Tuesday, February 09, 2010

புத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி

சென்னை புத்தகக் காட்சி நடந்தபோது மாபெரும் தமிழ் அறிவுஜீவிகள் கிழக்கு பதிப்பகத்தின்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள்:- (1) இவர்கள் போலி பெயர்களில் கடைகள் எடுக்கிறார்கள். (2) எங்கு பார்த்தாலும் இவர்களது புத்தகங்களே கிடைக்கின்றன. இதனால் காட்சிக்கு வரும் வாசகர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

உண்மை என்ன? பினாமியோ இல்லையோ, நக்கீரன், விகடன் மட்டுமல்ல, தமிழினி கூட இரண்டு இடங்களில் கடைகள் வைத்து ஒரே புத்தகங்களை வைத்து விற்றன. ஆனால் நியூ ஹொரைசன் மீடியா நான்கு இடங்களில் கடைகளை வைத்திருந்தும் ஒரே புத்தகத்தை இரண்டு இடங்களில் விற்பனைக்கு வைக்கவில்லை. ஒரு கடையில் கிழக்கு பதிப்பகத்தின் non-fiction, வரம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. (வரத்துக்கு தனி ஸ்டால் கிடைக்காது என்று தெரியும்.) ஒரு கடையில் நலம் புத்தகங்கள் மட்டும் வைக்கப்பட்டிருந்தன. மற்றொரு கடையில் ப்ராடிஜி, மினிமேக்ஸ் புத்தகங்கள் மட்டும் இருந்தன. உண்மையில் மினிமேக்ஸ் தனியாகவும் ப்ராடிஜி தனியாகவும் வைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் இடம் தர மறுத்துவிட்டனர் என்பதால் இரண்டு imprint-களையும் ஒரே இடத்தில் வைக்கவேண்டியதாயிற்று.

விருட்சம் ஸ்டாலில் கிழக்கின் இலக்கியப் புத்தகங்களை மட்டும் வைத்திருந்தோம்.

இது எங்களுக்குமே வசதிப்படுவதில்லை. மொத்தமாக 2000 சதுர அடி இடம் எங்களுக்கு ஒதுக்கினால் (அதற்கேற்ற கட்டணத்தை வாங்கிக்கொண்டுதான்!) எங்கள் அனைத்துப் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்வோம். உள்ளே வருபவர்கள் உட்கார நாற்காலிகள், குடிக்க தண்ணீர், நிறைய மின்விசிறிகள் என்று வசதி செய்துதருவோம்.

இதையெல்லாம் காண நீங்கள் தில்லி உலகப் புத்தகச் சந்தைக்குச் செல்லவேண்டும். வேண்டிய அளவு இடம். அதில் விரும்பியபடி ஒவ்வொரு பதிப்பகமும் அழகு செய்துகொள்ளலாம். இந்த வசதியை ஏன் செய்துதர பபாஸி விரும்புவதில்லை?

பாரதி புத்தகாலயம் நாகராஜனுடன் தில்லியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒரு விஷயம் சொன்னார். 4-ஸ்டால்கள் (அதாவது 400 சதுர அடி ஸ்டால்கள்) இருக்கவேண்டுமா, கூடாதா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒரே வாக்கு வித்தியாசத்தில் 4-ஸ்டால்கள் இருக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாம்! அந்தக் காரணத்தால்தான் 4-ஸ்டால்கள் இந்த 2010 சென்னை புத்தகக் காட்சியில் இருந்தனவாம். இல்லாவிட்டால் ஒரு ஸ்டால் என்பது அதிகபட்சம் 200 சதுர அடி மட்டுமே!

வாசகர்களாக இதனை யோசித்துப் பாருங்கள். உள்ளே நுழைந்தால் வெளியே செல்லமுடியாது. உயிர்மை, காலச்சுவடு, வ.உ.சி நூலகம் என பல இலக்கியப் பதிப்பகங்களும் நான்கு ஸ்டால்கள் எடுத்திருந்தனர். இரண்டு இடங்களில் தமிழினி, யுனைடெட் ரைட்டர்ஸ் என்ற பெயரில் இருந்ததற்கு பதில் ஒரு 4-ஸ்டால் வைத்திருந்தால் அவருக்கே வசதியாக இருந்திருக்கும்.

கண்காட்சியில் இடம் என்பது நேரடியாக பணத்தோடு சம்பந்தப்பட்டதில்லை. இவனுக்கு 400 சதுர அடி கொடுத்தால் இத்தனை பணம் பண்ணுகிறான்; 800 கொடுத்தால் இரண்டு மடங்கு பண்ணுவான்; அப்போது நாமெல்லாம் அம்பேல்தானா என்று யோசிப்பது தவறு.

