Tuesday, March 11, 2014

Long form கட்டுரைகள்

தமிழ் வெகுஜன இதழ்களில், தினசரிகளில் 500-600 வார்த்தைகளுக்குமேல் எந்தக் கட்டுரையுமே இருக்காது. சிற்றிதழ்களில் 1000 முதல் 1200 வார்த்தைகளில் கட்டுரைகள் இருக்கும். ஏ4 அளவில் ஐந்தாறு பக்கங்கள் வரலாம். ஆனால் கேரவான் போன்ற ஆங்கில இதழில் முதன்மைக் கட்டுரை 7,000 முதல் 10,000 சொற்கள்கூட வருகிறது. இதைத்தான் லாங் ஃபார்ம் எழுத்து என்கிறோம்.

சில விஷயங்களை விலாவரியாக, விஸ்தாரமாக, விளக்கமாக, மெதுவாக எழுதவேண்டியிருக்கிறது. தமிழில் இதற்கான தேவையும் இருக்கிறது. ஆனால் இம்மாதிரியான கட்டுரைகள் வருவதற்கான வெளி இல்லை. இணையம்தான் இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் எத்தனை பேர் படிக்கப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லாததாலும் இதுபோன்ற விரிவான கட்டுரையை எழுத ஆகும் செலவு காரணத்தாலும் தீவிர இதழாளர்கள் இதைச் சோதித்துப்பார்க்கவில்லை.

லாங் ஃபார்ம் எழுத சுவாரசியமான எழுத்து நடை கட்டாயம் வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பக்கம்கூடத் தாண்டாமல் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவார்கள். முக்கியமான விஷயமாகவும் இருக்கவேண்டும். நம்பகத்தன்மை மிகவும் அவசியம். கள உழைப்பு மிக மிக அவசியம். உட்கார்ந்த இடத்தில் கூகிளை அலசி இதையெல்லாம் எழுத முடியாது. பலரைப் பார்த்துப் பேசித் தரவுகளைச் சேர்க்கவேண்டும். அவர்கள் அனைவரையும் இணைக்கும் சரடு வேண்டும்.

லாங் ஃபார்ம் ஜர்னலிசத்துக்கு என்று தமிழில் ஓர் இதழ் வேண்டும் என்று நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதற்கான மூலதனம் கையில் இருக்கும் சிலரால்தான் இது சாத்தியப்படும்.

எம்மாதிரியான கட்டுரைகள் லாங் ஃபார்மில் வரலாம் என்று யோசித்துப் பார்த்தேன். உடனடியாகத் தோன்றியவை இவை.

1) மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை. எனக்கு இதுகுறித்து நிறையக் குழப்பங்கள் உள்ளன. ஒரு விரிவான, முழுமையான கட்டுரை இந்தத் தலைப்பில் வந்தால் அருமையாக இருக்கும். வெற்றுப் பரபரப்புக்காக எழுதப்படுவதாக இருக்கக்கூடாது.

2) தேர்தலுக்கு முந்தைய அரசியல் பேரங்கள். சிறு கட்சிகள் எப்படிப் பெரும் கட்சிகளிடம் தங்கள் பேரங்களைத் தொடங்குகிறார்கள்; யார் யாரெல்லாம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்கிறார்கள்; பேசப்படுவது வெறும் இடங்கள் மட்டுமா? பணப் பரிமாற்றம் உண்டு என்றால் எந்தத் திசையில், ஏன்? இவை அனைத்தையும் பற்றிய முழுமையான, உருப்படியான ஆய்வுக் கட்டுரை.

கேரவான் லாங் ஃபார்ம் கட்டுரைகளில் நிறைய, ஆசாமிகளைப் பற்றியவை. அதுமாதிரி யாரைப் பற்றியெல்லாம் எழுதப்படவேண்டும் என்று குறிப்பிட முடியுமா?

வேறு ஆலோசனைகள் இருந்தாலும் சொல்லுங்கள்.

