Sunday, March 16, 2014

ராணியின் படிக்கிணறு

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக இந்தியாவிலிருந்து இரண்டு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன என்ற செய்தியை இன்றைய தி ஹிந்துவில் பார்த்தேன். அதில் ஒன்று குஜராத்தில் பாடன் நகரில் இருக்கும் ‘ராணி கி வாவ்’ - ராணி (கட்டிய) படிக்கிணறு. இரண்டாவது இமாச்சலப் பிரதேசத்தின் பெரும் இமாலய தேசியப் பூங்கா.

ஜனவரி மாத இறுதியில் குஜராத் கலாசார யாத்திரை சென்றிருந்தபோது நாங்கள் ராணி கி வாவ் சென்றிருந்தோம். அப்போது எடுத்த சில புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் சேர்த்திருந்தேன்.

படிக்கிணறுகள் குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி போன்ற இடங்களில் விரவிக்கிடக்கின்றன. ஆனால் குஜராத்தில் அவை மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. நீர் இல்லாத மாநிலம் என்பதால் அப்பகுதியை ஆண்ட மன்னர்கள் நீர் நிலைகளுக்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுத்து மிகச் சிறந்த கட்டுமானங்களை அவற்றைச் சுற்றி ஏற்படுத்தியிருந்தனர்.

இந்தக் குறிப்பிட்ட கட்டடமான ராணி கி வாவைக் கட்டுவித்தவர் மகாராணி உதயமதி. இவர் இந்தப் பகுதியை 12-ம் நூற்றாண்டில் ஆண்ட முதலாம் பீமதேவ சோலங்கியின் மனைவி ஆவார். பீமதேவ சோலங்கி இறந்தபின் அவருடைய நினைவாக இந்தப் படிக்கிணற்றை உதயமதி கட்டினார் என்று பின்னர் 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு நூல் குறிப்பிடுகிறது. இந்தக் கிணறு இருக்கும் இடத்தில் எந்தக் கல்வெட்டும் கிடைக்கவில்லை.

நாங்கள் ஒரு குழுவாக இங்கே சென்றிருந்தபோது பேராசிரியர் முகுந்த்பாய் பிரம்மசத்திரியா என்பவர் எங்களுக்கு இந்த இடம் குறித்து ஓர் அறிமுகம் கொடுத்தார். அதற்குமுன்பாகவே ரவி தியாகராஜன் (எழுத்தாளர் அசோகமித்திரனின் மகன்) படிக்கிணறுகள் குறித்த வெகு அற்புதமான உரையை அளித்திருந்தார். இந்த இடத்தைப் பார்ப்பதற்குமுன் நாங்கள் அடாலஜ் என்ற இடத்தில் இருந்த படிக்கிணற்றைப் பார்வையிட்டிருந்தோம். இருந்தாலும் ராணி கி வாவ் அருகில் வந்தபோதுதான் தெரிந்தது, நாங்கள் முற்றிலும் வித்தியாசமான ஓர் அனுபவத்தைப் பெறப்போகிறோம் என்பது.

குஜராத்தின் அனைத்துப் படிக்கிணறுகளை ஒரு தராசில் வைத்தாலும் அவற்றால் ராணி கி வாவை நெருங்கக்கூட முடியாது. சிற்ப வேலைப்பாடுகளின் மிகச் சிறந்த கலைக்கூடமாக இந்த இடம் விளங்குகிறது.

நீர்வளம் குன்றிய ஓரிடத்தில் தரையில் வெகு ஆழமாகத் தோண்டினால்தான் குடிநீர் கிடைக்கும். அப்படி ஆழமாகத் தோண்டும்போது கீழே சென்று நீர் எடுத்துவர ஒரு பாதை தேவை. அந்தப் பாதையை நன்கு பெரிதாக ஆக்கி, அடுக்கடுக்குகளாகக் கற்களைக் கொண்டு கட்டி, அந்தக் கற்களில் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு சிலைகளை வடித்துவிட்டால் எப்படி இருக்கும்? அதுதான் ராணி கி வாவ். சில படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். பெரும்பாலும் திருமாலின் சிலைகள் எங்கும் காணப்படும். விஷ்ணுவின் 24 வடிவங்களில் பெரும்பாலானவை இங்கே இருப்பதாக கிரித் மான்கொடி போன்ற வல்லுநர்கள் சொல்கிறார்கள். வட்டக் கிணற்றின் உட்புறம் பள்ளிகொண்ட விஷ்ணுவைக் காணலாம். தசாவதாரச் சிற்பங்கள் பல இடங்களில். ஆங்காங்கே அப்சரஸ்கள், துர்கை, என்று கணக்கே இல்லாத சிற்பங்கள்.

1980-கள் வரை இந்தக் கிணற்றில் நீர் இருந்ததாகச் சொல்கிறார் பிரம்மசத்திரியா. 1960-களில்தான் இந்தக் கிணறு இந்தியத் தொல்லியல் துறையால் முற்றிலுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதற்குமுன்புவரை கிணற்றில் மேல்பகுதியும் சில தூண்களும் மட்டுமே காணப்பட்டன. இந்தக் கிணற்றின் சில தூண்களை எடுத்து அருகில் ஓரிடத்தில் இன்னொரு படிக்கிணறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறதாம். அதனை இன்றும் காணலாம். தொல்லியல் துறை இந்தக் கிணற்றை மிக அழகாகப் பராமரித்துவந்திருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டால், யுனெஸ்கோ பெருமைப்படக்கூடிய ஒரு கலாசாரச் சின்னமே இது.

கிணற்றை நோக்கிச் செல்லும்போது
பக்கவாட்டில் வேலைப்பாடுகள்

மண்டபத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள்
யார் இது?
பல தளங்களை ஒருசேரப் பார்க்கலாம்
ஓர் அங்குலம்கூட விடாமல் சிற்பங்கள், வேலைப்பாடுகள்
விஷ்ணுவின் 24 வடிவங்களில் ஒன்று
யார் இது?
உதட்டுக்குப் பூச்சிடும் தேவதை
கல்கி அவதாரம்
மகிஷாசுரமர்தினி
வராக அவதாரம்
வாமன அவதாரம்
விஷ்ணு
கிணற்றின் உட்சுவர், பள்ளிகொண்ட விஷ்ணு
கீர்த்திமுகங்கள், யானைகள், முனிவர்கள், தெய்வங்கள்
ஜாலி வேலைப்பாடுகள்
மேலிருந்து கீழ்நோக்கிய படம்
கிணறு, மேலிருந்துகீழ்
தொல்லியல் துறை அகழ்ந்தெடுக்கும்முன்பு

6 comments:

  1. கேள்விப்பட்டதே இல்லை. பிரமாதமாக இருக்கிறது. வட இந்திய சிற்பங்களை முகலாயர்கள் முற்றாக அழித்துவிட்டர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  2. பாரம்பர்யத்தைப் பறைசாற்றும் அருமையான வரலாற்று ஆவணம்..பகிர்வுகளுக்கும் படங்களுக்கும் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. அற்புதம். கட்டுரையும் படங்களும் அருமை. வழக்கமான வடநாட்டுச் சிற்பங்கள் போலன்றி இதில் தமிழ்நாட்டுச் சிற்பங்களின் பாணி தெரிவதாக எனக்குத் தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete
  4. வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்க படவேண்டியவை ..
    சிறப்பான பதிவு..

    ReplyDelete
  5. Hi....tks....if at all ,I go to Gujarat ,I will definitely visit Rani ki vav....

    ReplyDelete