[ஏழாவது படிக்கும் என் பெண்ணின் வகுப்பு அசைன்மெண்டுக்காக மகாபாரதத்தைச் சுருக்கி எழுதிக்கொடுத்தேன். இத்துடன் ‘இதிலிருந்து நாம் அறியும் நீதியாவது...’ என்ற பகுதியும் உண்டு. அதை மட்டும் வெட்டிவிட்டு கதையை மட்டும் உங்களுக்காக இங்கே...]
குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெறும் மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.
சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். மனைவி சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.
இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் அன்றிலிருந்து பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.
சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள். சந்தனுவுக்குப் பிறகு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.
அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.
இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.
திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும் பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.
திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச பாண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன். குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.
திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.
பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து யுதிஷ்டிரனுக்கே முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் பாண்டவர்கள் இதனை முன்னமேயே ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி ஐந்து பாண்டவர்களும் திரௌபதியை மணக்கின்றனர்.
பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைக்கும் காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.
சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும் ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.
இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.
போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.
பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் காட்டுக்குச் சென்று உயிர் விடுகின்றனர்.
(முற்றும்)
மனிதன் கடவுளைப் படைத்தானா?
3 hours ago
இத்துடன் ‘இதிலிருந்து நாம் அறியும் நீதியாவது...’ என்ற பகுதியும் உண்டு. அதை மட்டும் வெட்டிவிட்டு கதையை மட்டும் உங்களுக்காக இங்கே...]/ Please post that also ! curious to know the moral of the story
ReplyDeleteமாட்டேன்! அது குழந்தைகளுக்கு மட்டும்தான்...
ReplyDeleteநல்ல சுருக்கம்.
ReplyDeleteபடித்ததும் தோன்றியவை....
1. சந்தனு-வா, சாந்தனு-வா?
2. 'குழந்தைகள் பிறக்கின்றன' vs. 'குழந்தைகள் பிறக்கின்றனர்'. எது சரி?
3. குருடு - குழந்தைகளிடம் இனி புழங்கவிடவேண்டாத impolite சொல். அடுத்த பத்தியில் மாற்றிவிட்டீர்கள்.
4. தேரோட்டி வளர்க்கிறா[b]ன்[/b] - கதையின் contextடில் அந்த மரியாதையின்மை முக்கியம் என்றாலும், சுருக்கத்தில் 'ர்' விகுதியுடன் எழுதியிருக்கலாம். குழந்தைகளுக்கு 'தேரோட்டி என்றால் ஒருமையில் அழைக்கலாம்' என்ற association வளரவிடாமல் செய்யும்.
5. பையன்கள் - மகன்கள்
6. குந்தி 'விடுகிறாள்' ஆனால் மாத்ரி 'இறக்கிறார்'
7. முன்னமேயே - sounds odd in writing. முன்பே?
8. கடைசி பத்தியில், அந்த குழந்தைதான் பரீட்சித் என்பது இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கலாம்.
டகால்டி:
ReplyDelete1. http://en.wikipedia.org/wiki/Shantanu
2. குழந்தைகள் - அஃறிணையைப் பயன்படுத்தலாம் என்கிறார் தொல்காப்பியர்.
3. பொலிடிகல் கரெக்ட்னெஸ் தாங்கமுடியவில்லை:-) அது நல்லதொரு தமிழ்ச்சொல்.
4. தேரோட்டி - ஒருமையை மரியாதைப் பன்மைக்கு மாற்றிவிடுகிறேன். குந்தி, மாத்ரி யூனிஃபார்மிடி வேண்டும். மாத்ரியையும் அவள் என்று ஆக்கிவிடுகிறேன். கவனித்தீர்கள் என்றால் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர், அவர்களது மனைவியர் என அனைவருக்கும் ஒருமைதான் கொடுத்திருக்கிறேன். கொஞ்சம் சரி செய்யவேண்டும்.
