Tuesday, August 16, 2011

அண்ணா ஹஸாரேயின் கைது

நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இந்தத் தொலைக்காட்சி சானல் இன்னும் ஒளிபரப்புக்கு வரவில்லை. அதனால் நீங்கள் அந்த விவாதத்தைப் பார்த்திருக்க முடியாது. கல்யாணம் என்ற 90 வயதுப் பெரியவர், காந்தியின் அந்திம காலத்தில் அவருடைய செயலராக இருந்தவர், நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினர்.

பாபா ராம்தேவின் கூட்டத்தின்மீது தில்லி காவல்துறை நடத்திய அடிதடியின்போது அந்தக் கூட்டத்தில் கல்யாணம் இருந்திருக்கிறார். “அடி படாமல் தப்பித்துவிட்டேன்” என்றார். அண்ணா ஹஸாரேயுடன் முந்தைய உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றிருந்திருக்கிறார்.

கடுமையான கோபத்தில் இருந்தார். ஊழல் செய்பவர்களையெல்லாம் அந்தமானில் சிறைக்குள் தள்ளவேண்டும் என்றார். நாடாளுமன்றம்தான் சுப்ரீம்; அதற்குமேல் அப்பீலே கிடையாது என்று பிரதமர் சொன்னது அவரது கோபத்தைக் கிளறியிருந்தது. “உங்களை யார் நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறார்கள்? நாங்கள்தானே? அப்படியானால் யார் சுப்ரீம்?” என்றார்.

நியாயம்தான்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திக்குத் திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங்கை நினைத்தால் பாவமாக இருக்கிறது. நிஜமாகவே அவர்மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது. இப்போதும்கூட. அவர் ஏன் இந்த அரசில் இன்னும் இருக்கிறார் என்று புரியவில்லை. நானாக இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு அக்கடா என்று பஞ்சாப் கிராமம் ஒன்றில் போய் உட்கார்ந்துகொள்வேன். அவரை யாரும் மதிப்பதாகத் தெரியவில்லை. பிற திருட்டு மந்திரிகளுக்கும் சோனியா காந்திக்கும் ஒரு முகமூடி தேவைப்படுவதால் இவரைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தும் ஏன் இப்படித் துணைபோகிறார் என்று தெரியவில்லை.

அண்ணா ஹஸாரே குழுவினர் முரட்டுப் பிடிவாதக்காரர்களாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்களும் மோசமான வரைவு ஒன்றைத்தான் ஜன் லோக்பால் மசோதா என்று முன்வைக்கிறார்கள். ஆனால் அதற்கு ஏற்றாற்போல ஜோக்கர் காங்கிரஸ் அரசு, நீர்த்துப்போன ஒரு குப்பையை அவசர அவசரமாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப் பார்க்கிறது. கூடவே அண்ணா ஹஸாரே, பாபா ராம்தேவ் போன்றோரின் எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைக்கிறது.

இன்று அண்ணா ஹஸாரேவின் கைது, ஐ.மு.கூ அரசின் இறுதியை விரைவு செய்துள்ளது என்று நான் நம்புகிறேன். நாளையே ஆட்சி கவிழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த ஆட்சி முழுக் காலமும் நீடிப்பதில் சிரமம் ஏற்படும் என்று நினைக்கிறேன். மறு தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக மண்ணைக் கவ்வும். அதன் விளைவு பாஜகவுக்கு முழுமையான ஆதரவைத் தராது. கம்யூனிஸ்டுகளுக்கும் பெருமளவு ஆதரவு கிடைக்காது. ஆனால் நிறைய பிராந்தியக் கட்சிகள் முன்னுக்கு வருவார்கள். பிராந்தியக் கட்சிகளின் துணையுடனான பாஜக ஆட்சி அமையலாம்.

இப்போது குடிமைச் சமூகத்துக்கு வருவோம். சிவில் சமூகத்தால் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படலாம். ஆனால் ஊழல் குறையுமா? அண்ணா ஹஸாரே, மற்றும் அவர் போன்றோரிடம் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான செயல்திட்டம் ஏதும் உள்ளதா? ஊழலுடன் நின்றுபோகும் திட்டமா அல்லது அதற்கும் மேலான ஏதேனும் அவர்களிடம் உள்ளதா? ஏனெனில் பொதுமக்கள் இந்த சிவில் சமூகத் தலைவர்களிடம் தங்கள் பிரச்னைகள் அனைத்துக்குமான தீர்வுகளை எதிர்பார்க்கப்போகிறார்கள். அரசியல்வாதிகளிடம் ஏமாந்துள்ள அவர்களை சிவில் சமூகத் தலைவர்களும் ஏமாற்றிவிட்டால், மக்கள் உடைந்துபோய்விடுவார்கள்.

