Sunday, April 13, 2008

இட ஒதுக்கீடு vs தொலைக்காட்சி சானல்கள்

பிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய கல்வி நிலையங்களில் 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், ஆங்கில செய்தி சானல்களின் ஆங்கர்களுக்கு (anchor) ஒரே ஆங்கர் (anger). அதனால் செய்திகளுக்குள்ளேயே அங்கங்கே இட ஒதுக்கீட்டை கேலி செய்தவண்ணம் இருந்தனர். கிரீமி லேயர், ரிசர்வேஷன் போன்ற சொற்களை எங்கெல்லாம் கிண்டலுக்கு உள்ளாக்கமுடியுமோ அங்கெல்லாம் புகுத்தினர். பின், செய்திகளுக்கிடையே இட ஒதுக்கீட்டின் ஆதரவு, எதிர்ப்பு பிரபலங்களிடம் கேள்வி கேட்டு, தங்களது சானலின் ‘எடிட்டோரியலை' முன்வைத்தனர்.

இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் பி.வி.இந்திரேசன், குர்ச்சரன் தாஸ், ஷிவ் கேரா ஆகியோரோடு, ஆதரவாளர் காஞ்சா அய்லய்யா என்.டி.டி.வியில் தோன்றினார். ஆனால் எதிர் கருத்துகளுக்கு மட்டுமே நேரம் அதிகமாக அளிக்கப்பட்டது. சி.என்.என் ஐ.பி.என்னில் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய மந்திரி ஒருவர் என இரண்டு பேர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேசி, வறுபட்டனர்.

என்.டி.டி.வி, சி.என்.என். ஐ.பி.என், டைம்ஸ் நவ் ஆகிய அனைத்து சானல்களிலும் பேசிய மாணவர்கள் பெரும்பாலும் (3:1 என்ற விகிதம்) இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களாக இருந்தனர். இதில் பலரும் ஏற்கெனவே கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள். இவர்கள் எந்தவிதத்தில் தனிப்பட்ட முறையில் தாங்கள் பாதிக்கப்படப்போவதாக நினைக்கின்றனர் என்று புரியவில்லை.

யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்த ஒருவர் என்.டி.டி.வியில் படா தமாஷாகப் பேசினார். இப்போது இட ஒதுக்கீடு இல்லாமலேயே OBC மாணவர்கள் 24% இடங்களைப் பிடிப்பதாகவும், மேற்கொண்டு 3% இடம் கிடைப்பதால் ‘உங்களுக்கு என்ன லாபம்' என்றும் கேட்டார். மேற்கொண்டு 3% இடங்கள்தான் லாபம் என்பது ஏனோ இவருக்குப் புரியவில்லை. அதே கேள்வியையே திருப்பி, மேற்கொண்டு 3% இடங்கள் OBC-க்கு செல்வதால் உங்களுக்கு என்ன நஷ்டம் என்றால் இவர் என்ன பதிலைச் சொல்லியிருப்பார்?

ராஜா, அய்லய்யா போன்றோர் வரும் ஆண்டே இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்றவுடன் இந்திரேசன், 'ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றால் இடங்களை அதிகப்படுத்தமுடியாது, எனவே இட ஒதுக்கீடு சாத்தியமல்ல' என்றார். 'எதற்கு அதிகப்படுத்தவேண்டும்? இருக்கும் இடங்களில் இட ஒதுக்கீடை வழங்க வேண்டியதுதானே' என்று அய்லய்யா கேட்டதும் இந்திரேசன் முகம் சிவக்க, அது 'மாணவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறுவதாகும். அது மிகப்பெரிய ஃப்ராட்' என்றார்.

நேற்று, இந்திரேசன், குர்ச்சரன் தாஸ், அய்லய்யா, சந்திர பன் பிரசாத் கலந்துகொண்ட Big Fight நிகழ்ச்சி என்.டி.டி.வியில் நடைபெற்றது. இவர்கள் நால்வருமே நன்கு அறியப்பட்டவர்கள். பத்திரிகையில் பத்தி எழுதுபவர்கள். புத்தகங்கள் எழுதியுள்ளவர்கள். தனிப்பட்ட முறையில் நான் ஒவ்வொருவரையும் மதிக்கிறேன். ஆனால் இட ஒதுக்கீட்டைப் பற்றிய பார்வையில், அல்லது தங்களது கருத்துகளை எடுத்துச் சொல்வதில் நால்வருமே நிறைய தவறுகள் செய்தனர்.

இந்திரேசனைப் பொருத்தமட்டில் இட ஒதுக்கீடு என்பது ‘பாவச்செயல்'. மெரிட் என்பதை ஒழித்துக்கட்டும் செய்கை. பிற்படுத்தப்பட்டோர் இழிநிலைக்கு அதே வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமே காரணம். '2000 ஆண்டு என்றெல்லாம் யாரும் பேசக்கூடாது. இன்றைய நிலையைப் பேசுவோம்' என்றே சொல்லிக்கொண்டிருந்தார். இது வைதீக, கன்சர்வேடிவ் மனநிலை.

குர்ச்சரன் தாஸ் கருத்தில் சந்தை எல்லாவற்றையும் சரிசெய்துவிடும். இட ஒதுக்கீடு கூடவே கூடாது. நிறைய கல்லுரிகளை தனியார் திறந்தால், அதுவும் அந்நிய நாட்டுப் பல்கலைக் கழகங்களான ஸ்டான்ஃபோர்ட் போன்றவை திறந்தால் எல்லாப் பிரச்னைகளும் சரியாகிவிடும். அனைத்து குடியைச் சேர்ந்தவர்களும் எந்தப் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் சேர்ந்து படிக்க வழி இருக்கவேண்டும் (கல்வி வவுச்சர் பற்றிப் பேசுகிறார்). ஆனால் எல்லாக் கல்லுரிகளுக்கும் - முக்கியமாக தனியார் கல்லூரிகளுக்கு - அவர்கள் விரும்பும் அளவுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை வேண்டும். அர்ஜுன் சிங், வி.பி.சிங்கைப் போல இந்திய அரசியல் வானிலிருந்து காணாமல் போய்விடுவார் என்று சாபம் விட்டார். இது லிபர்ட்டேரியன், நியோகான் மனநிலை.

அய்லய்யா, இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர். ஆனால் இன்றைய கல்வி நிறுவன அமைப்புகளின்மீது, தனியார்துறைமீது கடும் வெறுப்பை வைத்திருக்கும் இடதுசாரி மனோபாவம். ஐஐடி பற்றிப் பேசும்போது 'so called centres of excellence' என்றார். இவை உருப்படியாக ஒன்றும் சாதித்ததில்லை என்றார். அந்த மனநிலை இருந்தால் 'அங்கு உனக்கு ஏன் ரிசர்வேஷன் வேண்டும், நீயே போய் OBC-க்களுக்காக ஒரு சூப்பர் செண்டர் ஃபார் எக்சலன்ஸை உருவாக்கிக்கொள்' என்று பதில் வரும். அதேபோல தனியார்துறை OBC-க்களுக்கு என்ன உருப்படியாகச் செய்துள்ளது என்று சொல்லி அதனைச் சாடினார். இட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்கள், தங்களுக்கென நிறைய நண்பர்களைப் பெறவேண்டிய தருணம் இது. இந்த நண்பர்கள் தனியார் துறையிலிருந்தும், உயர்கல்வித் துறையிலிருந்தும் வரவேண்டும். எனவே அவர்களது பின்னணியையே கேள்விகேட்டு, வெறுப்பேற்றுவதற்கு இது உசிதமான நேரம் அல்ல.

