Saturday, April 05, 2008

திபெத் பற்றிய சீனாவின் ஆவணப்படம்

CCTV-9 என்ற சீனத் தொலைக்காட்சி ஒளியோடை இப்போது சென்னையில் காணக்கிடைக்கிறது. நேற்று திபெத் பற்றிய ஆவணப்படம் ஒன்றைக் காட்டினர். இது சமீபத்தில் நடந்த அடிதடிகள், ஆள் சாவுகள் பற்றியதல்ல. எப்படி தலாய் லாமா, முற்போக்கு சக்திகளிடமிருந்து விலகி, எதிர்ப்பு (ரியாக்ஷனரி) சக்திகள் கையில் மாட்டிக்கொண்டார் என்பது பற்றிய ஆவணப்படம்.

இளம் வயது தலாய் லாமா, 1950களின் ஆரம்பத்தில் சீனாவின் கம்யூனிசத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். சீனாவின் விருப்பம், திபெத்தை சீனாவுடன் இணைப்பது. திபெத்தில் ஒருமாதிரி ஃபியூடலிசம், மதம் கலந்த ஆதிக்கமுறை நிலவுடைமைச் சமுதாயம். பொதுமக்கள் வெறும் கொத்தடிமைகள் போல நிலத்தில் உழுது விளைச்சலை, லாமாக்களிடம் கொடுக்கவேண்டும். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் இருக்கும் முற்போக்கு சக்திகள், திபெத்தையும் சீனாவுடன் இணைத்து, திபெத்தில் பொதுவுடைமைச் சமுதாயம் நிலவவேண்டும் என்று விரும்புகின்றனராம்.

ஆனால் திடீரென தலாய் லாமா சீனத் தலைவர்களிடமிருந்து விலகிப்போகிறார். இந்தியா வருகிறார். அங்கே தலாய் லாமாவின் இரண்டு சகோதரர்கள் அவரை வளைத்துத் தங்கள் கைக்குள் போட்டுக்கொள்கிறார்கள். (இந்த ஆவணப்படம் நேரடியாக நேருவும் இந்தியாவும்தான் இதற்குக் காரணம் என்று குற்றம் சொல்வதில்லை.) அமெரிக்கா தலாய் லாமா மனத்தைக் குழப்பிக் கலைத்துவிடுகிறது. சீனப் பிரதமர் சௌ-என்-லாய், ‘நீ மருவாதையா லாசா வந்துடு கண்ணா, வெளில இருந்தா உன்னோட புனிதம் கெட்டுடும்' என்று செல்லமாக மிரட்டுகிறார். ஒருவழியாக தலாய் லாமா மீண்டும் லாசா வருகிறார்.

சீன ராணுவம், தலாய் லாமாவுக்கு ஒரு இசை நிகழ்ச்சியைக் காணவாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது. ஆனால் லாசா நகர மேயர், மக்களைக் கிளப்பிவிட்டு, சீனர்கள், தலாய் லாமாவைக் கடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று உசுப்பிவிடுகிறார். திபெத்திய மக்கள் ஆயுதங்களுடன் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரங்கை முற்றுகையிட்டு, தலாய் லாமாவை உள்ளே வரவிடாமல் செய்துவிடுகிறார்கள். அடுத்த இரண்டு நாள்களில், தலாய் லாமா ஊரைவிட்டு ஓடி, இந்தியாவில் தஞ்சம் அடைகிறார்.

அமெரிக்கா, ஆயுதங்கள், கையாள்களை திபெத்தில் இறக்குகிறது. அதன் பிறகு என்ன? திபெத்தின் பிற்போக்கு சக்திகள் சீனர்களைக் கொல்கின்றனர். சீன ராணுவம் கலவரத்தை வெற்றிகரமாக அடக்குகிறது. முதல் முறையாக திபெத் மக்கள் தங்களுக்கென சொந்த நிலத்தைப் பெறமுடிகிறது. திபெத்தியர்கள் முகத்தில் மகிழ்ச்சித் தாண்டவம். அமெரிக்க சூழ்ச்சி முறியடிக்கப்படுகிறது. திபெத்தில் சர்வ மங்களம் உண்டாகிறது.

***

ஒரு பக்கச் சார்புள்ள படம் என்றாலும் பல விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடிந்தது.