அப்படிப் பார்த்தால் அண்ணா ஹஸாரேயும் அர்விந்த் கேஜ்ரிவாலும் கிரண் பேடியும் பிறரும் விரைவில் ஓர் அரசியல் கட்சியையே தொடங்கவேண்டியிருக்கும். அப்படிச் செய்ய அவர்களிடம் தெம்பு இருக்கிறதா?

16 comments:

  1. பத்ரி.மிக சரியான கேள்வியுடன் முடித்தீர்கள்.

    ReplyDelete
  2. நச்சுனு சொன்னீங்க சார்..

    ReplyDelete
  3. அன்னா ஹசாரேவை மதவாத சக்திகள் பின்புலத்தில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. அன்னாவுக்கு என எந்த ஒரு நீண்டகால திட்டமும் இருப்பதாக தெரியவில்லை.

    அன்னா வயதான காலத்தில் காந்தியவாதி என்கிற போர்வையில் செயல்பட்டு காந்திக்கு பிறகு இவரை இரண்டாவது காந்தி என்று எல்லாரும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்.

    காங்கிரஸ் தரப்பில் அன்னா எங்கே சென்றாலும் விமானத்திலும் காரிலுமே செல்கிறார் அவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்கிறார்கள்.

    இவரோ அதற்கு பதில் சொல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று வினவி உள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது மதவாதிகளிமிருந்தும் ஜனநாயகத்தை சீர்குலைக்க செய்யும் நபர்களிடமிருந்தும் பணம் வாங்கிக் கொண்டு இருக்கிறார் அதை வெளியில் சொல்லமுடியாமல் மூடி மறைக்க எதிர் கேள்வி கேட்கிறார்.

    காந்தியவாதியாக இருந்திருந்தால் அவருடைய கருத்தை தெளிவாகவும், அவர் மீது சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான விளக்கத்தையும் கொடுத்திருப்பார் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

    வேண்டுமானால் என்மீது வழக்கு தொடுக்கட்டும் என்னை கைது செய்யட்டும் என்று தன்னை விளம்பரபடுத்திக் கொள்வதிலேதான் அவர் குறியாக இருக்கிறார்.

    இன்று கூட அவர் தன்னை மகாத்மா காந்தி போன்று நினைத்துக் கொண்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இவருடைய நடவடிக்கைகளைப் பார்த்தால் கடைசி காலத்தில் தன்னை ஒரு மகான் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்று இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்.

    நீதிபதி சவுந்த் இவர்மீது 2006 ல் குற்றசாட்டை கூறியிருக்கிறார். இவருடைய தொண்டு நிறுவனத்தில் இருக்கும் பணத்தை தனிப்பட்ட முறையில் தன்னுடைய பிறந்த நாள்விழாவிற்காக ஆடம்பரமாக பயன்படுத்திள்ளார் என்றார்.

    அதற்கு இவர் எந்த பதிலையில் சொல்லவில்லை.

    இவரை போன்றவர்களை சிறையில் தள்ளுவதே மிகவும் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  4. பலமுறை உங்கள் மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டை நான் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த பதிவின் போது நம்ப வேண்டியுள்ளது. ஏன் கட்சி தொடங்கி தான் இந்த நாட்டை திருத்த வேண்டுமா? அல்லது வழி நடத்த முடியுமா? ஏன் காங்கிரஸ் இவரைப் பார்த்து இப்படி பயப்படுகின்றது? பேசாமல் விட்டு விட வேண்டியது. கிழவர் கத்திப் பார்த்து ஒதுங்கி விடுவார் என்று நினைக்க வேண்டியது தானே, சிறு துளி பெரு வெள்ளமாக மாறி விடுமோ என்ற பயம் தானே?

    உங்களுக்கென்று பொறுப்புகள் இருக்கிறது என்பதை உங்கள் மனம் என்று உணர்த்தும்?

    ReplyDelete
  5. Jothig, I think u misunderstood what badri said. He is asking who will fill the vacuum after the Congress party is removed from power? how to ensure that they will not be corrupt?
    //இப்போது குடிமைச் சமூகத்துக்கு வருவோம். சிவில் சமூகத்தால் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படலாம். ஆனால் ஊழல் குறையுமா? //


    //ஆனால் நிறைய பிராந்தியக் கட்சிகள் முன்னுக்கு வருவார்கள். பிராந்தியக் கட்சிகளின் துணையுடனான பாஜக ஆட்சி அமையலாம்.//
    After Congress is removed, the people who are going to fill the central govt are another set of corrupt people. This will be the problem which common people are ignoring...

