Wednesday, April 02, 2008

குழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு

தமிழ் வளர்ச்சித்துறை, இந்த ஆண்டு தொடங்கி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த தமிழ் மென்பொருளுக்கான விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு கணியன் பூங்குன்றனார் விருது என்று பெயர். இதற்குத் தகுதிபெற “இந்த மென்பொருள் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும்”.

அதற்கான தகவல் கிடைத்ததும், சும்மா இருக்கட்டுமே என்று NHM Writer, NHM Converter ஆகியவற்றுக்காக விண்ணப்பித்துவைத்தோம்.

சுமார் இரண்டு வாரங்களுக்குமுன் விண்ணப்பித்த மென்பொருள்களை நேரில் வந்து இயக்கிக் காண்பிக்க அழைத்திருந்தனர்.

மொத்தம் 17 விண்ணப்பங்கள் வந்திருந்தன என்று நினைக்கிறேன். அதில் இருவர் (எங்களையும் சேர்த்து) இரண்டு மென்பொருள்களுக்குத் தனித்தனியாக விண்ணப்பித்தவர்கள். ஆக, மொத்தம் வந்தது 15 நிறுவனங்கள், அமைப்புகள். யார் யார் என்னென்ன மென்பொருள்களை அறிமுகம் செய்தார்கள் என்ற தகவல் என்னிடம் இல்லை.

ஆனால் வந்தவற்றுள் எங்களைக் கவர்ந்தது திருச்சியிலிருந்து வந்திருந்த 'ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி' சார்பில் கொண்டுவந்திருந்த காது கேளாதோருக்கான சைகை மொழியின்மூலம் கணிதம் கற்பிக்க உருவாக்கியிருந்த மென்பொருள். அதையும்கூட அகஸ்மாத்தாகத்தான் பார்க்கமுடிந்தது. அவர்கள் கொண்டுவந்திருந்த டெமோ குறுந்தட்டு வேலை செய்யவில்லை. அதனால் அவர்கள் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தனர். அப்போது என் அலுவலக சக ஊழியர் நாகராஜன், அதனைச் செப்பமிட்டு வேலை செய்யுமாறு செய்தார். அப்போதுதான் அந்த மென்பொருள் எவ்வாறு வேலை செய்கிறது என்று ஓரளவுக்குப் பார்க்கமுடிந்தது.

முனைவர் சா.பிரபாகர் இம்மானுவேல், அவர்கூட ஒரு சகோதரி (பெயர் உடனடியாக ஞாபகம் இல்லை) ஆகியோர் வந்திருந்தனர். இம்மானுவேலுடன் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இம்மானுவேல் இயல்பியலில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் குறைதிறனுள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தல் தொடர்பாகவும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். குறைதிறன் என்றால் கண், காது போன்ற புலன்களில் குறைபாடுள்ளவர்கள், அல்லது மூளைத்திறனில் சற்றே மாறுபாடுள்ளவர்கள்.

கற்பித்தல் தொடர்பாக பல கருத்துகளை முன்வைத்தார். அத்துடன் இன்றைய கல்வித்திட்டம், அதன் குறைபாடுகள், அவை எவ்வாறு பள்ளிக் குழந்தைகளைத் துன்புறுத்துகின்றன என்பதை விளக்கினார். எந்த வகையில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் திறனைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர், எப்படி குழந்தைகளின்மீது அழுத்தம் கொடுக்கின்றனர், இதில் பள்ளிக்கூட ஆசிரியர்களின் பங்கும் எவ்வளவு மோசமாக உள்ளது என்று விளக்கினார்.

பல கற்றல் குறைபாடுகளை இளம் வயதில் கண்டுபிடித்துவிட்டால், அதாவது 3-4 வயதுக்குள்ளாகவே, உடனடியாக அவற்றைச் சரிசெய்துவிடலாம் என்றார்.