சந்திர பன் பிரசாத், யாருக்கு நண்பர், யாருக்கு எதிரி என்றே புரியவில்லை. OBC இட ஒதுக்கீடு வேண்டும் என்றவர், அதே நேரம், இட ஒதுக்கீட்டின் காரணமாக, OBC கிரீமி லேயர் லாபி ஒன்று உருவானால் அதனால் நாட்டுக்கே கஷ்டம் என்றார். இவர் அதிகம் பேசவில்லை. அய்லய்யாவை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. அதே நேரம் இந்திரேசன் போன்றோரின் கருத்தையும் தீவிரமாக எதிர்க்கவில்லை.

***

இந்திரேசன் போன்றோர் என்ன சொல்கிறார்கள்? இட ஒதுக்கீடு என்று எதுவும் இருக்கக்கூடாது. அனைவருக்கும் சம அளவிலான கல்வியை சிறுவயதிலிருந்தே கொடுத்தால் போதுமானது. சமதளத் தரையிலிருந்து அனைவரும் போராடி, அதில் சிறந்தவர் (மெரிடோரியஸ்) வெற்றிபெறட்டும். இட ஒதுக்கீடு என்பது வேண்டுமென்றால் அது பொருளாதார ரீதியிலாக மட்டுமே இருக்கவேண்டும்.

மெரிட் என்பதன்மேல் எனக்கு முற்றிலும் நம்பிக்கை போய்விட்டது. பல செயல்களைச் செய்ய உன்னதம், உச்சம் என்ற நிலை தேவையே இல்லை. யாரைவேண்டுமானாலும் வேலைக்குச் சேர்த்து, சரியான, மேலோட்டமான பயிற்சி அளித்தால் போதும். வெகு சில வேலைகளுக்கு மட்டுமே (என் கணிப்பில் 5% வேலைகள்கூட இதற்குள் வராது) சிறந்த மூளைத்திறன் தேவை. அதாவது 100-க்கு 95 வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

இன்று மக்கள் சில இடங்களுக்கு, துறைகளுக்குச் சென்று மோதுகிறார்கள். அதனால் அங்கு போட்டி அதிகரிக்கிறது. இருக்கும் 4 இடங்களுக்கு 1 லட்சம் பேர் போட்டியிட்டால், ஏதோ ஒரு முறையில் 99,996 பேரைக் கழித்துக் கட்டவேண்டும். அதற்கு 'மெரிட்' எனப்படும் முறை ஒன்று என்றால் (உண்மையில் இது மெரிட்டே கிடையாது. எதோ ஒரு நுழைவுத்தேர்வு முறை) இட ஒதுக்கீடு மற்றொரு முறை. சீட்டு குலுக்கிப்போட்டு நான்கு பேரைத் தேர்வு செய்வது மற்றொரு முறையாகக்கூட இருக்கலாம். அல்லது யானையைக் கூப்பிட்டு யாருக்கெல்லாம் அது மாலை போடுகிறதோ அதுவாகக்கூட இருக்கலாம். வேலைகள் என்று வரும்போது இதில் எதைவேண்டுமானாலும் செய்யலாம். மெரிட்தான் தேவை என்றில்லை.

***

ஆனால் படிப்பு என்பது வேறு விஷயம். நாம்தான் தேவையின்றி கல்வி வாய்ப்புகளைக் குறுக்கி வைத்துள்ளோம். ஐஐடி என்றால் 5தான் இருக்கவேண்டும் (இப்போது 7) என்று யார் சொன்னது? 50, 100 என்று வேண்டிய அளவுக்கு ஐஐடிக்கள் இருக்கலாமே? அதனால் அதன் பிராண்ட் போய்விடும் என்றெல்லாம் சொல்வது கடும் அபத்தம். பார்ப்பனீயத்தின் ஒரு கூறே, எலீட் (elite) என்ற ஒரு உயர்மட்டக் குழுவை உருவாக்கி அதில் மிகக் குறைவான சிலரை மட்டும் அனுமதித்து அவர்களுக்கு மட்டும் தனிச் சிறப்புகளைத் தருவது. மத்திய அரசு நினைத்தால் ஆண்டுக்கு நான்கு புதிய ஐஐடிக்களைத் திறக்கமுடியும். அதற்கு செலவாகும். ஆகிவிட்டுப் போகட்டுமே? அதன்பின் ஐஐடியில் இட ஒதுக்கீடு என்பதைப் பெரிய விஷயமாக யாரும் பேசமாட்டார்கள்.

அதேபோலத்தான் மருத்துவக் கல்லுரிகளும். இன்று தெருவுக்குத் தெரு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதனால் ஒரு கட்டத்துக்குமேல் யாரும் பொறியியல் இடங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இந்தக் கல்லூரிகளை நெறிப்படுத்தவேண்டும் என்பது வேறு விஷயம். கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தால்தான் வாழ்க்கை என்பதில்லை. 10-15 தனியார் பொறியியல் கல்லூரிகள் இன்று முன்னுக்கு வந்துவிட்டன. நாளை, மேலும் 20-30 இப்படியாகும். அதன்பின் ஒரு கட்டத்தில் பொறியியல் நுழைவுத்தேர்வு அல்லது கவுன்செலிங்மூலம் இடம் தருதல் ஆகியவை போய்விடும். இன்னும் 15 வருடத்தின் பொறியியலுக்கு காமன் கவுன்செலிங் இருக்காது. அந்தந்தக் கல்லுரிகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து, அவர்கள் எடுத்துக்கொண்டால், சேர்ந்துகொள்ளலாம். அவ்வளவுதான். இட ஒதுக்கீடு என்ற பேச்சும் காணாமல் போய்விடும்.

ஆனால் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 3,000 இடங்கள் மட்டுமே உள்ளன. நமக்குத் தேவை 30,000 இடங்கள். அல்லது 60,000 இடங்கள். அப்படி ஆகிவிட்டால் இட ஒதுக்கீட்டைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? யாருக்கு மருத்துவம் தேவையோ அவர்கள் படித்துவிட்டுப் போகிறார்கள். அதன்பின் அந்தந்தக் கல்லூரிகள் தங்களுக்கென ஒரு தரத்தை வைத்துக்கொண்டு யாரை அனுமதிப்பது, கூடாது என்று அமெரிக்க பாணியில் முடிவுசெய்துவிட்டுப் போவார்கள்.

***

கல்வி நிலையங்களை அமைப்பதில் நிறைய தாராளமயக் கொள்கைகளைக் கொண்டுவரவேண்டும். புதிய கல்விக்கூடங்கள் உருவாகி நிறைய இடங்களை ஏற்படுத்துவதற்கு மேலும் 20 வருடங்கள் ஆகலாம். எனவே, அது நடந்தேறும்வரையில் இருக்கும் உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு தேவை.

இட ஒதுக்கீட்டினால் தகுதியுள்ள பல மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர். ஆனால் குறைந்த இடங்கள் இருக்கும் இடத்தில், மெரிட் கூடத்தான் பல தகுதியுள்ள மாணவர்களை வஞ்சிக்கின்றது. எனவே எப்படியிருந்தாலும் பல தகுதியுள்ள மாணவர்களுக்கு இன்று படிக்க சரியான இடம் கிடைப்பதில்லை. இது அனைத்து சமூக மக்களுக்கும் பொருந்தும். இதற்கான ஒரே தீர்வு, மேற்கொண்டு பல கல்வி நிலையங்களை உருவாக்குவதே.

