Tuesday, July 05, 2005

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2005

ஞாயிறு காலை நெய்வேலிக்குச் செல்ல நான், சுரேஷ் கண்ணன், இகாரஸ் பிரகாஷ் மூவரும் முடிவு செய்தோம். அதிகாலை 5.30க்கு ஜே.எஸ்.ராகவனும், பா.ராகவனும் காரில் செல்வதாக இருந்தார்கள். 6.30க்கு சத்யாவும் காரிலேயே செல்ல முடிவு செய்திருந்தார். ஞாயிறு காலை அத்தனை சீக்கிரம் எழுந்திருப்பது உடம்புக்கு ஆகாது என்று பிடிவாதமாக பிரகாஷும், சுரேஷும் முடிவு செய்தனர். அதனால் பஸ்ஸிலேயே போவது என்று தீர்மானம்.

இருந்தாலும் சுரேஷ் காலை 5.00 மணிக்கே எழுந்திருந்தால்தான் கோயம்பேடுக்கு 8.00 மணிக்குள் வர முடியும் போல. காலை 7.35க்கு நான் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நுழையும்போது பொதுத்தொலைபேசி ஒன்றில் சுரேஷ் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு என் செல்பேசியை அழைப்பதைப் பார்த்தேன். அந்த அழைப்பை எடுக்காமல், சுரேஷுக்கு ஒரு ரூபாயை மிச்சம் செய்தேன். பின் இருவரும் அங்குள்ள ஒரு கடையில் இட்லி, வடை பலகாரம் செய்தோம். அந்தச் சட்னியின் காரம் நான் ஆறு வயது இருக்கும்போது திருப்பதியில் மொட்டை அடித்துக்கொண்டபின் சாப்பிட்ட சட்னியின் காரத்தை ஒத்திருந்தது என்று சுரேஷிடம் சொன்னேன். பிறகு எல்லோரையும் போல, குடிநீர் என்று எழுதியிருந்த இடத்தில் கைகளைக் கழுவிக்கொண்டு, பிளாஸ்டிக் புட்டியில் ஒரு லிட்டர் நீர் 13 ரூபாய்க்கு வாங்கிக் குடித்தோம். 'அக்வாஃபினா இருக்கிறதா' என்று கேட்க, அவரும் 'இருக்கு சார்' என்று சொல்லி பிஸ்லெரி பிராண்டைக் கொடுத்தார்.

பின் பிரகாஷுக்காகக் காத்திருந்தோம். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அடுத்த தெருவில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டே ஆள் உள்ளே வந்தபோது மணி 8.10. அவர் சாப்பிட்டாரா இல்லையா என்றேல்லாம் குசலம் விசாரிக்காமல் நேராக நெய்வேலி செல்லும் பேருந்து ஒன்றைப் பிடித்து மூன்றுபேர் உட்காரும் இருக்கையில் ஏறி அமர்ந்தோம். சின்னக்குழந்தைகள் சன்னல் சீட்டுக்குச் சண்டை போடுவது போல உள்ளே ஏறியதுமே பிரகாஷ் சன்னலோரம் உட்கார்ந்து கொண்டார். நான் நடுவில், சுரேஷ் கடைசியாக.

கையில் தினமணி கதிர் (மட்டும்), தி ஹிந்து இரண்டும் எடுத்து வந்திருந்தேன். தினமணி கதிரில் இரா.முருகன் எழுதும் சற்றே நகுக என்னும் கடைசி இரண்டு பக்கப் பத்தி வருகிறது. அதைப் பார்த்த பிரகாஷுக்கு குஷி தாங்கவில்லை. "இதையெல்லாம் ப்லாக்ல போடாம ஏன் ஏதோ ஆலப்புழை அம்பலப்புழைன்னே எழுதிகிட்டிருக்காரு" என்றார். முருகன் காதில் கேட்டிருக்கவேண்டும், அதனால் தொடரின் முதல் கட்டுரையை இப்பொழுது வலைப்பதிவில் ஏற்றியுள்ளார்.

வண்டி 8.30க்குக் கிளம்பியது. அடுத்த ஐந்து மணிநேரத்தில் நான்கு மணிநேரம் நான் பேசியிருப்பேன். நடுநடுவே ஆளுக்கு அரை மணிநேரம் என்று இருவரும் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஏறி ஒரு மணி நேரத்துக்குள் பசியெடுத்தது. முதலில் கையில் மாட்டியது வெள்ளரிப்பிஞ்சுகள். அடுத்து கொய்யாக்காய்கள். அடுத்து பலாச்சுளைகள். நடுவில் விழுப்புரத்தில் இன்னொரு தண்ணீர் பாட்டில் தேவைப்பட்டது. பிரகாஷுக்கு ஒரு தம். அங்கே வண்டியை விட்டுக் கீழே இறங்கிய இரண்டு பெண்கள் ஏறுவதற்கு முன்னரேயே வண்டி கிளம்பிவிட்டது. பின் சுற்றியுள்ள ஜனங்கள் சத்தம்போட வண்டி ஓட்டுனர் மீண்டும் ஒருமுறை, மூத்திர நாற்றம் தாங்க முடியாத அந்த பஸ் ஸ்டாண்டை வலம் வந்தார். அசட்டுச் சிரிப்புடன் அந்த இரண்டு பெண்களும் வண்டியில் ஏறினர். பெண்களாக இருந்ததால்தான் அவர்களுக்குத் திட்டு ஏதும் கிடைக்கவில்லை என்றார் சுரேஷ்.

குலுங்கிக் குலுங்கி வண்டி நெய்வேலி வந்து நின்றபோது மணி மதியம் 1.30. புத்தகக் கண்காட்சி அரங்கில் இருக்கும் சேகரைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர் எங்களை நெய்வேலி பேருந்து நிலையத்திலேயே சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார். புத்தகக் கண்காட்சி வளாகத்தில் சாப்பாட்டு வசதிகள் குறைவு என்றார்.

