Sunday, January 27, 2008

ஜெய்ப்பூர் மொழிமாற்றல் கருத்தரங்கம்

ஜெய்ப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் இலக்கிய விழாவில் இந்த ஆண்டு நிகழ்வு, மொழிமாற்றல் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்காக இருந்தது.

இந்தியாவிலிருந்து பலரும், வெளிநாடுகளிலிருந்து சிலரும் கலந்துகொண்டனர்.

தமிழகத்திலிருந்து யாரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படவில்லை. கேரளத்திலிருந்து எம்.டி.வாசுதேவன் நாயர், சச்சிதானந்தன், கர்நாடகத்திலிருந்து யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அனந்தமூர்த்தி ஆனால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. வட மாநிலங்களிலிருந்து பலர் வந்திருந்தனர். மராட்டி மொழியில் எழுதும் இரண்டு தலித் எழுத்தாளர்கள், ஒரு தலித் இலக்கிய விமரிசகர் ஆகியோர் தலித் இலக்கியம் பற்றிய ஓர் அமர்வில் கலந்துகொண்டனர். வட கிழக்கு மாநிலங்களிலிருந்து பல சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய சிறப்பு அமர்வு ஒன்று இருந்தது.

***

முதல் நாள் நிகழ்ச்சியின்போது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கலந்துகொண்டார். பொதுவாக தமிழகத்தில் முதல்வர்கள் கலந்துகொள்ளும்போது நடக்கும் பந்தாக்கள் ஏதும் இன்றி மிகவும் இயல்பாக இருந்தது. அவர் வரப்போகிறார் என்பதற்காக தெருவில் கட்சிக்கொடிகள் ஏதுமில்லை. 'அண்ணன்/அக்கா வாழ்க', 'தலைவி வாழ்க' கோஷங்கள் ஏதும் இல்லை. தெருவில் 'அம்மா வருகிறார்' போஸ்டர், தட்டிகள் ஏதுமில்லை. கட்சிக்காரர்கள் யாரும் இல்லை. இரண்டு போலீஸ் அதிகாரிகள், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் கூட வந்தனர். அவ்வளவுதான்.

அவர் உள்ளே நுழைந்தபோது யாரும் சடாரென்று எழுந்திருக்கவில்லை. அவரவர், அவரவர் இருக்கையிலேயே உட்கார்ந்திருந்தனர். வந்தவுடன் முதல்வர் கருத்தரங்கில் பாதியிலேயே வந்து குழப்பம் ஏற்படுத்துவதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பிறகு சுருக்கமாக ஐந்து நிமிடங்கள் பேசினார். பின் முதல் வரிசையில் பிற பார்வையாளர்களுடன் வந்து உட்கார்ந்துகொண்டார். கருத்தரங்கில் அடுத்த அமர்வு தொடர்ந்து நடந்தது. ஒரு கட்டத்தில் முதல்வர் கிளம்பிப் போக, அப்போதும் யாரும் எழுந்திருக்கவில்லை. அமர்வு தொடர்ந்து நடந்தது.

***

முதல் நாள் இறுதியில் பெங்குவின், ஆங்கிலம்-ஹிந்தி அகராதி, சொல்கோவை (தெசாரஸ்) - மூன்று தடிமனான புத்தகங்கள் அடங்கிய தொகுதியை (விலை ரூ. 3999/-) வெளியிட்டனர்.

***

முதல் நாள் அமர்வில் எம்.டி.வாசுதேவன் நாயர், கீதா கிருஷ்ணன்குட்டி (மலையாளம் -> ஆங்கிலம் மொழிமாற்றுபவர்) கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று இருந்தது. இந்திய மொழிகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை ஆங்கிலத்தில் கொண்டுவருவதில் உள்ள சிரமங்கள், எழுத்தாளர் தன்னுடைய மொழிமாற்றுபவர்மீது கொள்ளவேண்டிய நம்பிக்கை, இருவருக்கும் இடையே ஒரு புத்தகத்தை மொழிமாற்றும்போது ஏற்படும் ‘நெகோசியேஷன்' (உறவாட்டம்) ஆகியவை பற்றி ஓரளவுக்குப் புரிதல் கிடைத்தது.

***

இந்திய மொழிகளுக்கு இடையே நிறைய மொழிமாற்றங்கள் அவசியம் என்று பேசப்பட்டாலும் யாரும் இதைச் செய்யப்போவதில்லை என்று தோன்றியது. சாஹித்ய அகாதெமியின் மொழிமாற்றங்களில் உள்ள தரமின்மை பற்றி அனைவருமே அறிவர். அகாதெமி தனது புத்தகங்களைத் தரமாகத் தயாரிப்பதில்லை. மொழிமாற்றத்தில் பல குறைபாடுகள் உள்ளன. அப்படித் தயாரிக்கும் புத்தகங்களையும் சரியாக விற்பதில்லை. அரசு நிறுவனங்களுக்கே பிரத்யேகமாக உள்ள பிரச்னைகள்.

ஆனால் வர்த்தகரீதியில், பிற இந்திய மொழிகளிலிருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றப்படும் புத்தகங்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன.