16 comments:

 1. As far as I know, India Today's (Tamil version) cover stories are long form articles.

  ReplyDelete
 2. லாங் ஃபார்ம் என்பது தமிழுக்கு புதிதல்ல. திராவிடக் கட்சியினர் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பயன்படுத்திய உத்திதான். தனிநபர்கள் சிறுவெளியீடாக அவர்களே அச்சிட்டு 50 பைசா, ஒரு ரூபாய் விலைக்கு கட்சிக் கூட்டங்களில் விற்பார்கள். கண்ணதாசன் எம்.ஜி.ஆர் ஆட்சியை திட்டி எழுதி வெளியிட்ட லாங்ஃபார்ம் ஒன்று சமீபத்தில் ஒரு பழைய கடையில் எனக்கு கிடைத்தது. இதன் விளைவாகதான் அவர் அரசவைக் கவிஞர் ஆக்கப்பட்டார் :)

  போன சட்டமன்றத் தேர்தலின் போது ஸ்பெக்ட்ரம் குறித்து (உங்களுடைய கட்டுரையையும் சேர்த்து) இமையம் ஒரு லாங் ஃபார்ம் வெளியிட்டார். நினைவிருக்கிறதா?

  ReplyDelete
 3. தமிழக அரசியலை ஒருவழிபண்ணாமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே? இதெல்லாம் இங்கு நடக்குமா? முயற்சிக்கு
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. You have made a definitive statement, Sir. I would like to pursue this idea with you in all earnestness. Can we meet sometime in April 2014.
  I am in the USA now. Hence, this request.

  ReplyDelete
 5. (1) இட ஒதுக்கீடு பற்றி விரிவாக அலசி ஆரயலாம். இட ஒதுக்கீடு எந்த வழிகளில் பலன் தந்திருக்கிறது? எந்த வழிகளில் பயன் தரவில்லை? யாருக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும், யாருக்கு அளிக்கப்படக் கூடாது? அதில் என்ன மாற்றங்கள் வேண்டும்? அல்லது மாற்றம் எதுவும் தேவையில்லையா? ஒதுக்கீடு கூடாது என்று சில துறைகள் இருக்கின்றனவா? ஏன் கூடாது, அல்லது ஏன் வேண்டும்? தனியார் துறையில் ஒதுக்கீடு வேண்டுமா? அதைக் கொண்டுவருவது எப்படி? வேண்டாம் என்றால் ஏன்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஒதுக்கீடு தொடர வேண்டும், அதை எப்படி முடிவு செய்ய வேண்டும்? அதிகபட்ச வரம்பு (சதவீத இடங்கள்) எவ்வளவு இருக்க வேண்டும்? இது போன்ற கேள்விகளை சரியான தரவுகளுடன் விரிவாக எழுதலாம்.

  (2) தமிழ் திரைப்படங்களின் சமூகத் தாக்கம் என்ன? பராசக்தி போன்ற படங்கள் சமூக மாற்றங்கள் ஏற்படத் தூண்டுதலாக இருந்தனவா? எல்லாப் படங்களும் காதலை, குறிப்பாக சாதி, மதம், அந்தஸ்து கடந்த காதலைப் போற்றுகின்றன. இதனால் காதல் திருமணங்களுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறதா? இன்னொரு புறம் சாதிப் பெருமை பேசும் படங்களும் வருகின்றன. இவை சாதி உணர்வைத் தூண்டியிருக்கின்றனவா? 'தேசபக்தி', 'தெய்வபக்தி' படங்கள் அந்த உணர்வுகளை அதிகரிக்கின்றனவா? இல்லை எந்தப் படமும் எந்தத் தாக்கத்தையும் செலுத்தவில்லை, வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருந்துள்ளனவா? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியவர்கள் வெற்றிக்கு அவர்களது திரைப்படப் பின்புலம் எந்த அளவு காரணம்? ஏன் சிவாஜி, விஜயகாந்த் உட்பட வேறு யாரும் அப்படி வெற்றி பெற முடியவில்லை? இந்தக் கேள்விகளை தரவுகளுடன் ஆராயலாம்.

