Sunday, February 07, 2010

திருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்

ஜனவரி 29 தொடங்கி இன்று பிப்ரவரி 7 வரை திருப்பூரிலும் தஞ்சாவூரிலும் புத்தகக் காட்சிகள் நடக்கின்றன. இன்றுதான் கடைசி தினம்.

திருப்பூரில் புத்தகக் காட்சி ஏழாவது ஆண்டாக நடைபெறுகிறது. திருப்பூர் டவுன் ஹால் மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்வை பாரதி புத்தகாலயமும் பின்னல் புக் டிரஸ்டும் இணைந்து நடத்துகின்றன. இந்த ஆண்டு நான் இந்தக் கண்காட்சிக்குச் செல்லவில்லை. ஆனால் தஞ்சாவூர் சென்றிருந்தேன். தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழு ரோட்டரி கிளப்கள் இணைந்து இந்தக் காட்சியை நடத்துகின்றன. இதுதான் முதலாம் ஆண்டு. சில ஆண்டுகளுக்குமுன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒரு புத்தகக் காட்சியை நடத்தியது. ஆனால் தொடர்ந்து நடத்த அவர்களால் முடியவில்லை.

தஞ்சாவூர் நிகழ்வில் ஒருநாள் மாலை என்னைப் பேச அழைத்திருந்தார்கள். இந்தக் காட்சியை ஏற்பாடு செய்திருந்த குழுவின் தலைவரான ஆசிஃப் அலியிடம் பேசிக்கொண்டிருந்தேன். இவர்கள் குடும்பம், மகாராஜா என்ற ஜவுளிக் கடை (கும்பகோணம், மாயவரம் போன்ற இடங்களில் சீமாட்டி என்ற பெயரில்...) தொழிலை நடத்துகிறது. தஞ்சாவூரின் அனைத்து ரோட்டரி கிளப்களின் துணை கவர்னர் ஆக இருக்கிறார்.

அவரிடம் பேசும்போது, ஈரோடு புத்தகக் காட்சியை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளச் சொன்னேன். ஐந்து ஆண்டுகளுக்குமுன் புத்தகக் காட்சி என்று ஏதும் நடக்காத ஈரோடு இன்று மக்கள் சிந்தனைப் பேரவை, ஸ்டாலின் குணசேகரன் உழைப்பால் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய புத்தகக் காட்சியாக மாறியுள்ளது. இதனை பிற நகரங்களில் செய்வது கடினம் என்றாலும் சாத்தியமே. தஞ்சாவூரில் நிச்சயம் அதற்கான அடிப்படைக் கூறுகள் உள்ளன. ஆனால் மனத்தில் உறுதி வேண்டும்.

ஆரம்ப காலங்களில் நிகழ்வை நடத்துபவர்களுக்கு பண நஷ்டம் இருக்கத்தான் செய்யும். அதனை விளம்பரதாரர்கள் வழியாகச் சரிக்கட்ட வேண்டியிருக்கும். புத்தகக் காட்சியால் ஏதேனும் நன்மை இருக்கிறதா என்று அந்த ஊர் மக்கள் அல்லது மக்கள் தலைவர்கள் தெளிவாக உணர்ந்தால்தான் முன்வந்து நடத்துவார்கள். “இம்முறை நிகழ்வை நடத்தியதில் பல தவறுகளைத் தெரிந்துகொண்டோம். அடுத்த ஆண்டு இவற்றைக் களைய முயற்சி செய்வோம்” என்றார் ஆசிஃப்.

யாரோ சில பதிப்பகங்கள், “தஞ்சாவூரில் 60 ஸ்டால்களுக்கு மேல் தாங்காது, எனவே அதிகரிக்காதீர்கள்” என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். நான் என் பங்குக்கு, ஸ்டால்களை நன்கு அதிகரியுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். ஈரோட்டில் 60-70 என்றுதான் ஆரம்பித்தது. இன்று 160 ஸ்டால்கள். மேலும்கூட அதிகரிக்கவேண்டும். ஆங்கிலப் பதிப்பகங்களை அழைத்துவரவேண்டும். தஞ்சாவூரில், கல்விப் புத்தகங்களை வெளியிடுபவர்களையும் (அல்லது விற்பவர்களையும்), ஆங்கிலப் பதிப்பாளர்களையும் அழையுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

திருப்பூர் புத்தகக் காட்சியின் முதுகெலும்பாக இருக்கும் பாரதி புத்தகாலயத்தின் நாகராஜனை டெல்லியில் சந்தித்துப் பேசினேன். (திருப்பூர் நிகழ்வு முடிவதற்குள் அவசர அவசரமாக டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியை பார்த்துவிடவேண்டும் என்று அங்கு வந்திருந்தார்.) திருப்பூரிலும் ஸ்டால்களை அதிகப்படுத்தக்கூடாது என்று அழுத்தம் உள்ளது என்றார்.