34 comments:

  1. நல்ல கட்டுரை மிகவும் பொதுவாக இந்த பிரச்சினையை அனுகியுள்ளீர்கள், கல்லூரியின் எண்ணிக்கைகள் கூடும்போது தானாகவே இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற உங்கள் கருத்து மிகவும் சரி. அரசும் புதிய கல்லூரிகளை துவங்க முடிவெடுத்திருப்பதும் நல்ல தொடக்கம், நமது நாட்டில் முதலீடு என்பது மனித சக்தியின் மீதுதான், அதனால் இதனை செலவு என்று கொள்ளாமல் மூதலீடு எனகொள்ள வேண்டும்.

    பின்னாளில் இந்த முதலீடு இன்றைய அமெரிக்கா யூதர்கள் கையில் என்பது போல இந்தியர்கள் கையில் நிறைய தேசங்கள் இருக்கும்.

    ReplyDelete
  2. //கல்வி நிலையங்களை அமைப்பதில் நிறைய தாராளமயக் கொள்கைகளைக் கொண்டுவரவேண்டும் //

    இன்றைய சூழ்நிலையில் அரசியல்வாதிகள் பினாமிகள் மூலம் தங்களிடம் உள்ள கணக்கிற்கு வராத பணத்தை பத்திரமான முறையில் மூலதனமாக்க இது பயன்படுகிறது. ஆகையால் இது மேற்கொண்டு வசதி உள்ளவர்களுக்கு மட்டும் பயன்படக்கூடிய வியாபாரத் திட்டமாகும் அபாயம் உள்ளது. இன்றைய தனியார் கல்வி நிறுவனங்களிடையே Deemed University அங்கீகாரம் பெற பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், வசூலிக்கப்படும் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் முழுவதையும் அவர்களே பயன்படுத்திக் கொள்ள முடியும். அதன் மதிப்பு பலகோடிகள் பெறும் என்று கூறுகிறார்கள். அதனால் இந்த அங்கீகாரம் பெறுவதற்கே கோடிகளில் செலவழிக்க பல தனியார் தொழில் நுட்பக்கழகங்கள் தயாராக உள்ளன.

    எப்படிப் பார்த்தாலும் இந்நாட்டில் மக்களின் அறியாமையும் இயலாமையையும் பயன்படுத்திக்கொள்ளும் விதமாகவே சட்டதிட்டங்கள் வகுக்கப்படுகின்றனவே அன்றி உண்மையில் தகுதி அடிப்படையில் யாவருக்கும் பயன்படும் விதமாக உருவாகவில்லை என்பதே வருத்தற்குரிய உண்மை.

    ReplyDelete
  3. இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் பேச நிறைய அறிவாளிகள் முன் வருவதில்லை போலும். ஐலையா போன்றவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் போது இட ஒதுக்கீட்டுக்கு எதிரிகளே தேவையில்லை என்பது தெளிவாகின்றது.

    நானும் அந்த பிக் ஃபைட் நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஐலையாவின் உளரல்களுக்கு ஈடு இணையில்லை.


    அது சரி, சந்திரபன் பிரசாத் ஒரு தலைசிறந்த தலித் எழுத்தாளர், ஐலையா போல் pseudo intellectual அல்ல. அவர் செய்த தவறு என்ன என்பதை நீங்கள் சுட்டவில்லையே ?

    ReplyDelete
  4. கிரீமி லேயரை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கியது பற்றி உங்கள் கருத்து? அதை விலக்காதிருந்தால் அந்த லேயரினரே இட ஒதுக்கீட்டின் முழு பயனையும் எடுத்து செல்வர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. வஜ்ரா: சந்திரபன் பிரசாத்தின் தவறுகள் இரண்டு. (1) அவர் அதிகம் பேசாமல் இருந்தது. (2) அவர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவா, எதிர்ப்பா என்று தெளிவாக விளக்காதது.

    ReplyDelete
  6. டோண்டு: கிரீமி லேயர் என்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல.

    இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையிலா, அல்லது சமூக அடிப்படையிலா? கிரீமி லேயர் கொள்கை என்பது இரண்டு வகையிலும் பின்தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு என்கிறது. இது முற்றிலும் நியாயமான இட ஒதுக்கீடு ஆகாது.

    கிரீமி லேயரின் இன்றைய definition மாறவேண்டும். இன்று உள்ள விளக்கம் பிறபடுத்தப்பட்டோர் பலருக்கும் எதிரானதே.

    இதைப்பற்றிய என் கருத்துகளை நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

    ReplyDelete
  7. Mr.Badri
    Please read judgments in Indra Sawhney cases to know about creamy layer issue.
    கிரீமி லேயர் கொள்கை என்பது இரண்டு வகையிலும் பின்தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு என்கிறது. இது முற்றிலும் நியாயமான இட ஒதுக்கீடு ஆகாது.

    கிரீமி லேயரின் இன்றைய definition மாறவேண்டும். இன்று உள்ள விளக்கம் பிறபடுத்தப்பட்டோர் பலருக்கும் எதிரானதே.
    So you want sons and daughters of big landlords,businessmen earning incrores, doctors minting money from hospitals, IAS and IPS officers and politcians to benefit from reservation in the name of socially and educationally backward classes. :(

    ReplyDelete
  8. தனிமனிதர்களின் பார்வையில் அணுகப் பட்ட கட்டுரையாகத் தோன்றுகிறது. திறமையுள்ள ஒருவருக்கு மருத்துவ சீட்டொன்று கிடைக்காது போவது அவரைக் காட்டிலும் வருங்கால சமூகத்திற்கு இழப்புதான்.

    இங்கே அனைவரும் முன்னேற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. இதில் எதிராக தீர்ப்பளித்த ஐவரில் ஒருவர் சாதியற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என சொல்லிக் கொண்டு சாதியடிப்படையில் இன்னும் எத்தனை காலத்திற்கு இட ஒதுக்கீட்டை வைத்துக் கொண்டிருக்க போகிறோம் எனும் தொனியில் எழுப்பிய கேள்விகள் கருதத் தக்கவை.

    பொருளுக்கு அப்பாற்பட்ட விடயங்களை பொருளுடன் தொடர்பு படுத்துமாறு தங்களது வாதங்கள் அமைந்துள்ளன.

    //
    இட ஒதுக்கீட்டினால் தகுதியுள்ள பல மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர். ஆனால் குறைந்த இடங்கள் இருக்கும் இடத்தில், மெரிட் கூடத்தான் பல தகுதியுள்ள மாணவர்களை வஞ்சிக்கின்றது. எனவே எப்படியிருந்தாலும் பல தகுதியுள்ள மாணவர்களுக்கு இன்று படிக்க சரியான இடம் கிடைப்பதில்லை. இது அனைத்து சமூக மக்களுக்கும் பொருந்தும். இதற்கான ஒரே தீர்வு, மேற்கொண்டு பல கல்வி நிலையங்களை உருவாக்குவதே.//

    இட ஒதுக்கீட்டால் திறமையுள்ள மாணாக்கர் நிச்சயம் பாதிக்கப் படுகிறார்கள். இதனால் இவர்கள் மூலம் வருங்காலத்தில் சமூகம் அடையும் பயன்தான் தடைப்படுகிறது. இங்கே மெரிட்டுக்கள் பிறப்பிற்கு ஏற்றபடி தீர்மானிக்கப்படுகின்றன.

    ஆனால் சுத்த மெரிட் எது மெரிட் என மொழியப்பட்டதோ அது இல்லாத மாணவரை தான் வெளியேற்றுகிறது. பிறப்பிற்கு அங்கே வேலையில்லை. நேர்முகத் தேர்வுகள் பெரும்பாலும் தேவைப் போக மீதியை தள்ளிவிடும் முறை என்பது தங்கள் கருத்தாக இருப்பின் தனியே அதனை விளக்கவும்.

