இரண்டு நாள்களுக்கு முன் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் திரையில் தோன்றினார். மரபணு விதைகளுக்கு எதிரான ஒரு கூட்டம் அது. அங்கு நிருபர்களிடம் பேசிய அவர், “இந்த விதைய சாப்பிட்டா புழுவே செத்துடுதாம். அப்ப அதைச் சாப்பிடற மனுஷன் கதி என்னாகும்? விஷத்தை உள்ள வச்சு விதையைச் செய்யறான்” என்றார்.
நம்மாழ்வார் பாரம்பரிய இயற்கை வேளாண்மையை முன்வைப்பவர். எனக்கும் அந்த முறைமீது நிறைய நம்பிக்கை உள்ளது. அவரது கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (களை எடு!)
ஆனால், அதே நேரம் நம்மாழ்வாரும் பிற இயற்கை விவசாயிகளும் மரபணுத் துறையில் நடைபெற்றுவரும் மாற்றங்களைப் புரிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
கொஞ்சம் உயிரியல் பாடம் படிப்போம்.
***
எல்லா உயிரினங்களுக்கும் - தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகளாக ஒற்றை செல் அமீபா, பேக்டீரியா போன்றவை - அடிப்படையாக இருப்பவை அவற்றின் செல்கள். இந்த செல்லுக்குள் இருப்பது டி.என்.ஏ (டீ-ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம்) என்ற சுருள் சுருளான (double helix) வேதிப்பொருள்.
மாடு, நாய், மனிதன், குரங்கு, வாழைமரம் என்று ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு டி.என்.ஏ உள்ளது. மனிதர்களை மட்டும் எடுத்துக்கொண்டால், இரண்டு வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு டி.என்.ஏக்கள். ஒரே வயிற்றில், ஒரே நேரத்தில் கருவாகும் இரண்டு குழந்தைகளுக்கும்கூட வெவ்வேறு டி.என்.ஏக்கள்தான். ஒரு டி.என்.ஏவில் இருக்கும் ஒரு சிறு 'வரிசை' துண்டு (sequence), மரபணு எனப்படும். இந்த வேதி வரிசை எப்போதும் ஒரு டி.என்.ஏவுக்குள் ஒன்றாகவே தோன்றும். பெற்றோர்களிடமிருந்து கரு உருவாகும்போது இந்த வரிசை, சேர்ந்தாற்போலவே பிரிந்து, பிற வரிசைகளுடன் சேர்ந்து புதிய டி.என்.ஏக்களை உருவாக்கும்.
மனிதனாக இருந்தாலும் சரி, மரங்களாக இருந்தாலும் சரி, இப்படித்தான் நடக்கிறது.
இயல்பில், புதிய புதிய தாவரங்களை உருவாக்க, மனிதர்கள் ஒட்டுவளர்ப்பு முறைகளைப் பின்பற்றுகிறார்கள். தங்களுக்கு வேண்டிய தன்மை உள்ள தாவரங்களை ஒட்டிச் சேர்த்து, புதிய விதைகளை உருவாக்குகிறார்கள். அதன் விளைவாகத்தான் ருசியுள்ள மாம்பழங்கள் கிடைக்கின்றன. வளர்ப்பு நாய்களை உருவாக்குபவர்களும் இப்படித்தான் பல நாய் இனங்களை சேர்த்து, புதிய நாய்களை உருவாக்குகிறார்கள்.
***
மரபணு ஆராய்ச்சியில் மிக முக்கியமான முன்னேற்றம் ஒட்டிச்சேர்க்கப்பட்ட டி.என்.ஏ (Recombinant DNA) என்பதாகும்.
டி.என்.ஏ என்பதே ஒரு ரசாயனம்தானே? ஒரு தாவரத்தின் பல செல்களின் மேல் சுவற்றைப் பிய்த்து, உள்ளே இருக்கும் டி.என்.ஏக்களை வெளியே எடுத்து, அவற்றை ஒரு ரசாயனக் கரைசலில் போட்டால் அந்த டி.என்.ஏவின் சில பகுதிகள் வெட்டுப்படும். கிட்டத்தட்ட ஒரு கத்திரிக்கோலால், ரிப்பனின் ஒரு பகுதியை வெட்டுவதற்கு ஒப்பாகும் இது. ஆனால் ரசாயனக் கத்திரிக்கோல்.
வெட்டிய துண்டை எடுத்து, மற்றோர் உயிரினத்தின் டி.என்.ஏவின் இறுதியில் வைத்து ஒட்டமுடியும். இதையும் சில ரசாயனங்களின் உதவியுடன் செய்யலாம்.
இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் புதிய டி.என்.ஏ ‘ஒட்டிச்சேர்க்கப்பட்ட டி.என்.ஏ' எனப்படும். இது எப்படி நடக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட யூடியூப் விடியோவில் பார்க்கலாம்.
