Tuesday, April 08, 2008

கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில்முனைவோர்

மைக்ரோகிரெடிட் என்னும் குறுங்கடன் இன்று உலகளாவிய அளவில் பிரபலமாகி வரும் ஒரு சிந்தனை. முகமது யூனுஸ் என்பவர் இதனைப் பெரிய அளவுக்கு ஓர் இயக்கமாக எடுத்துச் சென்றவர் என்பதும் அவருக்கு சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

குறுங்கடனின் அடிப்படை நோக்கம், மிகக்குறைந்த அளவிலான கடன் வசதியைப் பெற்று, கிராமப்புற ஏழைகள் (அல்லது நகர ஏழைகள்), சிறு தொழில்களைச் செய்வதன்மூலம் தங்களது வளத்தைப் பெருக்கிக்கொள்வது. பொதுவாக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது எழை மக்களுக்குக் கடினமாக இருக்கும். வங்கிகள், யாருக்குக் கடன் கொடுக்கலாம் என்ற வரையறையை உருவாக்கியிருப்பார்கள். அதில் ஏழைகளுக்கு பொதுவாக இடம் இருக்காது. யூனுஸ், இதனை உடைத்தார். ஏழைகளுக்குக் கடன் கொடுத்தார். எந்த அடகும் இல்லாமல் கொடுத்தார். அதே நேரம், கடனைத் திரும்பப் பெற, சில முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒவ்வொரு கடன் மையத்திலும், ஐந்து பெண்கள் சேர்ந்த குழுக்கள் பல உருவாக்கப்படும். ஒரு குழுவில் தனித்தனி உறுப்பினர்களுக்குக் கடன் கொடுப்பார்கள். கட்ன பெற்ற ஒவ்வொருவரும் பணத்தைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவர்கள் உறுப்பினராக இருக்கும் ஐவர் குழு அந்தக் கடனுக்குப் பொறுப்பு. அவர்களாலும் முடியாவிட்டால் அந்த மையத்தில் இருக்கும் அனைத்து ஐவர் குழுக்களும் சேர்ந்து கடனைக் கட்டியாகவேண்டும்.

தனி நபர் கடனுக்கு குழுவை, அவர்கள் சார்ந்த சமூகத்தைப் பொறுப்பாளியாக்குவதன்மூலம் யூனுஸ், குறுங்கடனை முன்னெடுத்துச் சென்றார். ஆனால் இதனால் பல சமூகப் பிரச்னைகளும் எழுந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பேச இந்தப் பதிவில் இடமில்லை.

குறுங்கடன்மூலம், கிராமப்புறங்களில் பல தொழில்முனைவர்களை உருவாக்குவதாக யூனுஸ், பிற குறுங்கடன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதனைப் பலர் மறுக்கிறார்கள். ஒரு பெட்டிக்கடை வைத்து தினசரி ரூ. 100-200க்கு வியாபாரம் செய்யும் ஒருவர் தொழில்முனைவரா? அந்த வருமானத்தில் செலவுகள்போக அவரால் குடும்பம் நடத்தமுடியுமா? இப்படி ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் அனைவராலும் கடைகளை நடத்திப் பிழைக்கமுடியுமா? கிராமங்களுக்குத் தேவை ஊதியம் கொடுக்கும் பல வேலைகள். இப்படிச் சொல்கிறார்கள் வேறு சிலர்.

குறுங்கடனுக்கான எதிர்ப்பு வலது, இடது என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் வருகிறது. வலதுசாரி பொருளாதார வல்லுனர்கள், பெரும் நிறுவனங்கள் அதிக முதலீட்டின்மூலம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதனால்மட்டுமே கிராமப்புற ஏழைமையைக் குறைக்கமுடியும் என்று நம்புகின்றனர். இடதுசாரிகள், குறுங்கடன் என்பது கிராமப்புற ஏழைகளை ஏமாற்றும் ஒரு முயற்சி என்று நினைக்கின்றனர். மாற்றாக, கிராமப்புற ஏழைகளுக்கு அதிக மான்யம், வசதிகள் ஆகியவை அளிக்கப்படவேண்டும் என்கின்றனர்.