  சரவணன்

  ReplyDelete
 6. லாங் ஃபார்ம் எழுத சுவாரசியமான எழுத்து நடை கட்டாயம் வேண்டும். முக்கியமான விஷயமாகவும் இருக்கவேண்டும். நம்பகத்தன்மை மிகவும் அவசியம். கள உழைப்பு மிக மிக அவசியம்.
  --இந்த அமசங்கள் எதுவும் கேரவானில் கிடையாது. களத்திற்கே சென்றாலும் ஊகமும் அகநிர்ணயிப்பும் அதிகம்.

  ReplyDelete
 7. லாங் ஃபார்ம் கட்டுரைக்கு எழுத்து நடை, குறிப்பிடப்படும் செய்தியின் நம்பகத்தன்மை, படிப்பவர்கள் தங்களின் கவனத்தை திருப்பவிடாத எழுத்துக் கோர்வை, தற்போதைய சமூகத்திற்கான தேவை, மேலும் கட்டுரையை படிப்பவர்களுக்கு அதனால் ஒரு சிறு சதவிகிதமாவது பயனடையுமாறு ஒரு கருத்து ஆகியவற்றை ஒருங்கிணைத்தால் லாங் ஃபார்ம் கட்டுரை வெற்றியடையலாம்.பத்ரி சார் கூறியது போல தேர்தலுக்கு முந்தைய அரசியல் பேரங்கள் பற்றி எழுதினால் அவை 100 சதவிகிதம் உண்மையாக இருந்தாலும் சம்மந்தப்பட்டவர்கள் அதனை மறுக்கத்தான் செய்வார்கள் அப்போது எத்தனை உண்மை அதில் இருந்தாலும் அதை நிருபிக்க நிறைய முயற்சிகள் தேவையாக இருக்கும். இருந்தாலும் இது ஒரு நல்ல முயற்சி. ஊடகவியலில் இது போன்ற பரீட்சாத்தமான முயற்சிகள் நிச்சயம் வெற்றி அடையும். அடைய வேண்டும்.
  வீ.சக்திவேல்

  ReplyDelete
 8. கோயில் சொத்துக்கள் எப்படி கொள்ளையடிக்கப்பட்டுள்ளன; நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது பற்றிய பிரச்சினை’; சாலைகள் ஆக்கிரமிப்பு;மலைகளில் மரங்களை வெட்டி பசுமையே இல்லாமல் செய்தமை; கோயில் குளங்கள், பொதுக் குளங்கள், குட்டைகள் வற்றியமை, கிணறுகளின் நீர் மட்டம் இறங்கிப் போனமை; ஏழை மக்களுக்கு குறைந்த செலவிலான அடிப்படை வைத்திய வசதி இல்லாமல் போனமை என எவ்வளவோ விஷயங்கள் உள்ளன.
  அறிவியல் குறித்தும் லாங் பார்ம் கட்டுரைகள் எழுத முடியும். நான் எழுதிய அறிவியல் கட்டுரை ஒன்று தி ஹிந்து இதழில் முழுப் பக்கத்துக்கு வெளி வந்தது.
  லாங் பார்ம் கட்டுரை எழுத நிறைய விஷய ஞானம் இருக்க வேண்டும். கதை விடுவதாக இருக்கக்கூடாது; அற்ப விஷயங்களைப் பற்றியதாக இருக்கக்கூடாது.வெறும் விருப்பு வெறுப்பு நிறைந்ததாக இருக்கக்கூடாது. வெறும் மேற்கோள்களே நிறைய இடத்தை அடைத்துக் கொள்வதாக இருத்தல் கூடாது பழங்காலப் பெருமையைத் தம்பட்டம் அடிப்ப்தாகவும் இருக்கக்கூடாது

  ReplyDelete
 9. 1. தமிழகத்தில் ஏன் மணல் கொண்டு, ஜல்லி, கான்க்ரீட் கொண்டு கட்டடம் கட்ட வேண்டும்? பாரம்பரிய கட்டடக்கலை என்னவானது?

