சென்ற ஆண்டு, புத்தகக் கண்காட்சி பற்றி தினம் தினம் பதிவுகள் எழுதவேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்தேன். ஆனால் தினமும் எதையாவது எழுதக்கூடிய அளவுக்கு சக்தியில்லை. இந்த ஆண்டும் யோசித்தேன். விட்டுவிட்டேன். அதற்குத்தான் யாரோ கூட்டு வலைப்பதிவாக போட்டோக்களுடன் எழுதுகிறார்களே...
மிட் இன்னிங்ஸில் இருக்கும் இந்த கண்காட்சி பற்றி இதுவரையிலான என் எண்ணங்கள்...
* முதல் நாள் வந்த மழை, கண்காட்சி நிர்வாகிகளை மிகவும் படுத்திவிட்டது. அன்று பெய்த மழையை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. அவ்வளவு கனமழை. அதனால் நுழையும் வாயில் முழுவதும் சேரும் சகதியும். அனைத்தையும் இரண்டாம் நாள் கடைசிக்குள்ளாக சரி செய்த கண்காட்சி நடத்துனர்களைப் பாராட்டவேண்டும்.
* அரங்க அமைப்பு ஏற்பாடுகள் காயிதே மில்லத் கல்லூரியில் இருந்த ஏற்பாடுகளை விடச் சிறந்ததே. ஆனால் பெங்களூரு கண்காட்சியில் இருப்பதுபோல் இல்லை. பெங்களூரு தரத்துக்குச் செய்யவேண்டும் என்றால் வாடகையை அதிகமாக வசூலிக்கவேண்டும். ஆனால் வாடகையை ஏற்றக்கூடாது என்று பபாசி அவசரப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைய பேர் பேசினார்கள். வாக்கெடுப்பில் வாடகையை சென்ற ஆண்டு அளவிலேயே வைத்திருக்கவேண்டும் என்று முடிவானது. பட்ஜெட் கொடுக்காமல் வசதிகள் மட்டும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நிச்சயம் முடியாது.
ஆனால் அதே சமயம், பல சிறு பதிப்பாளர்களால் அதிகம் பணம் கொடுத்துவிட்டு, பணத்தை மீண்டும் சம்பாதித்துவிட முடியுமா என்று தெரியவில்லை.
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சிறு பதிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மான்யம்... அதாவது அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஸ்டால் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அப்படியானால் யார் சிறு பதிப்பாளர்கள் என்ற வரைமுறையும் (ஆண்டுக்கு என்ன டர்ன் ஓவர் என்பதைக் கொண்டு இருக்கலாம்) அதற்கான ஆடிட் சான்றும் இருந்தால் இதனைச் செய்யலாம்.
* கூட்டம். சென்ற ஆண்டைவிடக் குறைவு என்று சிலர் நினைத்தனர். சென்ற ஆண்டைப் போல, அல்லது அதற்கும் மேலாகவே கூட்டம் வருகிறது என்றே எனக்குத் தோன்றியது. சரியான புள்ளிவிவரம் நமக்குக் கிடைக்கப்போவதில்லை. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பதிப்பாளரும் தனது விற்பனையை சென்ற ஆண்டு விற்பனையோடு ஒப்பிட்டே, கூட்டம் அதிகமாக வந்ததா இல்லையா என்று சொல்லமுடியும்.
ஆனால் கூட்டத்தை வரவழைக்க பபாசி இந்த ஆண்டு நல்லதோர் ஏற்பாட்டைச் செய்துள்ளது. பல பள்ளிகளில் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் இலவச கூப்பனைக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கு அனுமதி இலவசம். இந்தக் கூப்பனைக் கொண்டு மாணவர்கள் தங்களது பெற்றோரையும் இலவசமாக அழைத்துவரலாம். வரும் பொங்கல் விடுமுறை நாள்களில் கூட்டம் இதனால் அதிகமாக வாய்ப்புண்டு.