குறுங்கடனை மட்டும் வைத்துக்கொண்டு கிராமப்புறங்களில் ஏழைமையை ஒழித்துவிடமுடியாது என்று நான் நினைக்கிறேன். கடன்களை, நுகர்வதற்கான கடன், உற்பத்திக்கான கடன் என்று இரண்டாகப் பிரிக்கலாம். கடனை அடிப்படையாக வைத்துத் தொழில் செய்து, உற்பத்தியைப் பெருக்கி, அந்த உற்பத்தியை விற்பதன்மூலம் பணத்தைப் பெற்று, கடனை அடைத்து, மேலும் கடன் வாங்கி, மேலும் உற்பத்தியைப் பெருக்கி முன்னேறிச் செல்வதற்கு உதவுவது உற்பத்திக்கான கடன். நுகர் கடனைப் பெற்று, ஒரு கல்யாணம் நடத்தி விருந்துவைத்து பணத்தைச் செலவு செய்யலாம். அல்லது அவசர மருத்துவத் தேவைக்குச் செலவிடலாம். அல்லது தொலைக்காட்சி வாங்கலாம். இப்படி என்ன செய்தாலும், பணம் உடனே காணாமல் போய்விடும். பிறகு வேறு வருமானத்தைக் கொண்டு இந்தக் கடனை அடைக்கவேண்டும்.

உற்பத்திக்கான கடனைக் கொண்டு, பணத்தைப் பெருக்குவதற்கு சந்தை பற்றிய புரிதல் வேண்டும். போட்டியாளர்கள் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். திறமையுள்ள ஊழியர்களைத் தேடிப்பிடித்து வேலைக்கு வைக்கவேண்டும். தரம் பற்றிய புரிதல் வேண்டும். இடைத்தரகர்களிடம் எப்படி நடந்துகொள்வது, பொருள் வாங்குவோரிடம் எப்படி ஒப்பந்தம் செய்துகொள்வது போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நமது பல கிராமத்தொழில்கள் நசிந்துபோவது இதனைச் சரியாகச் செய்யமுடியாததால்தான். பல நெசவாளர்கள், தங்களது உயிரைவிட்டு உருவாக்கும் துணிவகைகள், டிசைன்கள் ஆகியவற்றிலிருந்து அதிகமான பணத்தைப் பெறுவது இடைத்தரகர்களும், அந்தப் பொருள்களை நுகர்வோருக்கு விற்கும் விற்பனை நிறுவனங்களுமே. சந்தைக்கு என்ன தேவை, சந்தையில் ஃபேஷன் எப்படி மாறிக்கொண்டே இருக்கிறது ஆகியவற்றை கிராமப்புற வினைஞர்கள் இன்று கண்டுகொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றனர்.

மேலும் தொழில்துறையில் நகர நிறுவனங்களோடு போட்டிபோடத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்கள் கிராமங்களில் இல்லை. 24 மணிநேர மின்சாரம், நல்ல சாலைகள், மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை இல்லை. வங்கிகள் இல்லை. தொலைபேசி, இணையம் ஆகியவை நிறைய முன்னேறவேண்டும்.

இருந்தும், விவசாயத்துக்கு வெளியே பல தொழில்கள் கிராமப்புறங்களில் சாத்தியமாகும். அதனைச் செய்வதற்கு முனைப்புள்ள தொழில்முனைவர்கள் கிராமங்களை நோக்கிச் செல்லவேண்டும்.

ஐஐடி மெட்ராஸ், இதனை நோக்கி சில செயல்களைச் செய்துவருகிறது. பேரா. அஷோக் ஜுன்ஜுன்வாலா தற்போது, கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்கக்கூடியவகையில் சில தொழில்முனைவர்களை ஊக்குவித்து, சில ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தொழில்களுக்கு ஆரம்பகட்டத்தில் தேவையான நிதி உதவி, கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை செய்துதர, பல அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளார். Tenet, L-RAMP ஆகியவைமூலம் பணம், மானியமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால் மானியங்கள் போதா. கூடவே ஒரு தொழிலை உருவாக்கி நடத்தத் தேவையான angel funding வேண்டியிருக்கும்.

அதற்காக Tenet-1, Tenet-2 போன்ற வென்ச்சர் நிதிகளை அஷோக் உருவாக்கியுள்ளார். இந்த நிதிகளை வென்ச்சர்-ஈஸ்ட் என்ற நிதி மேலாண்மை நிறுவனம் நிர்வகிக்கிறது.

