Thursday, July 28, 2005

தொலை-நோக்குப் பார்வையில் தொலை-தொடர்பு

சமீபத்தில் எஸ்ஸார் நிறுவனம் பிபிஎல் மொபைல் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது. இது விரைவில் ஹட்சிசன் எஸ்ஸார் நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்று தெரிகிறது.

மற்றொருபக்கம் டாடா வி.எஸ்.என்.எல் சில மாதங்களுக்கு முன் டைகோ என்னும் கடலடியாக இணையக் குழாய்களை நிர்வகிக்கும் நிறுவனத்தை வாங்கியிருந்தது. இந்தக் குழாய்கள் மூலம் தொலைபேசி அழைப்புகள், இணைய பிட்/பைட்கள் என்று ஏகப்பட்ட போக்குவரத்தை நிர்வகிக்கலாம். இந்த வாரம் வி.எஸ்.என்.எல் டெலிக்ளோப் என்னும் கனடாவிலிருந்து வேலை செய்யும் (பஹாமாஸில் பதிவு செய்யப்பட்ட) நிறுவனத்தை வாங்கியுள்ளது. டெலிக்ளோப் உலகளாவிய சர்வதேச தொலைபேசி இணைப்புகளை நிர்வகிக்கும் நிறுவனம். இந்த நிறுவனம் சென்ற வருடம் ITXC என்னும் இணையம் மூலமான தொலைபேசிச் சேவையை அளிக்கும் (VoIP) நிறுவனத்தை வாங்கியிருந்தது. ஆக இதன்மூலம் வி.எஸ்.என்.எல் தற்பொழுது மூன்று முக்கியமான ஒன்றோடொன்று இணைந்து இயங்கக்கூடிய நிறுவனங்களை வாங்கியுள்ளது.

VoIP சேவைகள் இன்னமும் சில வருடங்களின் இந்தியாவில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும். இன்னும் சில வருடங்களில் உலகிலேயே இணையம் மூலமான தொலைபேசிச் சேவைதான் பெரும்பங்கு வகிக்கும் என்று தோன்றுகிறது. அப்பொழுது வி.எஸ்.என்.எல் டைகோ, டெலிக்ளோப், ஐ.டி.எக்ஸ்.சி ஆகியவற்றின்மூலம் பெரும் லாபம் சம்பாதிக்கமுடியும்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை வி.எஸ்.என்.எல்/டாடா குழுமம் தொலை-தொடர்புத் துறையில் சற்றே குழப்பமான நிலையில்தான் உள்ளது. வேகமாக வளரும் இந்தத் துறையில் டாடா மிக மெதுவாகவே முன்னேறுகிறது.

சரி, இதெல்லாம் கிடக்கட்டும். அடுத்த நான்கைந்து வருடங்களில் இந்தியாவில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும்? எனது ஆரூடங்கள் பலிக்குமா என்று சில வருடங்கள் கழித்துப் பார்க்கலாம்.

1. இந்தியா முழுமைக்குமாக தொலைபேசிக் கட்டணம் ஒரேமாதிரியாக ஆகும். அதாவது உள்ளூர்க் கட்டணம் என்று ஒன்று. அதற்கடுத்து நீங்கள் சென்னையிலிருந்து தில்லியைக் கூப்பிட்டாலும் சரி, திருச்சியைக் கூப்பிட்டாலும் சரி, நிமிடத்துக்கு ஒரே கட்டணம்தான்.

2. மொபைல் தொலைபேசிச் சேவையை அளிக்கும் நிறுவனங்கள் முதலில் ஆறாகவும், பின் ஐந்தாகவும் சுருங்கும். இவை நாடு முழுவதுமாக மொபைல் சேவையை அளிக்கும். அத்துடன் National Roaming எனப்படும் சேவை தனியாக அளிக்கப்படாமல், தானாகவே எந்த அதிகக் கட்டணமுமின்றி உங்களுக்குக் கிடைக்கும். "நான் 'ரோமிங்ல' இருக்கேன், அப்புறம் கூப்பிடு" என்று யாரும் சொல்லமாட்டார்கள். சொல்லப்போனால் ரோமிங் என்ற வார்த்தையை வெளிநாட்டுக்குப் பயணிக்கும் 3% மக்களைத் தவிர பிறர் அறியவேமாட்டார்கள்.