அரசியல், சமூக நிலையில் திபெத், பழமைவாத, நிலவுடைமைச் சமூகமாக இருந்துள்ளது என்பது உண்மையே. பூட்டானும் நேபாளமும் நேற்றுவரை அப்படியே இருந்தன. மன்னராட்சி மாறி, குடியாட்சி வர ஒவ்வொரு சமூகமும் ஒரு குறிப்பிட்ட பாதையை எடுக்கவேண்டிவரும். அமெரிக்கா தனது பிராண்ட் குடியாட்சியை, கையில் துப்பாக்கியோடு ஈராக், ஆஃப்கனிஸ்தான் ஆகிய இடங்களில் புகுத்தி இதுவரையில் சாதித்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். சீனா தனது பிராண்ட் பொதுவுடைமையை வேறுவிதமாக திபெத்தில் புகுத்தியுள்ளது.

கேட்டால், திபெத்தியர்கள்தான் அதனை விரும்புகிறார்கள் என்று சீனா சொல்லிவிடுகிறது. எதிர்க்கும் தலாய் லாமா ஒரு ரியாக்ஷனரி பழமைவாதி. கல்லை விட்டு எறியும் நான்கைந்து திபெத்தியர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள்.

இந்த நிலைமையில் தலாய் லாமாவே, தாங்கள் கேட்பது விடுதலையல்ல, தன்னாட்சி உரிமையை மட்டுமே என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். தன் வாழ்நாளில் அதுமட்டுமாவது கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்.

எனக்கென்னவோ, அவர் வாழ்நாளில் அது நடக்கப்போவதில்லை என்று தோன்றுகிறது.

8 comments:

  1. திபேத்தின் மதத் தலைவராக வணங்கப்படும் தலாய் லாமாவின் இந்த சின்ன ஆசையாவது நிறைவேறுமா என்ற கேள்வி யோசிக்கபட வேண்டிய ஓன்று.
    மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி எனும் கோஷம் வெகு காலங்களாக இங்கு ஏற்கனவே உள்ளதை நினைவுகூற எண்ணுகிறேன்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு!

    இதில் ஒருபக்க சாரார் வாதம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்,
    இதேபோல் தான் ஈழ தமிழர்கள் பற்றிய ஆவண படத்தை இலங்கையினர் சொல்வார்கள்
    காஸ்மீர் திவிரவாதிகள் பற்றிய ஆவண படத்தை பாகிஸ்தான் காரர்கள் சொல்வார்கள்.

    திபெத் பிழைப்பு வேண்டி தானாகத்தான் சீனாவுடன் ஒட்டி கொண்டது என்று சிலரும்,
    சீனா அதை போரிட்டு செயித்தது என்று சிலரும் சொல்கிறார்கள்,

    எது எப்பிடியோ அமெரிக்கா மற்ற நாடுகளில் சண்டை விளைவித்து குளிர் காய்கிறது என்பது உண்மைதான்

    வால்பையன்

    ReplyDelete
  3. திபெத்திய தலைவர் தலாய் லாமா தனது மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் நியூயோர்க்கில் பணக்கார அமெரிக்கர்களுக்கு ஆன்மீகச் சொற்பொழிவாற்றுவதிலேயும் லொஸ் ஏஞ்சலிஸ் இல் ஹொலிவூட் காரர்களுடன் சிரித்துக்கொண்டு படங்களுக்கு போஸ் கொடுப்பதிலும் தனது காலத்தை செலவழிக்கிறார் எனவே எனக்குப் படுகிறது. இதில் இந்தியாவின் வழமயான பம்மாத்துகளும் குறவில்லை

    ReplyDelete
  4. சிலோன் சீன அடிவருடி அனானி அவர்களே, உங்கள் வீட்டுப் பிரச்சனையை முதலில் பார்த்துக் கொள்ளவும். தலாய் லாமா தன்னால் முடிந்த காரியத்தைச் செய்கிறார். திபத்தியர்கள் உங்களைப் போல் குண்டு வைத்துக் கொல்வது, தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவது போன்ற "அமைதியான" முறையில் போராட்டம் செய்யாமல், வெளிநாடுகளி ஆதரவு திரட்டுவது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது போன்ற "காட்டுமிராண்டித்தனத்தில்" ஈடுபடுகிறார்கள்.

    அதைப் பார்த்து உங்களைப் போன்ற "அமைதி" விரும்பிகளுக்குக் கோபம் வருவது இயல்பானது தான்.

    ReplyDelete
  5. உங்களது பதிவு அந்த ஆவண படத்தின் தாக்கத்தில் எழுதபட்டிருக்கிறது என தோன்றுகிறது. ஒரு பக்க சார்பு, சீனாவின் பேராசை என சில இடங்களில் குறிப்பிட்டு நடுநிலையை எட்ட உங்களது எழுத்து முயற்சித்தாலும் அமெரிக்க ஏஜெண்ட், நிலவுடமை அடிமைகள் என நீங்கள் சொல்லியிருப்பது உண்மையல்ல.