* சின்னஞ்சிறு ஸ்டால்கள்: இந்த ஆண்டு 36 சதுர அடி (6x6) ஸ்டால்கள் பலவற்றை உருவாக்கி சிறு பதிப்பாளர்களுக்கு என்று கொடுத்துள்ளனர். வாடகை ரூ. 4,000 மட்டுமே. இது நல்ல ஐடியா என்றாலும்கூட நான் பார்த்த வரையில் குறைந்த வாடிக்கையாளர்களே இந்தப் பகுதிக்கு வருவதுபோலத் தெரிந்தது. வாசகர்களின் ஆதரவு இருந்தால்தான் இந்தப் பகுதியில் இருக்கும் பதிப்பாளர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
* நிறைய கடைகள்: சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மேலும் பல கடைகள். என்னைப் பொறுத்தமட்டில் இது நல்ல விஷயம் என்றே கருதுகிறேன். அதிகப் போட்டி என்பதைவிட, மக்களுக்கு அதிக சாய்ஸ் என்றே இதனைப் பார்க்கவேண்டும். இப்போதுகூட பல முக்கியமான ஆங்கிலப் பதிப்பாளர்கள் இங்கு வரவில்லை. பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ், ஹாஷெட், ராண்டம் ஹவுஸ், ரூபா அண்ட் கோ, ரோலி புக்ஸ் போன்ற மிக முக்கியமான டிரேட் புத்தக விற்பனையாளர்கள் யாரையும் தனியாகக் காணோம்.
இதே அடுத்த மாதம் தில்லியில் நடக்க இருக்கும் உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று பாருங்கள். மேலே சொன்ன ஒவ்வொருவரும் ஆளுக்கு 1,000 சது அடிப் பரப்பில் மாபெரும் கடைகளைப் பரப்பியிருப்பார்கள்!
சென்னையிலேயே இருக்கும் லாண்ட்மார்க், அவர்களது வெஸ்ட்லாண்ட், ஈஸ்ட்-வெஸ்ட் விநியோக மற்றும் பதிப்பு அங்கம் எவையுமே ஸ்டால்களை எடுத்துக்கொள்ளவில்லை.
விசாலாந்திரா என்ற ஒரே ஒரு தெலுங்கு பதிப்பகம் மட்டுமே கண்ணில் பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குமுன் கடை எடுத்த டிசி புக்ஸ் (மலையாள சூப்பர் ஸ்டார் பதிப்பகம்) காணப்படவில்லை. கன்னடம் - சான்சே இல்லை. ஹிந்தியிலும் யாரையும் காணோம். மதுரையில்கூட ஒரு ஹிந்தி பதிப்பாளர் வந்ததாக ஞாபகம்!
பெங்களூரு கண்காட்சியில் பிறமொழிப் பதிப்பகங்கள் 10, 20-ஆவது கலந்துகொள்வார்கள்.
ஆக, சென்னை புத்தகக் கண்காட்சியை விரிவுபடுத்த நிறைய வாய்ப்புகள் இனியும் உள்ளன.
இப்போதே கால் வலிக்கிறது என்று சொல்பவர்களுக்கு - ஒருமுறை கொல்கத்தா புத்தகக் கண்காட்சிக்குப் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள். சென்னையில் இருப்பதைப் போல நான்கு மடங்கு பெரிய இடம். இரண்டு மடங்கு அதிகமான கடைகள். நான்கு மடங்கு அதிகமான வாசகர்கள். மூன்று மடங்கு அதிகமாக விற்பனை.
புத்தக விரும்பிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்துவிட்டுப் போவார்கள்.
******
மேலும் நிறைய எழுதவேண்டும். பிறகு பார்ப்போம்.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
4 hours ago
அதற்குத்தான் "யாரோ" கூட்டு வலைப்பதிவாக போட்டோக்களுடன் எழுதுகிறார்களே...
ReplyDeleteயார் என்று உங்களுக்கு தெரிய்ம்தானே ???? உங்கள் டெம்ப்லேட் த்ஜானே அது....
(Just kidding !!!)
Bruno