நல்ல எச்சரிக்கையினால், பஸ் ஸ்டாண்டிலேயே மதியச்சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தோம். அடுத்தமுறை சென்னைக்கு யாராவது வந்தால் பிரகாஷுடன் சாப்பிடப் போகவும். சென்னையில் எங்கு எந்த ஹோட்டலில் எப்படிப்பட்ட சிறப்பான உணவு இருக்கும் என்பதை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார். 'தி ஹிந்து'வில் ரேஷ்மி உதய் சிங் எழுதும் உணவுப் பத்தி முதல் ஒன்றுவிடாமல் படித்து எங்கெங்கு என்ன சாப்பாடு கிடைக்கும் என்று ஒரு மினி என்சைக்ளோபீடியாவாக இருக்கிறார். சுரேஷ் கண்ணன் தொப்பையைப் பார்த்து அவர் சாப்பாட்டுப் பிரியர் என்று எடைபோடவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். அது பியர் தொப்பையாம். உடனே பிரகாஷும் சுரேஷும் அடுத்து தனியாக ஒரு பியர் ரவுண்டு போடவேண்டும் என்று அங்கேயே ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

ஒருவழியாக இரண்டு கிலோமீட்டர் நடந்து 'அந்நியனை' துவம்சம் செய்துகொண்டே புத்தகக் கண்காட்சி அரங்கைச் சென்றடைந்தோம். உள்ளே நுழைந்ததும் சுரேஷ் புத்தகக் கடைகளை ஒரு பார்வை பார்க்கக் கிளம்பிவிட்டார். பிரகாஷ் "நல்லவேளையாக நான் கையில் பைசா கொண்டுவரவில்லை" என்று சொல்லிக்கொண்டே ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார்.தொளதொள சட்டையும் அரை டிராயரும் அணிந்து - நானில்லை - பா.ராகவன் பான் பராக் பல்லுடன் சிரித்தபடி வந்தார். (யோவ்! பான் பராக் வேற, நான் போடறது வேற என்று அவர் மற்றொரு லெக்சர் கொடுக்கும் முன்னர் நீங்களாகவே அதை இங்கே படித்துத் தெரிந்துகொள்ளவும்!)

சிறிதுநேரம் புத்தகப் பதிப்புலக வம்புதும்புகளை அவசர அவசரமாக பரிமாறிக்கொண்டோம்.

இம்முறை நெய்வேலி புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் இரண்டு முக்கியமான விஷயங்களைச் செய்திருக்கிறார்கள். மேலே கூரை அமைத்திருக்கிறார்கள். அதனால் வெய்யிலின் கொடுமை நன்றாகக் குறைந்துள்ளது. சென்னையைப் போலவே கீழே கார்பெட் போட்டிருக்கிறார்கள். அதனால் செம்புழுதி பறந்து புத்தகங்களை நாசமாக்குவது வெகுவாகக் குறைந்துள்ளது.கூட்டம் சென்னையைப் போல இல்லை. குறைவுதான். நெய்வேலியின் சுற்றுப்புறத்திலிருந்து பலரும் வந்திருந்தனர். எழுபத்தொரு வயதான சபாநாயகம் வந்திருந்தார். வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதற்கு இருக்கிறார். அந்த நேரத்தில் நெய்வேலிக் கண்காட்சி வந்துவிடுமோ என்று பயந்திருந்தாராம். இப்பொழுது திருப்தியாக கண்காட்சியைப் பார்த்து முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்புகிறார். தினமணி ஆசிரியர் எம்.சந்திரசேகரன், தினமணி கதிரின் ஆசிரியர் சிவக்குமார் இருவரும் வந்திருந்தனர்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிடும் இதழ் ஒன்றில் கடைசிப் பக்கங்களில் சுகுமாரன் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை படிக்கக் கிடைத்தது. நம்பூதிரிகளின் வாழ்க்கை முறை, அந்தர்ஜனம், தாத்ரிக்குட்டி என்று செல்லும் அற்புதமான அந்தக் கட்டுரை இணையம் மூலம் பலரையும் சென்றடையவேண்டும்! அனுமதி கிடைத்தால் அதை இணையத்தில் இடுகிறேன்.

ஆறு மணிக்கு விழாவில் கிழக்கு பதிப்பகத்துக்கு பாராட்டுப் பத்திரம். ஆறு மணிக்கு முன்னதாகவே அரங்கில் நான், ராகவன், சுரேஷ், பிரகாஷ் ஆகியோர் வந்து உட்கார்ந்தோம். விழா ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை. என்னைத் தவிர அனைவரும் அன்று இரவே சென்னை சென்றடைய விரும்பினர். அதனால் 6.15க்குக் கிளம்பி விட்டனர். 6.30க்கு மேல் முக்கியப்பட்டவர்கள் வந்தவுடன் என்னை அழைக்க, மேடைக்குச் சென்றேன்.

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஏற்பாடு செய்யும் கூட்டங்கள் சற்றே வித்தியாசமானவை. அவர்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் பலரையும் திருப்தி செய்யவேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருக்கிறது. அதைப் பல இடங்களில் காணமுடிகிறது. முதலிரண்டு வரிசைகள் பெரிய மனிதர்கள் உட்கார என்று உள்ளது. அதுவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதியில் வி.ஐ.பி என்றும் மற்றொரு பகுதியில் யூனியன் என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொழிற்சங்கத்தின் தலைவர்கள் வரும்பொதும் மேடையில் விழாவை வழிநடத்துபவர், "எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் எஞ்சினியர் சங்கப் பிரதிநிதிகளை வரவேற்கிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் ஓ.பி.சி சங்கத் தலைவரை வருக வருக என்று வரவேற்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது எந்த நேரமானாலும் சரி, அதாவது ஒரு பேச்சாளர் பேசி முடித்ததும், அடுத்தவர் பேச்சை ஆரம்பிக்கும் முன்னர் என்றாலும் இந்த "வரவேற்பு" அவசியமாம். அப்படி இல்லாவிட்டால் "நிகழ்வுகள்" விபரீதமாக இருக்குமாம்! அதேபோல மேடையில் ஏழு பேர் உட்கார்ந்திருந்தால் அந்த ஏழு பேருக்கும் கை குலுக்கி, கையில் பூச்செண்டு கொடுக்க ஏழு பேர் வருவார்கள். பின் கடைசியில் நினைவுப்பரிசு கொடுக்க இன்னுமொரு ஏழு பேர். ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து மேடையில் பேச ஏழு பேர்.