    திபெத் பல நூறு வருடங்களாக தனி நாடாக தான் விளங்கி வந்திருக்கிறது. ஆயுதங்கள் இல்லாமல் அகிம்சை பாணியில் லாமாக்கள் அந்த நாட்டை ஆண்டு வந்தார்கள். இதற்கான சரித்திர குறிப்புகளும் ஏராளம். லாமாக்கள் நிலவுடமை அடிமைகளாக மக்களை வைத்திருந்து உண்டு பெருத்திருந்தால், சீனா திபெத்தை கைபற்றிய போது தலாய் லாமாவுடன் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு ஏன் வெளியேறினார்கள். சீனா திபெத்திய மக்களுக்கு அவர்களது உரிமையை மீட்டு கொடுத்து அவர்களது முகத்தில் சிரிப்பினை கொண்டு வந்திருந்தால், இன்றும் (அறுபது வருடங்களுக்கு பிறகும்) திபெத்திலிருந்து அகதிகள் ஏன் இந்தியாவிற்கு ஓடி வருகிறார்கள்.

    தலாய் லாமா ஒரு மத தலைவர். அவரது சமூகம் அவரை கடவுளாக பாவிக்கிறது. அவரது கூட்டத்திற்கு நான் போயிருக்கிறேன். வாழ்க்கையை பற்றியே அதிகம் போதிக்கிறார். இளைஞர்கள் போதைபழக்கத்திற்கு அடிமையாக கூடாதென அவர் பேசியது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. மதங்களின் கட்டமைப்பை பற்றிய கேள்விகள் எனக்கும் உண்டு. ஆனால் இங்கு நான் சொல்ல வருவது ஒரு மத தலைவர் தன் சமூகத்தை வழி நடத்தும் விதத்தை. பல லட்சம் திபெத்தியர்கள் இன்று தங்கள் நாட்டிற்கு வெளியே அகதிகளாய் இருக்கிறார்கள். என்றாலும் அகதிகளிலே வெற்றிகரமாய் செயல்படும் சமூகம் என ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு திபெத்தியர்களுக்கு பாராட்டு பத்திரம் கொடுத்திருக்கிறது.

    தமிழகத்தில் சென்னை, வேலூர், ஊட்டி போன்ற இடங்களில் திபெத்திய அகதிகளை பார்க்க முடியும். கர்னாடகாவில் மைசூர் அருகே ஏறத்தாழ பத்து கிராமங்களில் அவர்கள் குடியமர்த்தபட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரிந்திருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட ஒரு கலாச்சார சூழல்களில் வாழ்ந்தாலும் இந்த சமூகம் இன்றும் தங்களது மத தலைவருக்கு கீழ் வெற்றிகரமாய் ஒன்றுபட்டிருக்கிறது. வன்முறை இல்லாமல் அகிம்சை முறையில் போராடியதற்காகவே தலாய் லாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கபட்டது.

    கம்யூனிச ஆட்சிமுறையை பற்றியே பல அழுத்தமான கேள்விகள் சரித்திர நிகழ்வுகளால் இன்று பலமாக எழுப்பப்பட்டிருக்கிறது. அதோடு வேறு ஒரு நாட்டை படையெடுத்து கைபற்றுவதை இன்றும் யாரும் நியாயம் என்று ஏற்று கொள்ளவில்லை.

    சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை பற்றி ஆமென்ஸ்டி உட்பட பல மனித உரிமை அமைப்புகள் பல காலமாய் கேள்விகள் எழுப்பியபடி உள்ளார்கள். சீனாவில் திபெத்தியர்களுக்கான எதிரான மனித உரிமை மீறல்களை பற்றி எல்லா மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. தலாய் லாமாவிற்கு அடுத்து பதவியேற்க திபெத்திய மத சம்பிராதயபடி தேர்ந்தெடுக்கபட்ட 14 வயது பஞ்சன் லாமாவை சீன அரசு கடத்தி வைத்திருக்கிறது. அந்த சிறுவன் இப்போது எங்கிருக்கிறான் என யாருக்குமே தெரியாது.

    தங்களுடைய நாட்டை இழந்து, அகதிகளாய் வேறு மண்ணில் வேறு கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் திபெத்தியர்களுக்கு மத்தியில் கடந்த அறுபது வருட காலமாய் தலாய் லாமாவிற்கு எதிராக ஒரு முணுமுணுப்பு கூட எழுந்ததில்லை. வேற்று மண்ணில் வாழ்ந்தாலும் இன்று வரை தங்கள் தாய்நாட்டிற்கான போராட்டத்தில் திபெத்தியர்களின் உறுதி குறையவும் இல்லை.

