Thursday, December 31, 2009

லண்டன் டயரி - இரா.முருகன்

இந்த ஆண்டு நான் வேலை செய்த புத்தகங்களில் ரசித்து ரசித்துப் படித்தது இரா.முருகனின் லண்டன் டயரி. லண்டனில் பல மாதங்கள் தங்கியிருக்கிறேன். தெருக்களில் தனியாகச் சுற்றியிருக்கிறேன். நாள் முழுமைக்குமான அல்லது வார இறுதிக்கான தரையடி ரயில் டிக்கெட் எடுத்து ஊர் சுற்றியிருக்கிறேன். ஆனால் எப்போதும் ஒரு எழுத்தாளனின் பார்வையில் நகரைப் பார்வையிட்டது கிடையாது; மக்களைப் பார்த்தது கிடையாது. அவர்களை மனத்தளவிலாவது குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது கிடையாது.

ஆரம்பத்தில் வியக்கவைத்த கட்டடங்கள்கூட ஒரு கட்டத்தில் பிரமைகள் அகன்று சாதாரணமான இடங்களாகத் தோன்ற ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் மெஷின் போல பாடிங்க்டன் ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கே கிடைக்கும் விதவிதமான சூப் கிண்ணங்களை வாங்கிக்கொண்டு, குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து, ரயிலில் ஏறி, ரயில் மாறி, இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கி, கூட்ட நெரிசலில் கரைந்து ஒரு புள்ளியாகி, அலுவலகம் சென்று, வேலையை முடித்து, மீண்டும் அதே பாதையைப் பின்பற்றி, மீண்டும் வசிக்கும் ஹோட்டல் வந்து, மீண்டும்...

இரா.முருகனின் புத்தகத்தை எடிட் செய்ய எடுத்தபோது நான் எங்கோ விட்டு வந்திருந்த லண்டன் மீண்டும் நினைவுக்கு வர ஆரம்பித்தது. இது தினமணி கதிரில் தொடராக வந்தபோது படித்திருந்தேன். ஆனால் விட்டு விட்டு (சில வாரங்கள் ஊர்ப் பயணத்தில் நிஜமாகவே விட்டுப்போய்) படித்ததில் அதே அனுபவம் வாய்க்கவில்லை. இப்போது மொத்தமாகப் படித்ததில் ஒரு முழுமை கிடைத்தது. லண்டனையே பார்த்திராதவர்கள் இந்தப் புத்தகத்தை எப்படிப் புரிந்துகொள்வார்கள்? தெரியவில்லை. புத்தகத்தைப் படித்த யாராவதுதான் சொல்லவேண்டும்.

லண்டனில் தனது நடைப்பயணங்களை முன்வைத்து இரா.முருகன் எழுதியதுடன், கூடவே தன் இயல்பான நகைச்சுவை நடையில் லண்டனின் வரலாற்றையும் தனியாகப் பின்னர் கொடுத்திருந்தார். ஆனால் அது தனியாகப் பின்னால் ஒட்டவைத்தால் சரியாக வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே அந்த வரலாற்றைப் பல துண்டங்களாகப் பிய்த்து ஒவ்வொரு அனுபவ அத்தியாயத்துக்கு முன்னதாக ஒரு துண்டாகச் சேர்த்தேன். இப்போது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் பா.ராகவனுக்கு அந்த அளவுக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் எனது மாற்றத்தை இரா.முருகனுக்கு அனுப்பி அவரது ஒப்புதலும் பெற்றபிறகு புத்தகமானது.

வேண்டிய படங்கள் சேர்க்கப்பட்டு, புத்தகம் உயிர்பெறத் தொடங்கியது. ஈஸ்ட் ஹாம் படம் ஒன்று தேவை. கிரிதரன் உதவினார். ஒரு வார இறுதியில் ஈஸ்ட் ஹாம் சென்று பல படங்களைக் கிளிக்கி அனுப்பிவைத்தார். அதிலிருந்து ஒரு படத்தை எடுத்துக்கொண்டோம்.

ஆக, இது வரலாறா? ஒரு தனி மனிதன் உலகின் பெரு நகரம் ஒன்றில் பெற்ற அனுபவங்களா?

இரண்டும் கலந்தது. இனிமையானது.

இதை ஸ்காட்லாந்து டயரி (அல்லது எடின்பரோ டயரி?) என்றல்லவா சொல்லவேண்டும் என்று கேட்டார் கிரிதரன். ஏனெனில் இதில் உள்ள அனைத்தும் எடின்பரோவில் வசித்த காலத்தில் இரா.முருகன் எழுதியவை. ஆனால் இது லண்டன் பற்றிய டயரி அல்லவா? ஒவ்வொரு வார இறுதியும் எடின்பரோவிலிருந்து லண்டன் வந்து சுற்றியபின் அவர் எழுதியது.

எந்த டயரியாக இருந்தாலும் சரி, இந்த நடையில் எழுதினால், படித்துக்கொண்டே இருக்கலாம்!

புத்தகத்தை வாங்க.
.

3 comments:

  1. பத்ரி, நல்ல அறிமுகம். நூலை அபிஷியலாக (இயந்திரத்தனமாக) அல்லாமல் உங்களின் அனுபவங்களுடன் இணைத்து எழுதும் சமீபத்திய பதிவுகள் சுவாரசியமாக உள்ளன. இப்படியே தொடருங்கள்.

    wrapper நன்றாக உள்ளது. புகைப்படத்தை அப்படியே உபயோகிக்காமல் கோட்டோவியமாக மாற்றி.. good.

    ReplyDelete
  2. [[[ஆனால் பா.ராகவனுக்கு அந்த அளவுக்குப் பிடிக்கவில்லை.]]]

    அண்ணனுக்கு எதுதான் புடிச்சிருக்கு 'மாவோ'வைத் தவிர..?

    ReplyDelete
  3. உத.
    பாரா வை ஏன் செஞ்சீனப் படைத் தலைவர் ரேஞ்சக்கு ஆக்கியிருக்கீங்க..மனுஷன் நொந்துக்கப் போறாரு..மாவா'யே விட்டாலும் விட்டுறுவார் !

    ReplyDelete