Saturday, April 19, 2008

புத்தகங்களை விற்பது - 1

நியூ ஹொரைசன் மீடியா தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்துவிட்டது. முதலாம் ஆண்டில் நான் முழுவதுமாக இந்தத் தொழிலில் ஈடுபடவில்லை. அப்போது கிரிக்கின்ஃபோவில் வேலை செய்துவந்தேன். அதனால் மாலையிலும் வார இறுதியிலும் மட்டும் பதிப்பகத் தொழிலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் 17 ஏப்ரல் 2005-ல் முடிந்த தினத்துக்கு அடுத்த தினம், கிரிக்கின்ஃபோவிலிருந்து முற்றிலுமாக விலகி, முழுநேர ஊழியனாக நியூ ஹொரைசன் மீடியாவில் சேர்ந்தேன். நேற்றோடு மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

பதிப்பகத் தொழிலைப் பொருத்தமட்டில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தேவையான அளவு மூலதனம் இந்தத் தொழிலுக்கு இதுவரையில் வரவில்லை. பதிப்புத் தொழில் என்றால் அதில், புத்தக உருவாக்கம், அச்சிடுதல், கட்டுமானம், புத்தக விற்பனைக் கட்டுமானம் என அனைத்தும் அடங்கும். இதில் அச்சிடுதல், கட்டுமானம் (பைண்டிங்) ஆகியவை இயந்திரத் தொழில்நுட்பம் சார்ந்தவை. இங்குதான் ஓரளவுக்கு முதலீடு வந்துள்ளது. இன்று இந்தியாவின் பெருநகரங்கள் சிலவற்றிலும், சிவகாசியிலும் உலகத்தரம் வாய்ந்த அச்சு இயந்திரங்கள், தாள்களை மடிக்கும் இயந்திரங்கள், தானியங்கி பைண்டிங் இயந்திரங்கள் போன்றவை உள்ளன. உலகின் பல முக்கியமான பதிப்பாளர்கள் சிவகாசியிலும் சென்னையிலும் புத்தகங்களை அச்சிட்டு, இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்து விற்கிறார்கள்.

அடுத்ததாக, pre-press துறையில், அதுவும் முக்கியமாக ஆங்கிலத்தில், நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. ஐடி போன்றே, இந்த முன்னேற்றங்களும் அந்நிய நாட்டு வேலைகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதற்காகவே தோன்றியுள்ளன என்றாலும் விரைவிலேயே இந்தத் திறன், இந்தியப் புத்தகத் தயாரிப்புக்கும் பயன்படும். இந்தத் துறையிலும் சென்னை இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கிறது. உலகின் பல அறிவியல், பொறியியல், மருத்துவத் துறை ஜர்னல்கள் எடிட் செய்யப்பட்டு, டைப் செய்யப்பட்டு, அச்சாக்க ரெடியாக அனுப்பப்படுவது சென்னையில் இருந்துதான். அமெரிக்காவில் விற்கப்படும் பல கல்லூரிப் பாடத்திட்டப் புத்தகங்கள் டைப்செட் செய்யப்படுவது இப்போது சென்னையில்தான்.

இந்தியாவைச் சேர்ந்த பல pre-press நிறுவனங்களும் இன்று அமெரிக்காவில் இருக்கும் அதே துறை நிறுவனங்களை வாங்க ஆரம்பித்துள்ளன.

***

ஆனாலும் இந்தியப் பதிப்பகங்கள் முதலீடு போதாமை, பதிப்பகத் தொழில் நுணுக்கம் போதாமை ஆகியவற்றால் திசை தெரியாமல் தடுமாறுகின்றன. சின்னஞ்சிறு நிறுவனங்களாக இருப்பதால் சந்தையில் ஏற்படும் மாறுதல்கள் இவர்களைப் பெரிய அளவில் பாதிக்கின்றன. தமிழ்ப் பதிப்பாளர்கள் பலரும் நூலக ஆணையை நம்பி இருப்பது இதனால்தான். தமிழ்ப் புத்தகச் சந்தையை விரிவாக்க பதிப்பாளர்கள் பெரும் முயற்சி எதையும் எடுக்கவில்லை. அதற்கு ஏற்ற திறன் வாய்ந்தவர்களை பதிப்புத் தொழிலுக்குள் அவர்கள் கொண்டுவரவில்லை.

இன்றைய தமிழ்ப் புத்தகச் சந்தை என்பது என்ன?

1. தமிழக நகரங்கள் பலவற்றிலும் இருக்கும், தமிழ்ப் புத்தகங்களை மட்டுமே வைத்து விற்கும் கடைகள். இவை பெரும்பாலும் 200-300 சதுர அடி கொண்டதாக இருக்கும். சில மட்டுமே 800-1,000 சதுர அடியைத் தொடும். நான்கைந்து கடைகள் மட்டுமே 1,000 சதுர அடிக்குமேல் இருக்கும். இவை அனைத்தையும் ஒன்றுசேர்த்தால் தமிழகத்தில் சுமார் 600-700 கடைகள் இருக்கலாம்.