    ReplyDelete
  6. இதற்குத்தான் அன்றே சுதந்திரம் வந்தவுடன் காங்கிரசைக் கலைக்கவேண்டும் என்று காந்தி சொன்னார். காங்கிரசின் ஊழல் லட்சணம் தெரிந்த அவர் தீர்க்கதரிசி.

    ஏதோ இந்தமட்டுமாவது ஒரு புரட்சி வெடிக்கட்டுமே, நல்லது நடக்கட்டுமே? நாளைக்கே அவர்களும் கட்சி தொடங்கி அதில் ஊழல் வந்துவிட்டால் என்று நீங்கள் ‘கவலைப்படுவதெல்லாம்’ வேண்டாத cynicism, வெறுப்பு மனப்பான்மை.

    வேறு எந்தக் கட்சியும் செய்ய முடியாததை, செய்யத் துணியாததை இந்தத் தள்ளாத வயதிலும் ஒரு பெரியவர் செய்கிறார். அதற்கு நாடெங்கும் தினந்தோறும் ஆதரவு பெருகி வருகிறது. அதை அடக்க மகா கேவலமான வழிமுறைகளை காங்கிரஸ் கையாள்கிறது. அதை நீங்கள் இன்னமும் ஆணித்தரமாகக் கண்டித்திருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு அவருக்கு யார் டிஃபன் வங்கிக் கொடுத்தது, யார் காரில், ஏன் போனார் என்பதெல்லாம் அபத்த அரசியல். அவரென்ன ஸ்விஸ் பேங்க்களில் இவர்களைப்போல் ட்ரில்லியன் ட்ரில்லியனாக அடுக்கி வைத்திருக்கிறாரா?

    இன்னொரு விஷயம்: மேனேஜ்மெண்ட் பற்றி நன்கு அறிந்த நீங்கள் எப்படி மண்ணுமோகனுக்கு இன்னமும் போனால் போகட்டும் என்று ஆதரவு தெரிவிக்கிறீர்கள்? அந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஊழல் கோஷ்டிகளுக்கும், சோனியாவுக்கும் தலை ஆட்டிக் கொண்டிருந்தால் அவர்தானே மிகப்பெரிய குற்றவாளி? தன்னுடைய ஸ்விஸ் பேங்க் அக்கவுண்ட்டுகள் பற்றி ஏன் இன்னமும் சோனியா மௌனமாகவே இருக்கிறார்? ராஜீவின் குடியுரிமை, பாஸ்போர்ட் பற்றி? அதற்கும் மௌனம். இந்தியர்கள் என்ன அவ்வளவு இளிச்சவாயர்களா?

    நீங்கள் அன்னாவுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. முன்முடிவுகளோடு இதை அணுகாதீர்கள்.

    கிட்டத்தட்ட 50 வருடங்களாக இந்த ‘லோக்பால்’ கிடப்பில் கிடப்பது காங்கிரசுக்குத் தெரியாதா? கொள்ளைக்காரர்களே தமக்குத்தாமே விலங்கு போட்டுக்கொண்டு சரணடைவார்களா?! அடைவார்கள் என்ற முட்டாள்தனத்தை நாம் இத்தனை வருடங்களாக நம்பியது போதும்.

    நம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரம். அந்த நம்பிக்கையைக் கொடுக்கக்கூட நாதியில்லாமல் இருந்த நாட்டில் ஏதோ இவராவது ஏதாவது செய்யப் பார்க்கிறாரே!

    ஏதாவது நல்லது கில்லது நடந்துவிடுமோ என்று பயப்படாதீர்கள்!