அதேபோல விழாவுக்குத் தலைமை தாங்க அழைக்கப்படுபவர்கள் என்.எல்.சியின் சில பெருந்தலைகள். அவர்களைப் பற்றிப்பேசும்போது "டாட் டாட் டாட், ஐ.பி.எஸ், சி.வி.ஓ" என்று பட்டம், பதவி என்று அத்தனையையும் பெயருடன் சேர்த்துச் சேர்த்தே வரிக்கு வரி சொல்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஓர் எழுத்தாளர், ஒரு பதிப்பகம் என்று தேர்ந்தெடுத்து மரியாதை செய்கிறார்கள். ஒரு புதிய புத்தகம் வெளியிடப்படுகிறது. ஒரு சிறப்புப் பேச்சாளர் பேசுகிறார். பின்னர் 'கலை நிகழ்ச்சி'.

இத்தனையையும் பார்த்துக்கொண்டு மேடையில் உட்கார்வது சற்று கஷ்டம்தான். அதிலும் என்னையும், தினமணி கதிர் ஆசிரியர் சிவக்குமாரையும் தவிர மீதி அனைவருக்குமாவது மைக்கைக் கையில் பிடித்துக்கொண்டு பொதுமக்களை ரம்பம் போடும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் சிவக்குமாருக்கும் அந்த வாய்ப்பு கூடக் கிடைக்கவில்லை.

எனக்குக் கிடைத்த 'பொன்னாடை', பூச்செண்டு, ஒரு புத்தகம், ஓர் அன்பளிப்பு ஆகிய அனைத்தையும் ஒருவர் பணிவாகக் கையில் வாங்கிக்கொண்டு கிழக்கு பதிப்பகம் கடை வரை கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனார். இதுபோன்ற மரியாதைகள் தேவையில்லை.

-*-

இரவு உணவுக்கு ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம். அங்கே எதைக் கேட்டாலும் தீர்ந்துவிட்டது என்று பதில். தமிழகத்தின் தேசிய உணவான (நன்றி: இரா.முருகன்) பரோட்டா கூட கிடைக்க நேரமாகும் என்கிறார்கள். பின் அவர்களிடம் என்ன இருக்கிறதோ (சன்னா பட்டூரா - உண்மையில் அது மட்டர் பட்டூரா) அதைக்கொடுங்கள் என்று கேட்டு சாப்பிடுகிறோம். மெதுவாக தங்கும் இடம் நோக்கி நடையைக் கட்டுகிறோம். வழியில் ஒரு வேன் எங்களை நிறுத்தி ஏற்றிக்கொண்டு தங்கிமிடத்தில் இறக்கி விடுகிறது. கிழக்கு பதிப்பகத்தின் பிற பணியாளர்களுடன் நெய்வேலி புத்தகக் கண்காட்சியினர் ஏற்பாடு செய்திருந்த அறையில் இரவு தூக்கம். நல்ல வசதியான இடம். தண்ணீர் தாராளமாகக் கிடைக்கிறது. குழாயிலிருந்து வரும் தண்ணீரை அப்படியே குடிக்கவும் செய்யலாம் என்று அறிந்ததும் சென்னையிலிருந்து வரும் எனக்கு திடுக்கென்று இருக்கிறது.

காலையில் தங்குமிடத்திலேயே காலையுணவு கிடைக்கிறது. இட்லி, வடை, பொங்கல் என்று வயிறாரச் சாப்பிட்டு ஒரு டீயையும் குடித்தால் மொத்தம் பதிமூன்று ரூபாய்தான் என்கிறார்கள்! ஒருவேளை வெளியே உலகம் மாறிவிட்டது என்று உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியவில்லை போலும்.

பத்து மணி அளவில் மீண்டும் வேனில் ஏறி புத்தகக் கண்காட்சி வளாகத்துக்கு வருகிறோம். திங்கள் கிழமையாதலால் பொதுமக்கள் வருகை குறைவு. அரங்கைச் சுற்றி வந்து சில படங்களை எடுத்துக்கொள்கிறேன். சிலரிடம் பேசுகிறேன். ஓரத்தில் அமர்ந்துகொண்டு கையில் எடுத்துவந்திருந்த குர்ச்சரண் தாஸ் எழுதிய India Unbound புத்தகத்தைப் படிக்கிறேன். மதியம் ஆனதும் அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருக்கும் மதிய உணவுக்குப் போகிறோம். பிரிஞ்சி, தயிர் சாதம். அருமையான சாப்பாடு. சாப்பிட்டு வந்ததும் தூக்கம் கண்களைச் சுற்ற, விடா முயற்சியுடன் புத்தகப் பக்கங்களைப் புரட்டுகிறேன்.

மதியம் 2.30க்கு போரடிக்கிறது. முதுகில் பையை மாட்டிக்கொண்டு சென்னைக்குத் திரும்ப முடிவு செய்கிறேன். அரை மணிநேரம் நடந்து பஸ் ஸ்டாண்ட் வந்து நெய்வேலி-சென்னை P2P பேருந்து ஒன்றில் ஏறி அவர்களது குழப்பமான விதிகளுக்கு இணங்க கடைசி சீட்டில் அமர்ந்து சென்னைக்கு வருகிறேன். வர நான்கு மணிநேரங்கள்தான் ஆகிறது.

