Monday, February 01, 2010

மாமல்லை - 2: செய்வித்தவர்கள்

மாமல்லையின் சிற்பங்களை ரசிப்பதற்கு, அவை எந்த நூற்றாண்டில் செதுக்கப்பட்டன, யார் ஆணையின்பேரில் செய்யப்பட்டன என்பது பெரிதும் அவசியமில்லை. செய்துவித்தவர்கள் போய்விட்டனர். சிலைகள் அப்படியே (சிற்சில அழிவுகளையும் தாண்டி) நிற்கின்றன.

ஆனால் என் முந்தைய பதிவில் மகேந்திரன், நரசிம்மன், பரமேஸ்வரன், ராஜசிம்மன் ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன். அது தொடர்பாக இந்தப் பதிவு. நண்பர் லலிதாராம் பேசினார். மாமல்லையின் பெரும்பாலான கட்டுமானங்களை நரசிம்மன்தான் செய்துவித்தான் என்று வரலாற்றாளர்கள் சொன்னாலும் மாற்றுக் கருத்துகள் உள்ளன என்பது பதிவுசெய்யப்பட வேண்டும் என்றார்.

மகேந்திரன் மாமல்லையில் எதுவும் செய்யவில்லை. மாமல்லை முழுக்க முழுக்க மகேந்திரனின் மகன் நரசிம்மன் காலத்தில் உருவாகி, அதன் தொடர்ச்சியாக நரசிம்மனின் பேரன் பரமேஸ்வரன் சிலவற்றை உருவாக்கி, அவனது மகன் ராஜசிம்மன் மேலும் சிலவற்றை உருவாக்கினான். பின்னர் ராஜசிம்மன் தன் தலைநகர் காஞ்சியில் கட்டுமானங்களை உருவாக்க ஆரம்பித்ததும் மாமல்லை கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. மாமல்லையில் இருக்கும் கடற்கரைக் கோயிலில் உள்ள சயனத் திருக்கோல விஷ்ணு மட்டும் மகேந்திரனுக்கும் முந்தைய காலத்தில் - சிம்மவிஷ்ணு காலத்திலேயே - உருவாக்கப்பட்டிருக்கலாம். நரசிம்மன் காலத்தில் அதற்குமேல் ஒரு கட்டுமானம் உருவாகப்பட்டது என்றும் அது உடைந்து விழுந்தபின், ராஜசிம்மன் காலத்தில் இப்போது உள்ள கட்டுமானக் கோவில்கள் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மாமல்லை என்ற பெயரே மாமல்லன் என்ற நரசிம்மனின் பட்டப் பெயர் காரணமாக இந்த நகருக்கு ஏற்பட்டது என்பதும் ஒரு கருத்து.

ஆனால் வரலாற்றாளர், தொல்லியல் ஆராய்ச்சியாளர் நாகசாமி தொடங்கிவைத்த மற்றொரு கருத்து இது: மாமல்லையில் உள்ள அனைத்துமே ராஜசிம்மன் காலத்தில் உருவானது. ஏனெனில் மூன்று வெவ்வேறு விதமான கட்டுமான அமைப்புகளில் ‘அத்யந்த காமன் என்பவன் இதனைக் கட்டுவித்தான்’ என்ற கல்வெட்டு காணப்படுகிறது. ஒன்று தர்மராஜ மண்டபம். இரண்டாவது சாலுவக்குப்பத்தில் உள்ள அதிரணசண்ட மண்டபம். மூன்றாவது கணேச ரதம்.

மறுபக்கம், தர்மராஜ ரதத்துக்கு அத்யந்த காம பல்லவேசுவர கிருஹம் என்றும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகசாமியின் கூற்று இங்கு அத்யந்த காமன் என்று சொல்லப்படுவது ராஜசிம்மன் ஒருவன்தான் என்பது.

கலைவடிவம் காரணமாக மாமல்லை கட்டுமானங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுவதை நாகசாமி மறுக்கிறார்.

