Thursday, March 20, 2014

தேர்தல் நேர்காணல்கள் - நலங்கிள்ளி

நலங்கிள்ளி, கிழக்கு பதிப்பகத்துக்காக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இன்னமும் வெளியாகவில்லை. ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் A Brief History of Time என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் தேசிய ஆதரவாளர். நண்பர். நாங்கள் பல விஷயங்களில் கடுமையாக வேறுபடுகிறோம். நேற்று அலுவலகம் வந்திருந்தார். அப்போது அவரிடம் தேர்தல் குறித்து சுமார் 15 நிமிடங்கள் பேசி ஒளிப்பதிவு செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பேசி முடிக்கும்போது 40 நிமிடங்கள் ஆகியிருந்தன. நேரம் இருப்பவர்கள் பொறுமையாகக் கேட்டுப் பார்க்கலாம்.

இந்திய தேசியம் என்பது தமிழர் நலனுக்கு எதிரானது என்ற கொள்கை இவருடையது. நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிக்கப்படவேண்டியது என்கிறார். ஆனால் தமிழக சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கக்கூடாது என்கிறார். ஜனநாயகத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே பிரச்னைக்குரியது, அதுவே ஜனநாயகத் தன்மையற்றது என்கிறார். அம்பேத்கர் முதற்கொண்டு காந்தி, நேரு என்று அனைவரையும் மொழிவழி தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று பார்க்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய அனைவருமே இந்திய தேசியம் குறித்த ஒரே பார்வையைக் கொண்டவர்கள் என்கிறார்.

ஒரு கட்டத்தில் தான் தீவிர ஆர்.எஸ்.எஸ் அபிமானியாக இருந்ததாகவும் பாபர் மசூதி இடிப்பின்போது கரசேவையில் கலந்துகொள்ள விரும்பியதாகவும் ஆனால் தந்தை தடுத்ததால் போக முடியாமல் போய்விட்டது என்றும் ஓரிடத்தில் சொல்கிறார்! ஆனால் பின்னர் எவ்வாறு அதிலிருந்து விலகினேன் என்பதையும் குறிப்பிடுகிறார்.

பார்ப்போர், உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.


7 comments:

 1. நலங்கிள்ளி அவர்களுக்கு சில கேள்விகள்:

  * தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டு மற்ற மாநிலங்களில் இருந்து மாறுபட்டதாகவே உள்ளது. இந்தியாவின் அங்கமாக உள்ளதால் பாதிக்கப்பட்டு விட்டதா ?

  * இந்தி மொழி திணிப்பு எதிர்க்கப்பட்டது / எதிர்க்கப்படும். "region C " மாநிலமாகவே தமிழ்நாடு உள்ளது. இந்திய அரசு ஆங்கிலத்திலேயே தமிழ்நாட்டுடன் தகவல் தொடர்பு வைக்க வேண்டும்!

  * ஆங்கில மொழி மோகம் /ஆசை வெளியில் இருந்து வந்ததல்ல. அது நம் மக்களின் விருப்பமாகவே உள்ளது. உலக அளவில் வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஏற்பட்டது அது. சீனாவிலும் இதே நிலைமை இன்று! இதற்கு மற்றவரை ஏன் குறை கூறுவானேன்?

  * தனி நாடகிவிட்டால் இலங்கை தமிழர், தமிழ் மீனவர் பிரச்சனைகளை தீர்த்து விட முடியுமா? ரஷ்யாவை போல பக்கத்து நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தும் நிலையில் தமிழ்நாடு சக்தி கொண்டதாகி விடுமா ?
  இரு (முக்கியமில்லாத!) சிறிய நாடுகளுடைய பிரச்சனையாக பார்க்கப்படும். அப்போதும் சர்வதேச நாடுகள் அதை கண்டுகொள்ளாது. எண்ணையோ அல்லது வேறு எந்த முக்கிய வளங்களோ இல்லாத சிறிய நாடுகளின் "முக்கியத்துவம்" அவ்வளவுதான்.

  * பத்ரி அவர்களின் கேள்விக்கு சரியான பதில் இல்லை. எந்த பெரிய குழுவிலும் உட் குழுக்கள், அவற்றிடையே பிரச்சனைகள் இருக்கும். மேலும் மேலும் தனி நாடுகள் ஏற்படுமா ?

  * தமிழ்நாட்டில் தமிழ் தவிர பிற மொழிகள் பேசுவோரும் உள்ளனர். படுகர் மொழி , இருளர் மொழி, சௌராஷ்டிரா மொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது பேசுவோர் உள்ளனர். அவர்கள் கதி ? நீங்கள் கூறும் காரணங்கள் சில அவர்களுக்கும் பொருந்தலாம். அவர்களும் தனி நாடு கேட்டால் ?