    இடஒதுக்கீட்டொடு தொடர்பு படுத்தப்வேண்டாம்.

    இதில் நன்கு மொழியப்பெற்ற முரண்பாட்டினையே காண்கிறேன்.

    குறைந்த/ அதிக இடங்கள் என்பதை காட்டிலும் சமுதாயத்தின் தேவைக்கேற்ப இடங்களில் மாற்றம் காணும் முறை வர வேண்டும்.

    உதாரணத்திற்கு மருத்துவர்கள் அதிகம் தேவைப்படுகினறனர். அதற்கு வழியில்லை. மென்பொருள் துறைக்கு இவ்வளவு பேர் உற்பத்தி செய்யப்படுவது அவசியமா என ஆழ ஆராய வேண்டும்.

    தேவையை தாண்டி உற்பத்தி செய்து விட்டு பின்னர் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காது பல வேலைகளிலும் போய் முடியும் அவலமே நிலவுகிறது.

    ReplyDelete
  9. //
    வஜ்ரா: சந்திரபன் பிரசாத்தின் தவறுகள் இரண்டு. (1) அவர் அதிகம் பேசாமல் இருந்தது. (2) அவர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவா, எதிர்ப்பா என்று தெளிவாக விளக்காதது.
    //

    நன்றி,

    சந்திரபன் பிரசாத் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர். முக்கியமாக தலித் இடஒதுக்கீட்டை அவர் ஆதரிப்பவர். ஓ.பி.சிக்கள் தான் தலித்துகளின் பெரிய எதிரி என்பதில் திண்ணமாக இருப்பவர். ஆகவே ஓ.பி.சி இடஒதுக்கீட்டுக்கு அவர் equivocate செய்ததில் அதிசயமில்லை.

    ReplyDelete
  10. http://payanangal.blogspot.com/2008/04/27.html

    சில கேள்விகள்

    ”க்ரீமி லேயர்” என்பது வருமானத்தை வைத்து வரையருக்கப்பட்டால்

    1. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த வருமானத்தை மாற்ற வேண்டும் ?

    2. அனைத்து இடங்களிலும் ஒரே வருமானம் தானா. (உதாரணமாக பள்ளி ஆசிரியராக சேர 2 லட்சம் மேல் வருட வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ளவர்கள் ”க்ரீமி லேயர்” என்றால் IASக்கும் அதே 2 லட்சம் தானா ?

    ReplyDelete
  11. இந்த கீரீமி லேயர் என்பதை தவிர சில சாதிகளை இட ஒதுக்கீட்டு பட்டியலைவிட்டு எடுத்துவிட வேண்டும். அரசு ஊழியர்கள்,
    மாணவர்களின் எந்த சாதியினர்
    எத்தனை சதவீதம் என்பதை
    கணக்கெடுத்தால் எந்த சாதியினர்
    எந்த அளவில் பயன் பெற்றுள்ளார்கள்
    என்பது தெரியும்.அதன் அடிப்படையில்
    பிற்பட்ட சாதிகள் பட்டியலை தயாரிக்க
    வேண்டும்.
    ”ஓ.பி.சிக்கள் தான் தலித்துகளின் பெரிய எதிரி என்பதில் திண்ணமாக இருப்பவர். ”
    இது உண்மை. அதனால்தான் அவரை பலருக்கும் பிடிப்பதில்லை. பார்பனர்களை மட்டும் திட்டி வயிறு வளர்க்கும் ‘முற்போக்கு'களுக்கு
    அவர் பரவாயில்லை.

    ”க்ரீமி லேயர்” என்பது வருமானத்தை வைத்து வரையருக்கப்பட்டால்

    1. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த வருமானத்தை மாற்ற வேண்டும் ?
    Mr.Bruno for how long you will
    try to confuse others on this as if the highest court of the country has not addressed this issue.It is a question
    of the position/job of the person
    not just income.If you are a bank
    officer or Class I officer or doctor or lawyer, you/your children
    should not benefit from reservation. The Mandal judgment
    lays down some norms on this exclusion.

    ReplyDelete
  12. //
    இந்த கீரீமி லேயர் என்பதை தவிர சில சாதிகளை இட ஒதுக்கீட்டு பட்டியலைவிட்டு எடுத்துவிட வேண்டும். அரசு ஊழியர்கள்,
    மாணவர்களின் எந்த சாதியினர்
    எத்தனை சதவீதம் என்பதை
    கணக்கெடுத்தால் எந்த சாதியினர்
    எந்த அளவில் பயன் பெற்றுள்ளார்கள்
    என்பது தெரியும்.அதன் அடிப்படையில்
    பிற்பட்ட சாதிகள் பட்டியலை தயாரிக்க
    வேண்டும்.
    //

    சாதியினரின் பட்டியல் தயாரிப்பதில் தான் பெரும் சிக்கல், அதில் பணம் விளையாடும்.


    அத்தகயதொரு பட்டியல் இல்லாமல் கோட்டா கொடுத்தால் அது வோட்டு பொறுக்கிகளுக்குத்தான் சாதகமானதாக இருக்கும்.

    ReplyDelete
  13. பத்ரி, இந்த இடுகையில் அலசப்பட்ட செய்திகளுடன் நீங்கள் சொல்லிய கருத்துக்கள் பலவற்றுடன் உடன்படுகிறேன். கிரீமீலேயர் பற்றிய உங்கள் கருத்துக்களையும் விரைவில் எதிர்பார்க்கிறேன். முன்பொரு முறை இலேசாகத் தொட்டிருந்தீர்கள். இப்பொழுது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு இந்த உரையாடலை முன்னுக்குக் கொண்டு வரும். இதுவே உச்சநீதி மன்றம் திட்டமிட்டு ஆடிய ஆட்டம் போல்தான் தோன்றுகிறது.

    கிரீமீ லேயர் என்ற சொல்லையே பிற்படுத்தப் பட்டவர்களில் முன்னேறியவர்களை இழிவு படுத்தும் எண்ணத்தில்தான் இடப் பங்கீட்டுக்கு எதிரானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் சாதியடிப்படையிலான இடப்பங்கீட்டின் முழு ஆதரவாளர்கள் கூட மிக எச்சரிக்கையுடன் இச்சொல்லைப் பாவிக்க வேண்டியிருக்கிறது.