பல பதிப்பகங்கள் கொண்டுவந்திருக்கும் புத்தகங்கள் குறைவு. அவர்களுக்கு 100 சதுர அடி போதும். ஆனால் பிறர் அப்படியல்லவே? இப்படி கேட்போருக்குக் கேட்கும் அளவு இடம் தில்லி உலகப் புத்தகக் காட்சியில் கொடுத்திருப்பதைப் பார்க்கலாம். அப்படியான இடம் கிடைக்காததால்தான் சென்னைக்கு இவர்கள் பலரும் வருவதில்லை. (அதனால் எனக்கென்ன என்றால் என்னிடம் பதில் ஏதும் இல்லை!) பெங்களூருவுக்கு வரும் பெங்குவின் சென்னைக்கு வருவதில்லை!

***

அடுத்து கிழக்கின் புத்தகங்கள் பல கடைகளில் கிடைக்கின்றன என்ற குற்றச்சாட்டு! இதில் என்ன குற்றம் என்று எனக்குத் தெரியவில்லை. கிழக்கின் புத்தகங்கள் இருக்கும் கடைகளில் பாருங்கள். வானதியும் இருக்கும். விகடனும் இருக்கும். கண்ணதாசனும் இருக்கும். இல்லை என்றால் சொல்லுங்கள். ஆக சில விற்பனையாளர்கள் பலருடைய புத்தகங்களையும் ஒன்றுதிரட்டி விற்று பணம் செய்ய என்றே வருகிறார்கள். அப்படி யாரும் வரக்கூடாது என்று பபாஸியால் சொல்லமுடியுமா? அப்படி ஓர் ஒருமித்த கருத்து இருந்தால், நாங்களும் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்கிறோம்.

***

தமிழ்ப் புத்தக உலகம் செல்லவேண்டிய தூரம் அதிகம். நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டிய வேலைகளும் அதிகம். குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்.

17 comments:

  1. சரியாத்தான் சொல்லியிருக்கீங்க சார்!

    ReplyDelete
  2. //4-ஸ்டால்கள் (அதாவது 400 சதுர அடி ஸ்டால்கள்) இருக்கவேண்டுமா, கூடாதா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒரே வாக்கு வித்தியாசத்தில் 4-ஸ்டால்கள் இருக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாம்!//

    சுவையான தகவல் !!

    ReplyDelete
  3. அருமையான பதிவு..புதிய கண்ணோட்டம்...

    ReplyDelete
  4. உள்ளே நுழைய வண்டி பார்க்கிங் கட்டணத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதிலிருந்தே பணம் பிடுங்கப்படுவது ஆரம்பம், இதில் புத்தகம் விற்று பணம் சம்பாதிப்பது வயிறெறிவது வேடிக்கை..:)

    அந்த ஒரு ஓட்டு புண்ணியவான் வாழ்க.

    அடுத்த முறை வெளிவிடும் மூச்சு காற்று வெளியே செல்லுமாறு கூரை அமைக்க எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. தமிழ்ப் புத்தக உலகம் செல்லவேண்டிய தூரம் அதிகம். நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டிய வேலைகளும் அதிகம். குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்

    ஐ அக்ரீ...!!!

    ReplyDelete
  6. அட நீங்க வேற!
    இங்கே பாருங்க:

    1) ஆதாரம் 1

    2) ஆதாரம் 2

    அப்போ கலைஞரும் உங்களுக்கு பினாமி போல இருக்கு? :-)

    ReplyDelete
  7. பபாசியின் இப்படிப்பட்ட குறுகிய கண்ணோட்டம் மிகுந்த அயற்சியைத் தருகிறது. தான் வளராவிட்டாலும் எப்படியாவது அடுத்தவர்களின் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும் என்கிற எண்ணமே அபத்தம், கேவலமான ஒரு மனநிலை.

    பலப்பல வெளிநாட்டு நிறுவனங்களோடு பழகும் வாய்ப்பு கிடைக்கும்போது நம் தமிழர்களின் இப்படிப்பட்ட குறுகிய கண்ணோட்டம் எனக்கு வேதனையைத் தருகிறது. ஒரு சில பிற்போக்குவாதிகளால் நியாயமாகத் தொழில் செய்ய, செய்து முன்னேற நினைப்பவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சல்!

