Monday, March 31, 2014

வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் உ.வாசுகி

இன்று மதியம், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகியைச் சந்தித்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். இவர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உமாநாத் - பாப்பா உமாநாத் ஆகியோரின் மகள். உமாநாத், நான் நாகப்பட்டினத்தில் வசித்தபோது நாகை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள சிறு பிரசுரங்கள் சிலவற்றை எனக்குத் தந்தார்.


ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தேர்தல் பிரசாரங்களில் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஓர் உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாக்குறுதி அளிப்பார்கள். உண்மையில், மக்களின் பெரும்பாலான தேவைகளை மாநகராட்சி (அல்லது அந்தந்த உள்ளாட்சி) மற்றும் மாநில அரசுதான் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்தத் தொகுதி நிதியைக் கொண்டு ஒருசில விஷயங்களைச் செய்யலாம். அவ்வளவுதான்.

வங்கி ஊழியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த வாசுகி, விருப்ப ஓய்வு பெற்றபின் தற்போது முழுநேரக் கட்சிப் பணியாளராக உள்ளார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். பெண்ணுரிமை, சிறுவர்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். தன் அனுபவங்களை ‘பெண் - வன்முறையற்ற வாழ்வை நோக்கி...: ஒரு களப்பணியாளரின் அனுபவங்களிலிருந்து’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார் (பாரதி புத்தகாலயம்).

வட சென்னை தேர்தல் நிலவரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தொழிற்சங்கங்கள் அப்பகுதியில் எம்மாதிரியான பங்காற்றியுள்ளன என்பது குறித்தும் அப்பகுதியின் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களின் பணி, மாநகராட்சி வார்ட் உறுப்பினர்களின் பணி ஆகியவை குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இந்த நல்லுணர்வு வாக்குகளாக மாறவேண்டும்.

வாசுகி போன்றவர்கள் தேர்தலில் ஆதரிக்கப்படவேண்டும். இடதுசாரிப் பொருளாதாரக் கருத்துகள் எனக்கு ஏற்புடையன அல்ல என்றாலும் பொதுவாகவே இடதுசாரி இயக்கங்களின் அர்ப்பணிப்பு உணர்வு, தன்னலம் கருதா உழைப்பு, அப்பழுக்கற்ற வாழ்க்கை முறை ஆகியவைமீது எனக்குப் பெருத்த மரியாதை உண்டு. வட சென்னைவாசிகள் வாசுகிக்கு வாக்களித்து ஆதரவு அளிக்கவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

9 comments:

  1. வினவில் நாளைய பதிவு:
    ஒரு NRI அம்பி திரிபுவாத, போலி இடதுசாரியாகிறார். அட்வான்ஸ் வாழ்த்துகள் பத்ரி அவர்களே! :-)))

    ReplyDelete
  2. //இடதுசாரிப் பொருளாதாரக் கருத்துகள் எனக்கு ஏற்புடையன அல்ல// இந்தக்கொடுமையை எங்கே போய் சொல்ல. அரவிந்த் கேஜரிவால் கூட இடது சாரிகளிடம் டாகுமென்ட்ஸ் வாங்கிப்போய்தான் அம்பானிக்கு எதிராக கேஸ் போட்டார். நம்ம எங்கே தான் இருக்கோம்நு தெரியலயே...

    ReplyDelete
  3. தமிழ்நாட்டில் வாசுகி போன்றவர்களின் உழைப்பு வீணாகக் காரணம் சிபிஎம் மின் நிலைப்பாடுகளும்,முட்டாள்த்தனமான அணுகுமுறைகளும்தான்.ஈழத்தமிழர் பிரச்சினையில் இவர்களின் நிலைப்பாடு எவ்வளவு மடத்தனமானது என்பதை சொல்ல வேண்டியதில்லை.போலி மதசார்பின்மை பேசும் சிபிஎம் மின் நம்பத்தன்மையை சிந்திக்கும் எந்த ஒரு இந்தியரும் சந்தேகிப்பார்.இடதுகள் பெரும் தோல்வியை சந்தித்தால் அவர்களின் அணுகுமுறை மாற வாய்ப்புண்டு.அதற்காகவே அவர்கள் இத்தேர்தலில் தோல்வியை சந்திப்பது அவர்களுக்கு நல்லது.முட்டாள்தனமான அமெரிக்க எதிர்ப்பு,ரஷ்ய,சீன ஆதரவு, மதசார்பின்மை பேசிக்கொண்டே மத அடிப்படையில் சலுகைகள், உரிமைகள் பேசும் கட்சியை
    எப்படி ஆதரிக்க முடியும்.பாஜகதான் இந்தியாவின் பெரும் ஆபத்து என்று பிரச்சாரம் செய்யும் இவர்களின் பிரச்சாரம் தோற்றுப் போகும்.தேர்தலில் பெரும்பான்மை பெறாவிட்டாலும் அகில இந்திய அளவில் பாஜகவின் வலுக்குறைய இத்தேர்தல் உதவும்.இடதுசாரிகளிடம் இருக்கும் அரசியல் அணுகுமுறை பாஜகவிற்கு எதிராக யாரை வேண்டுமானாலும் ஆதரிப்பது என்பதுதான்.அதை வைத்துக்கொண்டு செய்யும் அரசியல் நீர்த்து இத்தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.அதன் பின்னராவது இவர்கள் தம் முட்டாள்தனமான அணுகுமுற