5. மீண்டும் ஒருமுறை ஒட்டுமொத்தமாகப் படித்து சரிசெய்ய முயற்சிக்கிறேன். விதுரனைக் கொண்டுவந்துள்ளேன்.
இப்போது மேலும் சில எடிட்களைச் செய்துள்ளேன்.
ReplyDelete//அது நல்லதொரு தமிழ்ச்சொல். //
ReplyDelete:-)
இருக்கலாம். ஆனால் இன்று பயன்பாடு இன்கரெக்ட் தானே.
'ஓடி விளையாடு பாப்பா' பாட்டில் 'தேம்பி அழும் குழ்ந்தை நொண்டி' அப்படின்னு பாரதி எழுதி இருக்கார். ஆனால் இன்னிக்கு அந்த சொல்லைத் தவிர்ப்போம் இல்லையா.
//கவனித்தீர்கள் என்றால் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோர், அவர்களது மனைவியர் என அனைவருக்கும் ஒருமைதான் கொடுத்திருக்கிறேன்.//
கவனிக்கவில்லை.
'மஹாராஜா பன்மை, தேரோட்டி ஒருமை' என்றவுடன் antenna ட்டொயிங் என்று எழுந்துவிட்டது :-)
இப்பதிவில் திருத்துவதற்காகச் சொல்லவில்லை. குழந்தைகளிடம் பேசும்போது நான் மிக கவனமாகப் பேச வேண்டி இருப்பதை உணர்ந்திருக்கிறேன். அப்போது கவனத்தில் கொள்ளும் விஷயங்களில சில இவை, என்பதால் கூறத் தோன்றியது.
//அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று பெண்களை பீஷ்மர் சுயம்வரத்தில் வென்று அழைத்துவருகிறார்.//
ReplyDelete//சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான்.//
இதில் இரண்டாவது சரி; முதலாவது, 'சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறார்' என்றல்லவா இருக்க வேண்டும்?
மற்றபடி ஏழாம் வகுப்பு வாசிக்கும் மகளுக்குப் போதுமான அளவுக்கு மறைக்கவேண்டியதை மறைத்து எழுதியிருக்கிறீர்கள் (சரிதான், ஆனால் நான் எங்கள் பாப்பா நான்காம் வகுப்பு வாசித்த காலத்தில் அவளுக்கு, மகாபாரதக் கதையைச் சொல்லி வந்தேன். "மந்திரத்தால் பிறந்தாலும் கல்யாணத்துக்கு முந்திப் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதால், குந்தி கர்ணனை ஒரு பேழையில் இட்டு ஆற்றில் விட்டுவிட்டாள்" என்று சொன்னேன். அவளுக்குப் புரிகிறதோ இல்லையோ இப்படிச் சில நடைமுறைகளையும் சேர்த்துச் சொல்வது நல்லது என்பது என் எண்ணம்.
ராஜசுந்தரராஜன்: உண்மைதான். மேலும் பல இடங்களில் திருத்தங்கள் வேண்டியுள்ளன. நாளை கொஞ்சம் முயற்சி செய்கிறேன். சுயம்வரம் விஷயத்தை மாற்றுகிறேன்.
ReplyDeleteமறைந்த திரு. ராஜாஜி அவர்கள் தமிழாக்கத்தில் எழுதிய மகாபாரதத்தை படித்த பிறகு உங்கள் மகாபாரதம் சுருக்கம் படித்தேன். இந்த அளவுக்கு சுருக்கி இருப்பது ஆச்சர்யம் தான். கிட்ட தட்ட கதையின் முழுவடிவமும் தெரிகிறது.
ReplyDeleteநன்றி
பத்ரி,
ReplyDeleteஇது சரியல்ல.
1. உங்கள் மகளின் அசைன்மெண்டை நீங்கள் எழுதியது தவறு. நீங்கள் அவளுக்குக் கதையைக் கூறிவிட்டு அவளையே எழுத விட்டிருக்க வேண்டும்.