    ‘க்ளோபலைசேஷன்’ பற்றிக் காது கிழியப் பேசிப் பயனில்லை. அடுத்தவர்கள் எப்படியெல்லாம் புத்திசாலித்தனமாகத் தொழில் செய்து முன்னேறுகிறார்கள் என்பதைக் கவனித்து அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

    ‘பிறர் வாடப் பல செய்து’மகிழ்பவர்கள் காலத்தால் தூக்கி எறியப்படுவார்கள் என்பது நிச்சயம்!

    எனவே, hang in there!

    ReplyDelete
  8. // இவனுக்கு 400 சதுர அடி கொடுத்தால் இத்தனை பணம் பண்ணுகிறான்; 800 கொடுத்தால் இரண்டு மடங்கு பண்ணுவான்; அப்போது நாமெல்லாம் அம்பேல்தானா என்று யோசிப்பது தவறு. //
    இங்கு போட்டி என்ற வார்த்தைக்கு பல தவறான / கசப்பான அர்த்தங்கள் நிலவுகின்றன. பிளாட்பார கடையிலிருந்து சாப்ட்வேர் நிறுவனம் வரை .
    // vவேண்டிய அளவு இடம். அதில் விரும்பியபடி ஒவ்வொரு பதிப்பகமும் அழகு செய்துகொள்ளலாம். இந்த வசதியை ஏன் செய்துதர பபாஸி விரும்புவதில்லை? //
    இடப் பற்றாக்குறை ???? அனைவருக்கும் நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டியதனால் ???? ....எதனால்..?
    // தமிழ்ப் புத்தக உலகம் செல்லவேண்டிய தூரம் அதிகம். நாம் அனைவரும் சேர்ந்து செய்யவேண்டிய வேலைகளும் அதிகம். குறுகிய கண்ணோட்டத்திலிருந்து வெளியே வந்தால்தான் இதெல்லாம் சாத்தியம்.//
    சத்தியம். திருப்பூர் பனியன் நிறுவனங்களிடையே போட்டிகிடையேயும் ஒரு நல்ல புரிதல் நிலவும். செய்ய முடியாத அளவு ஆர்டர்கள் குவிகிற வேலைகளில் அழகான load balancing கம்பனிகளிடையே நடக்கும். சர்வதேச அளவிலான அங்கீஹாரத்திற்கு இது போன்று சவால்களை சேர்ந்து சந்திக்கும்வழிமுறைகளே முக்கிய காரணம்.

    ReplyDelete
  9. ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஒரு நல்ல வரலாற்று புத்தகம்.கண்ணதாசனின் வனவாசம் என்ற நூலில் உள்ளதைப் போன்று பல செய்திகளை சுந்தரராஜன் அவர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளார்.சென்ற மாதம் மயிலாப்பூர் விழாவின் போது தங்கள் ஸ்டாலில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தகம் வாங்க வந்தேன்.புத்தகம் கிடைக்கவில்லை.அச்சில் உள்ளது என்றனர்.தற்போது புத்தகம் கிடைக்குமா? நான் திருவல்லிக்கேணி முதல் ஹிக்கின்ஸ் பாதம் வரை தேடிப் பார்த்துவிட்டேன்.எப்போதுகிடைக்கும்?

    ReplyDelete
  10. பதிவுக்குச் சம்பந்தமில்லாதது:

    கிழக்கு பதிப்பகம் வழங்கும் கிழக்கு பாட்காஸ்ட் ஒலிபரப்பு ஆவதில்லையா ? நிறுத்திவிட்டீர்களா ?

    ReplyDelete
  11. So now you have moved onto big league !! If there is a lobby going against you, you are surely doing something right. I think the reader needs variety, diversity and range and this is what you are exploring - You have defintely brought a new vigour into Publishing Industry in Tamil Nadu and it is filling in a big vacuum that needed to be filled up. Keep up the good work !! -Srividhya

    ReplyDelete
  12. //தமிழ் அறிவுஜீவிகள்//

    பபாஸியின் பிற்போக்குத்தனத்துக்கும் ”தமிழ்” அறிவுஜீவிகளுக்கும் என்ன சம்பந்தம் ?

    ஒருவேளை தமிழ் என்றாலே பிற்போக்குதானா ?

    ReplyDelete
  13. மற்றபடி தங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

    //இதையெல்லாம் காண நீங்கள் தில்லி உலகப் புத்தகச் சந்தைக்குச் செல்லவேண்டும்.//

    அப்படியே சில தில்லி எக்ஸிபிஷன் ஃபோட்டோக்களையும் சேர்த்திருக்கலாம். படிப்பவர்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.