தர்மராஜ மண்டபம் மிகவும் எளிமையான கட்டுமானத்தில் இருக்கிறது. தூண்கள் அகலமாக, மேலும் கீழும் சதுரமாகவும், இடையில் எட்டு பட்டிகள் கொண்டதாகவும் உள்ளன. மகேந்திரன் கட்டுவித்த மண்டபங்கள் இப்படிப்பட்டவையே. அதிரணசண்ட மண்டபத்தில் உள்ள தூண்களும் இப்படி எளிமையானவையே. ஆனால் இந்த மண்டபத்தில் கருவறையில் ஒரு சோமாஸ்கந்தர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. சோமாஸ்கந்தரை கல்லிலேயே செதுக்குவது என்பது பரமேஸ்வரன் காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ராஜசிம்மன் காலத்தில் மேலும் மெருகேற்றப்பட்டது என்கிறார்கள். அதற்குமுன் மரத்திலோ அல்லது துணியிலோ வரையப்பட்ட சோமாஸ்கந்தர்தான் வழிபடும் கடவுளாக இருந்ததாம். கணேச ரதம் என்பது மாமல்லபுரத்தில் உள்ள ரதங்களிலேயே மிகவும் உயர்வாக உருவாக்கப்பட்ட, மிகவும் அழகான ஓர் அமைப்பு.

ராஜசிம்மன்தான் இவை அனைத்தையும் உருவாக்கினான் என்றால் ஏன் மிகவும் primitive ஆன அமைப்பையும் மிகவும் sophisticated ஆன அமைப்பையும் ஒரு சேரக் கட்டுவித்தான் என்பது ஒரு கேள்வி.

தர்மராஜ மண்டபத்தையும் அதிரணசண்ட மண்டபத்தையும் நரசிம்மன் கட்டுவித்தான் என்றால் அதில் ராஜசிம்மன் போய் ஏன் தன் பட்டப்பெயரான ‘அத்யந்த காமன்’ என்பதைப் பொறித்தான்? அற்புதமான படைப்புகளைத் தானே உருவாக்கக்கூடிய ராஜசிம்மன் அவ்வளவு கீழ்த்தரமாகப் பொய் சொல்லக் கூடியவனா? இருக்காது என்பது நாகசாமியின் கருத்து.

ரதங்கள் அனைத்தும் நரசிம்மன் உருவாக்கியது என்பது பெரும்பாலானோர் கருத்து. அதிலும் தர்மராஜ ரதத்தின் ஒரு பக்கம் செதுக்கப்பட்டுள்ள உருவம் நரசிம்மனுடையது என்கிறார்கள். ஆனால் கலைக்கோவன் இதனை மறுத்து இதையும் ராஜசிம்மன்தான் உருவாக்கியுள்ளான் என்று தன் புத்தகத்தில் கூறுவதாக லலிதாராம் தெரிவிக்கிறார். (நான் இந்தப் புத்தகத்தை இன்னமும் படிக்கவில்லை.)

ஆக, நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், இன்னார்தான் இதனைச் செய்துவித்தார் என்று தெளிவாகச் சொல்லமுடியாத நிலை.

இந்த வரலாற்று ஆய்வுகள் பிரச்னை அளிக்கக்கூடியவை என்பதாலும், எனக்கு வரலாற்றைப் பற்றி திட்டவட்டமாகச் சொல்லும் அளவுக்கு ஞானம் இல்லை என்பதாலும் இனிவரும் பதிவுகளில் இந்த அரசர்களின் பெயர்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்போகிறேன். ஆதிவராக மண்டபம், தர்மராஜ ரதம் என்ற இரண்டு படைப்புகளைப் பற்றிப் பேசும்போது மட்டும் சில பெயர்கள் வரும். அங்கும் இந்த caveat தொடரும்.

இனி வரும் பதிவுகளில் விஷயத்துக்குள் இறங்குவோம்.

6 comments:

  1. நல்ல கட்டுரை அய்யா. எனக்குத் தெரிந்து மலையின் அடிப்பகுதியினைக் குடைந்து மண்டபம் அமைத்து இருப்பது மகேந்திரவர்மரின் காலம். மகிஷாசூர வதம் இந்த மண்டபத்தில் தான் உள்ளது. அவரைத் தொடர்ந்து நரசிம்மன் செய்வதாக கூறினாலும் விஷ்னு வர்ம பல்லவர் என்ற பெயரில் சில அமைப்புக்களை அவர் செய்ததாக கூறியிருக்கின்றார்கள். ஆனால் வரிசை முறையில் இறுதியில் வந்ததால் நிறைய வேலைப் பாடுகள் இராசசிம்ம பல்லவர் காலத்தில் செய்ததாக கூறப்படுகின்றது. பிடாரி இரதங்கள் பாதியில் நிற்க காரணம் சோழர்களின் யுத்தம் மற்றும் காஞ்சி கைலாச நாதர் கோவில் கட்டும் பணியால் தடை பெற்றது.

