நேற்று ஒரு மீட்டிங். நான் ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறேன். கார்பொரேட் உலகில் அதிகம் சாதித்த, உயர் பதவிகளில் இருக்கும் சிலர் அமர்ந்திருக்கின்றனர். ஒருவர் மட்டுமே பெண். மீட்டிங் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டே போகிறது. மணி இரவு 8.00-ஐத் தாண்டுகிறது. அந்தப் பெண், நடுவில் தனது செல்பேசியில் தன் தாயைக் கூப்பிட்டு தன் மகனுக்கு உணவு கொடுக்குமாறு சொல்கிறார்.
மீட்டிங் தொடர்ந்து நடக்கிறது.
இன்னும் சில நிமிடங்களுக்குப் பிறகு, 'பையன் சாப்பிடாமல் அடம் பிடிக்கிறான், தாய் வந்தால்தான் சாப்பிடுவேன் என்கிறான்' என்ற செய்தியைச் சுமந்து வருகிறது எஸ்.எம்.எஸ். தாய் மீண்டும் போன் செய்கிறார். 'சாப்பிடுப்பா, நாளைக்கு ஸ்கூல் இருக்கே, சாப்பிட்டுவிட்டு தூங்கப்போ' என்று கெஞ்சுகிறார். பலன் என்ன என்று தெரியவில்லை.
மீட்டிங் தொடர்கிறது.
ஆனால் அந்தத் தாயால் பேசமுடிவதில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, உட்கார்ந்திருக்கிறார். சுற்றியுள்ளவர்கள் ஒன்றுமே நடவாததுபோல பேசுகிறார்கள். இந்தத் தாய் கண்ணில் நீர் வருவதை அடக்கிக்கொண்டு, ஒரு நிமிடம் சுதாரித்துக்கொண்டு மீண்டும் பேசத்தொடங்குகிறார்.
மீட்டிங் தொடர்கிறது.
என் வேலை முடிகிறது. நான் கிளம்புகிறேன். அந்தத் தாய் இன்னமும் அங்கேயே உட்கார்ந்திருக்கிறார். அவர் வீட்டுக்குச் செல்ல எத்தனை நேரம் ஆகும் என்று தெரியவில்லை.
அந்த ஒரு கணம், அந்தத் துளி நேரம் அவர் தொண்டையை அடைத்துக்கொண்டு பேசமுடியாமல் இருந்தது, கண்ணில் ஒரு சொட்டு நீரை அடக்கிக்கொண்டது, என் கண்ணில் நிற்கிறது.
எந்த ஆணுக்கும் இந்த நெருக்கடி நேர்வதில்லை.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
3 hours ago
" வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் .... " என எல்லா ஆண்களையும் ஒட்டுமொத்தமாக அத்தகைய அயோக்ய கூட்டத்தினராக உருவகித்து பாடிவிட்டார் பாரதி என பெண் விடுதலையை அதீத லெவலுக்கு ஊதி விட்டதின் பல பின் விளைவுகளில் இதுவும் ஒன்று.
ReplyDeleteஅந்த அழுத குழ்ந்தை எவ்வளவு நொந்து போயிருக்கும் உறங்க தவித்திருக்கும் என்பதையும் எண்ணி வருந்துகிறேன்.
பொருளாதாரத்திலே பொருள் தானே தாரம் என்றகிவிட்டதாலே , நல்ல தாய் என்கிறதை தவிர சர்வ அனைத்திலும் நம் மாதர் குல மாணிக்கங்கள் முனைவதின் கேடு ஊடுருவி இருக்கும் தளங்கள் மிக ஆழமானது.
" இன்றய தலைமுறைகளிலே, ஆண்களிடேயே ஆண்மை இல்லை, பெண்களிடேயே பெண்மை இல்லை. ஆகவே, மொத்தத்திலே நன்மை இல்லை " என்று ஒருவர் சொன்னதாக நினைவு.