மற்றொரு முக்கியமான விஷயமாக அவர் சொன்னது ஆங்கிலம் வழியாகக் கல்வி கற்பிப்பதில் மாட்டிக்கொள்ளும் சராசரிக் குழந்தைகளின் பாடு. பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்பதற்காக ஆங்கிலவழிக் கல்வி கற்பித்தலில் குழந்தைகளைப் புகுத்திவிடுகின்றனர். ஆனால் பிற இடங்கள் அனைத்திலும் (வீடு, விளையாடுமிடம், பள்ளிக்கூடம்!) ஆங்கில ஒலிப்பான்களையே கேட்காத ஒரு குழந்தை கடுமையான சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. ஒரேமாதிரி ஒலிக்கும் இரு சொற்களுக்கு இருவேறு ஆங்கில ஸ்பெல்லிங்கள் இருப்பதைப் பல குழந்தைகளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால் மொழியைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கலில், சிந்தனையை, தகவலைப் புரிந்துகொள்ளக் கஷ்டப்படுகின்றனர். விளைவு: மோசமான ஒரு மாணவரை உருவாக்கிவிடுகிறோம்.

இம்மானுவேலின் தீர்வு: பள்ளிக்குள்ளே நுழையும் குழந்தைகளுக்கு ஐ.க்யூ சோதனை நடத்தி, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குமேல் உள்ளவர்களை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துக்கொள்வது. அதனால் மற்றவர்களுக்கு ஆங்கிலமே சொல்லிக்கொடுக்கக்கூடாது என்பதல்ல. ஆங்கிலத்தை ஒரு பாடமாக வைத்தால் அவர்களுக்குப் போதும். அந்த மொழியிலும் நாளடைவில் நல்ல திறனைப் பெறலாம்.

இதனை எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றேன் நான். ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொண்டார்கள் என்றால் ஓரிரு நாள்கள் அழுதுவிட்டு பெற்றோர்கள், தமிழ்வழிக் கல்வியில் பிள்ளைகளைச் சேர்த்துவிடக்கூடும் என்று நம்புகிறார் இவர். ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை இப்போது இல்லை. பெற்றோர்களது புரிதல் அதிகமாக வேண்டும். அப்போதுதான் இதற்கு விடிவுகாலம் வரும்.

பேச்சு 'தாரே ஜமீன் பர்' பக்கம் திரும்பியது. படம் நன்றாக இருந்தது என்றாலும் பிரச்னை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். தான் எழுதியிருந்த ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். (கற்றலில் பிரச்னை/குறைபாடு, பெற்றோர்-ஆசிரியர் கையேடு. வெளியீடு: ஹோலி கிராஸ் சர்வீஸ் சைசைட்டி, திருச்சி. விலை ரூ.50)

இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும். அதற்கு சில நாள்கள் ஆகலாம். அதற்கு முன்னதாக இந்தப் புத்தகத்தை அவர் ஏன் எழுதியுள்ளார் என்பது பற்றி அவரே கூறுவதைக் கேளுங்கள்:
இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் ஆங்கில மொழிவழிக் கல்விமுறை நோக்கி ஓடுவதை யாராலும் தடுக்கமுடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அவ்வாறு செல்லும் ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை பிரச்னைக்குள் செல்லமாட்டான் என்று எண்ணுகின்றனர். ஒரு குழந்தை கல்வியில் தோல்வி நிகழ்வினை வெளிப்படுத்தும்போதும் பெரும்பாலான பெற்றோர்கள் அதற்கான காரணங்களை ஆராயாமல், தனிப்பயிற்சி (tuition), அபகஸ், நினைவாற்றல் பயிற்சி எனப் பல வழிகளில் செல்வதையும் நாம் தினசரி காண்கிறோம். சுமார் 8 அல்லது 9 வயதில் கல்விப் பிரச்னையுடன் குணாதிசயப் பிரச்னைகளும் அதிகமாக வெளிப்படும்போதுதான் பெற்றோர்கள் உதவி தேடி அலைகின்றனர். அந்நிலையிலும்கூட இது ஒரு கல்விப் பிரச்னை என உணராமல் மருத்துவப் பிரச்னை என பல மருத்துவர்களைத் தேடிச் செல்வதும், மருந்துகளின்மூலமாக இப்பிரச்னைகளை நீக்கமுடியுமா என முயற்சிப்பதும் நாம் காணும் ஒரு நிகழ்வு.

