Monday, June 06, 2011

இலங்கைக்கு ஒரு கலாசாரப் பயணம்

சில மாதங்களுக்குமுன் அஜந்தா குகைகளுக்குச் சென்றதைப் பற்றி எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து, ஒரு மூன்று நாள் இலங்கையில் சில புத்த பாரம்பரிய இடங்களுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன்.

நான் தேர்ந்தெடுத்த இடங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னங்கள் உள்ள நகரங்கள்: அநுராதபுரம், பொலனறுவ, சிகிரியா, தம்புள்ள, கண்டி.

அநுராதபுரம்தான் சிங்கள அரசர்களின் தலைநகரமாக இருந்துவந்தது. அவர்களது பெரும்பாலான கட்டுமானங்கள் இங்கேதான் இருந்தன. இரு மாபெரும் செங்கல் ஸ்தூபிகள், பல விகாரைகள், இரட்டைத் தடாகம் என்று பார்க்க இங்கு பல விஷயங்கள் உள்ளன. மகா போதி மரம் இங்குதான் இருக்கிறது. புத்தர் ஆன்ம ஞானம் பெற்ற போதி மரத்தின் (அரச மரம்) சிறு கிளை ஒன்றை சுமார் கி.மு 300 வாக்கில் அசோகரின் மகள் சங்கமித்திரை இலங்கைக்குக் கொண்டுவந்து கொடுத்தார் என்பது இவர்களது நம்பிக்கை. அந்த மரம் அநுராதபுரத்தில் நடப்பட்டு அது இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.

ஜேதவனரமய ஸ்தூபி, அநுராதபுரம்
மகா போதி, அநுராதபுரம்

சிகிரியா என்பது சிறு குன்று. காஷ்யபன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. இவன் தந்தை தாதுசேனன் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். தாதுசேனனின் முதல் மகன்தான் காஷ்யபன் என்றாலும் அவனது தாய் பட்டத்து அரசி கிடையாது. இரண்டாவது மகன் முகிலன், பட்டத்து ராணிக்குப் பிறந்தவன். தந்தை தனக்கு ராஜ்ஜியத்தைத் தரப்போவதில்லை என்பதை உணர்ந்த காஷ்யபன், தந்தையைக் கொன்றுவிட்டு நாட்டை எடுத்துக்கொண்டான். முகிலன் இந்தியாவுக்கு ஒடிச் சென்று படை திரட்டுவதில் ஈடுபட்டான். தம்பி வந்து தன்னுடன் போர் புரிவான் என்பதால் காஷ்யபன் சிகிரியா என்ற குன்றைத் தன் கோட்டையாக ஆக்கிக்கொண்டான். இரண்டு அகழிகள், மூன்று சுற்றுச் சுவர்கள் என்று பலமான கோட்டை. உள்ளே பல தோட்டங்கள், குளங்கள் என்று கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான இடம். இங்குதான் சில சுவர் ஓவியங்கள் உள்ளன. அஜந்தா பாணியைப் பின்பற்றி வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் வெறும் எச்சங்களே. ஒரு காலத்தில் இங்கு எண்ணற்ற பல ஓவியங்கள் இருந்திருக்கவேண்டும். இங்கு பழைமையான சில பிராமி கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

