பாகம் 1
இப்போது ‘கல்வி உரிமை’ சட்டத்தை எடுத்துக்கொள்வோம். அதன் முக்கியமான சில ஷரத்துகள் இவை:
1. தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்புக்கான (அல்லது எல்.கே.ஜிக்கான) 25% இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு என்று ஒதுக்கப்படும். இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு வழங்கும். இந்த 25% இடங்களுக்கு லாட்டரி முறையில் மாணவர்கள் ஒதுக்கப்படுவர். அவர்களைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று தனியார் கல்வி நிறுவனங்கள் மறுக்கமுடியாது.
2. எல்லா கல்வி நிறுவனங்களிலும் வேலை செய்யும் ஆசிரியர்கள் ஐந்தாண்டுகளுக்குள்ளாக பி.எட் (அல்லது அதற்கு இணையான) படிப்பை முடிக்கவேண்டும்.
3. மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அனைத்துப் பள்ளிகளும் தம்முடைய உள்கட்டுமானத் தரத்தை உயர்த்தவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய உரிமம் ரத்து செய்யப்படும்.
4. கல்வியின் தரம் உயர்த்தப்படவேண்டும்.
அடிப்படையில் இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன. தமிழகத்தை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25% இடத்தை அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் இதற்கு என்ன கட்டணத்தை அரசு தரப்போகிறது? அரசு தானாக ஒரு கட்டணத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைத்தான் தரப்போகிறது. இதனை தில்லியில் உள்ள மாநில அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திவிட்டது. ஒரு பள்ளி ஆண்டுக்கு 25,000 ரூபாய் அல்லது 50,000 ரூபாய் கட்டணம் வசூலித்தாலும், அரசு அவர்களுக்கு 10,000 ரூபாய்தான் தரும்.
மக்களிடையே பரவலாக ஓர் எண்ணம் உள்ளது: ‘தனியார் பள்ளிகள் எல்லாம் கொள்ளைக்காரர்கள். கல்விக் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.’ அதன் விளைவாகத்தான் தமிழக அரசு கட்டணக் கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவந்தபோது மக்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். தனியார் கல்வி அமைப்புகள் அனைத்திலும் அடிப்படையாக ஒரு முரண் உள்ளது. இந்தியாவில் நிலவும் சட்டதிட்டங்களின்படி எந்தக் கல்வியும் லாபநோக்கில் தரப்படக்கூடாது. அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன்மூலம் மட்டும்தான் கல்வி தரலாம். மெட்ரிக், சி.பி.எஸ்.இ போன்ற பாடத்திட்டத்தை நீங்கள் வழங்கினால் அரசிடமிருந்து உங்களுக்கு எந்த நிதி உதவியும் கிடைக்காது. இடம், உள்கட்டுமானம், ஆசிரியர் சம்பளம் என அனைத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு.
முன்னெல்லாம் நிறையப் பணம் சம்பாதித்த பெருவணிகர்கள் அறக்கட்டளை அமைத்து இலவச அல்லது குறைந்த கட்டண கல்வியை நிஜமாகவே பொதுச்சேவையாக அளித்தனர். ஆனால் கல்விக்கென மிகப்பெரும் சந்தை உருவாக ஆரம்பித்தபோது பல தனியார்கள் கல்வி வழங்கும் களத்தில் குதித்தனர். இவர்களில் சிலர் நல்லவர்களாகவும் நியாயவான்களாகவும் இருந்தாலும் பெரும்பாலானோர் கொள்ளைக்காரர்களாகவே இருந்தனர். மெட்ரிக் கல்விமுறை இவர்களுக்குச் சாதகமாக இருந்தது. அரசின் நேரடிக் கட்டுப்பாடு கிடையாது. ஆங்கிலக் கல்வியின் மோகம் அதிகரித்த நிலையில், இவர்கள் மக்களிடமிருந்து வேண்டிய கட்டணத்தை வசூலிக்க ஆரம்பித்தனர். லாபம் இருக்கக்கூடாது என்று அரசுச் சட்டங்கள் சொன்னாலும், பல வகைகளிலும் பள்ளிகளிலிருந்து பெறும் லாபத்தை வெளியில் எடுத்து சொந்தமாக கார், பங்களா, நிலம், நீச்சு என்று தங்கள் சொத்தை அதிகரித்துக்கொண்டனர்.