    இடப்பங்கீட்டுக் கொள்கையின் மூலம் முன்னேறியவர்கள் அவர்களை விடப் பின்தங்கியிருக்கும் மற்ற பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கொஞ்சம் வழிவிடுங்கள் என்று கேட்டுக் கொள்ளக் கூட வழியில்லாமல் இருக்கிறது. இருப்பினும் உண்மையைச் சொல்வதென்றால் தமிழ்நாடு போன்ற இடப்பங்கீட்டினால் முன்னேறிய மாநிலங்களில் மொத்த இட ஒதுக்கீட்டில் கை வைக்காமல் உட்பங்கீட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாமல் முறையாக புளளிவிவரங்கள் தொகுக்கப் பட்டு அதன்பின் பிறபடுத்தப் பட்ட சாதியினருள் எல்லோரையும் முன்னேற்றும் நோக்கத்துடன் உட்பங்கீடு செயல்படுத்தப் பட வேண்டும். இதைச் செய்வதற்கு தமிழகக் கட்சிகள் முன்வரமாட்டா. பாட்டாளி மக்கள் கட்சி பிறந்த வரலாறு போல் வேறு ஒரு கட்சி உருவாகும் போதுதான் இது நடக்கும். அதற்கு சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

    மேற்கண்ட என்னுடைய கருத்தைச் சொல்கையில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். மைய அரசுக் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட சாதியினரில் கிரீமீலேயர் கண்டிப்பாக வெளியேற்றப்படக்கூடாது என்று நினைக்கிறேன். அங்கு சாதியடிப்படையிலான இடப்பங்கீட்டுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. முதல் நோக்கம் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட சாதியினரின் முன்னேற்றம். அதைவிட முக்கியமானது இரண்டாம் நோக்கம். முதல் நோக்கம் ஒழுங்காக மற்றும் நேர்மையாக செயல்படுத்தப் படவேண்டுமானால் அவசியமானது இரண்டாவது நோக்கம். அது பன்மைத்தன்மையைக் கொண்டு வருவது. மைய அரசு நிறுவனங்களில் பன்மைத்தன்மை இல்லாமையால், சட்டப்படியான இடப்பங்கீட்டைக் கூட நேர்மையாக செயல்படுததுவதை முழுக்க விரவியிருக்கும் மேல்சாதி ஆதிக்கம் தடுக்கிறது. மேலும் மேல்தட்டுச் சாதியினரின் அறிவுத்திமிருடன் மோதுவதற்கு அசாத்திய தன்னம்பிக்கை வேண்டும். அத்தன்னம்பிக்கை பிற்படுத்தப் பட்டவர்களில் கிரீமீ லேயருக்கு உண்டு. பன்மைத்தன்மை வந்தபின்பு முந்தைய பத்தியில் சொன்னது போல் இங்கும் பிற்படுத்தப் பட்டவர்களில் உட்பங்கீட்டைக் கொண்டுவரலாம்.

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  14. "இடப்பங்கீட்டுக் கொள்கையின் மூலம் முன்னேறியவர்கள் அவர்களை விடப் பின்தங்கியிருக்கும் மற்ற பிற்படுத்தப் பட்டவர்களுக்கு கொஞ்சம் வழிவிடுங்கள் என்று கேட்டுக் கொள்ளக் கூட வழியில்லாமல் இருக்கிறது. இருப்பினும் உண்மையைச் சொல்வதென்றால் தமிழ்நாடு போன்ற இடப்பங்கீட்டினால் முன்னேறிய மாநிலங்களில் மொத்த இட ஒதுக்கீட்டில் கை வைக்காமல் உட்பங்கீட்டில் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாமல் முறையாக புளளிவிவரங்கள் தொகுக்கப் பட்டு அதன்பின் பிறபடுத்தப் பட்ட சாதியினருள் எல்லோரையும் முன்னேற்றும் நோக்கத்துடன் உட்பங்கீடு செயல்படுத்தப் பட வேண்டும். இதைச் செய்வதற்கு தமிழகக் கட்சிகள் முன்வரமாட்டா. பாட்டாளி மக்கள் கட்சி பிறந்த வரலாறு போல் வேறு ஒரு கட்சி உருவாகும் போதுதான் இது நடக்கும். அதற்கு சில காலம் பொறுத்திருக்க வேண்டும்."

    சில காலம் என்றால் உங்கள் அகராதியில் 100 ஆண்டுகள்
    என்று அர்த்தமா?

    ReplyDelete
  15. உணர்ச்சிவசப்படாமல் எழுதியிருக்கிறீர்கள். அதற்காக நன்றி. சில விஷயங்களில் சமூகம் காட்டும் உணர்ச்சித் தீவிரங்கள் விவாதங்களுக்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடுகின்றன. வலைச்சமூகமும் அதற்கு விலக்கு அல்ல.

    கல்வி பற்றிப் பேசும் போது இரண்டு விஷயங்கள் சிந்திக்கப்பட வேண்டும்.1. நீங்கள் சொல்வது போல இடங்களின் எண்ணிக்கை. ஆனால் அதிக கல்லூரிகளை உருவாக்க அதிக நிதி தேவை. அரசு தன் பணத்திலிருந்து செலவு அல்லது முதலீடு செய்யலாம் எனச் சொல்வது எளிது. ஆனால் அடிப்படைக் கல்விக்கான வசதிகளே அதிகம் இல்லாத நம் தேசத்தில் ஒரு அரசு ஆரம்பக் கல்விக்குச் செலவிடுவதற்கு முன்னுரிமை தர வேண்டுமா அல்லது உயரகல்விககா?

    அரசால் அதிகம் செலவிட முடியாத நிலையில் தனியாருக்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டியதாகிறது. தனியார், சேவையைவிட லாபத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என்பது உலகறிந்தது. தரமான சேவை கிடைக்கும், அது அவர்களுக்கு லாபகரமாக இருந்தால்.

    உயர்கல்வியில் தனியாரை அனுமதிப்பது, பெருந் தொகை கொடுத்து உய்ர்கல்வி கற்க வேண்டிய நிலையை உருவாக்குகிறது.

    இதைத்தான் இன்று நாம் பார்க்கிறோம்.

    எனவே ஒரு மாணவன் உயர்கல்வி பெறுவதை சாதி மட்டுமல்ல, அவனது பொருளாதார நிலையும் தீர்மானிக்கிறது. ஆண்டுதோறும் +2 தேர்வு முடிவுகள் வெளியான சில நாள்களில் பொரியியற்கல்லுரியில் இடம் கிடைத்தும் கல்விக் கட்டணம் கட்ட இயலாததால் கல்வியைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படும் பூக்காரியின் மகன், முடிதிருத்துபவரின் மகள், நிலமற்ற விவசாயக் கூலியின் குழந்தைகள் பற்றிய கதைகளை நாம் நாளிதழ்களில் படிக்கிறோம்.அதாவது இன்று ஒருவருக்கு அவரது சாதியினால் மட்டுமல்ல, அவரது பொருளாதார நிலையினாலும் கல்வி மறுக்கப்படும் அபாயம் இருக்கிறது

    வெறும் சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு இதற்குத் தீர்வு சொல்வது இல்லை.

    எனவேதான் க்ரீமி லேயரை விலகிநிறக்ச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

    2.நீங்கள் சொல்வது போல பல வேலைகளுக்கு கல்வியை விட பயிற்சி அவசியம். ஆனால் நம் கல்வித் திட்டங்களில் அதற்கு இடமில்லை. எம்.ஏ படித்துவிட்டு ஆங்கில நாளிதழில் வேலைக்குச் சேருபவர்களில், இலக்கணப் பிழையற்ற ஆங்கிலம் எழுத இயலாதிருப்பதை நீங்களே உங்களது வேறு ஒரு பதிவில் சுட்டியிருக்கிறீர்கள்.தமிழ் எழுத்தாளர்களில் பலருக்கு சரியான தமிழ் தெரியாது என்பதை நீங்கள் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் அறிந்திருப்பீர்கள்.
    எனவே தேவை எல்லோருக்கும் கல்வி என்பது மட்டுமல்ல. எல்லோருக்கும் தரமான கல்வி.

    ஆதலால், எண்ணிக்கைகளைப் பெருக்குவது மட்டும் போதாது.

    எண்ணிக்கையைப் பெருக்க வியாபாரிகளிடம் கல்லூரிகளை ஒப்படைப்பதைவிட, வேலைகளுக்கு பட்டப்படிப்பு அவசியமில்லை, திறன் தான் முக்கியம் (delinking the degrees from the job) என்ற நிலையை உருவாக்குவது அவசியம்.

