவர் நிர்வாகத்துக்குச் சற்றும் லாயக்கற்றவர் என்பதைச் சிறிதும் உணராமல் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது. அவரது மறைவின்போது சென்னையில் நடந்த கலாட்டாக்களை நான் நேரில் பார்த்தேன். (அப்போது நான் சென்னை ஐஐடியில் படித்துக்கொண்டிருந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் முட்டாள்தனமாக சுற்றினேன். பைத்தியம் பிடித்த ரசிகர்கள் யாராவது என்னை நையப் புடைத்திருக்கக்கூடும்! நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன்!)

அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வாத்யார் என்றாலே பொதுமக்களுக்கு அவர் ஒருவர்தான். (இந்தப் பெயர் ஏன் வந்தது?)

===

எம்.ஜி.ஆர் பற்றிய முத்துக்குமாரின் புத்தகத்தில் ஓரளவுக்கு முழுமையான சித்திரம் உருவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆயினும் நிறைய விடுபடல்கள் உள்ளன. முத்துக்குமார் தனது இரண்டாவது எடிஷனில் நிறையச் சேர்க்கக்கூடும்.

முத்துக்குமாரின் எழுத்தில் நல்ல முதிர்ச்சி வந்துள்ளது.

தீவிர திமுக அனுதாபியான முத்துக்குமார் எம்.ஜி.ஆரை நேர்மையாகவே கையாண்டுள்ளார். முத்துக்குமார் கருணாநிதி வாழ்க்கை வரலாறு எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும்.

[மேலே நான் எம்.ஜி.ஆர் பற்றி எழுதியதற்கும் எம்.ஜி.ஆர் புத்தகத்தில் உள்ளதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. எம்.ஜி.ஆர் புத்தகத்தைப் பற்றி சொல்ல நினைத்தேன். கூடவே எம்.ஜி.ஆர் பற்றி எனக்குத் தோன்றியதையும் உடன் எழுதிவிட்டேன்.]

புத்தகத்தை வாங்க
.

6 comments:

  1. திமுகவிலிருந்து ”கணக்கு கேட்டு” வெளியேற்றப்பட்டதால், வாத்தியார் என்று அழைக்கப்பட்டார்

    ReplyDelete
  2. Dear Badri,

    Former DGP K Mohandass wrote a book on MGR: MGR the man and the myth. I don't remember who published it. [A google search says Panther Publishers, Bangalore] I haven't read it. May be it contains some insights into his administration.
    I remember Cho S Ramaswamy wrote regularly about them in Thuglak.

    Ever thought of asking him to write a book for Kizhakku?

    With Regards
    Narasimhan

    ReplyDelete
  3. Badri , can you please consider selling the e-book version of all the books in NHM? May be at the same rate as you are selling the hard copy.

    ReplyDelete
  4. தமிழ்நாட்டில் புரோகிதரை "வாத்யார்" என்று அழைக்கும் வழக்கம் ஒரு சாராரிடம் உண்டு. எம்.ஜி. ஆர். அவரது ரசிகர்களால், பெரும்பாலும் படிக்காத, பாமர, உழைக்கும் வர்க்க, கிராமப்புற ரசிகர்களால், "வாத்தியார்" என்று அழைக்கப்பட்டார், "ஆசிரியர்", "கற்றுத்தருபவர்" என்ற பொருளில். சிலர் தாங்கள் மதிக்காத ஆசிரியர்களை "வாத்தி", "வாத்தியான்" என்றும் சொல்வதுண்டு. தாங்கள் மதிப்பவர்களையே,எம்ஜிஆரைப் போன்றவர்களை, "ஆர்" விகுதி சேர்த்து "வாத்தியார்" என்று குறிப்பிடுவார்கள். இப்படி இருக்கையில் "வாத்தியார்" எப்படி "வாத்யார்" ஆனார்? இது எழுத்தாளரின் அறியாமையா அல்லது பதிப்பாசிரியரின் தகிடுதத்தமா? (ஒரு எம்ஜிஆர் படப்பாட்டும் இருக்கிறது: "வாங்கைய்யா வாத்தியாரைய்யா; வரவேற்க வந்தோமைய்யா; ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமைய்யா")

    ஓரெழுத்து வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விமர்சிக்கும் இது மொட்டைக்கு மயிர் எடுக்கிற வேலை மாதிரித் தெரியலாம். ஆனால் இந்த ஓரெழுத்து வித்தியாசம் கலாச்சார நுட்பம் கொண்டது. எழுத்து, பதிப்புத் தொழிலில் இருப்பவர்களுக்கு கலாச்சார நுண்ணுணர்வு இருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. //தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்.ஜி.ஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. //

    no its wrong.கப்பி சாலைகள் அனைத்தும் மெட்டல் சாலைகளாக மாற்ற‌ கொள்கை முடிவெடுத்து அதை ஆட்சி காலத்திற்குள் செய்தும் காட்டியது 1996~2001 ல் அமைந்த திமுக அரசு. 1999 ல் மத்தியில் அமைந்த பாஜக அரசின் பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் நிதியும் அதற்கு பெருமளவில் உதவி புரிந்தது.

    ReplyDelete
  6. ஆரம்பிச்சிட்டாங்கப்பா.... சென்னைத்தமிழில் “வா வாத்யாரே”தான், எந்த இனமானாலும் சரி.......வா வாத்தியாரே இல்லை .... எங்கடா சாதி தெரியும்னுட்டு ஒரு கூட்டமே பூதக்கண்ணாடியோட அலயுது... இதுலயும் சாதியிருக்கா பாருங்கப்பா .... பூதம்னா வடமொழிப் பெயர், பஞ்சபூதம், மாத்ருபூதம்.... பூதக்கண்ணாடியும் பூனூல் போட்ட கண்ணாடிதான் ஒங்க கணக்குல, வெங்காயம்

    ReplyDelete