சிகிரியா குன்று
சுவர் ஓவியம், சிகிரியா
மலை உச்சியில் ஒரு நேர்த்தியான குளம்

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கையின் பெரும்பகுதி சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போதே பொலனறுவ நகர்தான் சோழர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் சோழர்கள் ஆதிக்கம் குறைய, விஜயபாகு என்ற அரசன் ஆட்சியைக் கைப்பற்றினான். அவனும் அவனது சந்ததியரும் வெகு காலம் பொலனறுவவைத்தான் தலைநகராகக் கொண்டிருந்தனர். இங்கு இவர்கள் கட்டிய சில புத்தக் கோயில்களும் ராஜராஜன் கட்டிய சிவனுக்கான கோயில்களும் உள்ளன. கல் விகாரை எனப்படும் கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் நான்கு இங்குதான் உள்ளன. அடுத்தடுத்துக் காணப்படும் நான்கு புடைப்புச் சிற்பங்களில், முதலாவதில் புத்தர் தவ நிலையில் அமர்ந்திருக்கிறார்; இரண்டாவதில் தூஷித சொர்க்கத்தில் அவர் இருக்கிறார் (அப்போதுதான் மாயாவதிக்கு மகனாகப் பிறக்குமாறு அவரை தேவர்கள் வேண்டுகிறார்கள்); மூன்றாவதில் இந்த உலக மக்களின் துக்கத்தை நினைத்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறார்; நான்காவதில் பரிநிர்வாணம் (உலகை விட்டு நீங்குகிறார்). இரண்டாவது புடைப்புச் சிற்பம் மட்டும் ஒரு மண்டபக் கட்டுமானத்துக்குள் உள்ளது. மற்ற மூன்றும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பங்கள்.

கல்வெட்டு - சுமார் 12-ம் நூற்றாண்டு, பொலனறுவ
ராஜராஜ சோழன் கட்டிய 11-ம் நூற்றாண்டு சிவன் கோயில், பொலனறுவ
மகா பரிநிர்வாணம், பொலனறுவ

தம்புள்ள மலையில் குடைந்து ஐந்து மண்டபங்கள் உள்ளன. காலத்தால் சில முற்பட்டிருந்தாலும் அவற்றின் உள்ளே சில சிற்பங்கள் கல்லிலும் சில சுதையிலும் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இவை பராமரிப்பில் இருந்துவருவதால் இங்குள்ள சிற்பங்கள் எவையுமே காலத்தால் முற்பட்டது என்று சொல்லமுடியாது. சுவரிலும் மேல் கூரையிலும் பல ஓவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் எல்லாமே தரத்தில் குறைவானவை. நாயக்கர் கால தமிழக ஓவியங்கள் போன்ற ஒற்றுமை காணப்படுகிறது. பெரும்பாலும் 17, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கவேண்டும்.

ஐந்து குகைக் கோயில்கள், தம்புள்ள
மேற்கூரை ஓவியம், தம்புள்ள (நாயக்கர் பாணி)

கண்டியில்தான் புகழ்பெற்ற பல் கோயில் உள்ளது. புத்தரின் பல் என்று நம்பப்படுகிறது. இது அநுராதபுரத்தில் தொடங்கி, பொலனறுவ சென்று மேலும் பல இடங்களைத் தாண்டி இறுதியில் கண்டி வந்து இப்போதுள்ள கோயிலில் இருக்கிறது. வரலாற்றுப் பழமை என்று இந்தக் கோயிலில் எதையும் சொல்லவிடமுடியாது. இந்தப் பல் எப்படி இந்தியாவிலிருந்து இலங்கை வந்தது என்ற ஐதீகம் சுவாரசியமானது.

கண்டியின் பல் கோயில்
திரைக்குப் பின் பல்

மேலே உள்ள இடங்களும் கதைகளும் இலங்கையின் மத வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளவை. இந்த நூலை முழுமையான வரலாறாகக் கொள்ளமுடியாது. ஏகப்பட்ட இடைச் செருகல்கள், வரலாற்றுக்கு முரணானவை என்று பல இதில் உள்ளன. ஆனாலும் பல இடங்களில் மகாவம்சத்தில் உள்ள கதைகளுக்கு தொல்லியல் சின்னங்கள் சான்றுகளாகவும் உள்ளன. மேலே சொன்ன இடங்களில் எல்லாம் பல முக்கியமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பொலனறுவ சிவன் கோயிலில்தான் ராஜராஜனின் தமிழ் கல்வெட்டும் காணக் கிடைக்கிறது.

விரிவான சில பதிவுகளையும், வீடியோக்களையும், படங்களையும் பின்னர் சேர்க்கிறேன். இது ஒரு டீசர் பதிவு மட்டுமே.

No comments:

Post a Comment