    க்ரீமி லேயர் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டு தொடர்ந்து பேசுகிறேன்
    மாலன்

    ReplyDelete
  16. //Mr.Bruno for how long you will
    try to confuse others on this as if the highest court of the country has not addressed this issue.//
    அப்படி கூறியிருந்தால் என் கேள்விகளுக்கு நீங்களாவது பதில் கூறுங்களேன்

    //It is a question of the position/job of the person
    not just income.//
    எப்படி ஐயா 2 லட்சம் மட்டுமே உள்ள ஒருவரால் 6 லட்சம் கட்டணம் செலுத்த முடியும்.

    6 லட்சம் கல்விக்கட்டணம் உள்ள ஒரு நிறுவனத்திற்கு 2 லட்சம் எப்படி க்ரீமி ??

    //If you are a bank
    officer or Class I officer or doctor or lawyer, you/your children
    should not benefit from reservation.//
    ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவர் என்றால் ???

    //The Mandal judgment
    lays down some norms on this exclusion.//

    சரி, ஆனால் என் கேள்விகளுக்கு விடை என்ன. சொல்லுங்கள் சார்

    ReplyDelete
  17. globally wherever there has been a past history of class conflict with ethnic denigration, governments have always tried to redress the issue with some kind of affirmative action....just to pull the suppressed people onto their legs and get them moving in pace with the other classes of people who had enjoyed the benefits of wider opportunities in the past. and world over such affirmative action is extended for a few generations, so that there is enough time for some percolation of effects. Hispanics in the US, Aborigines in Australia, Maoris in NZ, the trend is the same. unless we understand this trend from a panhuman perspective, we run the risk of getting into narrow personal prejudices:(

    ReplyDelete
  18. Dr.Shalini
    Caste based reservation in India
    cannot be equated with the examples
    you have cited.In USA affirmative
    action is for women as well where as in India, it is based soley
    on caste.Many of the so called backward castes in India are not
    backward. OBCS dominate politics,industry
    in Tamil Nadu.It is a pity that
    you support reservation for these
    powerful castes who have an insatiable appetite for power.

    "எப்படி ஐயா 2 லட்சம் மட்டுமே உள்ள ஒருவரால் 6 லட்சம் கட்டணம் செலுத்த முடியும். "

    Hi Bruno, if you earn 20,000 a month dont you still get housing
    loand or vechile loan for assets
    worth more than 2,40,000. Many students get loans for doing PG courses. There are many in 'forward' castes who earn
    less than 10,000 p.m. Perhaps
    you want only creorepathis and
    those earn in six figures per year to benefit from OBC reservation
    as only they can afford to pay
    6 lakhs per year as fees.Although you dont say it openly, you speak
    only for the rich and powerful OBCS.

    ReplyDelete
  19. சினம் தனியுஙகள் அனானிமஸ், உலகம் உள்ள வரை இருப்போருக்கும் இல்லாருக்கும் இடையே ஆன இந்த வகுப்பு சண்டை இருந்துக்கொண்டே தான் இருக்கும்...வெறும் சினம் இதற்கு விடை ஆகாது. + affirmative actionsசின் குறிக்கோளே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு power ஏற்பட வேண்டும் என்பது தானே! power வந்ததை கண்டு நீங்கள் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீர்கள்! that only goes to show, at a deeper level this entire issue is about who is more powerful than whom...
    PS: it is not fair that you shadowbox 'anonymous'ly. you know me, it'll be nice if i know you too:)

    ReplyDelete
  20. My 2 cents are in
    ravisrinivas.blogspot.com

    My preliminary impression that the
    judgment is not going to be the final word as the pressure to
    not to exclude creamy layer can result in measures that go against the letter and spirit of the judgment. Post Indra Sawhney
    judgment such attempts were
    made in some states by fixing income levels so high for exclusion that Supreme Court
    struck them down.We might see
    another round of such exercises
    by increasing the limit to Rs 10
    lakhs per annum.Compare this with the per capita income of an Indian.

    I dont know why some persons are always,either confused about this
    creamy layer issue or creating
    confusion about it.Do they know
    that the idea of excluding advanced
    castes, not just creamy layer was
    advocated as early as 1970s by Sattanathan Commission and susequently endorsed by Ambasankar
    Commission.

    Of course more blog posts on this issue will appear in my blog in the
    coming weeks.

    ReplyDelete
  21. //சில காலம் என்றால் உங்கள் அகராதியில் 100 ஆண்டுகள் என்று அர்த்தமா?//

    அனானி, நீங்கள் யாரென்று ஊகிக்க முடிகிறதென்பதால் உங்கள் பாணியிலேயே முதலில் கோணலாக ஒரு பதில் - உங்கள் அகராதியில் சில காலம் என்பது 1000 ஆண்டுகளாக இருக்கும் பொழுது 100 ஆண்டுகள் தவறில்லையே :-)

    இருப்பினும் நேரடியான ஒரு பதிலும் தருகிறேன்.

    நான் ஏற்கனவே எழுதியிருந்ததை தமிழக இடப்பங்கீடு வரலாற்றை வைத்துப் படித்துப் பார்த்தால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும். முதன் முதலில் சட்டப் பூர்வமாக இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப் பட்டது 1921ல். பெரும்பான்மையான பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் மக்கள் தொகையின் அடிப்படையில் ஓரளவுக்கு நியாயமாக நடைமுறைப் படுத்தப்பட்டது 1951ல்தான்.

    பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ஏற்கனவே பயன்படுத்தி முன்னேறிய ஒரு சில சாதியினரே மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறார்கள் என்று வன்னியர் சங்கம் எதிர்த்து வன்முறைப் போராட்டம் நடத்தியதனால்தான் உட்பங்கீடு வந்தது. மிகவும் பிற்படுத்தப் பட்டோர் என்று இன்னொரு உட்பங்கீடு வந்தது 1989ல். அதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி பிறந்த வரலாறு என்று நான் குறிப்பிட்டேன்.

    இந்த மாற்றம் வந்தது 38 ஆண்டுகளில். பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) போராட்டம் நடத்தியி்ராவிட்டால் இந்த மாற்றம் வந்திருக்காது. அரசு (அரசியல் கட்சிகள்) வாக்கு வங்கிக்குப் பயந்துதான் இப்படியான முடிவுகளை எடுக்கும். சேதுசமுத்திரத்திட்டத்துக்கு ஆதரவாகத் தனியே ஒரு வாக்கு வங்கி இருந்தால் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னால் நமக்கென்னவென்று அரசு தன்னிச்சையாகக் கூடச் செயல்படும். கர்நாடகாவில் காவிரி நீரைத் தமிழகத்துக் கொடுக்கக் கூடாது என்பதற்குப் பெரிய வாக்கு வங்கி இருப்பதனால்தான் உச்சநீதி மன்றத்தை துச்சமாக மதிக்கிற போக்கும், அரசைக்கலைப்போம் என்றெல்லாம் மற்ற விசயங்களில எச்சரிக்கை விடும் உச்சநீதிமன்றம் வாய்மூடிக்கொண்டிருப்பதும் நடக்கிறது.

    பாட்டாளி மக்கள் கட்சி என்ற வாக்கு வங்கி உருவானது போல் மேலும் உட்பங்கீடு கேட்டு ஒரு வாக்கு வங்கி உருவானால் நிகழும் என்ற பொருளில் முன்பு குறிப்பிட்டேன்.