-*-

நெய்வேலி, புத்தக வாசம் மிகுந்த ஊர் என்று சொல்லமுடியாது. தமிழ்ப் புத்தகங்களுக்கான சந்தை குறைவுதான். என்.எல்.சியில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பதில் நாட்டம் உள்ளவர்கள் என்று தோன்றவில்லை. கண்காட்சிக்கு வருபவர்கள் மிளகாய் பஜ்ஜி, ராட்சச ராட்டினம், டில்லி அப்பளம் என்றுதான் செலவழிக்கின்றனர். இந்தமுறை பல முன்னணி புத்தகப் பதிப்பாளர்கள் நெய்வேலிக்கு வரவில்லை!

ஆனாலும் என் குறைந்த அனுபவத்தில் சென்னைக்கு அடுத்து நெய்வேலி புத்தகக் கண்காட்சி முக்கியமானதாக இருக்கிறது என்றே தோன்றுகிறது. இதற்கு முக்கியக் காரணம் மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் சென்னைக்கு ஒப்பாக புத்தகக் கண்காட்சிகளை யாரும் நடத்தாததே! இந்தப் பெருநகரங்களில் பெரும் சந்தை உள்ளது. ஆனால் நல்ல புத்தகக் கண்காட்சியினை நடத்தக்கூடிய விருப்பமோ, திறமையோ யாருக்கும் இல்லை. மற்றொரு புரம் பார்த்தால், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தினரோ தம் சிற்றூரில் நடக்கும் கண்காட்சிக்கு தம்மால் முடிந்த அளவு வசதிகளைச் செய்துதருகின்றார்கள்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி போன்ற பிற பெரிய நிறுவனங்கள், பிற பெருநகரங்களிலும் இந்தக் காரியத்தைச் செய்துதரும் என்று எதிர்பார்ப்பது தவறு. சென்னையைப் போன்றே தமிழகத்தின் முக்கிய நகரங்களில் புத்தகக் கண்காட்சிகளை பெரிய அளவில் ஏற்பாடு செய்வது பபாசியின் வேலையாக இருக்கவேண்டும்.

பபாசியின் உள்-அரசியலைப் பார்க்கும்போது இப்பொழுதிருக்கும் கமிட்டி உறுப்பினர்கள் இதையெல்லாம் செய்வார்கள் என்று தோன்றவில்லை.

28 comments:

 1. பியர்... தம்.... சாப்பாட்டுராமன்.... ஹ¥ம்ம்ம்ம்.... டேமஜ் கண்ட்ரோல் செஞ்சே ஆகோணும்... மீதியை கூடியவிரைவில் வெள்ளித் திரையில் ( என் வலைப்பதிவு) காண்க...

  //முருகன் காதில் கேட்டிருக்கவேண்டும், அதனால் தொடரின் முதல் கட்டுரையை இப்பொழுது வலைப்பதிவில் ஏற்றியுள்ளார்.//

  க்ரேட்டு பீப்பிள் திங்க் அலைக்கு

  //அற்புதமான அந்தக் கட்டுரை இணையம் மூலம் பலரையும் சென்றடையவேண்டும்! அனுமதி கிடைத்தால் அதை இணையத்தில் இடுகிறேன்.//

  ஸ்கான் செஞ்சு போடுங்க சொல்றேன்... ஏதாச்சும் பிரச்சனை வந்தா சாரி சொல்லிக்கலாம்.

  ps : சுரேஷ் கண்ணன் வலைப்பதிவுக்கான சுட்டி சரியாக இல்லை. சரி பண்ணிடுங்க..

  ReplyDelete
 2. 1)//பின் இருவரும் அங்குள்ள ஒரு கடையில் இட்லி, வடை பலகாரம் செய்தோம்.//
  2)//முதலில் கையில் மாட்டியது வெள்ளரிப்பிஞ்சுகள். அடுத்து கொய்யாக்காய்கள். அடுத்து பலாச்சுளைகள்//
  3)// பஸ் ஸ்டாண்டிலேயே மதியச்சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தோம்//
  4)//(சன்னா பட்டூரா - உண்மையில் அது மட்டர் பட்டூரா) அதைக்கொடுங்கள் என்று கேட்டு சாப்பிடுகிறோம். //
  5)// இட்லி, வடை, பொங்கல் என்று வயிறாரச் சாப்பிட்டு //
  6)// பிரிஞ்சி, தயிர் சாதம். அருமையான சாப்பாடு. சாப்பிட்டு வந்ததும் //

  போட்டொவுக்கு போட்டொ கன்னம் மேலும் மேலும் "பூசின மாதிரி" இருக்குதேனு நினைச்சேன். இப்ப புரியுது.

  போய் சேர்ந்ததும் இரவு வீட்டில் என்ன டிபன் ??

  பிரகாஷ் இன்னும் தம் அடிக்கிறாரா ?

  ரவியா

  ReplyDelete
 3. பொது இடத்தில் தம் அடித்து, சட்டத்தையுன், தனி நபர் ஒழுக்கத்தையும் மீறிய பிரகாஸை அந்நியன் தண்டிக்க வேண்டும் என்று anniyan.com ல் பதிவு செய்து விட்டேன்.

  மற்றபடி India unbound பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் பத்ரி.

  அன்புடன்

  ராஜ்குமார்

  ReplyDelete
 4. புத்தக கண்காட்சியிலே 'எங்க ஊரு' மாபியா மன்ற செயல் வீரரோட புத்தக விற்பனை எப்படி?! கொஞ்சம் காதோடவாச்சும் சொல்லுங்க சார்!

  ReplyDelete
 5. பத்ரி,

  இத்தனை நாள் உங்கள் சீரியஸ் பதிவுகளைத் தான் பார்த்திருக்கிறேன், இந்தப் பதிவு வழக்கமான பதிவுகளில் இருந்து மாறுபட்டு லைட்டாக, நகைச்சுவையாக இருக்கிறது. :)

  ReplyDelete
 6. தேங்ஸ் பத்ரி... ஜாலியா இருந்துச்சு...:)

  பின் இருவரும் அங்குள்ள ஒரு கடையில் இட்லி, வடை பலகாரம் செய்தோம்.