    உலகம் முழுவதும் பல பிரபலங்கள் திபெத்திற்காக தங்களது ஆதரவினை தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்கா சீனாவிற்கு எதிராக திபெத்திய பிரச்சனையை உபயோகிக்க சூழ்ச்சி செய்வதினால் போராட்டத்தில் ஈடுபடும் திபெத்தியர்கள் எல்லாரும் அமெரிக்க ஏஜெண்டுகள் என்றாகி விடுமா? ரியாக்ஷனரி பழமைவாதி என்று தலாய் லாமாவை சொல்வது உண்மையாகவே இருக்கட்டும், ஆனால் அவரது அகிம்சை போராட்டமும், அந்த போராட்டத்தின் பின்னே திரண்டு நிற்கும் மக்களின் விடுதலை வேட்கையும் பிற்போக்கு அடையாளங்களாக கருத தான் முடியுமா?

    தலாய் லாமா காலத்தில் திபெத்திய பிரச்சனை தீர்க்கபடாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு திபெத்திய மக்கள் போராட்டம் புரட்சியாய் பேசப்படும். சீன முற்போக்குதனம் மனித உரிமை மீறல்களால் மட்டுமே நினைவு கூறப்படும் என்பது எனது யூகம்.

    எனக்கு திபெத்திய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களது போராட்டங்களை பார்த்திருக்கிறேன். அவர்களது கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன். அவர்களை பற்றி பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறேன். பல வாசகர்கள் மீது தாக்கமேற்படுத்த கூடிய வலைத்தளம் உங்களுடையது. நான் சொன்னதை ஆராய்ந்து பார்த்து உங்களது கருத்துகளை மாற்றி கொண்டு அதற்கு ஒரு பதிவு எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  6. சாய் ராம்: நீங்கள் எனது பதிவைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. திபெத் போராட்டத்துக்கு எதிரான கருத்து எதையும் நான் எனது பதிவில் சொல்லவில்லை. நான் பார்த்த ஓர் ஆவணப்படத்தைப் பற்றிய விளக்கம் மட்டுமே.

    திபெத்தின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.

    ஆனால் அதே சமயம், திபெத் என்பது சீனா கைக்கு வருவதற்குமுன், மத/நிலவுடைமைச் சமுதாயப் பின்னணியில் சிக்கியிருந்த ஒரு நாடு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இன்று நேபாளமும் பூட்டானும் அதிலிருந்து இருவேறு வழிகளில் மீண்டுவந்துள்ளன. ஓரிடத்தில் ஆயுதமேந்திய போராட்டம். மற்றோர் இடத்தில் அரசரே குடியாட்சி முறைக்கு வழிகோலுகிறார்.

    அரச, மதகுரு தலைமையிலான முடியாட்சி முறை இனியும் இந்த உலகில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக கம்யூனிசம் ஆட்சிசெய்யுமா? அல்லது முழுமையான குடியாட்சி இருக்குமா என்பதற்கான பதில் அடுத்த ஐம்பதாண்டுகளில் தெரியவரும்.

    ReplyDelete
  7. அன்புள்ள பத்ரி சார், எனது பின்னூட்டத்திற்கு உடனே பதில் கொடுத்தமைக்கு நன்றி.

    ////எதிர்க்கும் தலாய் லாமா ஒரு ரியாக்ஷனரி பழமைவாதி. கல்லை விட்டு எறியும் நான்கைந்து திபெத்தியர்கள் அமெரிக்க ஏஜெண்டுகள்.////

    இந்த வரிகள் தாம் முக்கியமாக எனது கவனத்தை ஈர்த்தன.

    உங்களது பதிவில் திபெத்தியர்கள் பற்றிய சில அபிப்ராயங்கள் தவறானவை என்பதாலே நான் விளக்கம் கொடுத்திருந்தேன். உங்களது பதிவை சரியாகவே புரிந்து இருப்பதாக இப்போதும் நம்புகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.


    - சாய் ராம்.

    ReplyDelete
  8. அன்புள்ள சாய் ராம், sarcasm என்பதை நான் கையாண்டதாக நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எடுத்துக்காட்டிய வரிகளுக்கு முந்தைய வரியை ஒருமுறை படிக்கவும். அப்படி உங்களுக்குத் தோன்றவில்லையென்றால் என் எழுத்தில் நான் தோல்வியடைந்துள்ளேன் என்பதாகவும் இருக்கலாம்.

    ReplyDelete