  * பிற்படுத்தப்பட்டோர் நிலைமை குறித்து கூறினீர்கள். தமிழ்நாட்டில் தலித்களின் நிலைமை? இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து மேம்பட்டதாக உள்ளதா ? கலவரங்கள்/வன்கொடுமைகள் இங்கு நடக்க வில்லையா? தமிழர் "அறம்" குறித்த உங்கள் உயர் மதிப்பீடு சரியானதுதானா?

  -சுந்தர்

  ReplyDelete
  Replies
  1. நலங்கிள்ளிTue Apr 01, 03:59:00 PM GMT+5:30

   * ஆமாம், தனியார்துறை இடஒதுக்கீடு, இசுலாமியர் ஒதுக்கீடு ஆகியவற்றை மேற்கொள்வதற்குத் தமிழகச் சட்டமன்றத்துக்கு அதிகாரமில்லை

   •இந்திய அரசு தமிழகத்துடன் எந்த மொழியில் தொடர்பு வைத்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. வெறும் அரசு அதிகாரிகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களை மொழிபெயர்க்கக் கணினிகளே போதுமானவை. இதற்காக எவரும் 3 வயதிலேயே பா பா ப்ளாக்ஷிப் எனக் கத்த வேண்டியதில்லை.

   • ஆங்கிலத்தை ஏன் தமிழர்கள் விரும்புகிறார் எனப் பேட்டியிலேயே காரணம் சொல்லி விட்டேன். சட்டம், கல்வி, வழிபாடு, வணிகம், கணினி எனத் துறைதோறும் துறைதோறும் தமிழாக்கிப் பாருங்கள், பிறகும் தமிழர் ஆங்கிலத்தை விரும்பினால் பார்ப்போம். ஆங்கிலம் இலத்தீன் ஆதிக்கம் எதிர்த்துப் போராடாமல் இலத்தீன் துதி பாடியிருந்தால், இன்று ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்க சுந்தர் இருந்திருக்க மாட்டார். இந்த சீனா பொய்யை எத்தனை நாள்களுக்குச் சொல்லப் போகிறீர்கள்? தயவுசெய்து கூறுங்கள், சீனாவில் மாணவர்கள் படிக்க ஆரம்பித்திருப்பது ஆங்கிலமா? ஆங்கிலத்திலா?

   •தமிழீழம் பற்றிய கேள்வி பத்திரியிடம் எழவில்லை. எனவே நான் பதில் கூறவில்லை. இங்கு சிறு இடத்தில் உஙகள் வினாவுக்குப் பதிலளிப்பது கடினம்.

   •இன்னும் இன்னும் சிறு நாடுகள் ஏற்படும் எனக் கவலைப்படும் நீங்கள் ஏன் பிரித்தானியரிடம் விடுதலை பெற்றீர்கள்?

   •உங்கள் வாதத்தை நீங்கள் பிரான்சு, ஜப்பான், நார்வே போன்ற பிற நாடுகளுக்கும் நீட்டிக்கலாமா? அங்கெல்லாம் என்ன நூற்றுக்கு நூறு பிரெஞ்சு, சப்பானியம், நார்வீஜியன் மட்டுமா பேசுகின்றனர்? நூற்றுக்கு நூறு ஒரே மொழி பேசும் தேசமேதும் உலகில் உண்டா? அந்நாடுகிளின் பிற மொழியினருக்கு என்ன கதியோ அதுவேதான் தமிழகத்தின் பிற மொழியினருக்கும்.

   •தமிழர் அறம் என நான் தனியே உயர் மதிப்பீடு செய்து நான் பேசவில்லை. ஆனால் இடஒதுக்கீடு, சாதிப் பெயர் பின்னொட்டு ஒழிப்பு, இந்துத்துவ எதிர்ப்பு போன்ற சில நடவடிக்கைகளில் தமிழகம் வடக்கை விட முன்னேறியிருப்பது உண்மையே.
   நலங்கிள்ளி

   Delete
  2. u reply conviced me nalankill sir

   Delete
 2. நலங்கிள்ளி நடக்க முடியாதவற்றைக்காட்டிலிலும் நடக்க்கஃ கூடியவற்றை பிராக்டிகலாக யோசித்து செயலாற்றலாம்..நல்ல சிந்தனையாளராக்க் காணப்படுகிறார்

  ReplyDelete
 3. பேட்டி சிறப்பாக இருந்தது. நலங்கிள்ளி தெளிவாக தன் கருத்துக்களை கூறினார். பத்ரி அவரிடன் நிறைய கேள்விகளை கேட்டிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. இப்போது எடுத்துள்ள பேட்டியே 42 நிமிடங்கள். இதற்கும் மேல் கேள்விகள் கேட்டால் நேரம் இன்னும் நீண்டுவிடுமே?

   Delete