    ReplyDelete
  4. அனானிமஸ் ன் புகைச்சல் குறைந்த பட்ச பதிலுக்குகூட தகுதியற்றது. எனினும் இப்படி சில பேர் திரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லாமல் சொல்வது இடதுசாரிகளின் வளர்ச்சி. இடது சாரிகளின் நிலைகுலையாத அரசியல் நிலைபாடு, அது ஈழமாக இருந்தாலும் சரி, ஏகாதிபத்திய அமெரிக்க எதிர்ப்பு ஆனாலும் சரி, மதவெறி எதிர்ப்பானாலும் சரி, இதுபோன்ற மக்கள் பிரச்னைகளில் சி,பி,எம், ன் நிலைபாடு சரி என பல்வேறு காலகட்டங்களில் பலமுறை நிருபிக்கப்பட்டுள்ளது வரலாறு. மாற்றுக் கருத்துக்களை செவிமடுக்க பழகிக்கொள்ளுங்கள்..நண்பரே,,ஜனநாயக நாட்டில் வாழும் நாம் அதனைப் பேணிக் காப்போம்..நண்பரே..

    ReplyDelete
  5. ஜனனி ரமேஷ்Tue Apr 01, 10:55:00 PM GMT+5:30

    உமாநாத் மற்றும் பாப்பா உமாநாத் ஆகியோரின் மகளான வாசுகிக்கு அறிமுகம் தேவையில்லை. இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் அவருடைய பங்கு அளப்பரிது. Communism is Good but Communists are Bad என்றார் ராஜாஜி. அவர் எந்தச் சூழலில், கருத்தில் சொன்னார் என்று தெரியவில்லை. இருந்தாலும் பத்ரி சேஷாத்ரி சொன்னதுபோல் இடதுசாரிக் கொள்கைகள் குறிப்பாக அவர்களது அரசியல் நடவடிக்கைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை. என்றாலும் இடது சாரிகளின் தொழிற்சங்கப் பங்களிப்பு மகத்தானது என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. இடதுசாரிகள் இல்லையெனில் பொதுத் துறை வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை அரசு இந்நேரம் தனியாருக்குத் தாரை வார்த்திருக்கும். காப்பீட்டு ஊழியன் என்ற முறையில் இதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு, அப்பழுக்கற்ற வாழ்க்கை என வாசுகியைப் பாராட்டி பத்ரி சேஷாத்ரி கூறியவற்றை நானும் வழிமொழிகிறேன். இவரைப் போன்ற நல்லவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவது தொகுதிக்கு மட்டுமின்றி நாட்டுக்கே நல்லதாகும். அந்த வகையில் இவரை வெற்றி பெற வைக்கும் வாய்ப்பு வட சென்னை வாக்காளர்களுக்குக் கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை நழுவ விடாமல் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்க்ளுக்கு உள்ளது.

    ReplyDelete
  6. ஒரு விஷயத்தை சரியாக சொல்லியுள்ளீர்கள் . ஒரு எம்.பி என்ன செய்ய முடியும் என்று பலருக்கும் தெரிவதில்லை (பத்திரிகைகள் உட்பட ). தொகுதி பிரச்சனைகள் பெரும்பாலும் எம்.எல்.ஏ, மாநில அரசு, உள்ளாட்சி பிரதிநிதி , உள்ளாட்சி அமைப்பு செய்ய வேண்டியவை என்ற விழிப்புணர்வு இல்லை.தேசிய பிரச்சனைகள் அலசப்படுவது இல்லை

    ReplyDelete
  7. வாசுகி என் நீண்ட கால தோழர். நான் மதிக்கும் தோழர்களில் ஒருவர். சுதந்திரப் போராட்டத்தில் பெண்கலின் பங்கும், பெரியாரின் வாழ்க்கைக்கதை ஆகிய பொருட்களில் நான் தயாரித்த இரண்டு தொலைக்காட்சிப் படங்களிலும் என் வேண்டுகோளுக்காக வந்து முழு நீளப் பாத்திரம் ஏற்று நடித்தவர். சமயங்களில் இப்படிப்பட்ட தோழர்களுடன் ஒரே அணியில் இருந்து தேர்தல் அரசியலை சந்திக்கமுடியாமல் போய்விடுகிறதே என்பது எனக்கு வருத்தம்தான். எனினும் நான் வெல்லவேண்டும் என்று வாசுகியும் வாசுகி வெல்லவேண்டும் என்று நானும் விரும்புகிறோம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உண்மை.

    ReplyDelete
  8. ஆனால் நாம் தான் நல்லவர்களை அங்கே அனுப்புவதில்லை என்று விரதம் பிடித்திருக்கிறோமே

    ReplyDelete