2. இந்த நிலையைப் பற்றி சிந்திக்கவும் - ஒரு சுமாராகக் கல்வியறிவு பெற்ற ஒருவரின் குழந்தை இதே வகுப்பில் இருந்தால், அக்குழந்தைக்கு எந்த அளவுக்கு மகாபாரதம் அதன் பெற்றோரால் விளக்கப்பட்டிருக்கும்?
இதில் பெற்றோரின் output குழந்தையின் output ஆக உருமாற்றம் பெறுகிறது. இது சரியா?
3. இந்த மாதிரி அசைன்மெண்டைக் கொடுத்த டீச்சரை you should have taken to task. ஒரு காலாண்டு விடுமுறையில் இதைக் கொடுத்தால், குழந்தையின் கையிலேயே ராஜாஜியின் பாரதத்தைக் கொடுத்து ஒரு வாரம் படித்த பிறகு
அவர்களே அதை summarize செய்ய முடியும். ஆனால், ரெகுலராக பள்ளி நடக்கும்போது இம்மாதிரி அசைன்மெண்ட்கள் கொடுப்பது மேற்சொன்ன மாதிரி skewed output க்கு வழிவகுக்கும்.
4. நகரங்களில் உள்ள பள்ளிகளில் இம்மாதிரி பெற்றோரின் பங்களிப்பு மிக அதிக அளவு எதிர்பர்க்கப்படுகிறது. இது தவறு. அப்ப ஸ்கூல்ல என்னத்தப் பிடுங்குறாங்க? கடந்த 10 வருடங்களில் இது மிக அதிகமாகி விட்டது. நான் பார்த்தவரை இந்தியாவில்தான்
இம்மாதிரி இருக்கிறது. பிற இடங்களில் அது பெற்றோரின் logistics help உடன் நின்று விடுகிறது. அதுதான் சரி. மீண்டும் சொல்கிறேன். நீங்கள் செய்தது தவறு. Please ponder over this.
உங்கள் பெண்ணிற்கு கதையை சொல்லி, அவர்களை எழுத சொல்லி இருக்க வேண்டும். அசைன்மென்ட் உங்களுக்கா, அவர்களுக்கா?. இப்படி இருந்தால் அவர்களுக்கு க்ரியடிவிட்டி எப்படி வளரும்?
ReplyDeleteWell summarized, Badri. Parents writing assignment for their children is not allowed :)
ReplyDeleteமகாபாரத்தை ஒரே பதிவில் சொல்லிட்டீங்களே ! பாஸ்
ReplyDelete******************************'
குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்
தாறுமாறு:
ReplyDeleteநான் பல தவறுகளைச் செய்கிறேன். அதில் என் பெண்ணின் அசைன்மெண்டுகளுக்கு எழுதித் தருவது (என் மனைவியின் கல்லூரி ப்ராஜெக்டுக்கு உதவுவது) போன்றவையும் அடங்கும்.
இந்தியாவின் கல்வித்திட்டம் பெரும் குப்பை. கன்னாபின்னாவென்று அசைன்மெண்டுகளைக் கொடுப்பதோடு மட்டுமின்றி, மாய்ந்து மாய்ந்து உழைத்து ஒரு குழந்தை தானாகவே செய்து எடுத்துக்கொண்டு போனாலும் அதனைச் சரியாக எவால்யுவேட் செய்யாது, ஒரு கோழிக் கிறுக்கல் கையெழுத்து போடுவதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் எடுத்துக்கொண்டு போகாவிட்டால் பனிஷ்மெண்ட் உண்டு.
இதனால் பிள்ளைகள் தம் பெற்றோருக்குக் கொடுக்கும் அழுத்தம் ஜாஸ்தி. அப்போது அவர்களிடம் விவாதம் செய்யமுடியாது. உதவிதான் செய்யமுடியும். பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் விவாதித்திருக்கிறேன். அப்போது அவர்கள் தங்கள் இயலாமையை விவரித்திருக்கிறார்கள்.