இந்தச் சூழ்நிலையில், என்னிடம் உதவி வேண்டி வருபவர்களின் எண்ணிக்கை தினசரி கூடி வருவதைக் காணும்போது, ஒரு பெற்றோராக என் மனது இந்தச் சூழ்நிலைகளில் உண்மையினை விளக்கி ஒரு புத்தகமாக வெளியிட எண்ணியது. என்னிடம் வழிகாட்டுதல் பெற்ற அனைத்துப் பெற்றோர்களுமே, குழந்தையின் கல்வி நிலைகளில் தங்களது அறியாமையினை உணர்ந்து, பெற்றோர்கள் அறியாமை நீக்க ஒரு புத்தகம் எழுதுங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். அதன் விளைவே இந்தப் புத்தகம்.
ஆனால் இந்தப் புத்தகத்தை நீங்கள் எளிதாகக் கடைகளில் பெற்றுவிடமுடியாது. உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் கற்றலில் பிரச்னைக்கு உள்ளாகியிருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படலாம் என்று நீங்கள் எண்ணினால், முனைவர் இம்மானுவேலை நீங்கள் அணுகலாம்.

அவரது முகவரி:

ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி
Plot No. 3, எட்டுப்பட்டை காம்பவுண்ட்
பெரிய ஆஸ்பத்திரி பின்புறம்
புத்தூர், திருச்சி 620 017
தொலைபேசி எண்: 2771544, 2770031
மின்னஞ்சல்: holy.cross.service.society@gmail.com
prabakartrichy@hotmail.com

நான் மேலே குறிப்பிட்டுள்ள புத்தகமும் இந்த முகவரியில் கிடைக்கும். முக்கியமாக அனைத்துப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாங்கிப் படிக்கவேண்டிய புத்தகம்.

[பி.கு. இன்று உலக குழந்தைகள் புத்தக தினம். உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் புத்தகம் படிக்க ஆரம்பிக்கவில்லையென்றால் இன்றே தொடங்குவீர்.

இன்று காலை 10.00-11.00 மணிக்கு சென்னை Big FM-ல் குழந்தைகளுக்கான புத்தகங்கள் தொடர்பாக நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி வருகிறது. பல பாடல்களுக்கு மத்தியில் நான் சிறிது பேசவும் கூடும்!]

10 comments:

  1. //பல கற்றல் குறைபாடுகளை இளம் வயதில் கண்டுபிடித்துவிட்டால், அதாவது 3-4 வயதுக்குள்ளாகவே, உடனடியாக அவற்றைச் சரிசெய்துவிடலாம் என்றார்.//

    மூன்று முதல் நான்கு வயதுக்குள்ளிருக்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது? ஏதாவது அறிகுறிகள் இருக்கிறதா?

    ReplyDelete
  2. ஆம், இருக்கிறது. இதனை அடுத்த சில பதிவுகளில் (அடுத்த என்றால் உடனே இல்லை, இந்த வார இறுதி ஆகலாம்) எழுதுகிறேன்.

    ReplyDelete
  3. Important/interesting post. Thanks.

    Speaking of children's books, here is a free online children's books (ages 1 - 14) site:

    www.biguniverse.com

    Disclosure: Site owned/operated by a friend

    ReplyDelete
  4. பத்ரி
    >இம்மானுவேலின் தீர்வு: பள்ளிக்குள்ளே நுழையும் குழந்தைகளுக்கு ஐ.க்யூ சோதனை நடத்தி, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்குமேல் உள்ளவர்களை மட்டும் ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்துக்கொள்வது.