3. Number portability வந்துவிடும். ஒருமுறை நீங்கள் ஒரு தொலைபேசி நிறுவனத்திடம் ஓர் எண்ணைப் பெற்றுவிட்டால் வேறு யாரிடமும் சேவையை மாற்றினாலும் அதே எண்ணை (வேண்டுமென்றால்) வைத்துக்கொள்ளலாம்.

4. கட்டணமில்லா எண்கள் (Toll-free numbers) இப்பொழுதே இருக்கின்றன. ஆனால் சேவையை அளிப்பவர்களுக்குக் காசு அதிகம். ஆனால் வெகு விரைவில் எளிமையாக, எல்லா தொழில் நிறுவனங்களும் உபயோகிக்குமாறு குறைந்த விலையில் கட்டணமில்லா எண்கள் பெருகும்.

5. டயல்-அப் இணைய இணைப்புக்கு ஒரு ISPக்கு நாடு முழுவதற்குமான ஒரே எண்ணைப் பயன்படுத்தலாம் என்றாகும். டயல்-அப் கட்டணங்கள் வெகுவாகக் குறையும், ஆனாலும் டயல்-அப் உபயோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும். கம்பியில்லா இணைப்புகள் வழியாகவே இணையம் பெரும்பாலும் கிடைக்கும்.

6. கேபிள் டிவி வளர்ந்தது போல ஊருக்கு ஊர் சிறு தொழில்முனைவோரால் கம்பியில்லா இணைப்புகளைக் கொடுக்கும் ஐ.எஸ்.பிக்கள் தோன்றும். பின் இவற்றைப் பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்குவார்கள். 60% மக்கள் வயர்லெஸ் மூலமே இணைய இணைப்பைப் பெறுவார்கள். 30% பேர் டி.எஸ்.எல், கேபிள் போன்ற அகலப்பாட்டை இணைய இணைப்பையும், 10%க்கும் குறைவானவர்களே டயல்-அப் முறையிலான இணைய இணைப்பையும் வைத்திருப்பார்கள்.

7. இந்திய மொபைல் செல்பேசிச் சேவை நிறுவனங்கள் 3G என்றெல்லாம் தொடர்ந்து பொய்பேசுவார்கள். ஆனால் மொபைல் நுகர்வோர் எண்ணிக்கை 15-20 கோடியைத் தாண்டியவுடன்தான் இதுபோன்ற அகலப்பாட்டை சேவையை அளிப்பார்கள்.

8. ஹட்ச், பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகியவை தேசியப் பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டதும், இந்தியாவின் மிகப்பெரிய பத்து நிறுவனங்களுள் (மார்க்கெட் கேபிடலைசேஷனில்) ஐந்து, தொலை-தொடர்பு நிறுவனங்களாக இருக்கும். மீதி ஐந்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி இருக்கும்.

9 comments:

 1. இவை அனைத்தும் மக்களில் 100 சதவீதத்தினருக்கும் பயன் தரும் விதத்தில் நடக்குமா அல்லது மக்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே பயன்பெறுவார்களா? தொலைத்தொடர்பு வசதி பொதுவானதுதானே,யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் தான். ஆனால் 80 முதல் 85 சதவீதத்தினர் இதைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்களா என்பது கேள்விக்குறியே.

  ReplyDelete
 2. தெரிஞ்சு போச்சு கோயிஞ்சாமி சீனியர் பா,ரா தான்னு.

