தில்லியில் உலகப் புத்தகக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. அங்கே யார் வேண்டுமானாலும் எவ்வளவு சதுர அடிகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு அரங்கு அமைக்கலாம். ஆனால் ஒட்டியுள்ளதாக அதிகபட்சம் 1200 சதுர அடிகள் மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு மேல் வேண்டுமானால் தள்ளிப் போய் வேறு இடத்தில் எடுத்துக்கொள்ளலாம். அரசு நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட் நடத்தும் கண்காட்சி இது.
இந்தியாவிலேயே நடக்கும் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி கொல்கத்தா புத்தகக் கண்காட்சி. இங்கேயும் பங்குபெறும் பதிப்பகங்கள் அனைத்துக்கும் வேண்டிய அளவு இடம் கொடுக்கிறார்கள். பல நிறுவனங்கள் 2000-3000 சதுர அடிக்கு இடத்தை எடுத்து, அழகாக அலங்கரித்து வாடிக்கையாளர்களுக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்தித் தருகிறார்கள்.
ஜெய்ப்பூர், பெங்களூர் என்று எந்த இடமாக இருந்தாலும் சரி, இடத்தைக் குறுக்குவதில்லை.
சென்னை புத்தகக் கண்காட்சி நிர்வாகிகளும் இதைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
ஆனால் சென்னையில் அதிகபட்சம் 400 சதுர அடிகளுக்குமேல் தருவதில்லை. தனித்தனியாகத் தள்ளித் தள்ளி இருக்கும் பல இடங்களை எடுத்து ஒருவரிடம் இருக்கும் முழுமையான புத்தகங்களையும் காட்சிக்கு வைப்பதற்கும் முழுமையான அனுமதி கிடைப்பதில்லை.
ஒருவருக்கே நிறைய இடம் கொடுத்துவிட்டால் பிறரது வருமானம் குறைந்துவிடும் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. வாசகர்களை ஏமாற்றிப் பணத்தைப் பிடுங்கிவிட முடியாது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களைத்தான் காசு கொடுத்து வாங்கப்போகிறார்கள்.
நிறைய இடம் கிடைத்தால், வாசகர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுக்க முடியும்.
'நிரந்தரப் புத்தகக் கண்காட்சி' அல்லது 'புத்தகப் பூங்கா' உருவானால் ஓரளவுக்கு இந்தப் பிரச்னைகள் தீரலாம்.
***
ஒரே பதிப்பகத்தின் புத்தகங்கள் பல கடைகளில் கிடைப்பது பற்றி நிறைய விமரிசனங்கள் எழுந்துள்ளன. இதை இந்த 'ஓரிரு' பதிப்பகங்கள் அடுத்தவர் மிது திணிப்பதாகச் சொல்வது அபத்தம். பல்வேறு விநியோகஸ்தர்கள் தங்களுக்கு சில புத்தகங்கள் வேண்டும் என்று கேட்கும்போது அதைக் கொடுக்காமல் இருப்பது சரியல்ல.
புத்தக விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் கண்காட்சியில் இருக்கக்கூடாது என்ற கொள்கையை பபாஸியால் செயல்படுத்த முடியாது. ஏனெனில் இந்தச் சங்கமே பதிப்பாளர், விற்பனையாளர் இருவரும் சேர்ந்து உருவானது.
***
சென்ற முறையைவிட இந்த முறை சென்னை புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரங்கள் குறைவுதான். மேலும் விளம்பரங்கள் வேண்டுமென்றால், அரங்க வாடகை அதிகமாக்கப்படவேண்டும். மேலும் பல பதிப்பகங்கள் ஸ்பான்சர்ஷிப் செய்யவேண்டும். அல்லது அரங்க எண்ணிக்கையை மேலும் அதிகமாக்கி, பதிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கேட்கும் அளவுக்குக் கொடுத்து, வருமானத்தைப் பெருக்கவேண்டும். இது எதையும் செய்யக்கூடாது, ஆனால் கூட்டம் மட்டும் வேண்டும் என்று சிலர் எதிர்பார்த்தால் அது நடக்காது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியால் புத்தகக் கண்காட்சி பாதிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை.