  இதுவரைக்கும் - மாவுதான் ஆட்டச்சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் (அதெந்தக்கடை, இட்லி, வடையெல்லாம் செய்யச்சொல்லிருக்கிறாங்க!?):

  அன்னிக்கு சன் டிவில கண்காட்சி விளம்பரம் பார்த்தவுடன் மனைவிட்ட அதான் சொல்லிட்டிருந்தேன்: நெய்வேலி பெரிய படிப்பாளி ஊர்போல இருக்கு, அடிக்கடி புத்தகக் கண்காட்சி நடக்குதுன்னு...

  நீங்க இப்படி போட்டு உடைச்சுட்டீங்க:) (நெய்வேலிக்காரங்கட்ட சொல்றேன்)

  நெய்வேலி, புத்தக வாசம் மிகுந்த ஊர் என்று சொல்லமுடியாது. தமிழ்ப் புத்தகங்களுக்கான சந்தை குறைவுதான். என்.எல்.சியில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பதில் நாட்டம் உள்ளவர்கள் என்று தோன்றவில்லை. கண்காட்சிக்கு வருபவர்கள் மிளகாய் பஜ்ஜி, ராட்சச ராட்டினம், டில்லி அப்பளம் என்றுதான் செலவழிக்கின்றனர். இந்தமுறை பல முன்னணி புத்தகப் பதிப்பாளர்கள் நெய்வேலிக்கு வரவில்லை!

  ReplyDelete
 7. ///சுரேஷ் கண்ணன் தொப்பையைப் பார்த்து அவர் சாப்பாட்டுப் பிரியர் என்று எடைபோடவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். அது பியர் தொப்பையாம். ///

  அய்யா பத்ரி, இப்படியா மானத்த வாங்கறது?

  எப்பவாச்சும் ஸ்காட்சும் சாப்பிடுவாறாம்-னு சொல்லி இமேஜை கொஞ்சம் ஏத்தியிருக்கலாம். :-)

  ReplyDelete
 8. மாயவரத்தான்: சொல்ல மறந்துபோனது ரஜினி ராம்கியைப் பற்றி! ஏனெனில் அவர் என்னுடன் எதையும் சாப்பிட வரவேயில்லை. மாயவரம்->சென்னை போவதற்கு நெய்வேலி வழியாக வந்தார். ரஜினி புத்தகம் வாங்கிய ஒருவருக்க்கு கையெழுத்து போட்டுக்கொடுத்தார். இரவு கண்காட்சி முடியும்வரை இருந்துவிட்டு சென்னை கிளம்பிச்சென்றார்.

  ரஜினி புத்தகம் நன்றாக விற்கிறது. அதுக்கென்ன குறைச்சல்! நிறைய பேர் ரஜினி போஸ்டருக்காக புத்தகம் வாங்குகிறார்கள்! ஒரு குட்டிப்பையன் ரொம்ப சந்தோஷத்துடன் "ஐ, போஸ்டர் வாங்கினால் புத்தகம் ஃப்ரீயா" என்று கேட்டான்! "இல்லைப்பா, புத்தகம் வாங்கினால், போஸ்டர் ஃப்ரீ" என்று சொன்னேன்!

  ReplyDelete
 9. அன்பு: 'பலகாரம் செய்தல்' என்றால் எங்கள் ஊரில் சாப்பிடுதல் என்று பொருள்.

  வீட்டுல நெய்வேலியா? ரொம்ப நல்ல ஊர்னு சொல்லுங்க!

  ReplyDelete
 10. //ரஜினி புத்தகம் நன்றாக விற்கிறது. அதுக்கென்ன குறைச்சல்! நிறைய பேர் ரஜினி போஸ்டருக்காக புத்தகம் வாங்குகிறார்கள்! ஒரு குட்டிப்பையன் ரொம்ப சந்தோஷத்துடன் "ஐ, போஸ்டர் வாங்கினால் புத்தகம் ஃப்ரீயா" என்று கேட்டான்! "இல்லைப்பா, புத்தகம் வாங்கினால், போஸ்டர் ஃப்ரீ" என்று சொன்னேன்!//

  புத்தகத்துடன் கிடைத்த போஸ்டரை ராம்கி தலையிலேயே கட்டிவிட்டு வர நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.

  ReplyDelete
 11. 'பலகாரம் செய்தல்' என்றால் எங்கள் ஊரில் சாப்பிடுதல் என்று பொருள்.

  உங்க ஊர்ல
  'நாஸ்தா ஆய்டுத்தா?' அல்லது
  'நாஸ்தா துன்றியா?'
  அப்படித்தானே சொல்வாங்க!?

  வீட்டுல நெய்வேலியா? ரொம்ப நல்ல ஊர்னு சொல்லுங்க!
  வீட்ல எங்கூருதான் - நெய்வேலி ஃப்ரண்ட் ஊரு, அவங்க வந்து படிச்சுப்பாங்க...

  ReplyDelete
 12. ஒரு குட்டிப்பையன் ரொம்ப சந்தோஷத்துடன் "ஐ, போஸ்டர் வாங்கினால் புத்தகம் ஃப்ரீயா" என்று கேட்டான்! "இல்லைப்பா, புத்தகம் வாங்கினால், போஸ்டர் ஃப்ரீ" என்று சொன்னேன்!

