2009-ல் இயற்றப்பட்ட 86-வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் மூலம், இப்போது கல்வி, நம்முடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது பள்ளிக் கள்வி - 10-ம் வகுப்பு வரையிலான கல்வி. 6 வயது முதல் 14 வயதுவரையிலான மாணவர்களுக்கான கல்வி.
இந்தச் சட்டம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறது. அதில் முக்கியமான சிலவற்றை மட்டும்தான் இங்கு விவாதப் பொருள் ஆக்கப்போகிறேன்.
6-14 வயதுள்ள மாணவர்கள் யாருக்கும் கல்வி கிடைக்காமல் இருந்துவிடக்கூடாதே என்ற நல்ல எண்ணத்திலும் இந்தியாவில் படிக்காதவர்களே இருக்கக்கூடாது என்ற உயர்ந்த கொள்கையின் அடிப்படையிலும்தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இன்று ஏன் மாணவர்கள் கல்விக்கூடங்களுக்குப் போவதில்லை என்று பார்ப்போம்.
1. போதுமான அளவில் கல்வி நிலையங்கள் இல்லாமை.
2. கல்வி நிலையங்கள் இருந்தாலும் அதில் சேர்ந்து படிக்கும் அளவுக்குக் கையில் பணம் இல்லாமை.
3. குடும்பச் சூழ்நிலை காரணமாக, வறுமை காரணமாக, படிப்பதற்குபதில் வேலைக்குச் செல்லவேண்டிய நிலை.
4. கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சிறுவர்கள் சுரண்டப்படுதலால் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை.
5. படிப்பு ஏறுவதில்லை என்பதால் படிக்கப் பிடிக்காமல் கெட்ட காரியங்களில் சிறுவர்கள் ஈடுபடுதல்.
6. கல்வி என்பது மதிக்கத்தக்கதாக, அவசியமானதாகக் கருதப்படாத பழங்குடிச் சமுதாயங்களின் சிறுவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமை.
7. அனாதைகள், பிச்சை எடுப்போர், உடல்/மன நலமற்றோர், தெருக்குழந்தைகள் - இப்படி சமுதாயத்தின் மிக மிக விளிம்பு நிலையில் இருப்போர் பள்ளிகளுக்குச் செல்லாமை.
8. வேறு ஏதேனும்?
இது மாநிலத்துக்கு மாநிலம், ஒரு மாநிலத்திலேயே மாவட்டத்துக்கு மாவட்டம், கிராமத்துக்கு கிராமம் மாறுபடும்.
கடந்த 64 வருடங்களில் பள்ளிகளின் படிப்போர் எண்ணிக்கை எப்படி அதிகமானது? தமிழகத்தில் எண்ணற்ற அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க முடிவு செய்தது. 1980-களில் அரசு நிதியுதவி ஏதும் பெறாத, முற்றிலும் ஆங்கில மீடியத்தில் இயங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதியைத் தந்தது. அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மதிய உணவு (பின்னர் சத்துணவு என்று பெயர் மாறியது) தந்தது. கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளிலும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு இலவசச் சீருடை, காலணிகள், இலவசப் புத்தகங்கள், உயர் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் என்று அளிக்கத் தொடங்கியது. இலவச பஸ் பாஸ், ஒரு பெரும் வசதியானது. இதனால் சிறு கிராமங்களில் இருக்கும் மாணவர்களும் அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று படிக்க முடிந்தது. இதில் அஇஅதிமுக, திமுக என்று மாற்றம் இல்லாமல் இரு கட்சிகளும் மிகப் பெரும் சேவை செய்துள்ளன. அவர்களுக்குப் பாராட்டுகள்.
இந்தக் காரணங்களால், தமிழகத்தில் மிகக் குறைவான சிறுவர்கள்தான் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னிடம் சரியான புள்ளிவிவரங்கள் கைவசம் இல்லை. மீதம் உள்ள மாணவர்களுக்கும் சரியான வழியைக் காட்டவேண்டியது அவசியம். அதே சமயம், பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தரமான கல்வியைத் தருதல், மேற்படிப்பை நோக்கிச் செல்ல மாணவர்களுக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாடு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.
நல்ல கல்வியின் மூலமே ஏழைமையை ஒழிக்கமுடியும்.
(தொடரும்)
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
12 hours ago
Dear Badri,
ReplyDelete//மீதம் உள்ள மாணவர்களுக்கும் சரியான வழியைக் காட்டவேண்டியது அவசியம். அதே சமயம், பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தரமான கல்வியைத் தருதல், மேற்படிப்பை நோக்கிச் செல்ல மாணவர்களுக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாடு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.//
I would like know more on this area. Details on this is more helpful to do.
regards
பத்ரி,
ReplyDeleteஇப்பதான் தொடரின் முதல் பதிவு படிச்சிருக்கேன். உங்க காரணங்களில் 5வது இது:
//5. படிப்பு ஏறுவதில்லை என்பதால் படிக்கப் பிடிக்காமல் கெட்ட காரியங்களில் சிறுவர்கள் ஈடுபடுதல்.//
இதுல கீழே இருக்கும் காரணம் 5வதில் சேருமோ இல்லை தனியே வருமோ! எனக்குத் தெரிந்து குழந்தைகள் (சட்டையை விலக்கித் தொடையில் கிள்ளப்படுதல் போன்ற நாகரிகமற்ற) ஆசிரியர்களின் நடவடிக்கைகள், மற்ற மாணவர்களின் (கேலி, அடி, நான் பெற்ற சீண்டல் போன்ற) நடவடிக்கைகள் போன்ற ”கல்விச்சூழ்நிலை”க் காரணங்களால் பள்ளிகளுக்குப் போகாமல் இருக்கலாம்.
”சரியான வழியைக் காட்டவேண்டியது....மேற்படிப்பை நோக்கிச் செல்ல மாணவர்களுக்கு வழிகாட்டுதல்” இவற்றோடு ஒப்புகிறேன்.