2. பொதுவாக ஆங்கிலப் புத்தகங்களையும், கூடவே கொஞ்சம் தமிழ்ப் புத்தகங்களையும் வைத்து விற்கும் லேண்ட்மார்க் போன்ற சென்னைக் கடைகள்.

3. இவற்றுடன் தெருவோரப் பெட்டிக் கடைகள், உணவகங்கள், பேரங்காடிகள், மருந்துக்கடைகள் என்று எங்கெல்லாம் FMCG பொருள்கள் விற்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் புத்தகங்களையும் விற்கமுடியும். எங்களது நிறுவனம் அதனைச் செய்துகாட்டியுள்ளது. மக்களுக்கு மத்தியில் புத்தகக் கடை இல்லை என்றால், அதற்கு மாற்றாக, இந்தக் கடைகளால் உபயோகமான காரியத்தைச் செய்யமுடிகிறது.

4. புத்தகக் கண்காட்சிகள்

5. ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் சொந்தமான ஷோரூம்கள்

6. மனி ஆர்டர், வி.பி.பி, அஞ்சல்மூலம் காசோலை, வரைவோலை வழியாகப் புத்தகங்கள் வாங்குவது.

7. இணையம் வழியாக, கிரெடிட் கார்ட் அல்லது இணைய வங்கிக் கணக்கு வாயிலாகப் புத்தகம் வாங்குவது.

8. பல நேரடி முறைகள் (book club போன்றவை) இப்போதைக்கு அதிகம் செயல்படுத்தப்படவில்லை.

9. Institutional விற்பனை. சில புத்தகங்களை ஒரு நிறுவனம் (கல்வி நிறுவனம், தொழிற்சாலை ...) மொத்தமாக வாங்கிக்கொள்ளலாம்.

10. மேற்கொண்டு பல வழிமுறைகள் இருக்கலாம்.

***

ஆனால் இவற்றில் மிக முக்கியமானது, கடைகளில் நேரடியாக விற்பது. புத்தக சில்லறை விற்பனைக் கடைகள் இப்போது இருக்கும் எண்ணிக்கை போதாது. இந்தத் துறையில் பெரிய அளவு முதலீடு தேவை. ஆனால் எல்லா சில்லறை விற்பனையிலும் இருக்கும் பிரச்னை, இங்கு நேரடி அந்நிய முதலீடு கிடையாது. FIPB-யிடம் அனுமதி பெற்றால்தான் முடியும். கொள்கை அளவில் இதற்குக் கடும் எதிர்ப்பு உள்ளது. உருளைக்கிழங்கையும் மசாலா தூளையும் விற்பதில் அந்நிய முதலீடு என்பது ஒரு விஷயம். அங்கே பெருமளவு கடைகள் ஏற்கெனவே உள்ளன. அதனால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படலாம் என்று சிலர் சொல்லலாம். ஆனால் புத்தகங்கள் போன்ற துறைகளில் இது தேவையும் அவசியமானதும் ஒன்று. ஒரு புத்தகப் பதிப்பாளனாக, புத்தக விற்பனைத் துறையில் அந்நிய முதலீடு வருவதை நான் வரவேற்கிறேன். ஆனால் இது எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

அடுத்தது புத்தக விநியோக நிறுவனங்கள். ஆங்கிலத்தில் IBD, IBH போன்றவை பல பதிப்பாளர்களுடைய புத்தகங்களை ஒன்றுதிரட்டி கடைகளுக்கு விற்பனை செய்கின்றன. லேண்ட்மார்க்கின் East-West, ரூபா அண்ட் கோ, ஜெய்கோ, UBS போன்ற பலரும் ஆங்கிலப் புத்தகங்களுக்கு இந்த வேலையைச் செய்துவருகின்றனர். ஆனால் தமிழ்ப் புத்தகங்களை ஒன்றுதிரட்டி, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யக்கூடிய வகையில் யாரும் இல்லை. இதனால் ஒவ்வொரு தமிழ் பதிப்பாளரும் ஒவ்வொரு தமிழ்ப் புத்தக விற்பனையாளரிடம் நேரடி அக்கவுண்ட் வைத்திருக்கவேண்டியுள்ளது. இதனை எல்லோராலும் செய்யமுடிவதில்லை.