***
இந்தியா டுடே (தமிழ்) இதழில் தரமற்ற புத்தகங்கள் பளபளப்பான அட்டைகளில் வந்து வாசகர்களை ஏமாற்றுகிறது என்று சிலர் புலம்பியிருந்தனர். எப்படியாவது இதுபோன்ற புத்தகங்களைத் தடுத்து நிறுத்துவதுதான் தமிழ்ப் பதிப்புலகை எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் என்று கட்டுரையாளர் முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.
அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். இதற்கென ஒரு வாரியத்தை நியமிக்கலாம். புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க விரும்புபவர், முதலில் அரசிடம் காட்டி சான்றிதழ் பெறவேண்டும். தரமுள்ளதா இல்லையா என்று இந்த வாரியம் தீர்மானிக்கும். இந்த லைசென்சைப் பெற்ற ஒருவர்தான் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியும்.
அல்லது மதுரை மீனாக்ஷி கோயிலில் சங்கப் பலகை ஏதாவது இருக்கிறதா என்று தேடிக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தலாம்.
***
தமிழ்நாட்டில் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஆனால் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் வழிமுறைகளில்தான் சிக்கலே. இப்போதுள்ள புத்தகக் கடைகள் போதா. புத்தகக் கடைகள் ஒதுக்கியுள்ள இடவசதியும் போதாது. புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்களுக்கு இடையேயான உறவு மேம்படவேண்டும். பதிப்பாளர்களுக்கு உரிய நேரத்தில் விற்பனையாளர்களிடமிருந்து பணம் கிடைப்பதில்லை.
இவை அனைத்தையும் மேம்படுத்தினாலே இப்போதுள்ள புத்தகச் சந்தையின் அளவு, குறைந்தபட்சம் 10 மடங்கு பெரிதாகும் என்பது என் கருத்து.
யாருமே புத்தகங்கள் வாங்குவதில்லை, யாருமே நல்ல புத்தகங்களைப் படிப்பதில்லை என்று நாம் ஆற்றாமைப் படவேண்டியதில்லை.
மனநோய்…
5 hours ago
//அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். இதற்கென ஒரு வாரியத்தை நியமிக்கலாம். புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க விரும்புபவர், முதலில் அரசிடம் காட்டி சான்றிதழ் பெறவேண்டும். தரமுள்ளதா இல்லையா என்று இந்த வாரியம் தீர்மானிக்கும். இந்த லைசென்சைப் பெற்ற ஒருவர்தான் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியும்.
ReplyDelete//
பத்ரி, இதன் பின் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? :)
அப்புறம் லைசென்ஸ் அரசே தந்திருக்கிறது, ஆனால் லைப்ரரி ஆர்டர் கிடைக்கவில்லை, இது என்ன கூத்து என்று யாராவது கேஸ் போட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
//அரசு வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். இதற்கென ஒரு வாரியத்தை நியமிக்கலாம். புத்தகம் ஒன்றைப் பதிப்பிக்க விரும்புபவர், முதலில் அரசிடம் காட்டி சான்றிதழ் பெறவேண்டும். தரமுள்ளதா இல்லையா என்று இந்த வாரியம் தீர்மானிக்கும். இந்த லைசென்சைப் பெற்ற ஒருவர்தான் புத்தகத்தைப் பதிப்பிக்க முடியும்.
ReplyDelete//
பத்ரி ஸார்.. இது என்ன ஜோக்....
நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று தெளிவாக புரியவில்லை....
ஒரு பதிப்பகம் ஒரு முறை சான்றிதழ் பெற்றால் போதுமா, அல்லது ஒவ்வொரு புத்தகத்திற்கும் சர்ன்றிதழ் பெற வேண்டுமா ???
முன்னது என்றால் ப்ரவாயில்லை.... பின்னது என்றால் அது புத்தக சென்ஸார் அல்லவா ???
-----
அது சரி.... தரமில்லாத புத்தகங்களை வெறும் “பள பள” அட்டையை மட்டும் வைத்து எத்தனை நாள்தான் விற்க முடியும் :) :) :)
அப்படி சான்றிதழ் முறை என்றால் அதிலும் ஊழல் / லஞ்சம் புகுந்துவிடும் பத்ரி சார்....
ReplyDeleteஎழுத்து துறை பற்றி அறியாதவர்கள் அங்கே போய் அமர்ந்துவிட்டால் அப்புறம் சாகித்ய அகதமி அரசியல் ஆகிவிடும்...