பிள்ளைகளின் அசைன்மெண்டை பெற்றோர்கள் செய்துதருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் சிஸ்டத்தை மாற்றவேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் சும்மா ‘ஆஹா, ஊஹோ’ என்று கூப்பாடு போட்டால் மட்டும் போதுமானதல்ல. களத்திலும் இயங்கவேண்டும். நான் என்னால் முடிந்தவரை அதனைச் செய்துகொண்டிருக்கிறேன். மேலும் அதிகப்படுத்தப் போகிறேன். அந்த மாற்றம் வரும்வரை என் மகளுக்கு வேண்டிய உதவிகளை நான் செய்துகொண்டுதான் இருக்கப்போகிறேன்.
கண்ணன்: என் மகளின் கிரியேடிவிடி மழுங்கவேண்டும் என்பதல்ல என் நோக்கம். ஒவ்வொரு வாரமும் பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான அசைன்மெண்டுகள் தரப்படுகின்றன என்பதை நீங்கள் ஆராய்ந்தால் இதில் உள்ள அபத்தம் புரியும்.
மாற்றுப் பள்ளிகள் கிடையாது. ஒரு பள்ளியில் உங்கள் குழந்தை சேர்ந்துவிட்டால், விரும்பியபடி வேறு பள்ளிக்கு மாற்றுவது என்பது எளிதல்ல.
***
மீண்டும் கவனியுங்கள்... நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு தந்தையாக எனக்கு உள்ள சில கடமைகளை என் மனம் சொல்லும்படிக்கு மட்டுமே நான் பரிசீலிக்கிறேன். உங்கள் குழந்தைகளை மேலும் உயர்வாக, நல்லபடியாக வளர்க்க என் வாழ்த்துகள்.
பத்ரி சார், நீங்கள் சொல்வது மிக்க சரிதான்...
ReplyDeleteசுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் ஒரு நிகழ்வைப்பற்றிய பதிவிற்கு 14 பின்னூட்டங்கள்!
ReplyDelete300 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வைப்பற்றிய பதிவிற்கு 6 பின்னூட்டங்கள்!!
இப்பொழுது நடக்கும் ஒரு நிகழ்வைப்பற்றிய பதிவிற்கு 1 பின்னூட்டம்!!!
We love living in the past?
மகளுக்கான வீட்டுப்பாடம் தமிழிலா ஆங்கிலத்திலா?
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்
இது போலதான் நானும் ஒரு நாள் என் பாடத்தில் என் அம்மா உதவி செய்தார். இது தெரிந்த வாத்தியார் அன்று வழக்கம் போல அல்லாமல் கூடுதலாக “கவனித்தார்”. அத்தோடு இது நின்றது. ஆனால் இன்று எத்த்னை பேர் மாணவர்களை தவறுகளுக்காக அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் அப்பா வாத்தியாரிடம் முதலில் சொன்னதே இந்த அடி பற்றீத்தான்.
ReplyDelete//கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.//
ReplyDelete;)
In case ur daughter wonders why,, how would u explain this? Just asking...
Great summary. Nice job, Badhri.