    ReplyDelete
  14. இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரே புத்தகம் ஏன் பல இடங்களில் கிடைக்கக்கூடாது என்பதே புரியவில்லை. இப்படி ஒரு எண்ணத்தை தமிழ்ப் பதிப்புலகில்தான் கேட்கமுடியும். மிகப் பெரிய எழுத்தாளர்கள்கூட, பல முறை ஒரே புத்தகத்தைப் பார்த்துச் சலித்ததாக எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் சுத்த அபத்தம். பபாஸி என்பது பதிப்பாளர்களுக்கானது மட்டுமல்ல, அது விற்பனையாளர்களுக்குமானது. விற்பனையாளர்கள் பத்து பேர் இருந்தாலே போதும், ஒரு புத்தகம் பத்து இடங்களில் கிடைக்கும். முதலில் பபாஸி பதிப்பாளர்களை ஊக்குவிப்பதைவிட விற்பனையாளர்களை ஊக்குவிக்கப் பழகவேண்டும். பின்பு பதிப்பாளர்களுக்குத் தேவையான விற்பனை தானாக நடக்கத் தொடங்கும். பினாமி ஸ்டால் என்பவர்கள், பபாஸி தேர்தலில் வோட்டு போடும்போது, வோட்டு போட முடியாதவர்களிடம் கடிதம் வாங்கிக்கொண்டு தானாக வோட்டு போட்டார்களே, அது தவறா? அது ஒரு வசதி. அதேபோல் விற்பனையாளர்களிடம் புத்தகங்களைக் கொடுத்து விற்பதும் ஒரு வசதி. விற்பனையாளர்களே தொடர்ந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு போகப்போகிறவர்கள்.

    4 ஸ்டால் ஒரு பதிப்பகத்துக்கு ஒன்றுதான் என்று ஒரு விதி. இதை விதி என்பதைவிட தலைவிதி என்றுதான் சொல்லவேண்டும். புதிய ரத்தம் ஊடுருவாதவரை, தான் செய்வதே சரி என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கும். பலப்பல புத்தகக் கண்காட்சிகளைப் பார்க்கும்போது, சென்னைப் புத்தகக் கண்காட்சியின் நிர்வாகிகளிடம் விரிந்த பார்வை இல்லாத காரணத்தால் பதிப்பாளர்களை ஒருவித கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே விரும்புவது புரிகிறது.

    இது மாறியே ஆகவேண்டும். ஆனால் இப்போது பத்ரி சொல்வதைப் போல எத்தனை பேர் சொல்லப் போகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

    ReplyDelete
  15. Chennai book exhibtion is not a nhm exhibtion.Now you have understand one thing all of them has to share the place.if you are asking for a 2000 sqft why dont you void the exhibtion arrange for an exhibtion opposite to that or in the mout road.you can do what ever you want. why you joing on the bapasi and telling all these as non-sense.You are thinking money on your mind.They dont complain others. Badri please stop these non sense on your blogs

    By

    ReplyDelete
  16. prassana is talking these kind of idotic things becasue he is marketing manager in your concern

    ReplyDelete
  17. //4-ஸ்டால்கள் (அதாவது 400 சதுர அடி ஸ்டால்கள்) இருக்கவேண்டுமா, கூடாதா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஒரே வாக்கு வித்தியாசத்தில் 4-ஸ்டால்கள் இருக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாம்! அந்தக் காரணத்தால்தான் 4-ஸ்டால்கள் இந்த 2010 சென்னை புத்தகக் காட்சியில் இருந்தனவாம். இல்லாவிட்டால் ஒரு ஸ்டால் என்பது அதிகபட்சம் 200 சதுர அடி மட்டுமே!//

    இதைப் பற்றி UBS பாலு மற்றும் சிக்த்சென்ஸ் புகழேந்தியும் கூட வறுத்தப்பட்டார்கள். நல்ல வேலை ஒரு ஓட்டில் தப்பியது மகிழ்ச்சி என நாங்கள் மூவரும் சிரித்தது நினைவிற்கு வருகிறது.


    //பபாஸி தேர்தலில் வோட்டு போடும்போது, வோட்டு போட முடியாதவர்களிடம் கடிதம் வாங்கிக்கொண்டு தானாக வோட்டு போட்டார்களே, அது தவறா? அது ஒரு வசதி. அதேபோல் விற்பனையாளர்களிடம் புத்தகங்களைக் கொடுத்து விற்பதும் ஒரு வசதி.//

    இது வசதியில்லை. அநியாயம்.

    ReplyDelete