***
டி.என்.ஏவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வேதி வரிசை (மரபணு = gene) அந்த உயிரின் ஒரு குறிப்பிட்ட தன்மைக்குக் காரணமாகும். ஒரு மனிதனின் உயரம், நிறம், குணம் ஆகிய அனைத்தையும் வெவ்வேறு மரபணுக்கள் கட்டுப்படுத்துகின்றன.
ஒரு செடியின் பல்வேறு தன்மைகளையும் அந்தச் செடியின் டி.என்.ஏவில் உள்ள மரபணுக்கள் கட்டுப்படுத்துகின்றன.
இப்போது பருத்திச் செடியை எடுத்துக்கொள்வோம். பருத்தியை பல புழுக்கள் தாக்கி அழிக்கக்கூடியவை. இந்தப் புழுக்கள் தாக்காமல் இருக்க பூச்சிமருந்து தெளிக்கலாம். இது ஒரு வழி. ஆனால் நாளடைவில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தாங்கும் சக்தி படைத்தவையாக இந்தப் புழுக்கள் பலவும் மாறிவிட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் 'இயற்கை' பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. Bacillus Thuringiensis (bt) என்ற பேக்டீரியம், பருத்தியைத் தாக்கும் புழுக்களைத் தாக்கி அழிக்கிறது என்று கண்டுபிடித்தனர். இந்த பேக்டீரியம் 1901-ல் ஒரு ஜப்பானியரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல நாடுகளில் இந்த பேக்டீரியக் கரைசலையே பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தினர். ஆனால் பூச்சிக்கொல்லி படாத பருத்திச் செடிகள் நாசமடைந்தன.
அந்தச் சமயத்தில்தான் இந்த பேக்டீரியம் எப்படி வேலை செய்கிறது; எப்படி புழுக்களைக் கொல்கிறது என்று ஆராய்ச்சிச் சாலையில் ஆராய்ந்தனர். இந்த பேக்டீரியம் தனது செல்லில் ஒரு குறிப்பிட்ட ரசாயனப் படிகத்தை உருவாக்குகிறது என்று கண்டுபிடித்தனர். இந்த ரசாயனப் படிகம் சில வகைப் புழுக்களின் குடல்களுக்குள் சென்று அவற்றைக் கொல்கின்றன. ஆனால் மனிதர்களின் குடலில் இந்த ரசாயனம் சென்றால் அதனால் மனிதனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து, bt பேக்டீரியத்தின் டி.என்.ஏவில் எந்த மரபணு இந்த ரசாயனப் படிகத்தை உற்பத்தி செய்கிறது என்று கண்டுபிடித்து, அந்த மரபணுவை வெட்டி எடுத்து, பருத்திச் செடியின் மரபணுவுக்குள் நுழைத்துவிட்டனர். அப்படி உருவானதுதான் bt பருத்தி.
இந்த bt பருத்தி விதையைச் சாப்பிடும் புழுவின் வயிற்றுக்குள் bt ரசாயனப் படிகம் உள்ளே சென்று அதனைக் கொன்றுவிடும்.
ஆக, பூச்சி மருந்தில் முக்கி எடுக்கப்பட்டவையல்ல இந்த விதைகள். பருத்தியில் ஆரம்பித்து, பல உணவுப்பொருள்களிலும் இந்த bt மரபணு நுழைக்கப்பட்டுள்ளது.
இவற்றைச் சாப்பிட்டால் உயிர் போய்விடாது. ஆனால் வேறு ஏதாவது பின்விளைவுகள் இருக்கக்கூடும். அதைப்பற்றிய முழுதான புரிதல் எனக்குக் கிடையாது.
***
மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவது பற்றி நிறைய கவனம் தேவை. அதன் பின்விளைவுகள் என்ன என்பதை கவனமாக ஆராயவேண்டும். ஆனால் அதைப்பற்றி கருத்து சொல்பவர்கள், எதிர்ப்பவர்கள் இந்தத் தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
புழுவைக் கொல்லும் ஒரு ரசாயனம் மனிதனையும் கொல்லும் என்ற 'பாமரத்தனமான' கருத்து ஓர் இயக்கத்தை முன்னே செலுத்தும் தலைவர்களிடமிருந்து வரக்கூடாது.
bt பருத்தி விதை வளர நிறைய தண்ணீர் தேவை. அதனைச் சரியாகப் புரிந்துகொள்ளாத பல மஹாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்தப் பருத்தி விதைகளை ஒரு தனியார் நிறுவனம் உற்பத்தி செய்திருப்பதால் விதைகளுக்கான விலை எக்கச்சக்கமாக உள்ளது. இவை அனைத்துமே மறுக்கமுடியாத உண்மைகள்.