    இது நிறையச் சிக்கலானது. அந்த வயதில் (நம் சமூக சூழலில்) குழந்தைகளைத் தரமதிப்பிட நிலைப்படுத்தப்பட்ட சோதனைகள் (Standardized tests) இருப்பதாகத் தெரியவில்லை. மேலைநாடுகளில் கற்றல் குறைபாடு, மனவிறுக்கம் போன்றவற்றை மிகச் சீக்கிரமே அளவிட சோதனைகள் இருக்கின்றன. இவற்றை அடியொட்டி நம் சமூகத்திற்கானதை உருவாக்க வேண்டும். அப்படியே பயன்படுத்துவதில் அபாயங்கள் உள்ளன.

    இம்மானுவேலுக்கு வணக்கங்கள்.

    >அதன் விளைவே இந்தப் புத்தகம். ஆனால் இந்தப் புத்தகத்தை நீங்கள் எளிதாகக் கடைகளில் பெற்றுவிடமுடியாது. உங்களுக்குத் தெரிந்த குழந்தைகள் கற்றலில் பிரச்னைக்கு உள்ளாகியிருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படலாம் என்று நீங்கள் எண்ணினால், முனைவர் இம்மானுவேலை நீங்கள் அணுகலாம்.

    சொல்லத் தேவையில்லை. இதைப் பரவலான வாசிப்பிற்கு உதவ கிழக்கு முயலும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  5. //ஆனால் இந்தப் புத்தகத்தை நீங்கள் எளிதாகக் கடைகளில் பெற்றுவிடமுடியாது.//

    இது போல் பல நல்ல புத்தகங்கள் கடைகளில் கிடைப்பதில்லை.

    ஏன் இது போன்ற புத்தகங்களை வலையில் வைக்கக்கூடாது ??

    இந்த ஒரு புத்தகத்திற்காக மட்டும் கூறவில்லை. இது போல் பல புத்தகங்கள் இருக்கின்றன. தன் எழுத்து, தான் கற்ற கல்வி, அனுபவம் பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே புத்தகம் எழுதும் பலர் இருக்கிறார்கள்.

    அவர்கள் சுமார் 50 முதல் 80 பக்கங்கள் எழுதி, அதை அருகில் உள்ள அச்சகத்தில் அச்சிட்டு, அதற்கு ஆயிரக்கணக்கில் கை காசை வேறு செலவழித்து, புத்தகம் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளாகவே அடங்கி விடுகிறது.

    மருத்துவத்துறையில் ”விநியோகம் மட்டும்” (Distribution of published books) செய்வது நடக்கிறது. உதாரணம் http://www.medicalbooks.in/search/label/Speed
    http://www.medicalbooks.in/search/label/Scott

    இவை இரண்டும் PARAS நிறுவனத்தால் விநியோகிக்கப்படுகிறது. இதில் இரண்டாவதாக உள்ள குழந்தைகள் மருத்துவ புத்தகம் குறித்து CMC Velloreக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் இருந்தது... PARAS அதை விநியோகிக்கும் வரை.

    எனவே

    இது போன்ற அறிய புத்தகங்களை விநியோக்க ஒரு imprint ஆரம்பிக்கலாமே

    அல்லது

    இவைகளை இனையத்தில் வெளியிடலாம்

    ReplyDelete
  6. Hyper active குழந்தைகளை வழிப்படுத்துவதற்க்கு உதவி செய்யும் புத்தகம்/சாப்ட்வேர் ஏதேனும் உள்ளதா?

    ReplyDelete
  7. கற்றலில் குறைபாடிருக்கும் குழந்தைகளுக்கு சென்னையில் சிறப்புக்கல்வி அளிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் அதுபோன்ற ஒரு ஆசிரியை சந்திக்கும் வாய்ப்பு அண்ணன் பாலபாரதி மூலமாக எனக்கு கிடைத்தது.