  மாயவரத்தானை பெயர் சொல்லாமல் குட்டிப் பையன் என்று சொல்லியிருப்பதை மாயவரத்து மாபியா கண்டிக்கிறது. இதை உடனே திரும்பப் பெறாவிட்டால் உலகம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்-
  மாயவரம் மாபியா

  ReplyDelete
 13. பத்ரி, கொஞ்ச நாள் வலையில் எழுதவில்லையென்றால் மறந்துவிடுவீர்கள் போலிருக்கிறது. இதற்காகவாவது எதையாவது கிறுக்கி லைம் லைட்டில் இருக்க வேண்டும் போலிருக்கிறது. கூப்பிட்டிருந்தால் வந்திருப்பேன். பிரகாஷ், தனியாக கச்சேரியை வைத்துக் கொள்கிறேன். ஆனாலும், அபாரமாக தின்று தீர்த்து இருக்கிறீர்கள் ;-)

  ReplyDelete
 14. ''போய் பார்க்க முடியவில்லையே'' - எங்கள் ஏக்கம் தீர்க்கும் விதமாக புத்தகங்கள் பற்றியும் சிறிதேனும் எழுதியிருக்கலாம்

  ReplyDelete
 15. பத்ரி நீண்ட பதிவுக்கு நன்றி.
  பபாசி தவிர்த்து தனியார் எல்லோரும் சேர்ந்து புத்தகக்கண்காட்சியை கோவை போன்ற "சந்தையுள்ள" நகரங்களில் நடத்தமுடியாதா?

  ReplyDelete
 16. அன்புவோட Friend நான் தான்.

  //நெய்வேலி , புத்தக வாசம் மிகுந்த ஊர் என்று சொல்லமுடியாது.//

  அதெப்படி ஒரு சிலரை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க. நானே 15 புத்தகங்கள் வாங்கி இருக்கேன் இந்த முறை.

  நெய்வேலி படித்தவர்களும், படித்துகொண்டு இருப்பவர்களும் அதிகம் உள்ள
  நகரம். தயவுசெய்து அப்படி சொல்லாதீங்க. அங்கேயே பிறந்து,வளர்ந்து, வாழ்ந்து
  கொண்டு இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இதை கேட்கும் போது
  மனம் வருத்தமாக இருக்கும்.

  சில குறைகளுக்கு இடையேயும் நெய்வேலி பற்றி சில நிறைகளையும் சொல்லி இருக்கீங்க. (சட்டை காலரை தூக்கி விட்டுக்கிறேன்.)
  ரொம்ப நன்றி பத்ரி.

  நீங்கள் வருவதை முன்பே அறிந்து இருந்தால் என் துணைவரிடம் சொல்லி கொஞ்சம் கவனிக்க சொல்லி இருப்பேன்.(கொஞ்சம் குறையாவது குறைந்து இருக்கும் ம்ம்ம்...)

  அன்புடன்
  அரசி

  ReplyDelete
 17. பத்ரி,

  'சாப்பாட்டு' விவரங்கள் அருமை!!! இங்கேயும் ஒரு நெய்வேலிக்காரர் இருக்கிறார்!!

  என்றும் அன்புடன்,
  துளசி.

  ReplyDelete
 18. இப்னு ஹம்துன்: புத்தகங்கள் பற்றி எழுதத்தான் இப்பொழுது அருமையான தமிழ் புத்தக விக்கி வந்துகொண்டிருக்கிறதே? கண்காட்சிக்குப் போவதன் நோக்கமே இப்பொழுது வேறாகிவிட்டது:)

  கார்திக்: பபாசி தவிர தனியார் சிலர் கண்காட்சி நடத்துகிறார்கள். ஒவ்வோர் ஊரிலும் நடக்கிறது. ஆனால் அவ்வளவு தரமானதாக இல்லை. இது பற்றி விரிவாகப் பின்னர் எழுதுகிறேன்.

  ReplyDelete
 19. குடியரசி: பொதுமையில் சொல்லும்போது கண்காட்சிக்கு வரும் நூறு பேரில் எத்தனை பேர் புத்தகம் வாங்கிகிறார்கள் என்பதைப் பார்த்து அதைத்தான் சொல்லமுடியும். நீங்களே ஒருநாள் போய்ப் பாருங்களேன்? வாசலில் ஒரு மணிநேரம் உட்காருங்கள். உள்ளே வரும் நூறு பேருக்கு சமமாக வெளியே போகும் நூறு பேரில் எத்தனை பேர் கையில் புத்தகங்கள் உள்ளன, என்னென்ன புத்தகங்கள் என்று ஒரு பார்வை பாருங்களேன்?

  இந்தியாவில் படிப்பு ஆர்வம் இன்னமும் அதிகரிக்கவேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் அந்த ஆர்வத்தை வளர்க்க பதிப்பாளர்களும் நிறையச் செய்யவேண்டும். நல்ல புத்தகங்களைக் கொண்டுவராமல் யாரும் வாங்கமாட்டேன் என்கிறார்கள் என்று குறை சொன்னால் போதாது...

  ReplyDelete
 20. மாயவரத்தான்,

  மறந்து இருந்தாலும் கிளப்பி விட்டுறீங்களே... நான் செத்தேன்!

  யோவ் கொசப்பேட்டை,

  ரொம்பத்தான் கரைச்சலாக்கீறே.... டைம் இருந்திருந்தா உங்க ஊரு பக்கம் இருக்குற எங்க குரூப் ஆளுங்களுக்கு புத்தகத்தை மூட்டை கட்டிக் கொடுத்திருப்பேன். மூணு மாசத்துக்கு முந்தி அனுப்பின புத்தகம் இன்னும் வந்து சேரலையாம். இங்கே வந்துட்டு கொஞ்சம் கூட பொதுசேவை பண்ணாம போனா எப்படி வாத்யாரே?

  கார்த்திக் ரமாஸ்,

  நிச்சயம் நடத்தலாம். கோவை போன்ற பகுதிகளில் நல்ல வரவேற்பும் இருக்கும். ஆனா, ஒழுங்கா, திறமையா ஏற்பாடு பண்ண ஆளுங்கதான் இல்லை. பபாசிங்கிறது நவம்பரில் ஆரம்பித்து பிப்ரவரி வரை உயிரோடிருக்கும் ஒரு சாதாரண அமைப்புதான். சிம்பிளா சொன்னா வெங்காய வெடி!