ஆனால் அவற்றைக் கண்டிக்கும் அதே வேளையில் அறிவியலை முறையின்றிக் கண்டித்துவிடக்கூடாது. அறிவியல் ஆராய்ச்சிகளை சிறுமைப்படுத்தி, பொதுமக்களை குழப்பக்கூடாது.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
2 hours ago
மிக அருமையான விளக்கம், புரிதலுக்கு சுலபமாக இருந்தது,
ReplyDeleteவால்பையன்
//ஒரே வயிற்றில், ஒரே நேரத்தில் கருவாகும் இரண்டு குழந்தைகளுக்கும்கூட வெவ்வேறு டி.என்.ஏக்கள்தான். //
ReplyDeleteஇரட்டை குழந்தைகள் இரு வகைப்படும்
1. uniovular - ஒரே சினைமுட்டையில் இருந்து வருவது (அதாவது ஒரு சினை முட்டை + ஒரு விந்து)
2. binovular - இரு சினைமுட்டையில் இருந்து வருவது (அதாவது இரு சினை முட்டை + இரு விந்து)
இதில் uniovular twins இருவருக்கும் ஒரே DNA தான். ஆனால் கைரேகை வேறு !!
binovular twins வேறு DNA
புருனோ: தகவல் பிழையைத் திருத்தியதற்கு நன்றி! நான் குறிப்பிட்டது இரு வேறு விந்துகளும் இருவேறு முட்டைகளும் உள்ளன என்றாலே, ஒவ்வொன்றிலும் உள்ள மரபணு சீக்வன்ஸ் மாறியிருக்கும்; எனவே இரண்டும் இணைந்து உருவாகும் டி.என்.ஏ வெவ்வேறாக இருக்கும் என்பதையே.
ReplyDeleteஒரே கருமுட்டை, இரண்டாகப் பிளந்து ஒரேமாதிரியான இரட்டையர்களை உருவாக்கும்போது இருவருக்கும் ஒரே டி.என்.ஏ என்பதுதான் சரி.
இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
ReplyDeleteஅப்படியென்றால் பிற விஞ்ஞானிகள்
செயற்கை விஞ்ஞானிகளா?. இயற்கை வேளாண்மை விஞ்ஞானி
என்றால் சரியாக இருக்கும்.
பிடியினால் பலனும் இருக்கிறது,
பிரச்சினைகளும் இருக்கின்றன.
அதன் செயல்திறன் மிக அதிகமாக
பயன்படுத்துவதனால் குறைந்துவிடுமா
என்ற கேள்வியும் இருக்கிறது.
இயற்கை வேளாண் முறையில் அதை
கரைசல் மூலம் பயன்ப்டுத்துகிறார்கள்.
நவீன வேளாண்மை ஜீன்களை மாற்றுவதன் மூலம் அதைச் செய்கிறது. இது ஒரு குணாம்ச மாற்றம் தருகிறது (trait), அதனால்
புதிய வகைப் பருத்தி என்பதை விட
புதிய குணம் கொண்ட பருத்தி என்பதே சரி. பிரச்சினையின் முக்கிய அம்சம் தொழில்நுட்பத்தினை கையாள்வதில் இருக்கிறது.
bt பருத்தி விதை வளர நிறைய தண்ணீர் தேவை
ReplyDeleteஇப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல
முடியாது, அது அந்த வகைப் பருத்தியைப் பொருத்தது.பிடி எல்லா
புழுக்களிலிருந்தும் பாதுக்காப்பதில்லை.
முக்கியமான ‘எதிரி' களிடமிருந்து பெருமளவு பாதுகாக்கும். ஆனால்
பிற புழுக்களைக் கொல்ல பூச்சிக்
கொல்லி தேவை. அவை பலனற்றுப்
போனால் பிடியினால் ஏற்படும் பலன்
குறைந்து விடும்.
டி.என்.ஏவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வேதி வரிசை (மரபணு = gene) அந்த உயிரின் தன்மைகள் அனைத்துக்கும் காரணமாகும். ஒரு மனிதனின் உயரம், நிறம், குணம் ஆகிய அனைத்தையும் வெவ்வேறு மரபணுக்கள் கட்டுப்படுத்துகின்றன.
ReplyDeleteஇப்படி சுஜாதாத்தனமாக எழுதி ஏன்
குழப்புகிறீர்கள் :(
Good article, dear friend. A note on the few comments there.
ReplyDeleteசுஜாதாத்தனமாக எழுதுவதா?! அந்த வாக்கியம் புரியவில்லையெனில் மறுபடி பத்தாம் வகுப்புக்குப் போக வேண்டியதுதானே? சுஜாதாவை எதற்காக இழுக்க வேண்டும்?
இயற்கை விஞ்ஞானி என்றால் அது ஒரு அழகு குறியீட்டுச் சொல், ஒரு unique பெயர்.
அறிஞர் அண்ணா என்றால் அவர் ஒருவர் தான் அறிஞரா அல்லது அவர் ஒருவர் தான் அண்ணாவா?
The Argumentative Indians.