    ஆயிரம் ஆண்டுகளாக படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்ட சாதியடுக்கு முறையை மாற்றிக்கொண்டிருக்கும் இடப்பங்கீடும் படிப்படியாகத்தான் மாற்றங்களைக் கொண்டுவரும். அனானி இப்படி அவரசப்பட்டால் எப்படி :-)

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  22. //
    globally wherever there has been a past history of class conflict with ethnic denigration, governments have always tried to redress the issue with some kind of affirmative action....just to pull the suppressed people onto their legs and get them moving in pace with the other classes of people who had enjoyed the benefits of wider opportunities in the past. and world over such affirmative action is extended for a few generations, so that there is enough time for some percolation of effects. Hispanics in the US, Aborigines in Australia, Maoris in NZ, the trend is the same. unless we understand this trend from a panhuman perspective, we run the risk of getting into narrow personal prejudices:(
    //

    maoris in NZ, Aborigines in Australia, Hispanics and Native americans of the United states are people who were wiped out of the face of the earth, and doing affirmative action for the remaining is not going to affect the general performance.

    But, here in India, OBC's are demanding reservation just because they can. Simply justifying it by saying 2000 years Brahmins dominated is pure Bull crap. So, please stop comparing OBC reservation with affirmative action of western countries on native population. You are doing more harm to the OBC reservation cause than good by this nonsensical equivalence that you tend to draw.

    ReplyDelete
  23. //
    ஆயிரம் ஆண்டுகளாக படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்ட சாதியடுக்கு முறையை மாற்றிக்கொண்டிருக்கும் இடப்பங்கீடும் படிப்படியாகத்தான் மாற்றங்களைக் கொண்டுவரும். அனானி இப்படி அவரசப்பட்டால் எப்படி :-)
    //

    சரியாகச் சொன்னீர்கள்.

    ஆயிரம் ஆண்டுகள் படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்ட சாதியடுக்கு முறையை மாற்றி மறுபடியும் அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த முறை ஓ.பி.சிக்கள் மேலேயும், எஸ்.சி. எஸ்.டீ க்கள் நடுவிலும், முன்னாள் "மேல் சாதியினர்" அடி மட்டத்திலும் அமைகிறார்கள். இது புதிய சாதி முறை. இதை அமைத்து இன்னொரு 1000 ஆண்டுகள் நடத்துவோம். கேட்டால் 2000 ஆண்டுகள் பார்ப்பானன் மேலே இருந்தான் நாம் ஒரு 100 ஆண்டு மேலே இருந்தால் என்ன ? என்று விளக்குவோம்.

    நாடு விளங்கட்டும்.

    ReplyDelete
  24. க்ரீமி லேயருக்கும் இட ஒதுக்கீடு இருக்கட்டும்.

    ஏனென்றால்..

    உதாரணத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்வோம்.
    குடும்பத் தலைவருக்கு தான் கல்வி பயின்ற வயதில், ஏழ்மையான குடும்ப சூழ்நிலையாலும் மற்றும் தனது நெருங்கிய சமூகத்தில் சரியான கல்வி வழிகாட்டுதல் இல்லாததாலும் அவரால் உயர் கல்வி நிறுவனங்கள் பக்கம் நெருங்கியிருக்கக் கூட முடியாது விடாமல் தடுத்திருக்கும்.

    பிறகு, முட்டி மோதி அவர் ஒரு பட்டதாரியாகி ஒரு அரசு அதிகாரியாகவோ அல்லது ஒரு தனியார் நிறுவனத்திலோ பணி புரிந்து கொண்டிருக்கிறார்.
    இன்று வறுமை அகன்று விட்டது. அவர் இப்போது மிடில் கிளாஸ்.அதாவது க்ரீமி லேயர்.

    அவர் பயின்ற காலத்தில் அவரைப் பொறுத்தவரை ஒரு பட்டம் வாங்கினால் பெரிய விஷயம்.
    ஐஐடி, எஞ்சினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ் இவையெல்லாம் எட்டாக் கனி.
    அவருடைய பிள்ளைகளுக்கு தான் இவைகளுக்காக ஆசைப்பட, போட்டியிட, தயார் செய்ய ஏதுவான குடும்ப சூழ்நிலை இருக்கிறது.
    மிடில் கிளாஸ் என்ற குடும்ப சூழ்நிலை.

    ஆனால் அதே குடும்ப சூழ்நிலையே அவர்களின் ஆசைக்குத் தடையாக இருக்கிறது என்றால்? என்ன செய்வார்கள்?
    அவர்களுடைய குடும்பத்திற்கு இப்போதையத் தேவை ஒருவராவது நல்ல உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்து கல்வி கற்பது.

    இது போன்று இரண்டு தலைமுறைகளுக்காவது அந்தக் குடும்பத்திலிருப்பவர்களுக்கு பொருளாதார பின்புலம் + இட ஒதுக்கீடு இவ்விரண்டும் சேர்ந்து அமைந்தால்தான் அந்த குடும்பம் நிரந்தரமாக நிமிர்ந்து நிற்க முடியும்.எதிர்காலத்தில் என்றாவது அவர்களின் பொருளாதார சூழ்நிலை மோசமானாலும் மீண்டு வரும் பலம் கூடியவர்களாக இருப்பார்கள்.அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் பலமாக இருப்பார்கள்.

    அதனால் க்ரீமி லேயருக்கும் இட ஒதுக்கீடு இருக்கட்டும்.

    ReplyDelete
  25. கிரிமி லேய்ரை விலக்குவதால் ஒபிசிக்களில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்குதான் அந்த இடங்கள்
    கிடைக்கும்.மேல்மட்டத்தில் உள்ளவர்கள் பொதுவான இடங்களுக்கு
    போட்டியிடமுடியுமே.

    “மேலும் மேல்தட்டுச் சாதியினரின் அறிவுத்திமிருடன் மோதுவதற்கு அசாத்திய தன்னம்பிக்கை வேண்டும். அத்தன்னம்பிக்கை பிற்படுத்தப் பட்டவர்களில் கிரீமீ லேயருக்கு உண்டு. ”

    27% இடம் உங்களுக்கே என்று
    உறுதியாகிவிட்டபின் என்ன மோதல்
    வரும்.மேல்தட்டு சாதியினர்
    சிங்கம்,புலி, பிற்பட்டோர் மான்கள்
    என்று நினைக்கிறீர்களா :)

    ReplyDelete
  26. சுடலைமாடன், நீங்கள் சுட்டி தந்துள்ள கட்டுரை தமிழ்நாட்டில்
    இட ஒதுக்கீடு இனியும் தேவையில்லை
    என்று சொல்கிறது.இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?

    ReplyDelete
  27. நாகராசன் அவர்களே,

    நீங்கள் எண்ணுவது முற்றிலும் சரி அல்லது முற்றிலும் தவறு என்று சொல்லவே முடியாது. காரணம், நம்மிடம் ஆதாரப்பூர்வமான ஒரு புள்ளிவிபரமே இல்லை.

    மொத்தம் எத்தனை குடும்பத்தில் கஷ்டப்படுகிறார்கள், அதில் எத்தனை மேல் சாதி, எத்தனை மிடில்கிளாஸ் மேல் சாதி, எத்தனை பிற்படுத்தப்பட்ட சாதி, எத்தனை மிடில் கிளாஸ் பிற்படுத்தப்பட்ட சாதி, என்றெல்லாம் எந்த ஒரு விபரமும் தாங்களும், அல்லது தங்களைப் போல் இடஒதுக்கீட்டை ஆதரிப்போர் தருவதில்லை.