  குடியரசி,

  தப்பா எடுத்துக்காதீங்க. உங்க ஊருல ஓட்டலெல்லாம் ரொம்ப கம்மிதானோ? பதினோரு மணிக்கு மேல பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் ஒரு கடையில ஒதுங்கி சின்னதா ஒரு தேசை சாப்பிட்டுட்டு ரெண்டு மணி நேரம் தவம் கிடந்த பின்னர் கிடைத்தது என்னவோ விழுப்புரம் போகற பஸ்தான். விழுப்புரத்தில் கொஞ்ச நேரம் தேவுடு காத்துவிட்டு சென்னைக்கு வந்து சேருவதற்கு எழு மணி நேரமாகிவிட்டது! நெசமாவே காலைல ஏழு மணிக்குதான் வந்து சேர்ந்தேன்.

  ReplyDelete
 21. நல்ல பதிவு பத்ரி.

  உங்கள் பதிவு முழுவதையும் படித்தபிறகு, சாப்பாட்டைப்பற்றி சிந்தித்த நேரம்போக, ஏதோ போனாப்போகுது என்று "ரஜினி போஸ்டர்" பையன் மாதிரி, கொஞ்சம்போல புத்தகக்கண்காட்சியைப் பற்றியும் சிந்தித்திருக்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். நான் உங்கள் பதிவை சரியா புரிஞ்சுக்கிட்டேனா? : ))))

  ReplyDelete
 22. பத்ரி:

  sorry, நான் இப்போது சிங்கையில் இருப்பதால் போகமுடியாத சூழ்நிலை.

  //இந்தியாவில் படிப்பு ஆர்வம் இன்னமும் அதிகரிக்கவேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. //

  உங்கள் கருத்து சரியே. சொல்லப்போனால் முன்பைவிட(நம் பள்ளி வயதில் பார்த்ததை விட) இப்போது ரொம்பவும் குறைந்துதான் விட்டது.

  //ஆனால் அந்த ஆர்வத்தை வளர்க்க பதிப்பாளர்களும் நிறையச் செய்யவேண்டும். நல்ல புத்தகங்களைக் கொண்டுவராமல் யாரும் வாங்கமாட்டேன் என்கிறார்கள் என்று குறை சொன்னால் போதாது.. //

  பதிப்பாளர்களை நாம் முழுவதும் குறைசொல்ல முடியாது. அவர்கள் வெளியிடும் சில நல்ல புத்தகங்களையாவது படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை வருங்கால சந்ததியினருக்கு ஊட்ட பெற்றோர்களும்,
  பள்ளி ஆசிரியர்களும் முன் வரவேண்டும். அப்பொதுதான் நல்ல எழுத்தாளர்கள் பிற்காலத்தில் உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால் இதில் நாம் எந்த முன்னெற்றமும் அடையமுடியாது.

  இந்த கணினி யுகத்தில் எத்தனை பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஊட்டுகின்றனர் என்று
  கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். அவர்களிடம் கேட்டால்

  'எங்களுக்கு நேரம் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்'. முதலில் அவர்கள் படிக்க வேண்டும்.

  இங்கு சிங்கையிலே தொடக்க பள்ளிகளை அருகில் உள்ள நூலகத்துடன் இணைத்துள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பதிவேடு வழங்கபட்டுள்ளது. மாத இறுதியில் அந்தந்த வகுப்பு ஆசிரியர் அந்த அட்டையில் உள்ள படித்த புத்தகங்களின் எண்ணிக்கையின் பேரில்
  பரிசு வழங்குகிறார். இது அவர்களுடைய ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.

  அவர்கள் படித்துள்ளார்கள் என்பதை உறுதி செய்ய அதில் உள்ள எதேனும் ஒரு புத்தகத்தை பற்றி கேட்டு அதில் கையெழுத்து இடுகிறார் அந்த நுலகத்தின் பொறுப்பாளர். (பிள்ளைகள் படிக்கும் போது உடன் சென்ற பெற்றொரும் எதாவது படிக்கிறார்கள்)அப்படி படித்தாதானே

  இது போன்று நம்ம ஊர் பள்ளிகளிலும் செய்யலாம்.

  சிறிதாவது முன்னேற்றம் தெரியும்.

  அன்புடன்
  அரசி

  ReplyDelete
 23. //தப்பா எடுத்துக்காதீங்க. உங்க ஊருல ஓட்டலெல்லாம் ரொம்ப கம்மிதானோ? பதினோரு மணிக்கு மேல பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் ஒரு கடையில ஒதுங்கி சின்னதா ஒரு தேசை சாப்பிட்டுட்டு ரெண்டு மணி நேரம் தவம் கிடந்த பின்னர் கிடைத்தது என்னவோ விழுப்புரம் போகற பஸ்தான். விழுப்புரத்தில் கொஞ்ச நேரம் தேவுடு காத்துவிட்டு சென்னைக்கு வந்து சேருவதற்கு எழு மணி நேரமாகிவிட்டது! நெசமாவே காலைல ஏழு மணிக்குதான் வந்து சேர்ந்தேன். //

  என்ன ராம்கி, புத்தகம் பார்க்க போனீங்களா இல்ல சாப்பிட போனீங்களா?

  எங்க ஊருக்கு(எது இந்த பஸ் போகாத ஊரா! நான் என் ஊர் நெய்வேலி என்ற போது ஒரு நண்பர் கூரியது வேறு விஷயம்) விடியற்காலையிலும், இரவு 11 மணிக்கு மேல் தான் அதிக பேருந்துகள் நண்பரே!

  எங்க நகரத்தில்(ஊர் இல்ல நகரம்) இருந்து பக்கத்தில் உள்ள எந்த பெரிய ஊருக்கு போகனும் என்றாலும் 5 மணி நேரம் தான். ஆகையால்தான் இடைப்பட்ட நேரத்தில் பஸ் கிடையாது.

  இனிமேல் நெய்வேலி வந்தா time பார்த்து வாங்க!