உண்மையில் ஒரே நேரத்தில் நடப்பதால் திருப்பூரிலும் தஞ்சாவூரிலும் இரு இடங்களிலும் கலந்துகொண்டவர்கள் மிகவும் குறைவு. கிழக்கு, பாரதி, விகடன், என்.சி.பி.எச், இன்னும் இரண்டு மூன்று பேர்தான் இரண்டு இடங்களிலும் இருக்கிறார்கள். பெரும்பாலான பதிப்பகங்களிடம் வேலையாட்கள் இல்லை அல்லது குறைவு. எனவே ஒரு நேரத்தில் ஓரிடத்தில் மட்டும்தான் கலந்துகொள்ள முடியும். சில விற்பனையாளர்கள் பல பதிப்பகங்களிடம் இருந்து ஒருசில புத்தகங்களை மட்டும் வாங்கிவந்து விற்பனை செய்கிறார்கள். இதனால் அந்த ஊர் வாசகர்களிடம் அனைத்துப் புத்தகங்களையும் (Full range) கொண்டுசெல்ல வழி இல்லை. இதனால் பதிப்பாளர்களுக்கும் பாதிப்பு, வாசகர்களுக்கும் பாதிப்பு.

Clash-ஏ இல்லாமல் புத்தகக் காட்சிகளை அமைக்கமுடியாது. ஆனால் பெரிய ஊர்களில் காட்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் பிற ஊர்க்காரர்களுடன் முன்னதாகவே பேசி முடிவெடுத்தால் இதுபோல் உரசல்களைக் குறைக்கலாம். அதனால் அதிகமான பதிப்பாளர்கள் நிகழ்வுகளில் பங்கெடுப்பார்கள். அதனால் ஒவ்வோர் ஊரிலும் உள்ள மக்கள் அதிகம் பயனடைவார்கள்.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கோலாகலமான புத்தகக் காட்சி நடைபெறவேண்டும். அதன் வாயிலாக மட்டுமே படிப்போரின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கமுடியும்.

6 comments:

 1. திரைபட துறையில் பெயர் பதிவு மற்றும் வெளியிடலில் சங்கம் கட்டுபடுத்துவது போல பாப்சி ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் தேதிகளை ஒழுங்கு படுத்த முன்வந்தால் கண்காட்சிக்கு என்றே சில ஊழியர்களை நியமிக்க பதிப்பகங்ள் முன்வரக் கூடும். பல்வேறு தரப்பிற்க்கும் பயனுடையதாக இருக்கும்.

  ReplyDelete
 2. Badri Sir,

  8 Books for Rs 500. When it will be availble in nhm.in??

  ReplyDelete
 3. திருப்பூர் புத்தகக் கண்காட்சி பெரும் ஏமாற்றம்.

  சக்ஸஸ் மூலம் விற்பனையான கிழக்கு மற்றும் உயிர்மை ஆகிய இரண்டு ஸ்டால்கள் மட்டுமே உருப்படியானவை.

  ReplyDelete
 4. மக்கள் சிந்தனைப்பேரவையின் சேவை மகத்தானாது

  புத்தக கண்காச்சிக்கு போனதால மட்டும் தான் வாசிப்பு அனுபவமே அதிகமாச்சுங்க

  ஆனா அவங்க ரொம்ப சிரமப்பட்டு தான் நடத்துவாங்க போல தெரியுது

  நுழைவுகட்டணவும் கூட வசூல் பண்ணலாம்
  ஏனோ அத செய்யமாட்டிங்குராங்க

  மக்கள் சிந்தனைப்பேரவைக்கு என் நன்றிகள் :-))

  ReplyDelete
 5. வெயிலான்: கிழக்கு பதிப்பகம் அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும் பங்கேற்கிறது. அதற்கு உறுதுணையாக எங்களுக்கு தமிழகம் முழுவதிலும் விற்பனை நிறுவனங்களுடனான உறவு உள்ளது. கோவை சக்சஸ் புக்ஸ் எங்களது கோயம்புத்தூர் பகுதிக்கான ஸ்டாக்கிஸ்ட், விற்பனையாளர். தஞ்சாவூர் புத்தகக் காட்சி விற்பனையை அங்குள்ள விற்பனையாளர் மேற்கொண்டிருந்தார்.

  விகடன், நக்கீரன் ஆகியோருக்கும் இந்த வசதி உள்ளது. ஆனால் பிற பதிப்பாளர்களுக்கு இந்த வசதி கிடையாது. அதனால்தான் அவர்களால் ஒரே நேரத்தில் ஒரே கண்காட்சியில் மட்டுமே பங்கெடுக்க முடிகிறது.

  கண்காட்சிகள் நடக்கும்போது நேரடியாகப் பங்கெடுக்க முடியாத பதிப்பாளர்களின் புத்தகங்களை வாங்கி அழகாக அடுக்கி, விற்பனை செய்து, விற்ற புத்தகங்களுக்கான பணத்தையும் மீதி உள்ள புத்தகங்களையும் அனுப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும்.

  இதுபோன்ற முயற்சிகளை சில உள்ளூர் தன்னார்வலர்கள் மேற்கொள்ளலாம்.

  ReplyDelete
 6. விளக்கத்திற்கு நன்றி!

  ReplyDelete