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சரகத்தின்கீழ் NRDC என்ற நிறுவனம் இயங்கிவருகிறது. இந்த நிறுவனம் தனது பிற செயல்களுடன், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில்களை உருவாக்க முனையும் தொழில்முனைவோருக்கு angel funding அளிக்கிறது. NRDC, ஐஐடி மெட்ராஸ் இரண்டும் இணைந்து, கிராமப்புறங்களை நோக்கிய, தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை ‘அடைகாத்து' அவற்றுக்கு ஆரம்பகட்ட நிதி தர ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிறுவனங்களை அடையாளம்கண்டு, இவற்றில் முதலீடுகளைச் செய்வதற்கான ‘முதலீட்டுக் குழு'வில் மூன்று பேரில் ஒருவனாக நானும் உள்ளேன். NRDC-யின் தலைமை நிர்வாகி சோம்நாத் கோஷ், பேரா. அஷோக் ஜுன்ஜுன்வாலா மற்ற இரு உறுப்பினர்கள்.

கடந்த கூட்டத்தில் இரண்டு நிறுவனங்களில் NRDC முதலீடு செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இனி அரசு இயந்திரம் உருண்டோடி, இதற்கான வேலைகளை முடிக்கவேண்டும்.

இதில் ஒரு நிறுவனம், கிராமப்புறங்களில் உற்பத்திக் கேந்திரத்தை நிறுவி, பாரம்பரிய கைவினைத் தொழில்கள்மூலம் home textiles (தலையணை உறை, போர்வை, மேசை விரிப்புகள், ஜன்னல் திரைகள், தரைக்கம்பளம் போன்றவை) பொருள்களை உருவாக்கி இந்தியா மற்றும் உலகெங்கும் விற்பனை செய்து பொருளீட்டுவது. இதில் பலவற்றை இயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கிறார்கள். இயற்கை இழைகள் என்றால் வாழை நார், மூங்கில் நார், கோரைப்புல் போன்றவற்றிலிருந்து பெறும் நார் ஆகியவை! காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் தாவரப்பொருள்களிலிருந்து தயாரிக்கும் சாயத்தைக் கொண்டு இந்த இயற்கை நாரில் வண்ணம் சேர்த்து, வீட்டுக்கு உபயோகமாகும் பலவிதமான நெசவுப் பொருள்களைத் தயாரிக்கமுடியும் என்கிறார்கள்.

மற்றொரு நிறுவனம், தொலைபேசிமூலம் ஒலிவழியாக தகவல் களஞ்சியத்திலிருந்து தகவலைப் பெறும் நுட்பத்தைச் செயல்படுத்துகிறது. இன்று எதற்கெடுத்தாலும் இணையத்தில் தேடிப் பெறுகிறோம் நாம். ஆனால் கிராமப்புறங்களில் இணைய வசதியும் சுமார். அதற்குத் தேவையான கணினிக்கு ஆகும் செலவும் அதிகம். ஆனால் இன்று எல்லோரிடமும் தொலைபேசி இருக்கிறது. எனவே படிப்பறிவு - முக்கியமாக ஆங்கில அறிவு - இல்லாதவர்களும், அவரவர் மொழியில் தகவல்களை எளிதாகப் பெறமுடியுமா என்ற கேள்விக்கு இவர்கள் விடைகொடுக்க முற்படுகிறார்கள்.

இவர்கள் எப்படி தங்கள் துறைகளில் ஜெயிக்கிறார்கள் என்பதை வரும் நாள்களில் பார்ப்போம்.

4 comments:

  1. Nice initiative Badri. I know of a similar venture in Bangalore, which provides services over phone call. Please check out: http://www.ubona.com/

    Regards,
    Jayakumar

    ReplyDelete
  2. //24 மணிநேர மின்சாரம், //

    இது நகரத்தில் உள்ளதா ???? :) :) :)

    ReplyDelete
  3. Interesting write up.Years ago SITRA tried to use pine apple as a source for fiber.I have no idea as to whether it was successful.

    ReplyDelete
  4. Development should be village oriented especically in countries like India where huge population lives in villages. Whether the concept helps people engaged in manufacturing Automobile spare parts which will generate employment opportunities in villages? If so give details of the concept developed by Prof Junjunwala\

    Vijayaraghavan

    ReplyDelete