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
எழுதி பதிவு செய்ததற்கு நன்றி பத்ரி.
ஸ்ரீனிவாசன்.
ஸ்ரீநிவாசன்: உங்களது கருத்துக்களுடன் நான் உடன்படவில்லை. பொதுவாக கூட்டங்களில் இருக்கும்போது, என் மகள் சாப்பிட்டுவிட்டாளா என்று ஒரு தந்தையாக நான் இதுவரை கவலைப்பட்டதில்லை. ஒரு தாயால் கவலைப்படாமல், வருத்தப்படாமல் இருக்கமுடிவதில்லை என்பதைக் காட்டவே நான் அதனை எழுதினேன்.
ReplyDeleteதந்தை வந்தால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள்
ReplyDeleteஇல்லையா.சாப்பிட்டாலும் தந்தைதான்
தூங்கப்பண்ண வேண்டும் என்று சில
குழந்தைகள் எதிர்ப்பார்ப்பதில்லையா.
குழந்தைகள் குறித்த அக்கறையை ஆண் பெண்
வேறுபாடா சுருக்க முடியுமா?
நல்ல பதிவு. பத்ரியிடமிருந்து வந்திருக்கும் வித்தியாசமான பதிவு - ‘ஒரு un-badri பதிவு’ என்று Gilli சொல்லிவிட்டதே! :)
ReplyDeleteஇந்தப் பதிவைப் படிக்கும் போது, குழந்தையை வீட்டில் விட்டு விட்டு சங்கீதக் கச்சேரி செய்யப்போன ஒரு பாடகி, வீட்டிலிருக்கும் அந்தக் குழந்தையைப் பற்றிக் கவலைப்படுவதுபோல் காட்சிப்படுத்திய ஒரு தொலைக்ககட்சி விளம்பரம் நியாபகத்திற்கு வருகிறது.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, உங்களைப்போல்தான் நானும், இதில் சிரத்தை எடுத்துக் கொண்டதில்லை. மீட்டிங்கில் நீங்கள் கண்ட காட்சியை நானும் காண நேர்ந்திருந்தால், என் கண்ணின் சொட்டு நீரை அடக்கக் கஷ்டப்பட்டிருப்பேன்.
குழந்தைகளை கவனிப்பது என்பது தாயின் பணி என்று விட்டுவிட்டதனாலோ, அந்தப் பணிக்கு உரிய expertise என்னிடம் கிடையாது என்று நினைத்ததனாலோ என்னவோ, குழந்தைக்கு உணவு கொடுக்கும் விஷயங்களில் எல்லாம் நான் அவ்வளவாகப் பங்குகொண்டது கிடையாது. குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்பதனை மனைவி சொல்லித்தான் பலமுறை அறிந்துகொண்டிருக்கிறேன்.
அதேசமயம், இதேபோல குழந்தைகள் மீது அக்கறையோடு இருக்கும் ஆண்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள். தாயுள்ளம், தந்தையுள்ளம் இரண்டுமே போற்றுதலுக்கு உரியதுதான்.
பாரதிய நவீன இளவரசன்: கண்ணீர் என் கண்ணில் இல்லை. அந்தத் தாயின் கண்ணில். என்னை அது பாதித்ததால்தான் எழுதினேன்.
ReplyDelete***
மற்றபடி, தாயுள்ளம், தந்தையுள்ளம் என்பதைப் பிரிக்கமுடியும். குழந்தைகளை வளர்ப்பதில் தாய்க்கே அதிகப் பங்கு. தந்தை அளிக்கும் சிறு பங்கைப் பெரிதாக்கவேண்டியதில்லை. விதிக்கு விலக்குகளைக் காண்பிப்பதும் தேவையில்லை. பொதுவாக, உயிரிகள் அனைத்திலுமே, அதிலும் பாலூட்டிகளில் பெண்கள்தான் குழந்தைகளைப் பெரிதும் பாதுகாத்து வளர்த்தெடுக்கிறார்கள். சில உயிரினங்களில் ஆண்கள் ஓரளவுக்கு பெண்களுக்கு உதவி செய்கின்றன. (மனித இனத்திலும் இவ்வாறே.)