    ReplyDelete
  7. @பிரதிபலிப்பான்: வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு டிவியில் நிகழ்வுகளை பார்த்து .. இவன் நல்லவன் .. அவன் கெட்டவன் .. இவன் சொல்றது சரியில்லை .. இது எப்படி நடக்குதுன்னு பார்த்துடுவோம் .. நான் அப்போவே சொன்னேன்.. இந்த ஆழ நல்லவருன்னு நினைச்சேனே என்று இன்டர்நெட்டில் ஆலமரத்தடி பஞ்சாயத்து செய்பவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை உங்கள் மனைவியிடமோ .. கணவனிடமோ.. குழந்தைகளிடமோ சொல்லி பாராட்டு பத்திரம் வாங்கிகொள்ளுங்கள்.. வெளியில் உங்கள் கருத்துக்களை கூறி நல்ல நோக்கத்தை திசை திருப்பாதீர்கள்.. அன்னா நல்லவரா .. இல்லை கெட்டவரா என்பதில்லை இப்போதைய கேள்வி.. இந்த ஜன லோக்பால் சட்டதில் உள்ள குறைகளை விமர்சனம் செய்யாதீர்கள்.. எந்த ஒரு சட்டமும் ஒரே நாளில் இயற்றியது அல்ல!. எல்லோரும் சொல்வது போல அது வலுவில்லாத சட்டமாக இருந்தால் காங்கிரெஸ் அதை எதிர்திருக்காது !. முதலில் இதை கொண்டு வருவோம்.. பிறகு அந்த சட்டத்தில் உள்ள குறைகளை களைவோம். அதே போல அரசாங்கம் என்ன நினைக்கிறது .. மக்கள் என்ன நினைகிறார்கள் என்று உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு டிவி நிருபர் வேலை பார்க்காதீர்கள்!. முடிந்தால் போராடுங்கள் அல்லது போராடுபவர்க்கு ஆதரவு தெரிவியுங்கள் ... இல்லை கதவை மூடிக்கொண்டு செல்வி சீரியல் பாருங்கள் !

    ReplyDelete
  8. // லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

    இதற்குத்தான் அன்றே சுதந்திரம் வந்தவுடன் காங்கிரசைக் கலைக்கவேண்டும் என்று காந்தி சொன்னார். காங்கிரசின் ஊழல் லட்சணம் தெரிந்த அவர் தீர்க்கதரிசி.//

    ஆம் ராம் நீங்கள் சொல்வது போல் காங்கிரஸ் அல்லாத மாற்று கட்சி ஜனதா வந்ததே ஏன் நிறைவேற்றவில்லை அவர்களுடைய கொள்கைகள் என்ன ஆனது. ஜனதா கட்சி ஆரம்பிக்கும் போது இருந்த தலைவர்கள் நீங்கள் நினைப்பது போல் இது போல விளம்பரபிரியர்கள் அல்ல அவர்கள் எல்லாம் காந்தயுடனும், நேருவுடனும், சேர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரடியவர்கள். அவர்கள் எல்லாம் சேர்ந்து தான் ஜனதா அரசாங்கம் உண்டானது. ஆனால் என்னாச்சு அந்த அரசாங்கத்தால் ஏன் அப்பொழுது நிறைவேற்றவில்லை. அப்பொழுது இருந்த தலைவர்கள் எல்லாம் அன்னா மாதிரி கிடையாது சுயவிளம்பரம் தேடாதவர்கள் அப்படிபட்டவர்களே ஆட்சி அதிகாரம் வந்தவுடன் எப்படி சிதைந்தார்கள் என்பதை நாம் அறிவோம் ஆனால் அன்னா ஹஸாரே எம்மாத்திரம்.

    பத்ரி நினைப்பதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

    அதனால் தான் நிலையான ஆட்சி, சிறந்த செயல் திட்டம், மெதுவாக செய்தாலும் ஜனநாயக ரீதியாக நாடு முழுவதும் ஒருமித்தகருத்தை எட்டவைத்து நிறைவேற்ற முயற்சி செய்கிறது.

    காங்கிரஸ் அரசாங்கம் என்ன சொல்கிறது முதலில் இந்த மசோதாவை நிறைவேற்றி மீண்டும் அனைவரிடத்திலும் கருத்து கேட்டு திருத்தம் கொண்டுவரலாம் என்கிறார்கள். ஆனால் அன்னாவோ நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று சொல்லிகொண்டுள்ளார்.

    அம்பேத்கர் அரசியலமைப்பை ஏற்படுத்திய பிறகு மீண்டும் அதில் நாடளுமன்றத்தில் அதனை திருத்தவில்லையா? இது போன்ற திருத்தங்கள் நடைபெறாமலா இருக்கிறது.

    நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் அன்னாவுக்கு ஆதரவளிப்பவர்கள் யார் யார் எந்த அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று தெரியும்.இதுவே அன்னா குழுவினர் சேர்ந்து அரசியல் கட்சி தொடங்கினால் அவருக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் கட்சிகளின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று உங்களுக்கே நன்றாக தெரியும்.