பல தமிழ் பதிப்பாளர்கள், புத்தகம் வேண்டும் என்றால் என் 'அலுவலகத்துக்கு' வந்து வாங்கு என்று சொல்கிறார்கள். வேறு பலரோ, ஒரு அல்லது இரண்டு விற்பனைப் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு தமிழகம் முழுவதையும் கவர் செய்யவேண்டும். இது முடியாத காரியம். புத்தகத்தைக் கொடுத்துவிட்டாலும், பணத்தை திரும்பப் பெறுவது பெரிய காரியம். பல பதிப்பாளர்களும் இதில் உள்ள கஷ்டத்தைப் புரிந்திருப்பார்கள். இதனால் வியாபாரத்தைப் பெரிய அளவுக்குக் கொண்டுசெல்ல பலரும் விரும்புவதில்லை. ஓவெர்ஹெட் செலவுகளைக் குறைத்து, ‘ஏதோ கொஞ்சம் லாபம் வந்தால் போதும்' என்ற எண்ணத்தில் தொழிலை நடத்தும் பதிப்பாளர்களே அதிகம்.

இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள நாங்கள் தமிழகம் முழுவதிலும் கடைகளுக்கு விற்பனை செய்ய 30-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை வேலைக்கு வைத்துள்ளோம்.


இவர்கள் ஒரு கடைவிடாமல் சென்று, நியூ ஹொரைசன் மீடியா புத்தகப் பட்டியலைக் கொடுத்து, புத்தகங்களுக்கான ஆர்டர்களைப் பிடித்து, புத்தகங்கள் அந்தக் கடைக்குச் செல்லுமாறு பார்த்துக்கொண்டு, மேற்கொண்டு பணம் வசூல் செய்வதிலும் கவனமாக உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தமிழக மாவட்டம் கணக்கு. பெரிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள். விற்பனையை புதிய கடைகளுக்கு விஸ்தரிப்பது, புதுப் புது உணவகங்கள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் புத்தகங்களைக் கொண்டுசேர்ப்பது இவர்களது நோக்கம். இத்துடன் ஒவ்வொரு பெரு நகரத்திலும் சில விநியோகஸ்தர்களை நியமித்துள்ளோம். இவர்கள் உள்ளூர் ஸ்டாக்கிஸ்டுகளாகவும் உள்ளனர்.

இந்த மாதிரியான பெரிய விற்பனைக் குழுவைத் திரட்டுவது அனைத்துப் பதிப்பாளர்களுக்கும் சாத்தியமில்லாது இருக்கலாம். எனவே இங்கே உடனடித் தேவை என்று நான் கருதுவது புத்தக distribution நிறுவனங்களை. அதற்கான முயற்சிகள் புத்தகச் சந்தையை விரிவாக்குவதில் மிகவும் அவசியம்.

(தொடரும்)

2 comments:

  1. //10. மேற்கொண்டு பல வழிமுறைகள் இருக்கலாம்.
    //

    11.உள்நாட்டு நூலக ஆர்டர்கள்

    12.வெளிநாட்டு நூலக ஆர்டர்கள்

    13.வெளிநாட்டுப் புத்தகக்கண்காட்சிகள்

    ReplyDelete
  2. தேனாம்பேட்டையில் ஒரு உணவகத்தில் கிழக்கு புத்தகங்களை பார்த்து சிறு வியப்பு ஏற்பட்டது. அங்கு இருந்தது வரலாற்று புத்தகங்கள் என்பதால் அக்கடையின் உரிமையாளர் வரலாற்று பிரியரோ என்று நினைத்து விட்டு விட்டேன் .

    பின் மதுரையில் மருத்துவபுத்தகங்கள் விற்கும் கடையில் கிழக்கு புத்தகங்களை பார்த்த பொழுது தான் நீங்கள் புத்தக விநியோகத்தில் ஒரு திசையில் புதிதாக இறங்கியுள்ளீர்கள் என்று புரிந்தது.

    நல்ல முயற்சி. அமெரிக்க செல்ல ஷாப்பிங் செய்யும்பொழுது டாலர் தேசம் புத்தகம் அந்த கடையில் இருந்தால் கண்டிப்பாக வாங்குவார்கள்.

    மற்றப்படி, புத்தக விநியோகம் தமிழகத்தில் தேவைப்படும் ஒன்று.

    பல சிறந்த புத்தகங்களை விநியோகம் செய்யாததால் பலன் கிடைப்பதில்லை என்றும் தமிழகத்தில் புத்தகங்களை விநியோகம் செய்ய ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு முன்வரவேண்டும் என்றும் நான் உங்களின் பதிவில் ஏற்கனவே கூறியதுதான்.

    நீங்கள் முயற்சி எடுத்துள்ளீர்கள். ஒரு வாசகன் என்ற முறையிலும், சில புத்தகங்களை எழுதியுள்ளவன் என்ற முறையிலும் நன்றி + வாழ்த்துக்கள்

    ReplyDelete