***
un-badri பதிவு என்றால் என்ன அர்த்தம்? பத்ரி இன்னின்னமாதிரி பதிவுகளைத்தான் போடவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?
பத்ரி இலைவடாம் போன்ற பதிவுகளை மீண்டும் போடுவாரா என்று இட்லிவடையில் ஒருத்தர் கேட்டிருந்தார். அதற்காக இந்தப் பதிவு என்று வைத்துக்கொள்ளுங்களேன்:-)
குழந்தையை வளர்ப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு உண்டு.
ReplyDeleteஆண்கள் வேணா வீட்டிலிருந்து குழந்தையை ஒரு இரண்டு மாசம் பாத்துக்கிட்டும். அதுக்கப்புரம் குழந்தை யாருக்காக அழுதுன்னு பாப்போம். அப்படி அழுதா ஆம்பளைக வேலையை விட்டுட்டு வீட்டுல உட்காந்துருவமா?
//குழந்தைகளை வளர்ப்பதில் தாய்க்கே அதிகப் பங்கு. தந்தை அளிக்கும் சிறு பங்கைப் பெரிதாக்கவேண்டியதில்லை. //
ReplyDeleteஉண்மை. பொறுப்பு என்று பார்த்தால், இருவருக்குமே சமமான பங்கு உண்டு. ஆனால், நிஜத்தில், நீங்கள் சொல்வது போல்தான் உள்ளது.
நமது இந்த ஆணாதிக்க சமூகத்தில், பெண்ணுக்கென்று விதிக்கப்பட்ட ஒரு பணியாகப் போய்விட்டதால், பல ஆண்கள் இந்த குழந்தைகள் வளர்ப்பு போன்ற விஷயத்தில் பொறுப்பைத் தட்டிக்கழிக்கத்தான் செய்கிறார்கள்.
//un-badri பதிவு என்றால் என்ன அர்த்தம்?//
கில்லியைத்தான் கேட்கவேண்டும்; நான் கேட்டுவிட்டேன் :)
//பத்ரி இன்னின்னமாதிரி பதிவுகளைத்தான் போடவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?//
அதானே...?!
ரீடர்ல படிச்சாலும், கமென்டு போடணும்னு வந்தேன்.
ReplyDelete//பொருளாதாரத்திலே பொருள் தானே தாரம் என்றகிவிட்டதாலே , நல்ல தாய் என்கிறதை தவிர சர்வ அனைத்திலும் நம் மாதர் குல மாணிக்கங்கள் முனைவதின் கேடு ஊடுருவி இருக்கும் தளங்கள்// இப்படி எழுதவதற்கு வெட்கமாயில்லையா? உங்கள் குகைக்குள் ஒரு பொந்து தோண்டி அதிலிருந்து வெளி வராமலிருக்க வேண்டிக் கொள்கிறேன்.
பத்ரி / மற்றோருக்கு, பொருளாதார காரணங்களால் பணிபுரியும் தாய் நான். எத்தனையோ தடவை லேட்டாகியிருக்கு. //தந்தை அளிக்கும் சிறு பங்கைப் பெரிதாக்கவேண்டியதில்லை. // என் ரங்கமணி தாயுமானவர். அவர் மாதிரி எல்லாரும் இல்லாதது வெறும் ஆண்களாயிருப்பதில் வெற்றியடைபவர்களுக்கு நஷ்டம் (பி.ந. ரேஞ்சுக்கு போகுது!)
நீங்கள் கவனித்தது உங்கள் எண்ணப் போக்கை (வித்தியாசங்களை கவனிப்பதிலோ, உணர்வுகளை அனுமானிப்பதிலோ) - sharpness or sensitivity? - காட்டுகிறது.