ReplyDeleteஆக்கம் அருமை. ஆனால் நோக்கம் பழுது. தவறான சட்டம் இருப்பின், அதை எதிர்த்துப் போராடுவதுதான் நியாயம். அசைமென்ட் நீங்கள் எழுதிக்கொடுப்பது தவறுதான். லஸ் சாலை ஒன் வே ஆக்கப்பட்டுள்ளது .... அது தவறு என்று கூறி மாற்ற பல்வேறு சட்ட வரைவிற்குள் போராடவேண்டுமே தவிர ... அந்த சாலை ஒன் வே ஆக்கப்பட்டது தவறு எனவே நான் மதிக்க மாட்டேன் ஒன் - வேயில் எதிர்த்திசையில்தான் வண்டி ஓட்டுவேன் என்பது போல உள்ளது உங்கள் நியாயம். அது சரி, ஸ்பெக்ட்ரம் மேட்டர் ஒரு ஊழலே இல்லை என்பவரிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் ... ஆளும் வர்க்கம் கத்தி முனையில் கிழக்கைப் பிடுங்கினால் மட்டுமே நீங்கள் சட்டம் பற்றிப் பேசுவீர்கள் என்று நினைக்கிறேன். குருடு ... உங்கள் பொலிடிக்கல் கரெக்ட்னெஸ் கருத்து எனக்கும் உடன்பாடானது. அது என்ன இடுகுறிப்பெயர் இழிவு காரணப்பெயர் சூப்பர்னு ஒரு சித்தாந்தம்?? நாளை, கண் பார்வையற்றோர் என்ற காரணப்பெயரும் சமூகத்தால் களங்கப்படுத்தப்படலாம். அப்போ புதுப்பெயர் தேடுவார்களா ... இவிங்க லொள்ளு தாங்க முடியல. (ஆனால் இந்த இடுகுறிப்பெயர் குருடு- நொண்டி என்று உள்ளர்த்தம் இழிவாக தொனிக்கும்படி ஆனதற்கு கர்மா தியரியும் காரணம் என்று நினைக்கிறேன். பார், போன தபா ஏதோ தப்பு பண்ணுனதால குருட்டுப்பிறவி ...நல்லது செய்தாயானால் அடுத்த பிறவியில் குருடாக பிறக்கமாட்டாய் என்று ஒரு பயம் சமூகத்தில் வரவேண்டுமானால், குருட்டு நிலைக்கு ஒரு இழிவு தேவைப்படுகிறது ... இது குறித்து சோஷியாலஜி / ஆந்த்ரபாலஜி ஆராய்ச்சி செய்யலாம்). இதையெல்லாம் தவிர, இந்தப் புராணக் கதைகளெல்லாம் குழந்தைகளுக்கு ஓக்கே... ஆனால் இவை மாபெரும் அப்ஸ்ட்ராக்ட் கருத்துக்களை விளக்கும் உருவகக் கதைகளே. மெட்டாஃபர்ஸ். அவற்றை விளக்கி கிழக்கு புத்தகம் போடலாம். அந்த ஆழமான அர்த்தக்களை விட்டு விட்டு, ஆத்திகர்கள் புத்தகத்துக்கு பூஜை செய்வதும், நாத்திகர்கள் பாஞ்சாலியின் அஞ்சு வீட்டை கிண்டல் செய்து மகிழ்வதும்தான் நம்ம ஊரில் நடந்து வருகிறது .. இழப்பு இரு தரப்புக்கும்தான்
ReplyDeleteநகரில் இருக்கும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு "home work" அதிகம். "நான் என் பிள்ளைகளுக்கு உதவ மாட்டேன்" என்று கூறுவது எளிது. ஆனால் நடைமுறை ....
ReplyDeleteமீண்டும் கவனியுங்கள்... நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு தந்தையாக எனக்கு உள்ள சில கடமைகளை என் மனம் சொல்லும்படிக்கு மட்டுமே நான் பரிசீலிக்கிறேன். உங்கள் குழந்தைகளை மேலும் உயர்வாக, நல்லபடியாக வளர்க்க என் வாழ்த்துகள்.
ReplyDeleteBadri,
I agree your arguments but did not like the below statement? Enna nakkal idhu?
உங்கள் குழந்தைகளை மேலும் உயர்வாக, நல்லபடியாக வளர்க்க என் வாழ்த்துகள்.
உடன்கட்டை
ReplyDeleteசூதாட்ட
சுயம்வரத்தில்
- did the 7th std girl curiously enquire about the above words?. Please provide your explanation :)
Please provide your explanation that you gave her and her response :)
ReplyDelete