***

பொதுவாக, மொழிமாற்றம் தொடர்பான கருத்தரங்கு என்றாலுமே இலக்கியம் தொடர்பானதாகவே இந்தக் கருத்தரங்கு இருந்தது. கவிதை, கதை ஆகியவற்றை மொழிபெயர்ப்பது பற்றியே பேச்சு இருந்தது. இலக்கியத்துக்கு வெளியே ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளதையும் அவற்றையும் மொழிமாற்றவேண்டிய அவசியத்தைப் பற்றியும் அதிகமாக யாரும் கவலைப்படவில்லை.

அதேபோல ஆங்கிலத்திலிருந்தும் பிற உலக மொழிகளிலிருந்தும் இந்திய மொழிகளுக்குக் கொண்டுவரவேண்டிய பலவற்றைப் பற்றி பேச்சு அதிகம் இல்லை. இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலம் வழியாக பிற உலக மொழிகளுக்கு எடுத்துச் செல்வதைப் பற்றித்தான் கவலை அதிகமாக இருந்தது.

ஓர் அமர்வில், எழுத்தாளர் பினு ஜான் (Entry from backside only: Hazaar fundas of Indian English) ஏன் இந்திய மொழி எழுத்தாளர்கள் எப்படியாவது தங்களது புத்தகம் ஆங்கிலத்தில் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று அங்கலாய்த்தார். பிரிட்டனில் இருக்கும் யாரும் இந்தியப் புத்தகங்களைப் படிக்க விரும்புவதில்லை. ஆனால் மலையாள இலக்கிய இதழில் ஒரு கதை தொடராக வந்தால் அதை லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள் என்றார். ஆனால் இந்த வசதி இந்தியாவின் பிறமொழி எழுத்தாளர்களுக்குக் கிடையாது என்பதை அவர் யோசிக்கவில்லை. மேலும் ஜான் எழுதுவது ஆங்கிலத்தில்.

இந்திய மொழியில் எழுதுபவர்களது எழுத்துகள் ஆங்கிலத்துக்குப் போவது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

* இந்தியாவிலேயே பலர் தமது மொழியில் படிப்பதில்லை. இது சரியா, தவறா என்பது வேறு விஷயம்.
* இந்தியாவின் பிற மாநிலத்தவர் பலரும் ஒரு படைப்பைப் படிக்கவேண்டும் என்றால், அந்தப் படைப்பை ஆங்கிலத்தில் கொண்டுவருவது மிக முக்கியம்.
* அதன்பிறகு உலகம். இப்போது உலகத்தவருக்கு இந்தியாமீது நிறைய ஆர்வம் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியே இதற்குக் காரணம். ஒரு நாட்டைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள அந்த நாட்டின் இலக்கியத்தைப் படிப்பது அவசியம். ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள் காட்டும் இந்தியாவுக்கும், இந்திய மொழிகளில் எழுதப்படும் படைப்புகள் காட்டும் இந்தியாவுக்கும் பெருமளவு வித்தியாசங்கள் உள்ளன. எனவே உண்மையான இந்தியாவை வெளிநாட்டவர் அறிந்துகொள்ள இந்திய மொழிகளில் எழுதும் படைப்புகளைப் படிப்பது அவசியம். அதற்கு இந்தப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் செல்லவேண்டும்.

வெளிநாட்டவர் வந்து இந்திய மொழிகளைக் கற்று இந்தியப் புத்தகங்களை தங்களது மொழிக்குக் கொண்டுசெல்வதற்கும் இந்தியர்கள் அதனைச் செய்வதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஓர் ஆங்கிலேயர் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தால், தமிழின் நுட்பமான சில விஷயங்களைப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். அதனால் மொழிமாற்றம் மொன்னையாக, அல்லது தவறாகப் போய்விட வாய்ப்புள்ளது. ஆனால் ஆங்கிலம் படிப்பதற்கு இயல்பாக இருக்கும். ஒரு தமிழர் இந்த மொழிமாற்றத்தைச் செய்தால், மொழிமாற்றம் நன்றாக வரலாம், ஆனால் ஆங்கிலம் சுமாரிலிருந்து படுமோசம் என்று எந்த நிலையிலும் இருக்கலாம். ஆனால் இன்று இந்தியர்களது ஆங்கில எழுத்துத் திறன் மேம்பட்டு வருகிறது. பல இந்தியர்கள் ஆங்கிலத்தில் இயல்பாக, சரளமாக எழுதுகிறார்கள்.

***

ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிமாற்றம் தொடர்பாக தமிழக அளவில் நிறையக் கருத்துப் பரிமாற்றங்கள் தேவை.

வெறும் ஆவல் காரணமாக மட்டுமே மொழிமாற்றத்தில் ஈடுபடுபவர்கள், பதிப்பாளர்கள், துறை வல்லுனர்கள், எடிட்டர்கள் என அனைவரும் ஒன்றுசேர்ந்து பேசவேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது.

1 comment:

  1. I agree with your points on 'English - Tamil - English' translations. We need lots of english non fictions, technical white papers, science and various technology related books to be translated to tamil. The wide array of knowledge available in english on non fictional subjects should be taken to every village library and schools in tamilnadu. Government can financially assist these projects. I think this is to do more with knowledge level of feature tamilnadu and not 'Tamizh' langauge. I am interested in translating lot of technical [IT/Non IT] papers and knowledge know hows in tamil.But not sure on how to go about it. Thanks for your interest in this specific area. Hope people soon realize the importance of this.

    Cheers,
    Gopinath Selvaraj.

    ReplyDelete