  அன்புடன்
  அரசி

  ReplyDelete
 24. அம்மாடியோவ், செம ஹாட்டா இருக்கீங்க போலிக்கு. செவிக்கு உணவில்லையென்றாலும் சிறிதாவது வயிற்றுக்கு தேவையா இருக்குதே... அந்த ஒல்லி தோசை கூட மொறுமொறுன்னு நல்லாத்தான் இருந்துச்சு... இப்போ போதுமா?

  நெய்வேலி நகரமா? நகரியம் இல்லே?

  ReplyDelete
 25. ராம்கி,

  மாயவரத்தைப்பத்தி வரிசையா அடுக்கிட்டு கடைசியா...ஆனாலும், மாயவரம் செம அழகுதான்!ன்னு முடிச்சீங்களே... அதான் ஊர்ப்பாசம். அதை யாராவது குறை சொன்னா ஊர்க்காரங்க 'ஹாட்'டாய்டுவாங்க போல... :)

  ReplyDelete
 26. அப்படியா.. நெய்வேலியில் இதெல்லாம் கூட நடக்கிறதா.. 94 ல் விட்டு விட்டு வந்தது.. நிறைய திரைஅரங்கங்கள் வந்து இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். நெய்வேலியில் "வந்து போகும்" மக்கள் மிகக் குறைவு..அங்கே வேலை செய்யும் எல்லாருக்கும் வீட்டு சாப்பாடு கிடைப்பதனால் உணவு விடுதிகள் பொழுதுபோக்குக்கு மட்டுமே.. அதனால் தான் இந்த நிலை. (அருண் நெய்வேலி சாப்பாடு பற்றி புலம்பியது நினைவுக்கு வருகிறது.)

  நெய்வேலி பெண்கள் எல்லரும் சிங்கையில் தான் இருக்கிறார்களா.. (சித்ரா ரமேஷ், குடிஅரசி)..

  நான் இருந்த காலத்தில் ஸ்கூட்டர் வைத்திருந்தால் பெரிய ஆள்.. இப்பொ எல்லாரிடமும் கார் இருக்கிறதாம்.. இன்னமும் வில்லுடையான் (வில்லுடன் இருக்கும் முருகன்) பட்டு திருவிழா மறக்க வில்லை..

  //இட்லி, வடை, பொங்கல் என்று வயிறாரச் சாப்பிட்டு ஒரு டீயையும் குடித்தால் மொத்தம் பதிமூன்று ரூபாய்தான் என்கிறார்கள்! ஒருவேளை வெளியே உலகம் மாறிவிட்டது என்று உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியவில்லை போலும்.//

  ரொம்ப வருடஙள்வரை பேருந்தில் குறைந்த கட்டணம் 15 பைசாவும் அத்க கட்டணம் 45 பைசாவும் ஆக இருந்தது.. அதை 20 பைசா ஆக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.. அவ்வளவு எதிர்ப்பு.. ஆக 13 ரூபாய் மிக அதிகம்..

  நெய்வேலி, புத்தக வாசம் மிகுந்த ஊர் என்று சொல்லமுடியாது. தமிழ்ப் புத்தகங்களுக்கான சந்தை குறைவுதான். என்.எல்.சியில் வேலை செய்பவர்களில் பெரும்பாலானோர் படிப்பதில் நாட்டம் உள்ளவர்கள் என்று தோன்றவில்லை. கண்காட்சிக்கு வருபவர்கள் மிளகாய் பஜ்ஜி, ராட்சச ராட்டினம், டில்லி அப்பளம் என்றுதான் செலவழிக்கின்றனர். இந்தமுறை பல முன்னணி புத்தகப் பதிப்பாளர்கள் நெய்வேலிக்கு வரவில்லை.

  கொஞ்சம் நாளாகும்.. ஆனால் நிறைய படித்தவர்கள் இருக்கிறார்கள். நிச்சயம் வளரும்.. அது சரி.. இந்த கண்காட்சிகளில் யாராவது என்ன புத்தகங்கள் விற்கின்றன என்று பார்த்து டார்கெட்டெட் மார்கெட்டிங் முறையை முயற்சி செய்கிறார்களா?

  நெய்வேலியில் ஒரு நல்ல நூலகம் இருக்கிறது. எல்ல புத்தகங்களும் கிடைக்கும். அதனால் பணம் செலவு செய்வானேன் என்று நினைக்கிறார்களோ?

  எங்கள் ஊரை நினைவு படுத்தியதற்கு நன்றி.ரசித்துப் படித்தேன்..

  அன்புடன்

  விச்சு
  neyvelivichu.blogspot.com

  தயவு செய்து அனானிமஸ் பின்னோட்டத்தை எடுத்துவிடுங்கள்.. இரண்டு வகையில் உதவும்.. நிறைய பேர் பின்னூட்டமிட வேண்டி பதிவு தொடங்கி.. ஒரு நாள் எழுதுவார்கள்.. அனாமத்துகளின் பிரசினைகள் குறையும்.

  ReplyDelete
 27. சென்னையிலிருந்து மாயவரம் செல்லும்போதெல்லாம் அர்ச்சனா உணவகத்தில் சாப்பிடுவதற்காகவே நெய்வேலி வழியாகச் செல்கிறோம்.

  சண்டிகர் நகரினைப்போலவே, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நல்ல நகரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே வாழ்பவர்கள் / வாழ்ந்தவர்கள் / வருகை தந்து சுற்றிப் பார்த்தவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 28. //நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிடும் இதழ் ஒன்றில் கடைசிப் பக்கங்களில் சுகுமாரன் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை படிக்கக் கிடைத்தது. நம்பூதிரிகளின் வாழ்க்கை முறை, அந்தர்ஜனம், தாத்ரிக்குட்டி என்று செல்லும் அற்புதமான அந்தக் கட்டுரை இணையம் மூலம் பலரையும் சென்றடையவேண்டும்! அனுமதி கிடைத்தால் அதை இணையத்தில் இடுகிறேன்.//

  http://www.thinnai.com/pl0826052.html

  via

  http://urpudathathu.blogspot.com/2005/08/blog-post_28.html

  ReplyDelete