    பெருமாள் கோவில் முதலில் கடல் அருகில் தான் இருந்தது. இது அடிக்கடி கடலின் சீற்றத்தால் பாதிப்பு அடைவதால் இராச சிம்ம பல்லவன் தான் ஊருக்குள் கொணர்ந்து கோயில் கட்டினான். பழைய பெருமாள் கோவில் இப்போது கடல் அடியில் உள்ளது. அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடக்கின்றன. நன்றி.

    ReplyDelete
  2. அன்புள்ள பத்ரி,
    சென்ற ஞாயிறன்று, ஆழ்வார்ப்பேட்டை டேக் மையத்தில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றில், மாமல்லபுரம் பற்றி டாக்டர் சித்ரா மாதவன் அவர்கள் ஒரு அருமையான உரை ஆற்றினார். பட விளக்கத்துடன். டாக்டர் சித்ரா வரலாறு, சமஸ்க்ருதம், தொல்லியல் ஆகிய துறைகளில் கரைகண்டவர். சுவாரசியமும் ஹாஸ்யமும் ஞானமும் நிறைந்த பேச்சு. மாமல்லபுர சரித்திரம் ஒரு மர்மம் நிறைந்தது. உண்டு என்றும் இல்லை என்றும், தெரியாது என்றும் ஒவ்வொருகேள்விக்கும் பதிலளிக்கக்கூடிய மர்மம் என்று குறிப்பிட்டார். ராஜசிம்மன் கட்டியதா - ஆமாம்; இல்லை. பீடத்தில் ஏன் லிங்கம் இல்லை? தெரியாது. அர்ஜுனன் தபசா? பகீரதன் தவமா? தெரியாது. இரண்டில் ஒன்றாக இருக்கலாம். திட்டவட்டமான முடிவு காணமுடியாத மர்மங்கள் நிறைந்த மாமல்லபுரம் என்று முடித்தார்.
    இன்னொன்றும் சொன்னார்: சங்க காலகத்தில் - கி.மு. இரண்டாம் நூற்றாண்டு-கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு இடையில் தமிழ்நாட்டில் கோயில்கள் இருந்தனவா? அவற்றின் அமைப்பு எப்படி இருந்தன? என்ற கேள்விகளை எழுப்பி, மரத்தாலும், மண்ணாலும், செங்கல்லாலும், காரையாலும் கட்டப்பட்டிருக்கலாம்; காலப்போக்கில் தடங்கள் ஏதுமின்றி அழிந்திருக்கலாம் என்றும் பதிலளித்தார்.

    ReplyDelete
  3. >>>>தர்மராஜ மண்டபம் மிகவும் எளிமையான கட்டுமானத்தில் இருக்கிறது. தூண்கள் அகலமாக, மேலும் கீழும் சதுரமாகவும், இடையில் எட்டு பட்டிகள் கொண்டதாகவும் உள்ளன. மகேந்திரன் கட்டுவித்த மண்டபங்கள் இப்படிப்பட்டவையே.<<<<<

    பத்ரி - தர்மராஜ ரதத்தின் கட்டுமானம் எளிமையானது அன்று. மிக மிகச் சிக்கலான ஒன்று.

    அதிஷ்டானம் எனப்படும் basement, மகேந்திரர் காலத்தில் பாதபந்த அமைப்பிலும், பிரதிபந்த அமைப்பிலுமே இருப்பதை நோக்கலாம். இவை இரண்டும் simple-ஆனவை. தர்மராஜ ரதத்தில், அடுத்த கட்ட வடிவமான கபோத பந்தம் இடம்பெற்றிருக்கிறது.

    மகேந்திரரின் தளவானூர் குடைவரையில் முயலப்பட்ட முன்றில் என்ற அமைப்பும், இங்கு முழுமை பெற்றிருக்கிறது. கர்ணசாலை போன்ற complex ஆர உறுப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன.

