'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற புத்தகத்தின் மலிவுப்பதிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இது நெடுநாளாக இருந்துவந்த தேவை. இன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம் ராஜேஷ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச் சிந்தனை ஆண்டுவிழாவை அடுத்து, குடிமக்கள் முரசு சார்பாக, காந்திய இலக்கியச் சங்கம் வழியாக வெளியிடப்பட்டது.
காந்தி எழுதி நாம் அதிகம் அறிந்த புத்தகம் சத்திய சோதனை. பல லட்சம் பிரதிகள் ஒவ்வோர் ஆண்டும் விற்பனையாகும் புத்தகம் இது. ஆனால் வாங்குவோரில் 100-க்கு 3 பேர்கூட இதனைப் படிப்பார்களா என்று தெரியாது. இந்தப் புத்தகம் காந்தியின் முழு சுயசரிதை கிடையாது என்பதே பலருக்குத் தெரியாது. முக்கியமாக இந்திய விடுதலையில் காந்தியின் பங்கு என்ன என்பதே இந்தப் புத்தகத்தில் இருக்காது. ஏனெனில் இது 1921 வரையிலான காந்தியின் வாழ்க்கையில் உள்ள செய்திகளை மட்டுமே உள்ளடக்கியது. மேலும் நான் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் படித்தபோது அதிக ஏமாற்றத்தை அடைந்தேன். காந்தியின் வாழ்க்கையை நன்கு புரிந்துகொள்ள நீங்கள் படிக்கவேண்டிய புத்தகம் லூயி ஃபிஷரின் Gandhi, His Life and Message for the World. இது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு (தி.ஜ.ரங்கநாதன்) பழனியப்பா பிரதர்ஸ் மூலம் வெளியானது. ஆனால் இப்போது கிடைக்கிறதா என்று தெரியாது.
உண்மையான காந்தியை, அவரது கொள்கைகளை அன்று, அவரது செயல்முறைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம். இதனையும் ஏராவாடா சிறையில் அவர் குஜராத்தியில் சொல்லச் சொல்ல இந்துலால் யாக்னிக் எழுதி, வால்ஜி தேசாயால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் தி.சு.அவினாசிலிங்கம், நா.ம.ரா.சுப்பராமன், டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் கொஞ்சம் கரடுமுரடுதான். ஆங்கிலம் படிக்கமுடியும் என்றால் ஆங்கிலத்திலேயே படித்துவிடுங்கள்!
இந்தப் புத்தகத்தை நான் படித்து நெகிழ்ந்துபோயுள்ளேன். இதுவரை இரண்டுமுறை முழுவதுமாகப் படித்துள்ளேன். எந்தப் புத்தகத்தையும் படிக்கும்போது இந்த அளவுக்கு ‘எமோஷனல்' ஆனதில்லை. காந்தியின் ஆகப்பெரிய சாதனை அவர் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு வாங்கிக்கொடுத்த சலுகைகள்தான். அதன்பிறகு அவர் இந்தியாவில் செய்ததெல்லாம் ஒன்றுமே இல்லை. ஒருமுறை நானும் ஆர்.வெங்கடேஷும் கணையாழி கஸ்தூரி ரங்கனைப் பார்க்கச் சென்றபோது அவர் சொன்னார்: ‘காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு மனிதனாகச் சென்றார், மகாத்மாவாகத் திரும்பி வந்தார்.' இன்று புத்தகத்தை அறிமுகம் செய்த ஆ.கி.வெங்கடசுப்ரமணியனும் அதையே சொன்னார். முற்றிலும் உண்மை.
இந்திய விடுதலை பற்றி இதைப்போன்றதொரு புத்தகத்தை எழுதாமல் காந்தி கொல்லப்பட்டது நம் பேரிழப்பு.
இந்தப் புத்தகத்தில் சத்தியாக்கிரகம் என்ற போராட்ட முறை எப்படி உருவானது என்பதை துளித்துளியாக விளக்குகிறார் காந்தி.