யார் எப்படியானாலும், பெற்றோர் இரண்டு பேரில் ஒருவரின் கவனம் குறைந்தாலும் குழந்தைகள் அதன் போக்கில் அதைச் சுட்டிக் காட்டுகின்றன, இப்போ இல்லாட்டியும் அப்புறம்!
நல்ல அவதானம்.
ReplyDeleteஅறிவுஜீவிகளால் கேலிக்குள்ளாகும் டி. ராஜேந்தர், தாய்ப்பாசத்துக்கும் தந்தைப்பாசத்துக்குமுள்ள இந்த நுண்ணிய வேறுபாட்டை ஒரு நீஈஈஈண்ட வசனத்தில் சொல்லியிருப்பார். படம் பேர் மறந்துவிட்டது. தாய் தன் குழந்தைக்காக தன்னிடமிருக்கும் எதையும் இழப்பாள். தந்தை அப்படியல்ல. உடல்ரீதியான, மன ரீதியான , சமூகக் கட்டமைப்புகள் ரீதியான பல காரணங்கள் உண்டு. (தாய், தந்தை என்றஇரண்டு மாடல்களுக்கும் விதிவிலக்குகள் இருந்தாலும் சராசரியைப் பற்றியதே இந்த அவதானம்.)
இன்று காலை Google Talkல் chat செய்யும் போது, எனது சகோகரி ஒருத்தி, தங்களது பதிவைப் பார்த்துவிட்டு, கீழ்காணும் கருத்துக்களைச் சொன்னார். அவை எனக்குப் புதிய கருத்துக்களாகப் பட்டமையால் தங்களோடும், சக இணைய வாசகர்களோடும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
ReplyDelete//I think, mother has no role in growing any child at all..
its quiet natural for her to carry the child in her womb and feed milk.... In a way it is helping a mother bilogically. Otherwise, a child needs only father more... in today's context.
I loook at any child today...
the need for the child for life is $$$$.
Father earns it. he gives a steady life...
Mother's touch, feeling, milk, emotions... etc etc are available at free of cost... and today if u really watch.... a motherless child is happier than a fatherless child
mother's role ends when the baby starts becoming independent.. may be till 8, 9 years
then the role of father begins and it lasts until the child dies or the father!!
then mother becomes just a cook//
அவர் அனுமதியுடன் இதை (readabilityக்காக சிறு திருத்தங்களூடன்) வெளியிட்டுள்ளேன்.
பாரதீய நவீன இளவரசன் / பத்ரி!
ReplyDeleteபிரகாஷ்தான் இதற்கு தொடுப்பு கொடுத்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது இவ்வகையான வித்தியாசமான உபயோகங்கள் (usage) புரிந்துகொள்ளக்கூடியதே! un-badri என்றால்… வழக்கமான பத்ரி இடுகைகளிலிருந்து முற்றிலும் மாற்பட்டு உள்ளதல்லவா இது? பொதுவாகவே பத்ரியின் பதிவுகள் பொது விவகாரம் குறித்த சீரிய(சான)கருத்துக்களைக் கொண்டிருக்கும். (இடஒதுக்கீடு, 123 ஒப்பந்தம், தீட்சிதர்கள் விவகாரம்…) அப்படியிருக்கும்போது இப்படி ஒரு, மனதைத் தொடும் (பொதுவிவகாரம் அல்லாத) பதிவு என்பது un-badri தானே! எப்படி நம்ம விளக்கம்!
இப்பதிவை வாசித்ததும் அம்மா மீது இன்னமும் அன்பு கூடுகிறது!
ReplyDelete//எந்த ஆணுக்கும் இந்த நெருக்கடி நேர்வதில்லை.//
இந்த வாக்கியத்தில் மட்டும் எனக்கு முரண்பாடுண்டு. தாய்க்கு இணையாக தன் சேயை பராமரிக்கும் ஓரிரு தந்தைகளையாவது நான் அவதானித்திருக்கிறேன்.