    ஆனால், வேண்டும் என்று மட்டும் சொல்லி பொத்தம் பொதுவாக என் நண்பர் இப்படி வாழ்கிறார், என் உறவினர் நிலை இது தான் என்று எடுத்துக்காட்டுகள் மட்டும் காட்டுகிறீர்கள். எடுத்துக்காட்டுகள் வைத்து நாம் முடிவு எப்படி எடுக்க முடியும் ?


    புள்ளிவிபரமே முடிவுகளுக்கு ஆதாரமாக அமைய வேண்டும். அப்போது தான் முடிவுகள் சரியான முடிவாக அமையும்.

    No quota, without data.

    கிரீமி லேயர் என்பது மாபெரும் ஆப்பு. அது வைக்கப்பட்டதால் அதை வைத்து அரசியல் செய்ய எண்ணிய இடது சாரி, மற்றும் காங்கிரஸ் வோட்டு பொறுக்கிகளுக்கு பொருக்கவில்லை. குதிக்கிறார்கள்.

    அத்துடன் சேர்ந்து நல்லுள்ளம் படைத்தவர்கள் நீங்கள் ஏன் ஏமாறுகிறீர்கள் ?

    இட ஒதுக்கீட்டு இல்லாமல் என்னால் முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை உங்களிடம் இல்லையா ?

    தன்னம்பிக்கையே இல்லாத ஒருவர் இடஒதுக்கீட்டின் மூலம் IIM சீட் வாங்கி அதில் படித்து எப்படி ஒரு நிருவனத்தை நிர்வாகிப்பார் ?

    ReplyDelete
  28. //க்ரீமி லேயருக்கும் இட ஒதுக்கீடு இருக்கட்டும்.//

    எனக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன

    ஒ.பி.சி,க்கான 27 சதவித இடங்களில் க்ரீமி லேயர் அல்லாத (பொருளாதாரத்தில் பின் தங்கிய) மாணவர்கள் இல்லையென்றால் (மட்டுமே) பொருளாதாரத்தில் முன்னேறிய ஒ.பி.சியினரால் அந்த 27 சதவித இடங்கள் நிரப்பப்படவேண்டும்.

    இதன் மூலம்

    பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கும்

    அதே நேரம் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கும் பலன்.

    If there are not enough OBCs (with income less than 2.5 lakhs per annum) then the places should be filled by OBCs with income more than 2.5 lakhs and ONLY if there are no OBCs at all it should be filled by general turn என்று ஒரு சட்ட திருத்தம் கொண்டுவந்தால் க்ரீமி லேயரின் முழுப்பலன் கிடைக்கும் என்பது என் கருத்து.

    ஒ.பி.சி மேல் அக்கரையினால் க்ரீமி லேயர் நீக்கப்படவேண்டும் என்று கூறியவர்கள் நான் சொன்ன கருத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். :) :)

    ReplyDelete
  29. Creamy layer in OBC should be treated as general category only.No concession should be given
    if the seats under OBC quota are
    not filled.They need no crutches like reservation when they can run as fast as,perhaps faster than FC candidates.In fact the reservation for OBCs in states like Tamil Nadu and Kerala should be reviewed and pruned over the years.

    ReplyDelete
  30. HINDI CASTES PREFERERED IN TAMILNADU OVER TAMIL FORWARD CASTES

    'TamilNadu' means land of Tamils; but the current OBC list make meaning of TamilNadu to be written 'Tamil'Nadu alladhu TamililaaNaadu:

    Only in Tamilnadu are Tamils being shown away because they are born to condemned caste.

    DMK launches campaings stating Tamil brahmins are non-Tamils. They at the same time fight for OBC reservation to include Hindi speakers like Urdu muslims.

    Official TN OBC list is here:
    www.tn.gov.in/bcmbcmw/bclist.htm

    If someone really cares for Tamil, why cant they question this list which prefers Hindi castes over Tamil forward castes.

    The first Tamil leader who fights to do away with terminology like Brahminism, Two-tumbler system, Dalit and integrates all Tamils together will be a true Tamil hero.

    DMK with their speeches even as recent as last week used againt Jayalalitha by stating Brahmins as Anti-Tamils are BETRAYERS OF THE TAMIL LANGUAGE and SOCIETY. These people are like Karunanidhi are Telugu descends who dont care about Tamil language and society and that is why they have removed even Tamil langugae from Chennai and other TN airports (anyone who passes through Chennai domestic airport will note this). Karunanidhi's greatest contribution to Tamil language is obsecene Hindi music filling TN radio stations. Yes, they are TAMIL TRAITORS. Hope Karunanidhi's successors dont behave like this.

    One is hearing recently DMDK to fight against the Tamil caste system. One hopes more of their breed appears and Tamil traitors such as present DMK leaders get dissolved.

    THE FIRST TAMIL LEADER WHO FIGHTS ALL FORMS OF CASTE SYSTEM INCLUDING TERMINOLOGY LIKE BRAHMINS, DALITS, 2-TUMBLER SYSTEM, PAARPAAN, NADAR, NAICKAR ETC WILL BE A HERO.

    ReplyDelete
  31. Exclusion of creamy layer is the most correct aspect in this judgement. Creamy layers should also be excluded from all state govt reservations (Esp TN) and for SC/Sts too. (may the income limit for SC/ST creamy layers can be amended). I hope a PIL is filed with SC in this regards and look forward to the day the creamy layers are totally excluded from any form of reservation.

    K.R.Athiyaman
    (a member of this creamy layer)

    ReplyDelete
  32. http://specials.rediff.com/money/2008/apr/29sarath1.htm

    ReplyDelete
  33. நண்பருக்கு முதலில் வணக்கம். உங்கள் கட்டுரையின் செய்திகள் மிக அழுத்த‌ம் திருத்த‌மாக உள்ள‌து. இட‌ ஓதுக்கிட்டின் மூல‌ம் த‌ங்க‌ள் முக‌த்திரை கிழிந்து விடுமோ என்று எண்ணி, என்ன‌வெல்லாம், சித்து விளையாட்டு செய்ய‌ முடியுமொ, அதையெல்லாம் சிற‌ப்பாக செய்கிறார்க‌ள். இதில் வ‌ருத்த‌ம்
    என்ன‌வென்றால், இதில் ப‌ய‌ன் அடையும் ந‌ம் ம‌க்க‌ள் இத‌ற்கு ஆத‌ரவாக‌ குர‌ல் கொடுக்க‌லாம் ?. குரல் கொடுப்ப‌வ‌ர்களுக்கு உற்சாக‌ம் கொடுக்கலாம். ம், ஒரு ம‌ண்ணும் கிடையாது. சதா சினிமாவைப் பார்த்துக் கொண்டு ம‌லிங்கி போயுள்ள‌னார். அது தான் என்னுடைய‌ கோப‌ம். உங்க‌ள் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு எங்க‌ளுடைய‌ ஆத‌ர‌வு என்றும் இருக்கும்.

    = சிராசுதீன்.
    http:\\sannalukuveliye.tamilblogs.com

    ReplyDelete
  34. "மெரிட் என்பதன்மேல் எனக்கு முற்றிலும் நம்பிக்கை போய்விட்டது. பல செயல்களைச் செய்ய உன்னதம், உச்சம் என்ற நிலை தேவையே இல்லை. யாரைவேண்டுமானாலும் வேலைக்குச் சேர்த்து, சரியான, மேலோட்டமான பயிற்சி அளித்தால் போதும். வெகு சில வேலைகளுக்கு மட்டுமே (என் கணிப்பில் 5% வேலைகள்கூட இதற்குள் வராது) சிறந்த மூளைத்திறன் தேவை. அதாவது 100-க்கு 95 வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்."
    I fully subscribe to this remark.

    ReplyDelete