    முழுமை பெற்றிருந்தால், இது சாந்தார விமான அமைப்பில் இருந்திருக்கும் வாய்ப்பினை, முடிவு பெறடத அங்கங்கள் கூறுகின்றன. (காஞ்சி கைலாசநாதர் கோயிலும், தஞ்சை பெரிய கோயிலும் சாந்தார அமைப்பில் உள்ளவை), அங்கிருக்கும் மற்ற ஒற்ரைக் கல் தளிகளோடு கூர்ந்து ஒப்பு நோக்கினாலே, தர்மராஜ ரதம் ஒரு primitive structure என்னும் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.

    பனைமலை தாளகிரீஸ்வரர் கோயிலையும், காஞ்சி கைலாசநாதர் கோயிலையும் பார்க்கும் போது, ராஜசிம்மனின் கடற்கரை கோயில் மிக எளிமையான அமைப்பாகத் தோன்றும். இந்த வேறுபாட்டை வைத்துக் கொண்டே, இவற்றை இரு வேறு மன்னர்கள் கட்டியிருப்பார்கள் என்று கூற முடியுமா?

    >>>மாமல்லையில் இருக்கும் கடற்கரைக் கோயிலில் உள்ள சயனத் திருக்கோல விஷ்ணு மட்டும் மகேந்திரனுக்கும் முந்தைய காலத்தில் - சிம்மவிஷ்ணு காலத்திலேயே - உருவாக்கப்பட்டிருக்கலாம்.<<<<

    மகேந்திரரின் மண்டகப்பட்டு கல்வெட்டு இதனை பொய்யாக்கி விடுகிறது. மகேந்திரருக்கு முன், கல்லில் கோயில் அமைக்கும் முறை இல்லையெனில், சிம்மவிஷ்ணு எப்படி சயனத் திருக்கோல விஷ்ணு கோயிலை உருவாக்கி இருக்க முடியும்?

    லலிதா ராம்

    ReplyDelete
  4. ராம்:

    1. நான் சொன்னது தர்மராஜ மண்டபம். தர்மராஜ ரதத்தை அல்ல. தர்மராஜ மண்டபம்தான் கொஞ்சம் primitive style என்றேன். அங்குதான் ‘அத்யந்த காம’ ஸ்லோகம் பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது.

    மற்றபடி தர்மராஜ ரதம் ஓர் அற்புதமான கட்டமைப்பு என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

    2. சிம்மவிஷ்ணு காலத்தில் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கலாமே? கோயில்களை அழியாத கல்லில் கட்டினேன் என்றுதான் மகேந்திரன் சொல்லியிருக்கிறான். (ஆனால் உண்மையில் மகேந்திரனுக்கு முன்னதாகவே பாண்டியர்கள் தமிழ்நாட்டில் கல்லில் கோயில்களைக் கட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்தியாவில் பிற இடங்களில் அசோகர் முதற்கொண்டு கல்லால் கோயில்கள் எழுப்பப்பட்டன.) சிம்மவிஷ்ணு உருவாக்கிய விஷ்ணு சிலைமீது அழியக்கூடிய செங்கல்லால் கோயில் இருந்திருக்கலாம். அந்த விஷ்ணு சிலையின் ‘primitive’ ஆன look and feel காரணமாக அது மகேந்திரனுக்கும் முந்தையதாக இருக்கலாம் என்பது ஒரு கருத்து என நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. பத்ரி சார்,

    இது போல இடங்களுக்கு செல்லும் முன் ஒரு அறிவிப்பு செய்தால் (மொட்டை மாடி கூட்டம் போல), ஆர்வமுடயவர்கள் பங்கேற்க வசதியாக இருக்கும். நன்றி.

    நகுல்.

    ReplyDelete
  6. பத்ரி சார்

    பல்லவர்களுக்கு முன்னே அதாவது கிபி மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டுகளுக்கு முன்னே கோயில்கள் என்று எதுவும் இல்லை. தமிழர்களின் வழிபாட்டுக்கூடங்கள் பெரும்பாலும் குகை அல்லது பௌத்த சமண முறைப்படியான குடைவரைக் கோயில்கள் தாம் என "கோவில் நிலம் சாதி என்ற பொ வேல்சாமியின் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

    அவரே அதில் காஞ்சியின் கைலாசநாதர் கோயிலே தமிழகத்தில் இராஜசிம்மனால் கட்டப்பட்ட முதல் கோயில் என்றும் கூறியிருக்கிறார்.
    அப்போ, இந்த கோவில் கட்டடக் கலை என்பது தமிழர்களின் கலை இல்லை என்று தானே பொருள்படும்..?

    ReplyDelete