  ReplyDelete
 3. தகவல்களுக்கு நன்றி பத்ரி.

  ஹலோ... goinchami_senior...
  மெய்யாலுமே குரோம்பேட்டைக்கே அகலபபாட்டை இல்லியா!? (அப்புறம் எப்படி பவானில்லாம் (ஈரோடு) கூட கிடைக்குது!?

  ReplyDelete
 4. //3. Number portability வந்துவிடும். ஒருமுறை நீங்கள் ஒரு தொலைபேசி நிறுவனத்திடம் ஓர் எண்ணைப் பெற்றுவிட்டால் வேறு யாரிடமும் சேவையை மாற்றினாலும் அதே எண்ணை (வேண்டுமென்றால்) வைத்துக்கொள்ளலாம்.
  //

  இது ஒரு அசத்தலான வசதி. இப்போது சிங்கப்பூர், UK போன்ற நாடுகளில் உண்டல்லவா?

  //இந்திய மொபைல் செல்பேசிச் சேவை நிறுவனங்கள் 3G என்றெல்லாம் தொடர்ந்து பொய்பேசுவார்கள். //

  எதற்கு பொய் பேச வேண்டும்? புதிய தொழில்நுட்பம் வரும்போது அதற்கேற்றார்போல நுகர்வோர் எண்ணிக்கை அதிகம் ஆகாதா என்ன?

  ReplyDelete
 5. உங்களது ஊகங்கள் 2007க்குள் சாத்தியமென்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 6. //3. Number portability வந்துவிடும். ஒருமுறை நீங்கள் ஒரு தொலைபேசி நிறுவனத்திடம் ஓர் எண்ணைப் பெற்றுவிட்டால் வேறு யாரிடமும் சேவையை மாற்றினாலும் அதே எண்ணை (வேண்டுமென்றால்) வைத்துக்கொள்ளலாம்.
  //

  இது ஒரு அசத்தலான வசதி. இப்போது சிங்கப்பூர், UK போன்ற நாடுகளில் உண்டல்லவா?


  சிங்கப்பூரில் அந்த வசதியிருக்கிறது இருந்தாலும் அதில் உள்ள பிரச்னை...
  நாம் x நிறுவனத்தலிருந்து y நிறுவனத்துக்கு மாறி, பழைய எண்ணை வைத்திருந்தாலும்... இன்னும் ஒவ்வொருமுறை அழைப்பு வரும்போதும் xநிறுவனம் வழியாகத்தான் வரும்...

  ReplyDelete
 7. //சிங்கப்பூரில் அந்த வசதியிருக்கிறது இருந்தாலும் அதில் உள்ள பிரச்னை...
  நாம் x நிறுவனத்தலிருந்து y நிறுவனத்துக்கு மாறி, பழைய எண்ணை வைத்திருந்தாலும்... இன்னும் ஒவ்வொருமுறை அழைப்பு வரும்போதும் xநிறுவனம் வழியாகத்தான் வரும்... //

  அன்பு, அப்படி தான் இந்த வசதியை தர முடியும். இது அங்கே உள்ள நிறுவனங்கள் கூட்டு உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு Revenue Sharing அடிப்படையில் செய்துகொடுக்கும் வசதி.

  ReplyDelete
 8. கேவிஆர்...
  அந்த சேவைக்கு, நாம் கூடுதலாக மாதாமாதம் பணம் கட்டவேண்டும்!
  நீங்க சொல்றமாதிரி அவங்க revenue sharing பண்ணிக்க...

  ReplyDelete
 9. இந்திய மொபைல் செல்பேசிச் சேவை நிறுவனங்கள் 3G என்றெல்லாம் தொடர்ந்து பொய்பேசுவார்கள்..//

  - கை நாட்டுக்கு இந்த 3 G- அப்டின்னா என்னன்னு தெரியலையே..யாராவது வந்து சொல்லுங்களேன்..

  ReplyDelete