    //admin said... //

    நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் கண் மூடித்தனமாக, பெருமையாகவோ நினைத்துக் கொண்டு நீங்கள் சொல்வதை போல் பாராட்டுப் பத்திரத்திரத்திற்க்காக நான் சொல்லவில்லை.

    நீங்கள் நல்லவர்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் என்று தான் நான் சொல்கிறேன். இந்த சூழ்நிலையில் உள்நாட்டுக் கலவரத்தை உண்டுபண்ண பார்க்கிறார் அன்னா அவர்கள்.

    நம் நாடு ஒன்றும் அந்த அளவிற்கு மோசமாக இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் முதலில் இப்பொழுது உள்ள நிலையில் நிறைவேற்றி பிறகு அதை திருத்திக் கொள்ளலாம் என்கிறது அரசு ஏன் அதை ஏற்க மறுக்கிறார். அது ஒன்றும் மாற்றமுடியாததல்ல என்று உங்களுக்கு தெரியும்.

    இதுபோல சிறுசிறு அரசியல் கட்சிகள் சேர்ந்து ஆட்சி செய்தால் அவர்களால் நிலையான ஆட்சியை கொடுக்க முடியும் என்றா நீங்கள் நினைக்கிறீர்கள்? அப்பொழுது ஊழல் அறவே ஒழிந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

    அப்படி நினைத்தால் மகா தவறு. அப்பொழுதான் ஊழல் மழுங்கிவிடும்.

    அதனால் தான் இவரை போன்றவர்கள் நீங்கள் ஆதரிக்க கூடாதென்று. அரசாங்கத்திற்காக நீங்கள் குரல் கொடுக்கவேண்டும் என்று.

    ReplyDelete
  9. சென்னை, அடையாரில் , நமது தோழர்கள் ஐம்பது பேர் இரண்டு நாட்களாக உன்ன நிலை போராட்டம் இருக்கிறார்கள்.

    முகவரி :
    153, LB Road, Adyar Depo,
    Near HDFC Bank.

    ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளையவர்கள், இஸ்லாமிய, கிருத்துவ நண்பர்கள் உள்ளனர். அனைவரும் வருக. மாற்றத்தினை உருவாக்குவோம்.

    ReplyDelete
  10. மன்னிக்கவேண்டும் பத்ரி. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும், வலுவான ஊழல் தடுப்பு சட்டம் வேண்டும் என்பவர்களுமே ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வழி சொல்ல/நடத்த வேண்டும் என்றா எதிர்பார்க்கிறீர்கள்? அன்னா கேட்பதுபோல் வலுவான சட்டத்தை கொண்டுவந்தால் அட்லீஸ்ட் நீதிமன்றம் செல்லவாவது முடியுமே? இனி வரும் காலத்திலாவது இப்போதைய ஐமுகூ ஊழல் செய்ததைப்போல் வெளிப்படையாக இல்லாமல் சிறிது சட்டம், வழக்கு, மீடியா குறித்த பயமாவது இருக்குமே.
    கட்டுரையின் கடைசி இரு பத்திகளை தவிர அனைத்துமே சரிதான். அதிலும் கடைசிக் கேள்வி
    - அண்ணா ஹஸாரேயும் அர்விந்த் கேஜ்ரிவாலும் கிரண் பேடியும்,ஓர் அரசியல் கட்சியை தொடங்கித்தான் ஊழலை குறைக்க வேண்டும் என்பது - பொருந்தவே இல்லை.

    @பிரதிபலிப்பான் - மன்னிக்கவும். தூங்கியது போதும். விழித்துக்கொள்ளுங்கள்!
    -ஜெகன்

    ReplyDelete
  11. இன்று காலை டைம்ஸ் ஆப் இந்தியாவில், ஏதோ இந்தியா முழுவதும் போராட்டம் பற்றி எரிந்து கொண்டிருப்பது போல செய்திகளும், புகைப்படங்களும்.... கதவைத் திறந்து பார்த்தால், வழக்கம் போல பால் பாக்கட் போடுபவர்களும் இன்ன பிற மக்களுமாக என்றும் போலத்தான் இயங்கிக் கொண்டிருந்தது....நான் இந்தியாவில் வசிக்கவில்லையோ என்ற சந்தேகம் வந்து விட்டது...