காந்தியின் அகிம்சை முறைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் சிலர், ஆங்கிலேயனாக இருந்ததால்தான் காந்தியின் போராட்டமுறை வெற்றிபெற்றது; ஹிட்லராக இருந்தால் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பான் என்கிறார்கள். சமீபத்தில்(!) டோண்டு ராகவனும் இப்படியே தன் கேள்வி-பதிலில் எழுதியிருந்தார். ஆனால் தென்னாப்பிரிக்க போ'அர் (Boer) தலைவர்களது நடத்தை பற்றி அறியாதவர்கள்தாம் இப்படிப் பேசுவர். நடத்தையில் பிரித்தானியர்களைப் போலன்றி, ஜெர்மானிய நாஜிக்கள் போலவே இவர்கள் தென்னாப்பிரிக்காவில் நடந்துகொண்டனர். காந்தி இந்தியர்களுக்குச் சலுகைகள் பெற்றுக்கொடுத்தபின்னரும், போ'அர்கள் கறுப்பர்களிடம் படுமோசமாகவே நடந்துகொண்டனர். அதனை எதிர்கொள்ள ஒரு நெல்சன் மண்டேலா பிறக்கவேண்டியிருந்தது.
காந்தியையும் சத்தியாக்கிரக அறப்போர் முறையையும் புரிந்துகொள்ள அனைவரும் தவறாது படிக்கவேண்டிய புத்தகம் இது. இப்போது தமிழிலும் மலிவு விலையில் (ரூ. 30) கிடைக்கிறது. கிடைக்கும் இடம்: காந்திய இலக்கியச் சங்கம், தமிழ்நாடு காந்தி நினைவு வீதி, மதுரை 625020. தொலைபேசி எண்: 0452-2533957
முந்தைய பதிவு
நியூஜெர்ஸி சந்திப்பு
2 hours ago
போயர்களைப் பற்றி நான் அறியாதவன் அல்ல. ஆனால் அச்சமயம் ஹிட்லர் மாதிரி அவர்கள் இன்னும் ஆகவில்லை. இன்னும் God save the queen தேசீய இசைக்கு கட்டுப்பட்டவர்களாகவே அவர்கள் இருந்தனர். காந்தி படத்திலேயே நீங்கள் அதை பார்த்திருக்கலாம். மேலும் காந்தி அவர்கள் இங்கிலாந்து ராணியின் விசுவாசப் பிரஜையாகவேர் அக்காலக்கட்டத்தில் இருந்திருக்கிறார். அவர் இந்தியாவுக்கு நிரந்தரமாகத் திரும்பி வந்து கணிசமான காலம் கழித்துத்தான் தென் ஆப்பிரிக்க நிறவெறியர்கள் நிஜமாகவே சமாளிக்க இயலாத அளவுக்கு மோசமாகப் போனார்கள்.
ReplyDeleteகடைசியில் அவர்கள் பணிந்ததும் பொருளாதார காரணங்களுக்காகவே. அவர்களை அம்மாதிரி எல்லோருமே ஒதுக்கி வைத்தனர். தகவல் பரிமாறல்கள் அதிக அளவில் நடந்து 1989-வாக்கில் மண்டேலாவை விடுதலை செய்தனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//போ'அர்//
ReplyDeleteபோயர் என்றே எழுதக்கூடாதா? நீங்கள் எழுதி இருப்பதை எப்படி வாசிப்பது? இன்னும் சில எடுத்துக்காட்டுக்கள் தர இயலுமா?
நன்றி.
காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையைப் பற்றி ஒரு நல்ல அறிமுகத்திற்கு பார்க்க வேண்டிய படம் ஷ்யாம் பெனகலின் The Making of Mahatma. காந்தியடிகள் மனிதனாகப் போய் மகாத்மாவாக வந்த கதை அது. நீங்கள் சொல்லும் போயர் யுத்த அனுபவங்கள் காந்தியடிகளின் வாழ்க்கையில் ரயிலில் தூக்கியெறியப்பட்டதைவிட முக்கியமான சம்பவம் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகாந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் தோராயமாக எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் என்று எங்கேயும் தேடாமல் சொல்லுங்கள் பார்க்கலாம்?
நல்ல தகவல் நன்றி
ReplyDeleteபழனியப்பா பிரதர்ஸ் பற்றிய தொலைபேசி அல்லது தொடர்பு முகவரி தரவும்
தங்களுடைய முந்தைய பதிவைப் படித்தபின் "Satyagraha in South Africa" வாங்கினேன். தமிழில் தனியாக "தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்" புத்தகம் கிடைப்பது பற்றி மகிழ்ச்சி. வாங்க வேண்டும்..."Satyagraha in South Africa"-வை இன்னும் படிக்கவில்லை. தமிழில் இருந்தால் உடன் படிக்க வாய்ப்பு ஏற்படும்!
ReplyDeletehttp://www.gandhiserve.org/cwmg/VOL034.PDF
ReplyDelete