  2. தமிழகத்தில் டாஸ்மாக்கின் பிண்ணனி என்ன? பாப்புலரான ப்ராண்டு சரக்கு கிடைக்காமல் இருப்பதன் பிண்ணனி என்ன? கழகங்கள் மதுபான ஆலைகளை தங்கள் ஆட்களுக்குள்ளே வைத்து நடத்துவதன் மர்மம் என்ன? அரசு வருமானத்தில் மது/கலால் வரியின் பங்கு என்ன?

  3. குளச்சலில் சரக்கு முனையத் துறைமுகமும், இந்துமாக்கடலில் கப்பல் போக்குவரத்தும், சர்வதேச அரசியலும்.

  4. பள்ளிக் கல்வித் தொழிற்சாலைகளும், மாற்றத்திற்கான தேவைகளும்.

  5. இன்றைய கல்வி: மெய்ப்பொருள் காண்பது எப்போது?

  6. பெருகி வரும் ஸ்மார்ட் போன்கள்: தமிழர்களுக்கான Apps எங்கே?

  7. அரசு, அரசில், அலுவலில் தமிழ்க் கணிமைப் பயன்பாடு.

  ReplyDelete

 10. //லாங் ஃபார்ம் எழுத சுவாரசியமான எழுத்து நடை கட்டாயம் வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பக்கம்கூடத் தாண்டாமல் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவார்கள். முக்கியமான விஷயமாகவும் இருக்கவேண்டும். நம்பகத்தன்மை மிகவும் அவசியம். கள உழைப்பு மிக மிக அவசியம். உட்கார்ந்த இடத்தில் கூகிளை அலசி இதையெல்லாம் எழுத முடியாது. பலரைப் பார்த்துப் பேசித் தரவுகளைச் சேர்க்கவேண்டும். அவர்கள் அனைவரையும் இணைக்கும் சரடு வேண்டும்.

  லாங் ஃபார்ம் ஜர்னலிசத்துக்கு என்று தமிழில் ஓர் இதழ் வேண்டும் என்று நேற்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். //

  நீங்கள் பத்திரிகை தொடங்கினால் அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களை ஆசிரியராக்கி விடலாம்.

  ReplyDelete
 11. 1. Politics behind inflation control and its adverse impacts on agriculture
  2. Politics behind inflation control and its adverse impacts on industrial output
  3. Quality of roads (poor laying, over loaded vehicles....)

  ReplyDelete
 12. Why so many suggestions are of the exposé type? Why not well-researched and interesting profiles (like the ones by Gay Talese or John McPhee) or acute cultural observations (like the ones by David Foster Wallace or Peter Hessler) as well?

  ReplyDelete
 13. Translations of famous essays through history is one option. Is there an audience for long form essays in Tamil? How are the economics - who gets paid and how much?

  ReplyDelete
  Replies
  1. why govt giving mines like rare natural gas , methane, kanyakumari sand to private corparates?
   whether diging methane from thanjavur is - pave the way to curtain import, and help to our economy?

   Delete
 14. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் இடையிலான balance பற்றிய ஒரு long form தமிழில் அவசியம் தேவை. நீங்கள் குறிப்பிட்டுள்ள கிரானைட் மோசடி, ஆற்றில் மணல் கொள்ளை போன்றவையும் இதன் கீழ் வருகிறது.
  இன்றைய அரசாங்கங்கள், காடுகளை waste of space ஆகவும், முன்னேற்றத்திற்கான தடைகளாகவுமே பார்க்கிறது. பிரிட்டிஷ் காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, exploit செய்யப்பட்ட வளங்கள் தீரும்பொழுது, அருகிலேயே உள்ள காடுகளின் அடியில் உள்ள வளங்கள் கண்ணை உறுத்துவது தவிர்க்க முடியாதது.
  காடுகளின் பரப்பும், அதிலுள்ள உயிரினங்களின் living spaceம் கடுமையாக நெரிக்கப்படுவதை மறுக்கவே முடியாது. வேளாண் காடுகள், community காடுகள் போன்ற monoculture ஏற்பாடுகள் அரைகுறை முயற்சிகளாகவே தெரிகிறது.
  இதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என்பதை பற்றி யோசித்து உடனடியான முயற்சி எடுக்கவேண்டிய தருணம் இது.

  ReplyDelete