    இதுபோன்ற குழந்தைகளை ஸ்பெஷல் சில்ட்ரன் என்று அழைக்கிறார்கள். ஏதாவது ஒரு துறையில் மற்ற குழந்தைகளை விட இந்த குழந்தைகளை மிக சுலபமாக மாஸ்டர் ஆக்கிவிடலாம் என்று அந்த ஆசிரியை சொன்னார்.

    அந்த குழந்தைகளிடம் நாம் நாசூக்காக எப்படி பழகவேண்டும் என்று ஓரிரு வார்த்தைகளில் சொன்னார். அந்த குழந்தைகளிடம் பேசும்போது அவர்களை தொட்டு தொட்டு பேசினால் சுலபமாக புரிந்துகொள்வார்களாம்.

    மற்ற குழந்தைகளெல்லாம் Master of none, jack of all. ஸ்பெஷல் குழந்தைகளோ ஏதோ ஒரு துறையில் கண்டிப்பாக மாஸ்டராக தான் இருப்பார்கள்.

    ReplyDelete
  8. லக்கிலுக்: கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள், அறிவு வளர்ச்சியில் குறைபாடுள்ளவர்கள் கிடையாது. (அப்படிப்பட்டவர்கள் மனநலம் குன்றியவர்கள் என்று அழைக்கப்படலாம்.) இத்தகு குழந்தைகளுக்கு நம்முடைய கல்வி கற்பிக்கும் முறைதான் ஒத்துவராது.

    கற்றலில் பல பரிமாணங்கள் உண்டு. வேகமாகப் பிழையின்றி எழுதுதல், சரியான ஸ்பெல்லிங் எழுதுதல், கணிதம் போடுதல், logical reasoning என்று பல. இதில் ஏதோ ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ குறைபாடுள்ளவர்களைத்தான் கற்றல் குறைபாடுள்ளவர்கள் என்கிறோம்.

    இவர்கள் நிச்சயமாக ஏதோ ஒன்றில் மிகச் சிறப்பாக இருப்பார்கள் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் சரியான ஆசிரியர்கள், பயிற்சிமுறை இருந்தால், இவர்களது குறைபாட்டைப் போக்கமுடியும். இவர்களும் பிற குழந்தைகளைப் போன்றே, மதிப்பெண்கள் பெற்று, நல்ல வேலையில் சேர்ந்துவிடலாம்.

    நீங்கள் சொல்லும் சிறப்புப் பயிற்சிப் பள்ளி எங்கே உள்ளது என்று சொல்ல முடியுமா? இந்தப் பதிவைப் படிக்கும் பலருக்கும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  9. //நீங்கள் சொல்லும் சிறப்புப் பயிற்சிப் பள்ளி எங்கே உள்ளது என்று சொல்ல முடியுமா? இந்தப் பதிவைப் படிக்கும் பலருக்கும் உதவியாக இருக்கும்.//

    தமிழகம் முழுவதும் இதுபோன்ற பள்ளிகள் இருக்கிறது. அந்த ஆசிரியை இப்பள்ளிகள் குறித்த முழு விபரங்கள் மற்றும் முகவரிகளை வைத்திருக்கிறார். அவரது தொலைபேசி எண் பாலபாரதியிடம் இருக்கிறது. அவரிடம் கேட்டு வாங்கித் தருகிறேன்.

    ReplyDelete
  10. மிகப் பயனுள்ள பதிவு. தகவல்களுக்கு நன்றி.

    இம்மானுவேலுக்கு வணக்கங்கள். ஏதாவது தொண்டு நிறுவனம் இந்நூலை வாங்கி இலவசமாக குழந்தைகள் பிறக்கும் பொழுதே மருத்துவமனைகளில் கிடைக்கச் செய்தால் நல்லது.

    நன்றி - சொ. சங்கரபாண்டி

    ReplyDelete