அதே சமயம் நியாயமாகக் கல்வி வழங்கி அதன்மூலம் நியாயமான லாபம் ஈட்ட விரும்பியவர்கள் யாரும் கல்வித் துறைக்குள் நுழைய முடியாமல் போயிற்று. ஏனெனில் லாபம் எடுக்க முடியாது என்று சட்டங்கள் சொல்கின்றன. லாபம் எடுக்க விரும்பினாலேயே நீங்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். ஆக, மோசமானவர்கள், அதாவது சட்டத்துக்குப் புறம்பானவர்கள் மட்டுமே இந்தத் துறைக்குள் நுழையமுடியும் என்று அரசு முடிவுசெய்துவிட்டது.
அதே நேரம், ஏற்கெனவே கல்வியை வழங்குபவர்கள் (அவர்கள் லாபத்தை வெளியில் எடுப்பது என்பது தவறாகவே இருந்தாலும்) பலவிதங்களில் சமூகத்துக்குப் பெரும் நன்மையைச் செய்துவருகிறார்கள் என்பதை நாம் மறுக்கவே முடியாது. அரசு கல்வியைக் கை கழுவிவிட்ட நிலையில், இந்தத் தனியார்கள் மட்டும் கல்வி நிலையங்களை ஆரம்பித்திருக்கவில்லை என்றால் இன்று நாம் சிங்கி அடித்துக்கொண்டிருந்திருப்போம். கல்வி மட்டுமல்ல, எந்த ஒரு நிறுவனத்தையும் கட்டி எழுப்பி, நடைபெற வைப்பது எளிதான செயலல்ல. வாய்ச்சொல் வீரர்களான நம் எத்தனை பேரால் நாம் செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு, நாளைக்கே ஒரு கல்வி நிறுவனத்தை - நியாயமாக, சட்டத்துக்குப் புறம்பில்லாமல் - உருவாக்க முடியும்?
இவர்கள் வாங்கும் கட்டணம் நியாயமா இல்லையா, வெளிப்படையாக உள்ளதா இல்லையா என்றெல்லாம் பெற்றோர்கள் பரிசீலிப்பதில்லை. கொடுக்க முடிந்தவர்கள் வாயைப் பொத்திக்கொண்டு கொடுத்துவிடுகிறார்கள். கொடுக்க முடியாதவர்கள் கூட்டமாகச் சென்று பள்ளி வாசலில் கோஷம் போடுகிறார்கள். பதிலுக்கு பள்ளி நிர்வாகம் எதிர்த் தாக்குதலில் இறங்குகிறது. இதனால் சூழல் விஷத்தன்மை அடைகிறது. அரசு இதனைக் கருணையோடு பார்ப்பதில்லை.
அரசு கட்டண விவகாரத்தில் இறங்குவதை எந்தத் தனியார் பள்ளியும் விரும்பாது. ஏனெனில் பெரும்பாலானோர் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதாவது கல்வி நிறுவனத்தை நடத்த எவ்வளவு தேவையோ அதற்கும் அதிகமாக வசூலிக்கிறார்கள். அந்த அதிகம்தான் அவர்களது லாபம். அது நியாயமான லாபமா, நியாயமற்ற லாபமா என்ற பேச்சுக்கே இடமில்லை; ஏனெனில் லாபம் என்பதே கூடாது என்கிறது சட்டம். ஆக பிரச்னை சட்டத்தில்தான்.
எந்தத் தனி மனிதனும் லாபம் இன்றிச் செயல்பட விரும்பமாட்டான். மருத்துவர்கள் லாபமின்றி ஊசி போடவேண்டும்; உணவகங்கள் லாபமின்றி உணவளிக்கவேண்டும் என்று நாம் கேட்கிறோமா? இவை எல்லாமும் சேவைகள்தானே? ஆனால் கல்வியை மட்டும் லாபமின்றி ஒருவர் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையில் நியாயம்?
(தொடரும்)
எழுத்தும் தத்துவமும்
1 hour ago
No comments:
Post a Comment