    ReplyDelete
  12. அன்னா ஹசாரேயின் நேர்மை, தள்ளாத வயதிலும் அவரது உறுதி முதலானவை பற்றி சந்தேகிப்பது தேவையற்ற தனிநபர் விமர்சனத்திலேயே பொழுதைக் கழிக்க ஏதுவாகும்.நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்:இருக்கிற சட்டங்களையே ஒழுங்காக மதிக்காதவர்கள் புதிய சட்டத்தை மட்டும்- அது வலுவாகவே இருந்தாலும்- மதிப்பார்களா?
    தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் எப்படி முறைகேடுகளுக்கு அதிக இடமின்றி நடந்தது? எந்த லோக்பால் சட்டம் அதற்கான அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்குத் தந்தது? தேர்தல் கமிஷனும் அதன் வழிகாட்டுதலின் பேரில் சில அதிகாரிகளும் சாதிக்க முடிந்ததை ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் அன்றாட வாழ்வில் ஏன் சாதிக்க முடியாது? அன்னா ஹசாரேயோ அல்லது அவரது ஆதரவாளர்களோ ஒரு சட்டத்தைத் தாங்கள் விரும்பிய ஒரு வடிவில் கொண்டு வருவதற்காக ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்? அதை விடுத்து அன்றாட வாழ்வில் லஞ்சஊழலைக் கண்டும் காணாமலும் இருந்து அதற்கு உடந்தையாக இருப்பவர்களைத் திருத்துவதற்கான தன்னார்வ இயக்கத்தை ஏன் துவக்கக் கூடாது? லஞ்சத்தையும் ஊழலையும் மக்களே ஊக்குவிக்கும் அவலத்தை மாற்ற ஏன் முயற்சி செய்யக்கூடாது?

    ReplyDelete
  13. நமது போராட்ட அட்டவணை :

    திங்கள் கிழமை - ஈழ ஆதரவு போராட்டம்
    செவ்வாய் கிழமை - காஷ்மீர் தேசிய ஆதரவு போராட்டம்
    புதன் கிழமை - மணிப்பூர் ஆதரவு போராட்டம்
    வியாழக் கிழமை - தண்டகாருன்ய நக்சல் ஆதரவு போராட்டம்
    வெள்ளிக் கிழமை - ஹிந்துத்வா எதிர்ப்பு போராட்டம்
    சனிக்கிழமை - தெலங்கான ஆதரவு போராட்டம்

    வார இறுதி நாள் : அடுத்த வாரத்துக்கான போராட்டம் பற்றிய கூட்டம். தவறாமல் கலந்து கொள்ளவும்.

    Kumaran

    ReplyDelete
  14. சட்டத்தால் லஞ்ச, ஊழலை ஒழிக்க முடியாது என்றால், மற்ற குற்ற செயல்களுக்கு மட்டும் சட்டம் எதற்கு ?

    என் தலைவன் அம்பேத்கர் எழுதிய சட்டம் எதற்கு ?

    தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவான வன்கொடுமை தடுப்பு சட்டம் எதற்கு ?

    என் தலைவன் அம்பேத்கர் போராடியது எதற்கு ?

    தற்போது உள்ள லஞ்ச, ஊழல் சட்டம் மூலம் எதனை அதிகாரிகள் சிறையில் அடைக்கபட்டார்கள் ?

    தற்போது உள்ள சட்டப்படி எவ்வளவு பணம், சொத்துக்கள் மீட்கப்பட்ட்டன ?

    ReplyDelete
  15. தான் சொல்வது மட்டுமே சரி, தனது கருத்து மட்டுமே சரி என்பது ஒரு வகையான மன நோய். நாம் எந்த கூட்டத்திற்கு சென்றாலும் இந்த மன நோய் பிடித்தவர்களைப் பார்க்கலாம்.

    அவர் நல்லவரா, கெட்டவரா ? என்று பார்ப்பதை விட்டுவிட்டு , லஞ்ச, ஊழலுக்கு எதிராக என்ன மாதிரி சட்டம் வேண்டும் அல்லது இருக்கும் சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம் ? யார் யார் இந்த போராட்டத்தை தமிழகத்தில் செய்கிறார்கள் ? என்ற கட்டுரை இருந்தால் நன்றாக இருக்கும். புரிந்து கொள்ளுமா ?

    ReplyDelete
  16. //அண்ணா ஹஸாரே, மற்றும் அவர் போன்றோரிடம் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான செயல்திட்டம் ஏதும் உள்ளதா?//

    Check this interview and what Arvind has to say at the end. Their team wants to act beyond Lokpal including local empowerment and autonomy

    http://www.ndtv.com/video/player/your-call/team-anna-answers-your-qs/208377

    ReplyDelete